ஈராண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தும் சதிகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாடே குலுங்குகிறது. பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஏறத்தாழ 20 லட்சம் பேர் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் அன்று செயலிழந்து முடமாகிப் போயின. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு நாடெங்கும் 220-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
” அடிப்படை ஊதியத்தை அதிகப்படுத்து! தொழிலாளிகளை அதிரடியாக வேலையிலிருந்து தூக்கியெறியாதே! இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடு! முதியோர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை முழுமையாகக் கொடு!” என்பதுதான் போராடும் மக்களின் கோரிக்கை. அரசின் விசுவாச போலீசு -இராணுவ – அதிகாரிகளைத் தவிர, நாட்டில் எவரும் அதிபர் சர்கோசியின் அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஏறத்தாழ 80 சதவீத மக்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து அரசின் ‘சீர்திருத்த’ சதித் திட்டங்களை எதிர்க்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகையை எடுத்து நிதியாதிக்கச் சூதாட்டக் கும்பல்களுக்கு வாரியிறைத்து விட்டதால், ஓய்வூதிய நிறுவனங்கள் அனைத்தும் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் உள்ளன. பிரெஞ்சு அரசோ ஓய்வூதியம் கொடுப்பதால் அரசின் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடி செலவாகிறது என்று கூறி ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 60-லிருந்து 62-ஆக நீட்டிக்கும் கொள்கையை அறிவித்து ஓய்வூதியத்தையே செல்லாக் காசாக்கத் துடிக்கிறது. பிரான்ஸ் மட்டுமின்றி, பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதேபோல ஓய்வூதியம் பெறும் வரம்பை 65 முதல் 67 வயதுவரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. போராடும் தொழிலாளர்களோ இந்தச் சதிகளையும் பசப்பல்களையும் ஏற்கத் தயாராக இல்லை. ஓய்வூதியத் தொகையைச் சுருட்டும் நிதியாதிக்கக் கும்பல்களிடமிருந்து அதனைப் பறித்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல இடங்களில் தொழிலாளிகள் பேரணி நடத்தியுள்ளனர். ஓய்வூதியப் பிரச்சினைதான் போராட்டத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், இது மொத்தப் பிரச்சினையின் ஒரு அம்சம்தான். சமூக அநீதிக்கும் முதலாளித்துவத்துக்கு எதிராக, அதாவது மூலதனத்தின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகவே இந்தப் போர் வெடித்துள்ளது. நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள முதலாளிகளைக் காப்பாற்ற, நாட்டின் உழைக்கும் மக்களைக் காவு கொடுக்கும் கொள்கைகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அடுத்த கட்டமாக செப்டம்பர் 23-ஆம் தேதியன்று மீண்டுமொரு நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. செப்.21 முதல் செக் நாட்டிலும், செப்.29 முதல் ஸ்பெயின் நாட்டிலும் தொழிலாளி வர்க்கத்தால் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடரும் இப்போராட்டங்களின் ஊடாக, முதலாளித்துவ அரசியலமைப்பு முறையை வீழ்த்தி சோசலிசத்தை நிறுவுவதுதான் ஒரே தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.