Language Selection

புதிய ஜனநாயகம் 2010

நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன் ஒன்றையே தனது நலனாகக் கருதுகின்ற, ஏகாதிபத்தியத்தின் கையாள்தான் நாம் அறிந்த காங்கிரசு.

‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ என்ற பெயரில் பன்னாட்டு, தரகு முதலாளிகளின் குட்டி சமஸ்தானங்களை ஏற்படுத்தியது முதல், உள்நாட்டுச் சிறுவணிகர்களைக் காவுவாங்கும் வகையில் சிறுதொழில் முதல் சில்லறை விற்பனை வரை அனைத்திலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது வரை; போபால் படுகொலைக் குற்றவாளி ஆன்டர்சனைப் பாதுகாத்து வருவது முதல், எதிர்காலத்தில் அப்படியொரு படுகொலை நடந்தாலும் முதலாளிகள் யாரும் குற்றவாளிகள் ஆக்கப்படாத வகையில் ‘அணுசக்தி பாதுகாப்பு மசோதா’வை நிறைவேற்றியது வரை- அனைத்திலும் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுக்காத கட்சியே நாம் அறிந்த காங்கிரசு.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார்!

இருப்பினும், காங்கிரசுக் கட்சியின் அடுத்த தலைவராகவும், எதிர்கால இந்தியாவின் ‘பிரதமராகவும்’ முன்னிறுத்தப்படும் ‘ராகுல் காந்தி’யை ஏழை எளியோரின் பாதுகாவலனாகவும், அவர்களுடைய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியைத் தருபவராகவும் சித்தரிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான அவரது குரல் காங்கிரசு கட்சிக்குள்ளே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது போலவும், தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் கட்சிக்குள்ளேயே பெரியதொரு முரண்பாடு எழுந்துள்ளது போன்றும் ஊடகங்கள் காட்டுகின்றன. தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கிற மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா போன்றவர்கள் ஒரு பிரிவாகவும் சோனியா, ராகுல் போன்றவர்கள் மற்றொரு பிரிவாகவும் இருப்பது போலச் சித்தரிக்கப்படுகின்றனர்.

இது உண்மைதானோ என்று மக்கள் எண்ணும் வகையில் வேறு சில காட்சிகளும் அரங்கேறுகின்றன. நியம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் தோண்டவிருக்கும் பாக்சைட் சுரங்கத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மும்பை விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் முகேஷ் அம்பானிக்கு எடுபிடியாக செயல்படும் மகாராட்டிர அரசிடம்,  சதுப்புநிலக் காடுகளுக்காக வாதாடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், ஏழை நாட்டுக்கு காமன்வெல்த் போட்டி தேவையா என்று சாடுகிறார்.

சுதந்திரக் கொண்டாட்டங்களிலிருந்து விலகி நின்ற ‘மகாத்மா’ காந்தியைப் போல, இந்தக் களேபரங்களிலிருந்து ஒதுங்கியிருப்பவர் போலவும், ஏழைகளின் முன்னேற்றம் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் முகச்சவரம் செய்யக்கூட மறந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இளவரசர் ராகுல்காந்தி தலித் வீடுகளில் தங்குகிறார்; ரோட்டோரத்தில் டீ குடிக்கிறார்; “பொருளாதார முன்னேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்” என்று தத்துவம் உதிர்க்கிறார். ஒரிசாவின் நியம்கிரிக்கு தனி விமானத்தில் சென்று இறங்கி, அங்குள்ள மலைவாழ் பழங்குடியினரிடம், “நான் தில்லியில் உங்களுக்காக வேலை செய்யும் சிப்பாய்” என்று வசனம் பேசுகிறார்.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார் - வேதாந்தா - பழங்குடியினர்

தில்லியில் பழங்குடி மக்களுக்காகவே வேலை செய்யும் சிப்பாய் இதைப் பேசி முடிப்பதற்குள், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்காகவே காங்கிரசு கட்சியால் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த சிப்பாய் மன்மோகன் சிங், “சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் என்று பேசிக்கொண்டு, வறுமை ஒழிப்பு இலட்சியத்தை நாம் கைவிட்டு விட முடியாது” என்கிறார். வறுமையை ஒழிக்க வேண்டுமென்றால் பழங்குடி மக்களின் காடுகளையும் நிலங்களையும்  பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்கள்-தரகு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது மூத்த சிப்பாயின் கொள்கை. மூத்த சிப்பாய் பேசுவதைப் பற்றி இளைய சிப்பாய் பேச மறுக்கிறார்.

