10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ரொனியின் நினைவுக் குறிப்புகளும் கள்ளபிரானின் கீதையும்

ரொனிக்கு கண்ணீர் வருகிறது. ரோனியின் கண்களில் இருந்து கண்ணீரா என்று வியப்படைய வேண்டாம்.  எல்லோருக்கும் சுரப்பது போல் ரொனிக்கும் சுரக்கிறது……..கண்ணீர். ஆனால் அது பொய்யான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டு ஈராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கும் போது,  எதிர்த்து உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய மக்களை நினைத்து வரவில்லை. ஈராக்கை கொள்ளை அடிக்க சென்ற போது கொல்லப்பட்ட பிரித்தானிய ராணுவத்தினை நினைத்து தாங்க முடியாமல் துக்கம் வந்து நெஞ்சை அடைக்கிறதாம். அதுவும் ஒவ்வொரு நாளும் ரொனி அழுகிறதாம். இந்த அழுகையை சன் தொலைக்காட்சிக்கு படமெடுத்துக் கொடுத்தால் உலக வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளை ஒன்று ஒவ்வொரு நாளும் அழும் புத்தம் புதிய தொடர் என்று இரண்டு பேரும் அதில் காசு பார்க்கலாம்.

ரொனி புரட்டஸ்தாந்து மதத்தினை சேர்ந்தது. அதனது மனைவி கத்தோலிக்க மதத்தினை சேர்ந்தது. ஆங்கிலேய அரச குடும்பமும் பிரித்தானிய ஆங்கில, ஸ்கொட்லாந்து,  வேல்ஸ் இன மக்களில் பெரும்பான்மையானவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினை சேர்ந்தவர்கள். வட அயர்லாந்தில் வாழும் ஜரிஸ் இன மக்கள் மட்டுமே கத்தோலிக்க மதத்தினை சேர்ந்தவர்கள். நிலப்பிரவுத்துவ  அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மாறிக் கொணடடிருந்த கால கட்டத்தில் பெரும்பாலான மேற்கு ஜரோப்பிய நாடுகள் நிலப்பிரவுத்துவத்துடன் பின்னிப் பிணைந்திருந்த கத்தோலிக்க அமைப்பினையும் , பாப்பரசரின் மேலாண்மையையும் எதிர்த்து வளரும் நிலையிலிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களிற்கு ஒத்துப் போகக் கூடியதாக இருந்த புரட்டஸ்தாந்து பிரிவுக்கு மதம் மாறினர். இங்கிலாந்தின் எட்டாம் கென்றி,  முதலாம் எலிசபெத் காலங்களில் கத்தோலிக்கர்களை வைக்கோலில் போட்டு கொழுத்தினர். கத்தோலிக்க மதத்தினை பின்பற்றுவது தேசத் துரோகமாக்கப்பட்டது.

மன்னராட்சி முறையில் இருந்து பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு சந்த பின்பும் கத்தோலிக்க மதம் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. பிரித்தானிய பிரதமர்கள் எல்லோரும் புரட்டஸ்தாந்து மதத்தினை சேர்ந்தவர்களே. இதனால் தான் ரொனி தான் பதவி விலகும் வரை புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்தது. ஆரசியலில் இருந்து விலகிய பின்பு பெரும்பான்மை வாக்குகளிற்காக புரட்டஸ்தாந்து மதத்தில் இருக்க வேண்டிய தேவை தனக்கில்லை என்பதனால் மனைவி சொல்லே மந்திரம் என்று கத்தோலிக்க மதத்திற்கு மாறி விட்டது. ஆனால் பதவி விலகிய பின்னரும் தன்னால் உயிரிழந்த,  வாழ்விழந்த மக்களைப் பற்றி எள்ளளவும் மனம் வருந்தவில்லை.

ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் ஏன் பிரித்தானியா போர் தொடுக்க வேண்டும் என்ற கேள்விகளிற்கு ரொனியிடம் பதில் இல்லை. முதலில் ஈராக் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கின்றது என்று குற்றம் சாட்டப்பட்டது. பிரித்தானியா முழுவதும் எழுந்த போரிற்கு எதிரான உணர்வினைக் கண்டு பயந்து 45 நிமிடங்களில் ஈராக்கினால் பிரித்தானியாவை தாக்க முடியும் என்ற பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. போர் முடிந்த பின் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லையே என்று கேட்டதற்கு சதாம் போன்ற ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் இருந்து அகற்றியதே ஒரு சாதனை தான் என வெட்கமில்லாமல் விளக்கம் சொன்னது. அப்பாவி ஈராக்கிய பொது மக்கள் கொல்லப்பட்டதனை கேட்ட போது சதாமின் கீழும் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என சுடலை ஞானம் பேசியது.

ரொனி போன்ற கொலைக்காரர்களின் நினைவுக் குறிப்புகளும் பாரதப் போரின் போது பார்த்தனிற்கு கூறப்பட்டதாக சொல்லப்படும் கீதையும் ஒரே மொழியினையே பேசுகின்றன. அதிகாரத்திற்கு எதிரானவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை விதி. உலகில் தருமம் குன்றி அநீதி மேலோங்கும் போது நான் வருவேன் என்று கண்ணன் என்ற அவதாரம் உபதேசம் செய்ததாம். உன் முன்னே நிற்பவர்களை உனது உறவினர்,  உனது ஆசிரியர் என்று யோசிக்காதே. கொல். நீ கொல்லாது விட்டாலும், அவர்கள் என்றாவது ஒரு நாள் இறந்து தான் போவார்கள். எனவே தயங்காமல் கொல். குள்ள பரமாத்மாவின் திருவாய் மொழிப் படி பிறந்த அன்றே பச்சிளம் குழந்தைகளை கொல்லலாம். ஏனெனில் இக் குழந்தைகள் என்றோ ஒரு நாள் இறக்கத் தானே போகின்றார்கள்.

இப்படி ஒரு தத்துவத்தினை சொன்னபடியால் தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் கலவரம் செய்யும் காவிக் கட்சிகளின் கொலை நாயகனாக கண்ணன் இருக்கின்றான். குஜராத் கலவரங்களின் போது முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றினைக் கிழித்து குழந்தைகளை கொன்றர்கள்,  இவனின் பக்தர்கள் தான் என்பது தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவனது தமிழ் நாட்டு வாரிசு அய்யங்கார் குலக்கொழுந்து ஜெயலலிதா வன்னிப் போரின் தொடக்கத்தில் ஈழ மக்கள் கொல்லப்பட்ட போது போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பெருவாய்  திறந்து ஊளையிட்டதும்  கீதையின் சாராம் தான்.

செப்டம்பர் 11 இல் அமெரிக்கா தாக்கப்பட்ட போது உலகமே அழிந்து விட்டது போல் ரொனி கூக்குரலிட்டது. அமெரிக்க பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நாமும் மனம் வருந்துகின்றோம் என்றது. ஆனால் உலகம் முழுவதும் எத்தனையோ ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது, இது போன்றதுகள் எதையும் கண்டு கொள்ளவில்லை என்பதுடன் பல்லாயிரக் கணக்கானவர்களின் மரணத்திற்கு இவர்களின் லாபவெறியும்,  போர் வெறியுமே காரணம் என்பதனை மறைத்துக் கொண்டு தீவிரவாதத்தினை ஒழிக்க வேண்டும் என்று அகிம்சை பேசியது. சுனாமிப் பேரழிவின் போது ரொனி செங்கடல் பகுதியில் விடுமுறையில் இருந்தது. லட்சக் கணக்கான மக்களை கடல் கொள்ளை கொண்ட போது, ரொனி வெளிவரவே இல்லை. புத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட பொது விடுமுறையினை எப்படி பாதியில் முறிக்க முடியுமென்று இந்த அமெரிக்க அடிமை திமிராக பதில் சொன்னது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித் தொகைகள் ரொனியின் காலத்தில் கணிசமாக குறைக்கப்பட்டன. மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது தெருக் கூட்டும் தொழிலாளிகளிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் உயர் கல்விக்கு செலவழிப்பது நியாயமற்ற செயல் என ஒரு விளக்கம் சொன்னது.  தேவையில்லாத ஒரு பதவிக்காக ஒரு தொழிலாளியை விடவும் எத்தனையோ மடங்கு பணத்தினை சம்பளமாக பெறுவதில் ரொனிக்கு வெட்க்கமில்லை. ரொனி போன்ற அரசியல்வாதிகளை யார் வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து மக்களிற்கு சேவை செய்ய வரச் சொன்னார்கள். ஒரு தொழிலாளி நகரசபையில் ஒரு சிறிய வீட்டை பெறுவதற்கு வருடக்கணக்கில் காத்திருக்கையில், இவர்கள் மக்களின் வரிப் பணத்தில் மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்கின்றார்கள்.

