புளட்டின் தலைமையிலும், முக்கிய பொறுப்புக்களிலும் விடுதலைப் போராட்டத்தினை பற்றி எள்ளளவும் அக்கறையற்ற, லும்பன்களினதும் இந்திய அரச விசுவாசிகளினதும் கைகளே பலம் பொருந்திக் காணப்பட்டது. புளட்டின் தலைமை படுபிற்போக்குத் தன்மை கொண்டதாகவும், அத் தலைமை ஒரு புரட்சிகர இயக்கத்துக்கு லாயக்கற்றதாகவுமே காணப்பட்டது. இவர்களின் போலி அரசியல் பிரச்சாரங்களை நம்பி, தளத்தில் மக்களின் விடுதலையை நேசித்து அமைப்பாளராக செயற்பட்ட பலர் இராணுவப் பயிற்சிக்காக பின்தளம் வந்திருந்தனர். இவர்கள் இந்தியா வந்ததும் தளத்தில் தாம் செய்த பிரச்சாரத்திற்கும் வேலைமுறைகளிற்கும், பின்தளத்தில் இருக்கும் நடைமுறைகளிற்கும் இடையில் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசங்களை கண்டனர். இதனால் பல தோழர்கள் வெறுப்புற்று மன விரக்திக்கு உள்ளாகினார்கள்.

அப்படியிருந்த போதும் உண்மையான விடுதலையை நேசித்த தோழர்கள் பலர் அதிஸ்டவசமாக சில பொறுப்புக்களில் நியமிக்கப்படடிருந்தனர். இவர்களால் தான் நான் உட்பட பல தோழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இன்று நான் உங்களுடன் எனக்கும், என்னுடனிருந்த தோழர்களிற்கும்  நிகழ்ந்த கொடூரங்களைப் பற்றியெல்லாம் எழுத முடிந்தது இவர்களினால் தான் சாத்தியமாக்கப்பட்டது.


நான் அனைத்து முகாம்களின் மருந்துவப் பொறுப்பாளர் அழகனுடன்  இணைந்து வேலை செய்ததால், எனக்கும் ஒரு சில தகவல்கள் தெரியவந்தன. இக் காலத்தில் புளட்டின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக  இந்திய உளவுப் பிரிவை சேர்ந்;த பொலிசார் ஒரத்த நாட்டில் அமைந்திருந்த காரியாலயத்திற்கு அடிக்கடி வந்து செல்வார்கள். இதனால் காரியாலயத்தில் தோழர்களின் அளவு குறைக்கப்பட்டது. அங்கே இருந்த கலாரூபன் என்பவர் அடிக்கடி பொலிசாரின் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டார். பாலமோட்டை சிவமும் (பெரிய மெண்டிஸ்) ஒரத்தநாட்டில் தங்கியிருந்து, பொலிசாரின் விசாரணைகளிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தார்.


ஒரு நாள் திடீர் என் காரியாலயத்துக்கு வந்த பொலிசார் பாலமோட்டை சிவத்தை அழைத்துச் சென்றனர். மூன்று நாட்களாக அவரை விடவில்லை. அவரை வெளியில் எடுக்க எந்த தலைமையும் முன்வரவுமில்லை. அதேவேளை அவரை காண்பதற்கு சென்ற ஒரு தோழரிடம், தன்னை எவரும் சத்திக்க வரவேண்டாம் என்ற தகவலையும் அனுப்பியிருந்தார். மூன்று நாட்களின் பின்னர்; வெளியில் வந்தவர், அதிகமாக உமாமகேஸ்வரனையும் வாமனையும் திட்டியபடி இருந்தார். இக்காலத்தில் பலரை நாட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.

 
ஒரு நாள் மாலை நேரம் சுகயீனமுற்றிருந்த ஒரு தோழரை தஞ்சாவூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, என்னை நோக்கி ஓடி வந்த அழகன் இந்த ஜீப்பில் ஏறிப்போ என்றார். நான் எதற்காக என்று விசாரித்ததன் பின்னால் பாலமேட்டை சிவம் வந்து தனியாக அழைத்துச் சென்று, இதில் தளத்துக்கு திரும்புபவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுடன் நீயும் ஏறிச் செல்லு என்றார். வாகனச் சாரதியுடன் கதைத்து விட்டேன் என்றார். இது அவரின் தனிப்பட்ட நடவடிக்கையே. தலைமைக்கோ அன்றி அனைத்து முகாம் பொறுப்பாளருக்கோ இது தெரியாது.