ராகுல் காந்தி ஒரிசாவின் பழங்குடி மக்களுடன் டான்ஸ் ஆடிய புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து ஓய்வதற்குள்ளாகவே, மன்மோகன் சிங் டில்லியிலிருந்து  உறுமுகிறார். கிடங்குகளில் பாழாகும் உணவு தானியங்களை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றத்திடம், “அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடாதே” என்று எச்சரிக்கிறார். மக்கி மண்ணாகிக் கொண்டிருக்கும் உணவு தானியத்தை இலவசமாக வழங்குவதில் அரசுக்கு இருக்கும் சிக்கல், நிதிப் பற்றாக்குறை அல்ல. கொள்ளை லாபமடிக்கும் உணவு தானியக் கழகங்கள், பெருவியாபாரிகளின் கொள்ளைக்கு பங்கம் வந்துவிடுமோ என்பதுதான் மன்மோகனின் கவலை. ஏழைகளுக்குச் சோறு கிடைப்பதை விட முதலாளிகளுக்கு சுதந்திரம் (கொள்ளையடிக்கும் சந்தை சுதந்திரம்) கிடைப்பது முக்கியம் என்பதுதான் அரசின் கொள்கை. இது, ஏழை எளியவர்களின் காவலனான ராகுல் காந்திக்குத் தெரியாதா?

சிரிப்பாய் சிரித்து நாறிக் கொண்டிருக்கும் காமன்வெல்த் ஊழலைப் பற்றி உத்தமபுத்திரன் ராகுல் என்ன சொல்கிறார்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் உச்சநீதிமன்றம் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதே, இதைப்பற்றி இளவரசரின் கருத்து என்ன? டாடாவின் நிலப்பறிமுதலுக்கு எதிராகப் போராடிய கலிங்கா நகர்ப் பழங்குடியினர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனரே அப்போது இவர் எங்கே சென்றிருந்தார்? இவையெல்லாம் கிடக்கட்டும். இதே ஒரிசாவில் சுற்றுச்சூழல் வனத்துறை விதிகளுக்கு எதிராகவும், மக்களுடைய எதிர்ப்பை மீறியும் போஸ்கோ ஆலைக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கும் நவின் பட்நாயக்கிடம், “பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று பகிரங்கமாக தைரியம் சொல்கிறார் மன்மோகன் சிங். அதுவும் நியம்கிரியில் ராகுல் காந்தி வீர உரை ஆற்றிய அதே நாட்களில்! இதைப் பற்றி இந்த பழங்குடிகளின் சிப்பாய் மூச்சுவிடாதது ஏன்?

ஏனென்றால், இது ஒரு நாடகம். நியம்கிரியை வேதாந்தா நிறுவனம் விழுங்குவதற்கு எதிரான போராட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநராக ப.சிதம்பரம் இருந்ததையும், அந்த நிறுவனத்துக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கும் உள்ள கள்ளக் கூட்டையும், “நான் ஸ்டெர்லைட்டின் பங்குதாரர்” என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு நியம்கிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையையும் அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் சந்தி சிரித்திருக்கிறது இப்பிரச்சினை. அப்போதெல்லாம் நியம்கிரியின் சிப்பாய் எந்த நட்சத்திர விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்தார்?

