இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்களில் ஒன்றான ‘இந்தியத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry) ‘2025-இல் தமிழகம்’ -(Tamilnadu Vision 2025) என்றொரு அறிக்கையை 2008-இல் வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (Price Water Coopers) என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.
1973 முதல் அமல்படுத்தப்பட்ட ‘தீவிர சோசலிச’க் கொள்கைகள், 1990-களின் துவக்கத்தில் விதைக்கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் ஆகியவற்றைக் கடந்து, ஒரு புரட்சிகரமான காலக் கட்டத்தின் வாயிலில் தமிழகம் நின்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது, அந்த அறிக்கை. அதிவேக நகரமயமாக்கம், கல்வி, ஒப்பீட்டளவில் செயல்திறன் வாய்ந்த உள்கட்டுமானங்கள் ஆகியவையே தமிழகப் பொருளாதாரத்தின் வலிமைகள் என்று கூறும் அந்த அறிக்கை, தமிழக மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கு, படிப்படியான மெதுவான மாற்றம் என்கிற நமது கடந்த கால அணுகுமுறை பொருத்தமற்றது என்பதை வலியுறுத்துகிறது.
அடுத்த 20 ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் மாற்றங்களின் வீச்சும், அவற்றின் வேகமும் நாம் முன்னெப்போதும் கண்டிராததாக இருக்கப் போகின்றன என்று கூறும் இந்த அறிக்கை, 2025-இல் நாம் அடைய வேண்டிய இலக்குகளைத் துறை வாரியாகப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுருக்கித் தருகிறோம்.
“தற்போதைய சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் ஒரு மீப்பெருநகரப் பிராந்தியம் (Mega Urban Region) உருவாக்கப்பட வேண்டும். சுமார் 5000 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகவும், மரக்காணம்,அரக்கோணம், புலிகாட் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதுமாக அது அமையவேண்டும். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பெருநகரங்கள் தற்போதைய சென்னைக்கு இணையான மாநகரங்களாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தின் 24 முக்கிய நகரங்களின் தரமும் உயர்த்தப்பட்டு, அவற்றுடன் தாலுகா தலைநகரங்கள் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்படவேண்டும். இந்த 24 நகரங்களும் நான்கு பெருநகரங்களுடன் ஆறு வழி மற்றும் எட்டு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்பட வேண்டும்.
சுருங்கக் கூறின், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 13 மணி நேரமாக இருக்கும் தற்போதைய பயணநேரத்தை, 7 மணி நேரமாகக் குறைக்கும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப் படவேண்டும். சைக்கிள் சக்கரத்தின் (ஸ்போக்ஸ்) கம்பிகள் அதன் மையத்துடன் (ஹப்) இணைக்கப்பட்டிருப்பதைப் போல கிராமப்புறங்களும், சிறுநகரங்களும் பெருநகரங்களுடன் இணைக்கப்படவேண்டும்.விமானப்போக்குவரத்து தற்போது உள்ளதைப் போல ஏழு மடங்கும், மின் உற்பத்தி பதினோரு மடங்கும் அதிகரிக்கப்படவேண்டும்.”
“தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product) சேவைத்துறை மற்றும் தொழில்துறையின் பங்கு 93% ஆக உயர்த்தப்படவேண்டும். தற்போது (2008) 50 சதவீதமாக இருக்கும் நகர்ப்புற மக்கள் தொகை, 2025 இல் 75% ஆக உயர்த்தப்படவேண்டும். 2025-ஆம் ஆண்டில் விவசாயத்தை சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25% ஆகக் குறைக்க வேண்டுமானால், நகரமயமாவதை தற்போதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.”
“2025-இல் தானியங்கி, தோல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, பிற ஆலை உற்பத்தித் தொழில்கள், கட்டுமானத்துறை, ஐ.டி. மற்றும் பிற சேவைத்துறைகளே வேலை வாய்ப்பை வழங்கும் முதன்மையான துறைகளாக இருக்கும். நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில் ஆகியவற்றை மையப்படுத்தித் தொழில்துறை வளர்க்கப்படவேண்டும். கால்நடை வளர்ப்பு, காய்-கனி-பூ ஆகியவற்றை மையப்படுத்திய தோட்டத்தொழில் போன்ற அதிகம் தண்ணீர் தேவைப்படாத உற்பத்திகளை நோக்கியும், மதிப்புக் கூட்டும் விவசாயத்தை நோக்கியும் (Value Added Agriculture) விவசாய உற்பத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நகர்ப்புறத்தில் சில்லறை வணிக நிறுவனங்கள் காணவிருக்கும் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு (அதற்குப் பொருத்தமான விதத்தில்) அரசின் விவசாயக் கொள்கை அமையவேண்டும். (இதனை ஒட்டி) ஒப்பந்த விவசாயத்தின் நிறை-குறைகள் பற்றிய ஆவு மேற்கொள்ளப்படவேண்டும்.”