அந்த ஜீப்பில் ஏறினதும் எனக்கு பயம் உண்டானது. மொட்டை மூர்த்தியின் முக்கிய நபர்களில் ஒருவரான குகன் அதற்குள் இருந்தார். இவர் பீ முகாமில் இருக்கும் போது அறிமுகமாகியிருந்தார். நாம் கோடியாக் கரையை அடைந்தோம். அங்கிருந்து தளத்திற்கு அனுப்பும் தோழர் எம்மை அழைத்து, எந்த ஊர் என்ன பெயர் என விசாரித்தார். அப்போது எனது ஊரை கூறியதும் அவர் சுகந்தனை (சிறி) தெரியுமா எனக் கேட்டார். நான் அவர் எனது உறவினர் என்றேன். தானும் சுகந்தனின் உறவினர் என்றும், என்னுடன் பின் கதைப்பதாகவும் கூறினார்;. எல்லோரினதும் விபரங்களை பதிவு செய்து கொண்ட பின்னர், எமது பயணம் இளவாலையை நோக்கியது. இது மிகுந்த ஆபத்தானது, அதனால் அதிகமானவர்களை ஏற்றிச் செல்ல முடியாது என்று கூறினார். எம்மில் வந்தவர்களில் ஒருவர் நிற்கவேண்டும் என்று தெரிவித்தார். அங்கு வந்திருந்தவர்கள் எல்லோருமே தாயகம் திரும்ப வேண்டும் என்ற நிலையில் நின்றதால், தாமாக ஒருவரும் முன்வரவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் மதிய உணவிற்காக எம்மை கடைக்கு அழைத்து சென்ற அந்தத் தோழர், என்னுடன் உரையாடத் தொடங்கினார். நான் அவர் மூலமாக எனது வீட்டாரின் நிலையையும் அறிந்தேன். அதே நேரத்தில் எனது நிலைமை பற்றியும் அவரிடம் கூறினேன். அப்போது அவர் எனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக, தான் ஒரளவிற்கு அறிந்திருந்ததாக கூறினார். மேலும் தான் என்னை அன்றிரவு செல்லும் படகில் எப்படியாவது அனுப்புவதாகவும் குறிப்பிட்டார். அதன்படி அன்றிரவு சென்ற படகில் நான் தளத்தை நோக்கி புறப்பட்டேன். மறு நாள் காலை எம்மை ஒரு வானில் வந்து ஏற்றிய தளத்தின் தோழர்கள், தமது முகாமிற்கு அழைத்துச் செல்லும் வழியில் நான் இடையில் இறங்கி நாளை முகாமிற்கு வருவதாகக் கூறிச் சென்றேன். அங்கிருந்து நடந்து செல்லும் வழியில் பரந்தாமன் என்பவரை பஸ்தரிப்பு நிலையம் ஒன்றில் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. இவர் சுகந்தனின் (உறவினர்) கூட்டாளி. இவர்கள் புளட்டின் விசுவாசிகளாக இருக்கலாம் என்னும் சந்தேகம் எனக்குள் அன்றும் இருந்தது. இவ்வாறு புளட்டின் எந்த உறுப்பினர்களைப் பார்த்தாலும் பயத்துடன் நான் நடமாடி வந்தேன். இதில் சுகந்தன், சுகன் போன்றவர்களும் உள்ளடங்குவர்.


இந்தியாவில் எனக்கும் சக தோழர்களிற்கும் நிகழ்ந்த கொடூரமான சித்திரவதையினையும், நான் கேள்வியுற்ற பின்தளத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் பல தோழர்களிடம் கூறினேன். இதனால் தளத்தில் புளட் மீண்டும் என்னை துரத்தியது. இதுவே எனது புளட்டின் நாட்கள் ஆகும்.


புளட் என்ற ஒரு அமைப்பில் அண்ணளவாக பத்தாயிரத்திற்கு அதிகமானோர் இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனான எனக்கு இவ்வளவு விடையங்கள் அறிய முடிந்தது என்றால் மற்றும் பல தோழர்களிடம் எவ்வளவு இருக்கும். இதைவிட புளட்டின் மத்தியகுழுவில் இருந்தவர்களுக்கு எவ்வளவு தெரியும். இவர்களின் வாய்கள் திறக்கப்பட வேண்டும்.

இவர்களின் வரிசையில் காந்தன், ஜென்னி, அசோக், பொன்னுத்துரை, செல்வராஜா, சுந்தரலிங்கம், சுகன், …. என பலருண்டு. ஆனால் அசோக், ஜென்னி போன்றவர்கள் தம்மையும் தாம் சார்ந்து நிற்கும் அமைப்பையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்களின் செயற்பாடுகள் தற்போது காணப்படுகின்றது.

தளத்திலும் பல உட்கொலைகள் நடைபெற்றன. குறிப்பாக மணியந்தோட்டத்திலும். வவுனியாவிலும் கொலை செய்யப்பட்டு பல பெண் தோழியர்கள் புதைக்கப்பட்டனர். ஊர்காவற்துறையிலும் சுழிபுரத்திலும் கிழக்கு மாகாணத்திலும் பல கொலைகள் விடுதலையின் பேரால் புளட் அமைப்பினர் நடத்தினார்கள்.