ராகுல் காந்தி : பழங்குடி அவதார்

ராகுல் காந்தி மட்டுமல்ல, இன்று வேதாந்தாவுக்கு எதிராகப் பேசும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும், அதன் அமைச்சரான ஜெய்ராம் ரமேசும், உண்மையில் கடந்த காலங்களில் வேதாந்தாவை ஆதரித்தவர்களே. வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்தைத் தடை செய்ததற்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளது. ஒன்று, பாக்சைட் சுரங்கம் அமைக்க அனுமதிப்பது, ஒரு தனியார் நிறுவனத்தின் இலாபத்திற்காக டோங்கிரியா மற்றும் குடியா கோந்த் ஆகிய இரு பழங்குடியின மக்களுக்கு, சுரங்கம் அமைக்கப்படவிருக்கும் இடத்தின் மீது உள்ள பாரம்பரிய வாழ்விட  உரிமையைப் பறிப்பதாகும். மேலும், இது சட்டத்தின் ஆட்சி மீதான அவர்களது நம்பிக்கையை உடைக்கும் செயலாகும். இரண்டாவது காரணம், வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிறுவனம், சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்புக்கான சட்டங்கள் பலவற்றைத் தொடர்ந்து மீறியுள்ளது. ஒரிசா மாநில அதிகாரிகளின் கள்ளக் கூட்டுடன் வனப் பாதுகாப்புச் சட்டம் வன உரிமைச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், மற்றும் ஒரிசா வனச் சட்டம் ஆகிய சட்டங்களை மீறி வேதாந்தா நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வேதாந்தாவின் சுரங்கத்தைத் தடை செய்ய காங்கிரசு அரசு என்ன காரணங்களைக் கூறுகிறதோ, அதே காரணங்களை மற்றவர்கள் கூறியபோது அவற்றை அலட்சியமாக நிராகரித்து, வேதாந்தாவுக்கு ஆதரவாக காங்கிரசு அரசு நடந்து கொண்டிருக்கிறது. வேதாந்தாவின் நியம்கிரி அலுமினியத் திட்டம்,  பாக்சைட் சுரங்கம்- அலுமினிய சுத்திகரிப்பு நிலையம்-அலுமினிய உருக்காலை என மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் தற்போது பாக்சைட் சுரங்கம் அமைக்கும் பணிக்குத்தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வேதாந்தாவின் அலுமினியச் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆனால், அவற்றில் மிகப் பெரிய அளவில் விதிமுறை மீறல்கள் இருந்ததைச் சுட்டிக் காட்டி சிறீதர், பிரபுல் சமன்தரா போன்ற தனிநபர்களும், ஒரிசா காட்டுயிரிச் சங்கம் போன்ற அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் மத்திய மேலாண்மைக் கழகத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த அந்த அமைப்பும் வேதாந்தாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தது. ஆனால், இன்று வேதாந்தாவைத் தடைசெய்திருக்கும் இதே மத்திய அமைச்சகம் அன்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தாவின் சார்பில் வாதிட்டு, அதற்குச் சாதகமான தீர்ப்பை வாங்கித் தந்தது.

வேதாந்தாவின்  உருக்காலை தொடங்கப்பட்டபோது நடந்ததும் இதுதான். உருக்காலை அமைக்க முறையான அனுமதி பெறுவதற்கு முன்னரே இயங்க ஆரம்பித்துவிட்ட அந்த ஆலையைத் திறந்து வைத்தவர் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக். இதனை எதிர்த்து பிரபுல் சமன்தரா என்பவர் தேசிய சுற்றுச்சூழல் முறையீட்டு ஆணையத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் வேதாந்தாவிற்கு எதிராக இடைக்காலத் தீர்ப்பளித்த தில்லி உயர் நீதிமன்றம், அந்நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. ஆனால் 2009-ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வேதாந்தாவை ஆதரித்து அதன் சார்பாக வாதாடியதால் இறுதித் தீர்ப்பு வேதாந்தாவின் பக்கம் வந்தது.

தற்போது இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த அனுமதிகூட 2009-ஆம் ஆண்டு இதே மத்திய அமைச்சகத்தால் வழங்கப்பட்டதுதான். அப்போதும் இதே காரணங்கள் இருந்தன. இதுகுறித்துப் பேசியவர்களுக்கு எதிராகவும், வேதாந்தாவிற்கு ஆதரவாகவும் இதே அமைச்சகம்தான் இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில், பல்வேறு வழக்குகளில் வாதாடியது.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார் - வேதாந்தா

வேதாந்தாவுக்கு எதிரான வழக்கில் ஒரு மனுதாரராக சேர்ந்துகொள்வதற்குக் கூட அந்த மண்ணின் மைந்தர்களான பழங்குடியினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறி பழங்குடி மக்களை அந்த வழக்கிலிருந்தே வெளியேற்றினார் உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். அப்போது பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்விட உரிமை அரசியல் சட்டத்திலிருந்து எங்கே காணாமல் போயிருந்தது? இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா, நியம்கிரியின் கோண்டு இன மக்களை, புல்லைத் தின்னும் பழங்குடிகள் என்று திமிர்த்தனமாக ஒரு கூட்டத்தில் பேசியபோதும், “நான் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்” என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த போதும், பழங்குடி மக்களுக்காக டில்லியில் வேலை செய்யும் இந்தச் சிப்பாய், என்ன செய்து கொண்டிருந்தார்?

