10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தூங்கா விளக்கும் காண்டா மணியும்…. தமிழ் எழுத்தாளர் மகாநாடு குறித்து

1.பேரினவாத அரசு என்ற வகையில் தமிழ், முஸ்லீம் மக்களிற்கும்; உலகமயமாக்கலின் அடிமை நாய்கள் என்ற வகையில் முழு இலங்கை மக்களிற்கும் இலங்கை அரசு பொது எதிரியாகும்.

2.நிலவும் காலகட்டத்தில் மகிந்தா உலக மகாகொலைகாரனில் ஒருவன் மட்டுமின்றி, அவனது கொள்ளைக்கார குடும்பத்தின் தலைவன்.

3.நான் விபரம் தெரிந்த நாள் முதல் இலங்கை அரசையும், இயக்கங்களின் வன்முறைகளையும் மற்றும் பிராந்திய, சர்வதேச மக்கள் விரோத அரசுகளையும் எதிர்த்து வருகின்றேன்.சைவர்கள் காலையில் எழுந்ததும் எரித்த சாணியை அள்ளிப் பூசுவது போல், கிறிஸ்த்தவர்கள் சாப்பிடுவதற்கு முன்னும், படுக்கைக்கு போக முன்னும், பிறகு ஒரு முக்கியமான காரியத்திற்கு முன்னும் செபம் சொல்லுவது போல் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும்; மேலே குறிப்பிட்ட ழூன்று விடயங்களையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் மக்கள் விரோதிகளை எதிர்த்து வந்தாலும் இலங்கை, இந்திய அரசின் உளவாளிகள் என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்டுரை எழுதி விடுவார்கள். ஆனால் இப்படியான பொய்க் குற்றச்சாட்டுக்களை வைக்கும் இணையங்களில் தான் புலிகளின் ஆதரவாளர்களும் மகிந்தாவின் ஆதரவாளர்களும் ஈழவிடுதலை, மனிதாபிமானம், புரட்சி என்று கட்டுரைகள் எழுதி காமடி பண்ணுகின்றார்கள்.

 

எஸ்.பொன்னுத்துரை

முருகபூபதி

கொழும்பில் நடக்கவிருக்கம் தமிழ் எழுத்தாளர் மகாநாடு குறித்து கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. இந்த மகாநாடு இலங்கை அரசினால் நடாத்தப்பட்டால் நிச்சயமாக எல்லோரும் எதிர்க்க வேண்டும். அல்லது அரசு சார்பானவர்கள் முன்னின்று நடாத்தினால் அதனை எதிர்த்தே ஆக வேண்டும்.முருகபூபதி, ஞானசேகரன் போன்ற அமைப்பாளர்கள்; இது இலங்கை அரசின் ஆதரவில் நடக்கவிருக்கின்ற மகாநாடு அல்ல என்று உறுதி கூறுகின்றார்கள். எழுத்தாளர்களினால் சுயாதீனமாக ஒழுங்கு செய்யப்படும் மகாநாட்டினை எதற்காக எதிர்க்க வேண்டும். போரினால் கருகிப் போய் புல், பூண்டு இல்லாத பாலையாய் இறுகிப் போயிருக்கும் தமிழ் சூழலில், மெல்லிதாக அரும்புகின்ற முளைகளை ஏன் முதலிலேயே கிள்ளிப் போட வேண்டும்.

இன்று இலங்கையில் இருக்கின்ற கொலைச் சூழலில் இந்த மகாநாடு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் தான் நடத்த முடியும். இலங்கையின் பாசிச அரசினை எதிர்த்துக் கொண்டு, எந்த மகாநாட்டினை இலங்கையில் நடத்த முடியாது என்பது எல்லோரும் அறிந்த யதார்த்தம். இலங்கை அரசினை நியாயப்படுத்திக் கொண்டு இந்த இலக்கிய நிகழ்வை நடத்தவில்லை என்பதன் அடிப்படையிலேயே இதை நாம் ஆதரிக்க வேண்டும். இலக்கியம் நாணயமானதாகவும், மக்கள் பக்கமும் நின்று தன்னை வெளிப்படுத்துமாயின் இன்றைய அராஜக சூழலில் அதுவே போதுமானது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கை அரசினைக் கண்டிக்காமல் மயிர் புடுங்கக் கூடாது என்று கூறுபவர்கள், இலங்கையில் போய் நின்று அதைச் சொல்ல முடியுமா?. வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள், இப்படியான சுயாதீனமான நிகழ்வுகளை கண்டித்து எழுதுபவர்கள் இவற்றினை இலங்கையில் போய் ஏன் செய்வது கிடையாது?.

