இந்தியாவின் முக்கியமான தொழில்துறையும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுமான ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பருத்தி நூலிழையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதே இந்த நெருக்கடிக்குக் காரணம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கேண்டி (350 கிலோ) 23,000 ரூபாயாக இருந்த பஞ்சின் (சங்கர் 6 என்ற பருத்தி ரகம்)சந்தை விலை, இன்று 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
பருத்தி விலை உயர்வின் விளைவாக நூல் விலையும் உயர்ந்திருக்கிறது. பருத்தி விலை உயர்வைக் காரணம் காட்டி நூற்பாலை முதலாளிகள், நூலின் விலையை மேலும் கூட்டி விற்பதால் ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த வரைமுறையற்ற விலையுயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கைத்தறி நெசவாளர்களும், சிறு விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டங்களையும், தொழில்நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜவுளித்தொழில் சம்மேளனம், தென்னிந்திய ஜவுளி ஆலைச் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முதலான பெரும் ஆலை அதிபர்களின் சங்கங்கள், பஞ்சு விலையைக் குறைக்கும் பொருட்டு பஞ்சு ஏற்றுமதிக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முதலாளிகளின் கோரிக்கை மனுவை அப்படியே நகல் எடுத்து அதன் கீழே கையொப்பமிட்டு, செப்.23 அன்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், கருணாநிதி.
பஞ்சையும், நூலையும் ஏற்றுமதி செய்து விட்டால், துணியையும் ஆயத்த ஆடையையும் நாங்கள் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே இந்த ‘சுதேசிகளின்’ கவலை.
இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த பருத்தி (பஞ்சு) உற்பத்தி 295 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 170 கிலோ). இதில் இந்திய மில்களின் தேவை 270 இலட்சம் பேல்கள். இதில் தமிழகத்திலுள்ள நூற்பாலைகளின் தேவை மட்டும் 100 இலட்சம் பேல்கள். உள்நாட்டு மில்களின் தேவைக்கு அதிகமாகப் பஞ்சு உற்பத்தியாகியிருக்கிறது என்ற போதிலும் பஞ்சின் விலை உயர்ந்து விட்டதால், ஏற்றுமதிக்குத் தடை விதிக்குமாறும், ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் மீது ஒரு கேன்டிக்கு 10,000 ரூபாய் சுங்கத்தீர்வை விதிக்குமாறும் கோருகிறார்கள், இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள்.
சந்தைதான் விலையை முடிவு செய்யும் என்றும், பருத்தி விலை குறைவாக இருக்கும் போது ஆதாயம் அடைந்த ஆலை அதிபர்கள், இப்போது விலை உயர்வால் விவசாயிகள் பயனடையும் போது அதைத் தடுப்பது நியாயமல்ல என்று விவசாயிகளின் நண்பனைப் போல முழங்குகிறார்கள், முன்பேர வர்த்தகம் நடத்தும் சூதாடிகள்.
“பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் விவசாயிகளைச் சென்றடையவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளதால், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் இப்போதே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்டின் துவக்கம் முதல் பருத்தி ஏற்றுமதியின் மீது இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டதால், வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள் என்று சூதாடிகளைச் சாடுகிறார், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் தலைவர், ஏ.சக்திவேல்.
எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.
இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.
சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் சீனாவில் ஜவுளிக்கான உள்நாட்டுச் சந்தை விரிவடைந்திருப்பது, டாலருக்கு எதிராக சீன நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்ற பல காரணிகளால் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இந்திய ஜவுளித்துறை தற்போதைய மதிப்பான 3.27 லட்சம் கோடியிலிருந்து 2020-இல் 10.32 லட்சம் கோடிகளாக உயரும் என்றும் நாக்கில் நீர் சொட்டக் காத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இந்தக் கொள்ளை இலாபத்தை அறுவடை செய்வதற்குப் போதுமான பருத்தி குறைந்த விலையில் தங்களுக்குத் தேவைப்படுவதைத்தான், ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் ‘உள்நாட்டுத் தேவை’ என்று சித்தரிக்கின்றன.
நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள். பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.