வேதாந்தாவும், அதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனமும், விதிமீறல்களுக்கும், வரி ஏப்புக்கும், லஞ்ச லாவண்யங்களுக்கும் பெயர் போனவை. 750 கோடி ரூபாய் கலால் வரி ஏப்பு வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தூத்துக்குடியில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏப்பு செய்ததாக அந்நிறுவனத்தின் மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான நிறுவனம் என்று அம்னெஸ்டி இன்டர்நேசனல், சர்வைவல் இன்டர்நேசனல் போன்ற அமைப்புகள் வேதாந்தா நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்கின்றன. நியம்கிரி மலையில் வேதாந்தா செய்துள்ள அனைத்து விதிமுறை மீறல்களையும் ஆதாரப்பூர்வமாகப் பலர் அம்பலப்படுத்தியுள்ளனர். வேதாந்தாவின் கிரிமினல் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்ற நிலையில்தான் நார்வே அரசு அந்நிறுவனத்தில் போட்டிருந்த தனது முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளது. இதே காரணத்தினால்தான், வேதாந்தாவின் எல்லா முறைகேடுகளுக்கும் துணை நின்ற காங்கிரசு அரசிலிருந்து தன்னை மட்டும் விலக்கிக் கொண்டு ஏழைகளின் தோழனாக நடிக்கிறார் ராகுல்.

நியம்கிரியைக் காட்டிலும் அதிகமான பழங்குடி மக்களை வெளியேற்றக்கூடியதும், அதனினும் அதிகமாக சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடியதுமான போலாவரம் அணைக்கட்டுத் திட்டம், எதிர்ப்புகளையெல்லாம் மீறி ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதே ஒரிசாவில் போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையா நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளிக்கிறார் மன்மோகன்சிங். காங்கிரசின் மறுகாலனியாக்க கொள்கைகள் எதுவும் மாறிவிடவில்லை. அவற்றை அமல்படுத்தும் வெறித்தனமும் குறைந்து விடவில்லை.

மூடி மறைக்க முடியாத அளவிற்கு வேதாந்தாவின் மோசடிகளும், காங்கிரசு அரசின் முறைகேடுகளும் அம்பலமாகிவிட்டன. வேதாந்தாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் யோக்கியதையே சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு வேதாந்தா நிறுவனம் ‘கேன்ஸ்’ என்னும் எரிசக்தித் துறை பன்னாட்டு நிறுவனத்தை வாங்கி, இந்தியாவின் எரிசக்தித் துறையையே தனது ஏகபோகத்தின் கீழ் கொண்டுவர விரும்பும் முகேஷ் அம்பானியோடு உரசியிருப்பதால், காங்கிரசு அமைச்சரவையில் நிறைந்திருக்கும் அம்பானி பக்தர்களுக்கும் நியம்கிரியின் பழங்குடி மக்கள் மீது அபிமானம் பிறந்து விட்டது. அனைத்துக்கும் மேலாக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளுக்காக சிதம்பரம் நடத்திவரும்  காட்டுவேட்டை, பழங்குடி மக்களை மென்மேலும் மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளிவிடுமோ என்ற அச்சமும் ஆளும் வர்க்கத்தைப் பிடித்தாட்டுகிறது.