“கல்வித்துறையைப் பொருத்தமட்டில், வெற்றி பெற்ற முதலாளிகளின் கதைகளும் அனுபவங்களும் (உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் வரலாறு) மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதுடன், தொழில் முனைவராவது குறித்த (முதலாளியாவது குறித்த) தனி பட்டப்படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தச்சுவேலை, குழா ரிப்பேர் போன்ற செயல்முறைக் கல்விக்கான பாடத்திட்டங்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் படவேண்டும். ஆண்டொன்றுக்கு 10,000 (தற்போது 3000) மருத்துவர்களை உருவாக்கும் வகையில் 120 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இதன் பொருட்டு மருத்துவப் படிப்பு மற்றும் செவிலியர் படிப்பிற்கான தனியார் கல்லூரிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.”
“தற்போது ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள், உரிமங்கள், தடையில்லாச் சான்றிதழ்கள் போன்றவற்றைப் பல்வேறு துறைகளிடமிருந்து பெற்று ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்குச் சராசரியாக 41 நாட்கள் ஆகின்றன. ஒரு சொத்தைப் பதிவு செய்வதற்கு 61 நாட்கள் ஆகின்றன. இவற்றை முறையே இரண்டு நாட்களாகவும், ஒரு நாளாகவும் குறைப்பதன் மூலம் அந்நிய மூலதனங்களை ஈர்க்கும் ஆசியாவின் 5 முக்கிய மையங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்ற முடியும்.”
“அரசு நிர்வாகத்தின் செயல்திறனை இவ்வாறு அதிகரிக்க வேண்டுமானால், அரசு நிர்வாகப் பணிகளில் அவுட் சோர்சிங் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளிலும், உள்கட்டுமானத் துறையிலும் தனியார் துறையுடன் கூட்டு அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்தக் கட்டுமானங்களை உருவாக்குவதற்கான மூலதனத்தை அரசாங்கத்தால் பெறமுடியும்” என்றும் வலியுறுத்துகிறது, அந்த அறிக்கை.
‘உலகத்தமிழர் ஒற்றுமை’யின் அவசியம் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. தமிழ்ப் பண்பாடு மூலமாக வெளிநாட்டில் குடியேறியிருக்கும் 40 இலட்சம் தமிழர்களை ஒன்றிணைக்க ‘உலகத் தமிழ் மையம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், இணையத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், உலகத் தமிழர்களின் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களைத் தமிழகத்தின் வளர்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வழங்குகின்ற பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் போன்ற பட்டங்களுக்கு இணையான ‘தமிழ் விருதுகளை’ உருவாக்கி, இத்தகைய சாதனைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை. சென்னை சங்கமம் போன்ற விழாக்களை மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் நடத்த வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை தனது செயல்திட்டமாக முன்வைக்கிறது.
‘திராவிட ஒற்றுமையை’யும் இவ்வறிக்கை விட்டு வைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை ராஜதானி, தென்னிந்தியா முழுவதன் தலைநகரமாக இருந்ததையும், தென் மாநிலங்களின் வரலாறு அதனுடன் பிணைந்திருப்பதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாநில முதலாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதன் மூலம் அவர்களை ஈர்க்க வேண்டும் என்றும், கேரளத்தின் எல்லையில் இருக்கும் கோவை, கர்நாடக எல்லையில் இருக்கும் ஒசூர், ஆந்திர எல்லையில் இருக்கும் சென்னை ஆகிய நகரங்களை முக்கியமான வர்த்தக மையங்களாக உருவாக்குவதன் மூலம் தென்னிந்தியாவின் மையமாகத் தமிழகத்தை மாற்றவேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை.
*****
நகரமயமாக்கத்திற்கும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கும் இடையிலான உறவை, அதாவது, தமிழகத்தில் நாம் காணும் நகரமயமாக்கம் என்பது தனியார்மய, தாராளமயக் கொள்கைகளுடைய அமலாக்கத்தின் விளைவே என்பதை இந்த அறிக்கையின் வாயிலாகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கை முன்வைக்கும் இலக்குகளும், மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்த அது பரிந்துரைக்கும் வேகமும் சாத்தியமானவைதானா என்ற பரிசீலனையைக் காட்டிலும், இதுதான் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தரகு முதலாளி வர்க்கத்தின் உள்ளக்கிடக்கை என்பதை நாம் புரிந்து கொள்வதே முக்கியமானது.
உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள், தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தளிப்பதற்கு பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ், மெக்கின்சி போன்ற சர்வதேச ஆலோசனை நிறுவனங்களைத்தான் அமர்த்திக் கொள்கின்றன. அவர்களது ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், பின்தங்கிய நாடுகளில் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அனைத்தும் செயல்வடிவம் பெறுகின்றன. அத்துடன் கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கைகளின் கீழ், இத்தகைய சர்வதேச ஆலோசனை நிறுவனங்களும், சி.ஐ.ஐ போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்களும் தற்போது அரசு அதிகாரத்தின் அங்கங்களாகவே மாறியிருக்கின்றன. எனவே, 2025-ஆம் ஆண்டுவரை தமிழகத்தை ஆளக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், தமிழகத்தின் செல்வழி இதுவாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் நகரமயமாக்கம் என்பது தன்னியல்பானதொரு நிகழ்ச்சிப்போக்கோ, விவசாயத்தின் வளர்ச்சியில் அரசு உரிய கவனம் செலுத்தாததன் தவிர்க்கவியலாத பின்விளைவோ அல்ல. அவ்வாறு கருதும் சில அறிஞர்கள்தான், அரசுக்கு புத்திமதி கூறி நாளேடுகளில் கட்டுரை எழுதுகிறார்கள். விவசாயத்தையும் நீர்ப்பாசனத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துகின்ற அதே நேரத்தில், விவசாயத்தையும் காப்பாற்றும் வகையில் திட்டம் வகுக்க முடியும் என்ற கற்பனைகளை விதைக்கிறார்கள். மாறாக, நகரமயமாக்கமும் விவசாயத்தின் அழிவும் மறுகாலனியாக்கக் கொள்கையினால் திட்டமிட்டே முன்தள்ளப்படுபவையாகும். கிராமப்புற மக்கட்தொகையை 25% ஆகக் குறைக்கவேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 93% நகரம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தரகு முதலாளி வர்க்கம் முன்வைத்திருக்கும் இலக்குகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பைத் தேர்தலில் அறுவடை செய்வதற்காக ஓட்டுக்கட்சிகள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் எதுவும் இந்தச் செல்வழியை மாற்றிவிடப் போவதில்லை. ஸ்ரீபெரும்புதூர் விமானநிலைய விரிவாக்கம், மதுரவாயல் சாலைத் திட்டம் போன்றவற்றுக்கு விவசாயிகளும் குடிசைவாழ் மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதனால், அவை தொடர்பாக தி.மு.க. அரசை எதிர்த்த ஆர்ப்பாட்டங்களை அ.தி.மு.க. நடத்தியிருக்கிறது.
தி.மு.க. வும் கூட, ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துக்கு ஜெயலலிதா அரசு வழங்கிய சலுகைகளை முன்னர் அம்பலப்படுத்தியது. ஆட்சிக்கு வந்த பின்னர் அதை விட அதிகமான சலுகைகளை ஹூண்டா, மகிந்திரா உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் தி.மு.க. அரசு வழங்கியது. தற்போது அ.தி.மு.க. காட்டி வரும் எதிர்ப்பும் அத்தகையதே.
அ.தி.மு.க., தி.மு.க. என 1990-களிலிருந்து மாறி மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இக்கட்சிகளிடைய இருக்கும் ஒற்றுமையைத்தான் தமிழகத்தின் சாதகமான அம்சமாக தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மதிப்பிடுகின்றனர். இவ்விரு கட்சிகளில் தி.மு.க., குறிப்பாக கருணாநிதியின் குடும்பம் ஆளும் வர்க்கத்தின் அங்கமாகவே வளர்ச்சியடைந்திருப்பதால், சி.ஐ.ஐ முன்வைத்திருக்கும் இந்த அறிக்கையை, கழகம் தனது சொந்தக் கொள்கை அறிக்கையாகவே கருதும் என்பதில் ஐயமில்லை. மாறிவிட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக, ‘உலகத்தமிழின ஒற்றுமை’, ‘தமிழ்ப் பண்பாடு’, ‘திராவிட ஒற்றுமை’ போன்ற கழகத்தின் மூல முழக்கங்களைக் கைவிடத் தேவையில்லையென்றும், புதிய உள்ளடக்கத்தைப் புகுத்துவதன் மூலம் அவற்றைப் புளி போட்டு விளக்கி மீண்டும் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் தி.மு.க.வுக்குச் சூசகமாகத் தெரிவித்திருக்கிறது, சி.ஐ.ஐ யின் இந்த அறிக்கை.
2008-இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறும் திசையில்தான் தி.மு.க. அரசு தமிழகத்தைக் கொண்டு செல்கிறதா? ஒரு ரூபாய் அரிசியும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிடலாம். ஆனால், முதலாளிகளிடம் அப்படிச் சான்றிதழ் பெற்றுவிட முடியாது. இந்தியத் தரகுமுதலாளிகள் சங்கத்தின் தமிழகக் கிளை 2010- இல் வழங்கியுள்ள ‘சாதகமான தமிழகம்’ என்ற சான்றிதழ், 2025-ஆம் ஆண்டுக்கு அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்குகளை நோக்கித்தான் தமிழகம் துரத்தப்படுகிறது என்பதற்கு நிரூபணமாக இருக்கிறது.
(தொடரும்)