இந்த மகாநாட்டினை காட்டி மகிந்தா தான் தமிழர்களிற்கு உரிமை கொடுத்துள்ளேன் என்று தமிழ் நாட்டவர்களிற்கும், வெளி நாடுகளிற்கும் காட்டி விடுவானாம். தமிழ் படத்தில் எம். ஜி. ஆர். ஒரு தாடியை மட்டும் ஒட்டி விட்டு, மாறு வேடத்தில் போகும் போது எதிரிகள் எம். ஜி.ஆரை அடையாளம் தெரியாமல் குழம்புவது போல், மகிந்தா இந்த மகாநாட்டினைக் காட்டி தனது கொலை முகத்தினை உலக மக்களிற்கு மறைத்து விடுவானாம்.

தமிழ் மக்களை கொலை செய்யும் இலங்கை மண்ணில் இப்படியான நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்றால் தண்டகாரண்யாவிலும், காஸ்மீரிலும் இரத்தம் குடிக்கும் இந்தியாவிலோ அல்லது உலகம் முழுவதும் உயிர் உறிஞ்சும் அகிம்சையின் விளை நிலங்களான மேற்கு நாடுகளிலோ நடத்தினால் பரவாயில்லை என்பது தான் இவர்களின் தீர்வு.

இந்த மகாநாடு குறித்து ஆதாரங்கள் எதுவும் வைக்காமல் முதலில் எதிர்ப்புக் காட்டியவர் எஸ்.பொன்னுத்துரை. அவரிற்கு நீண்ட காலமாக பிடித்திருக்கும் மார்க்சிய விரோதம் என்ற நோய் முற்றி பேய் ஆடுகின்றார். முருகபூபதி இடதுசாரி இதழான டொமினிக் ஜீவாவின் மல்லிகையில் தனது எழுத்து வாழ்வினை தொடங்கியவர் என்ற ஒரு காரணமே பொன்னுத்துரையிற்கு எதிர்ப்பதற்கு போதுமானது. போராட்டக் குழுக்களில் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் மீண்டும் ஈழத்தில் கால் பதிக்க இந்த மகாநாடு கூட்டுவதற்கு உடந்தையாக இருப்பார்கள் என அவர் கண்டு பிடித்திருக்கும் இன்னொரு காரணத்தினை வாசிக்கவே புல்லரித்துப் போகின்றது. தமிழ் வலதுசாரிகள் இந்த மகாநாட்டினை நடாத்துவதாக இருந்தால் அவரிற்கு எந்த விதமான பிரச்சினையும் இருந்திருக்காது.

ஞானசேகரன்

உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா விளக்காக இருப்பான் என்று அவர் எழுதுகின்றார்.சகோதரப் படுகொலைகள் செய்த போது, முஸ்லீம் மக்களை அவர்கள் வாழ்ந்த மண்ணை விட்டு விரட்டிய போது, அப்பாவி சிங்கள மக்களை கொன்ற போது, வன்னி மண்ணில் தமிழர்களை பலி கொடுத்த போது எல்லாம், இவர்களின தூங்கா விளக்கும் எரியவில்லை பொன்னுத்துரையின் காண்டா மணியும் அடிக்கவில்லை.

பா.ஜேயப்பிரகாசம் போன்ற தமிழகத்து படைப்பாளிகளும் எதிர்க்கின்றார்கள். இலங்கை அரசு நடத்திய திரைப்படவிழாவை தோல்வி காணச் செய்தது போல் இந்த மகாநாட்டையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று அவர் எழுதுகின்றார். இலங்கை அரசு நடத்தியது என்பதற்காக மட்டுமல்லாது, மூன்றாம் தர வணிக சினிமாவிற்க்கான விழா என்ற ஒரு காரணத்திற்காகவே அவை போன்றவற்றினை யார் நடத்தினாலும் எதிர்க்க வேண்டும். கோடம்பாக்கத்து வணிக சினிமாவும் தமிழ் எழுத்தாளர் மகாநாடும் ஒன்றல்ல.