வேதாந்தாவின் பாக்சைட் கொள்ளையைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டவுடனே, அத்தகைய தடையினால் கிடைக்கக் கூடிய நற்பெயரைக் கொள்ளையடிக்கும் உரிமை பட்டத்துக்கு வரக் காத்திருக்கும் இளவரசருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் வளங்களையும் இந்திய மக்களையும் கொள்ளையடித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, இந்தியத் துணை இராணுவத்தின் சிப்பாய்கள் பழங்குடி மக்களை வேட்டையாடிக் கொண்டிருக்க, அதனை எதிர்த்துப் போராடும் பழங்குடி மக்களுக்கும் நானே சிப்பாய் என்று தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டுவிட்டார் ராகுல்.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார் - ஜெய்ராம் ரமேஷ்

ஆளும் கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கிக் கொள்ளும் இந்தத் தந்திரத்தை ஆளும் வர்க்க ஊடகங்கள் அம்பலப்படுத்துவதில்லை. மாறாக, ஆமோதிப்புடன் புன்னகைக்கின்றன. காங்கிரசின் வலது, இடது பிரிவினருக்கு இடையில் கொள்கைப் போர் கொழுந்து விட்டு எரிவதைப் போலவும் சித்தரிக்கின்றன. வலது புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், முரளி தியோரா இன்னபிறர். இடது புறத்தில் ராகுல் காந்தி, திக்விஜய்சிங், மணிசங்கர் ஐயர், ஜெய்ராம் ரமேஷ். நடுவில் அன்னை சோனியா.

மக்கள் காறி உமிழ்ந்து காங்கிரசை வெளியேற்றிய மாநிலங்களுக்கெல்லாம் விஜயம் செய்கிறார் ராகுல். கொட்டை போட்ட கொள்ளையர்களும், பிடிபட்ட திருடர்களுமான தந்தையர்களை ஒதுக்கி வைத்து விட்டு, காங்கிரசு குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுடைய குலக்கொழுந்துகளை ஒன்றுதிரட்டி காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதம் செய்கிறார், ராகுல். மாநிலக் கட்சிகளின் வெளிப்படையாகத் தெரியும் அதிகார முறைகேடுகளை  எதிர்த்துப் பேட்டி கொடுக்கிறார். வெற்றிப் பேரணி நடத்துகிறார். டில்லி காங்கிரசு அரசை எதிர்த்துப் போராடி நியம்கிரி பழங்குடிகள் பெற்ற வெற்றியின் மகுடத்தையும் இந்த டில்லி சிப்பாயே சூடிக்கொள்கிறார்.

நகைக்கத்தக்க இந்தக் கேலிக்கூத்தை அல்லது அப்பட்டமான இந்த அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த முடியாமல் புழுங்குகிறார்கள், மார்க்சிஸ்டுகள். முன்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் போலி கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பாத்திரத்தை (அரசாங்கத்தின் மனச்சாட்சி அல்லது மனித முகம்) அவர்களிடமிருந்து ராகுல் கைப்பற்றிவிட்டதால், அந்தக் கதாபாத்திரத்தையோ அதன் வசனத்தையோ விமரிசிக்க முடியாமல் தவிக்கிறார்கள், மார்க்சிஸ்டுகள். ராகுலைக் காட்டிலும் மேலும் சிறிது இடது புறம் நோக்கித் தமது அரசியலை நகர்த்தலாம் என்று அவர்கள் விரும்பினாலும், அப்படி ஒரு இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபோன்ற நாடகங்களும், அவதாரங்களும் காங்கிரசுக்குப் புதியவையல்ல. காந்தியின் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான பகத்சிங்கின் அரசியல், இளைஞர்களைப் பற்றிக் கொண்டபோது சோசலிச அவதாரம் எடுத்தார், நேரு. மொரார்ஜி உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு எதிராக ‘இடதுசாரி’ அவதாரம் எடுத்தார், இந்திராகாந்தி. 13 நாள் ஆட்சி, 13 மாத ஆட்சி என்று இரண்டு முறை பதவியை இழந்த பின்னரே எதிர்ப்பை நிறுவனப்படுத்தும் காங்கிரசின் தந்திரத்தை பாரதிய ஜனதா புரிந்து கொண்டது. அத்வானியின் தலைமையிலான சங்கப் பரிவாரத்தின் தீவிரவாதத்துக்கு எதிராக மிதவாதியாக அவதரித்தார் வாஜ்பாயி.

தனியார்மயம், தாராளமயம் என்ற முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதத்தை அமல்படுத்துவதில் மன்மோகன் சிங் தீவிரவாதி. ராகுல் காந்தி மிதவாதி!