இவற்றுடன் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட நபர்கள் இன்று புலத்திலும் தளத்திலும் தொடர்ந்தும் அரசியல் புரிகின்றனர். பலர் தமது கடந்தகால அரசியல் அடிப்படைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தமிழ் மக்களை அழிக்கும் அரசுடன் கூடடுச் சேர்ந்து இன அழிவிற்கு துணை நின்றனர். தங்களை நியாயப்படுத்த புலிகளின் கடந்தகால மக்கள் விரோத ஜனநாயக மறுப்புக்களை காரணம் காட்டினர்.  ஏனையோர் தங்களது கடந்தகால மக்கள்விரோத செயற்பாடுகளை எல்லாம் மறைத்துக் கொண்டு புதிய அவதாரம் எடுத்து மீண்டும் போராட எழுகின்ற புதிய தலைமுறையினருக்கு வழிகாட்ட முனைகின்றனர். இவர்களின் கடந்தகால மக்கள் விரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்தி ஓரங்கட்டி மீண்டும் எழ முயற்சிக்கும் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை வெற்றி கொள்ள வைப்பது மக்களையும் தேசத்தினையும் நேசிப்பவர்கள் அனைவருக்கும் முன்னால் உள்ள மிகப் பாரிய பணியாகும்.


எமது விடுதலைப் போராட்டத்தில் இந்த மக்கள்விரோத செயற்பாடுகள் ஜனநாயக மறுப்புக்கள் புலிகள் முதல் என்.எல்.எவ்.ரி ஈறாக அனைத்து இயக்கங்களிலும் இடம் பெற்றுள்ளன. இயக்கங்களினால் முன் வைக்கப்பட்ட கொள்கைகளிற்கும் வேலைத்திட்டங்களிற்கும் அமைய நடைமுறை செயற்பாடுகள் என்றும் அமைந்தது கிடையாது.

எமது தேச மக்களின் அரசியல் விடுதலைக்காக போராடிய மற்றும் தொடர்ந்தும் போராடும் அனைவரையும் நோக்கிய எனது வேண்டுகோள் இயக்க வேறுபாடுகளை கடந்து வந்து நீங்கள் சார்ந்த ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் வெளியிலும் நிகழ்ந்த மக்களின் விடுதலைக்கு எதிராக அமைந்த அனைத்துச் செயற்பாடுகளையும் பொதுவில் மக்களின் முன் விமர்சனம் சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்குங்கள். இவற்றில் இருந்து கடந்தகால தவறுகளிற்கான பாடங்களை கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறையாவது பரந்துபட்ட மக்களின் நலன்களை உயர்த்திப் பிடித்து யாருக்கும் சரணடையாத விட்டுக் கொடுக்காத ஒரு மக்கள் யுத்தத்தினை முன்னெடுத்து வெற்றி பெற வழி அமைத்துக் கொடுப்போம்.

-முற்றும்

சீலன்

19. பெண் போராளிகளை அச்சுறுத்தி மிரட்டிய ரிவால்வர் ரீற்றா - (புளட்டில் நான் பகுதி 19)

18. நம்பிக்கைக்குரிய ஆளாக நடிக்க, சுந்தரத்தினதும் உமாமகேஸ்வரனினதும் படத்தை கழுத்தில் தொங்கவிட்டேன் (புளட்டில் நான் பகுதி 18)

17. உமாமகேஸ்வரன் விசுவாசிகள் போன்று நடிக்கக் கோரினர், நடித்தோம் (புளட்டில் நான் பகுதி – 17)

16. தங்கள் கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்யாத தீப்பொறி (புளட்டில் நான் - பகுதி 16)

15. காந்தன் தப்பியோட, நாம் அடிவாங்குகின்றோம் (புளட்டில் நான் பகுதி - 15)

14. எம்மை புதைக்க, நாம் வெட்டிய குழி – (புளாட்டில் நான் பகுதி 14)

13. சந்ததியாரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்று எழுதித் தருமாறு கூறினர் - (புளாட்டில் நான் பகுதி - 13)

12. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும் (புளாட்டில் நான் பகுதி - 12)

11. அடியில் மயங்கினேன், சிறுநீரோ இரத்தமாகவே சென்றது - (புளாட்டில் நான் பகுதி - 11)

10. எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும்…புளாட்டில் நான் பகுதி - 10)

9. புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் - புளாட்டில் நான் பகுதி - 09)

8. மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம் - (புளாட்டில் நான் பகுதி - 08)

7. சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)

6. நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)

5. தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)

4. தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)

3. மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)

2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)

1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)