Gillgan

ஈராக்கின் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் பொய்யானவை மிகைப்படுத்தப்பட்டவை என அன்ட்ரு கில்லகன் என்ற செய்தியாளர் பிபிசி இன் வானெலி நான்கு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதற்க்கான ஆதாரங்களை கலாநிதி டேவிட் கெல்லி என்ற விஞ்ஞானி இவருக்கு ரகசியமாக தெரிவித்திருந்தார். செய்தி வெளியான பின்பு ஆதாரங்களை யார் கொடுத்திருப்பார்கள் என்ற விசாரணை பாதுகாப்பு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கலாநிதி டேவிட் கெல்லியின் உடல் வயல் வெளி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.  விசாரணையின் போது அவரது பெயர் வெளியாகிவிடக் கூடுமென்ற அச்சத்தினால் அவர் தற்கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் குறித்த சந்தேக நிழல்கள் இன்னமும் விலகிடவில்லை. பொய்யான தகவல்களை வெளியிட்டதாக அன்ட்ரு கில்லிகன் அரசினால் குற்றஞ்சாட்டப்பட்டதனை அடுத்து அவர் பிபிசியிலிருந்து பதவி விலகினார். சிறிது காலத்தின் பின் ரொனி சொன்னது தான் பொய்யானவை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணமானது. உண்மையை வெளிக் கொண்டு வந்த ஒரு செய்தியாளர் பதவி விலகினார். ஒரு விஞ்ஞானி உயிரையே இழந்தார். ஆனால் பொய் சொன்ன போர் வெறியர்கள் எவரும் பதவி விலகவில்லை.

Kelly

ஈராக் போரின் பின் பொது மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்க்காக ரொனியால் கட்டன் என்பவரின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆக் குழுவின் முடிவகள் கேலிக் கூத்துக்களின் உச்சமாக இருந்தது. ரொனியில் தவறில்லை, அமைச்சரவையில் பிழையில்லை. அரசு புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையிலேயே போரிற்கு சென்றது. புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த அறிக்கைகள் தான் பிழையானவை. அதுவும் கூட அதிகாரிகளின் பிழையல்ல. அவர்களிற்கு ஈராக்கிலிருந்து தகவல்களைக் கொடுத்தவர்கள் தான் தவறு செய்து விட்டார்கள் என்று எல்லோரும் நல்லவரே என முடிவு வந்தது.

ஈராக்கில் எண்ணெய் இருக்கிறது. அதனை களவாடவே அமெரிக்காவும், பிரிட்டனும் போருக்கு சென்றன என்பது சின்ன பிள்ளைகளிற்கு கூட தெரிந்தவிடயம். இந்த மெத்தப் படித்த மேதாவிகளிற்கு தெரியாமல் போய்விட்டதாம். இந்த இடத்தில் உங்களிற்கு ம.க.இ.க இன் ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பின் குறிப்பு: ரொனி பிரித்தானிய பிரதமராக இருந்தது. ஜோர்ஜ் புஸ்சின் நாயின் பெயர் என்று நினைக்க வேண்டாம்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்