இலங்கையிலிருந்து எந்த விதமான எதிர்ப்புக் குரல்களும் இது வரை எழவில்லை. இலங்கை அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் புதிய ஜனநாயகக் கட்சி அதனது இலக்கியப் பிரிவான கலை இலக்கிய பேரவை போன்றவை இதனை எதிர்க்கவில்லை. இலங்கையில் இருந்து கொண்டு புலம் பெயர் இணையத்தளங்களில் எழுதுபவர்களும் இதனை எதிர்க்கவில்லை.

இலங்கையில் எழுபதுகளில் இருந்த “தேசிய முதலாளித்துவ” அரசினது உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல் என்னும் கொள்கைகளை பயன்படுத்தி இலக்கியத் துறையிலும் பெரிய அளவில் புத்தகங்கள் சஞ்சிகைகள் வெளிவந்தன. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் நூல்கள் வெளியாகின. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, மலையகம் போன்ற பிரதேசத்து வாழ்வுகளை மண்ணின் மணத்துடன் வெளிக் கொண்டு வந்தார்கள். சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு நூல்கள் மொழி மாற்றம் பெற்றன. யாழ்ப்பாணத்து கிராமத்தினையும், முதிர் கன்னியர்களின் அவல வாழ்வினையும் சித்திரமாய் தீட்டிய நித்திய கீர்த்தியின் “மீட்டாத வீணை” ; நெடுந்தீவு இரத்தமும், சதையுமாக உலவவிட்ட செங்கை ஆழியனின் “வாடைக்காற்று”; வன்னிக் காட்டு வேட்டையையும், விவசாயத்தையும் தமது ஊரிற்கு வெளியே நடக்கும் எதுவும் தெரியாது இயற்கையோடு வாழும் மக்களின் கதையினை பாலமனோகரனின் “நிலக்கிளி”யும்; தமிழ் இளைஞனும் சிங்கள யுவதியும் காதலித்து இன மத வேறுபாட்டை புறம் தள்ளிய கதையை அருள் சுப்பிரமணியத்தின் “அவர்களிற்கு வயது வந்து விட்டது” நாவலும் வெளிக் கொண்டு வந்தன. இத்தகைய எழுச்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்படியான நிகழ்ச்சிகள் முன்முயற்சியாக அமைய வேண்டும்.

போர்க்காலச் சூழலில் அன்னையர் முன்னணி, பிரஜைகள் குழு போன்ற பல அமைப்புக்களை மக்கள் தோற்றுவித்தனர். மக்கள் தமது பிரச்சினைகளிற்கு இவற்றிற் ஊடாக தீர்வு காண முயன்றனர். விடுதலைப் போராட்டத்தினை பலாத்காரமாக மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த புலிகள், இந்த சுயாதீன அமைப்புக்களையும் உள்வாங்கினர். இதனால் இவ்வமைப்புக்கள் தமது சுய செயற்பாடுகளை இழந்தன. அத்துடன் இவை புலிகளின் அமைப்புக்கள் என குற்றம் சாட்டப்பட்டு இலங்கை அரசினாலும், இந்திய கூலிப் படைகளாலும் சுலபமாக அழிக்கப்பட்டன. இனியாவது மக்கள் சார்ந்து பொதுத்தளத்தில் எழுகின்ற சுயாதீனமான போக்குகளை வளர்த்தெடுப்பதற்கு முன்வர வேண்டும். தேவையில்லாமல் எதிர்ப்பதன் மூலம் அவற்றை அரசின் பக்கம் தள்ளி விடுகின்ற கடந்த கால போக்கினை நிறுத்த வேண்டும்.

“சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாத மண்ணில் பாறை பிளந்து பயன் விளைவிப்பான்”என்று எங்களது மகாகவி பாடியது போல, இலங்கையின் பாசிச அரசை வன்முறையினால் மக்களின் மீது அதிகாரம் செய்யும் கொள்ளையர்களின் ஆட்சியை, இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு நாள் உடைத்தெறிவார்கள். நேர்மையுடன் மக்களால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு எழுகின்ற சுயாதீனமான முயற்சிகள் அதற்கான ஒரு தூண்டுதலைக் கொடுக்கும். “எச்சிறு புல்லும் அதன் இயல்பினில் முழுமை” என்ற சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை வரிகளை வரலாறு மீண்டும் மீண்டும் எழுதிச் செல்லும்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்