10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

புதிய உலக ஒழுங்கமைப்பும், 'பொலித்தீன் பூக்களும்'.....

இன்று உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது 'பொலித்தீன் பூக்கள்' என்றால், வாசகர்களுக்குச் சிரிப்புத்தான் வரும்.  இது என்ன' பொலித்தீன் பூக்கள்' என்று நீங்கள் கேட்கலாம். இன்று ஆபிரிக்க மற்றும் மூன்றாம், நான்காம் உலக வீதிகளின் ஓரங்களில் தினமும் மிகையாகப்  பூத்துக்கிடப்பவைதான் இந்தப் 'பொலித்தீன் பூக்கள்' ! ஜரோப்பா முதல் உலகம் பூராகவும் பூங்காக்களிலும், காடுகளிலும்.... என்று, பூத்துக் குலுங்குபவை இந்த 'பொலித்தீன் பூக்கள்' என்றால் அது மிகையாகாது! ஆனால் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இன்று இதை ''ஆபிரிக்காவின் பூக்கள்'' என்று செல்லமாக அழைப்பதை நாம் காணலாம்...

உலகில் காணப்படும் பொலித்தீன் கொள்ளளவுகளில் மட்டும்  44 சதவீதத்தை ஆசிய பசுபிக் நாடுகள் கொண்டுள்ளன. இது கிட்டத்தட்ட 12 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் காணப்படுகிறது. இதில் இந்தியாவும், சீனாவும் மட்டுமே 8 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் கொண்டுமுள்ளது. இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பு நகர்வில் (2006)...,  உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாகிய பொலித்தீன், பிளாஸ்திக் உற்பத்திகள் : ஆசிய பசுபிக் நாடுகள், மத்தியகிழக்கு நாடுகளின் சந்தைப் பகிர்வின் ஊடாக மொத்த உலகக் கொள்ளளவில் 80 சதவீதத்தை, கைப்பற்றும் புதிய உலக ஒழுங்கமைப்பு சாத்தியப்பாடான நிலைகளை எட்டியுள்ளது................ (இது மொத்த பிளாஸ்திக் உற்பத்தியையும் உள்ளடக்கியது)

ஆசிய பசுபிக் நாடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் குடிநீர், பால், எண்ணெய், சாராயம் போன்றவை... பொலுத்தீனில் பாவனையில் வந்துள்ளது. சாப்பாட்டுக் கடைகளின் 'கட்டுணவு', வாழையிலை மற்றும் இலைவகைகளை இழந்து இது பொலித்தீன் மயமாகவே மாறியும் இருக்கிறது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்குக்கள், நூறாண்டுகள் தொடக்கம் பலநூற்றாண்டுகள் வரை மண்ணுக்குள் உக்கிப்போகாமல் இருப்பதால், இது பெரும் பிரச்சனையாக பின்தங்கிய நாடுகளில் சீர்கேடுகளாகக் காணப்படுகிறது. மேலைத்தேய நாடுகளில் இது மறு உற்பத்தி அரங்குக்கு வெகுவாக வராதபோதும், இவை எரியூட்டப்பட்டு வளிமண்டலத்தில் கரியமிலவாயுவாக கரைந்து, கலந்தும் விடுகிறது.

உலக உற்பத்தியில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக்  03 சதவீதமே மீள அரங்குக்கு ('றிசேக்கிள்') வருகிறது. கடதாசி 30 சதவீதமும், உலோகங்கள் 35 சதவீமும், கண்ணாடிச் சிதைவுகள் 18 சதவீதமும் மீளப் பெறப்படுகிறது. 

இந்நிலையில்தான் வளிமண்டலத்தில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக், கரியமிலவாயு - மற்றும் வளிமண்டலச் சீர்கேடுகளை - ஏற்படுத்துவதாக உலகில் பெரும் குரல்கள் எழுந்தும் வருகின்றன.

இதனால் இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்புக்குள் இப்பிளாஸ்திக் உற்பத்தி (பொலுத்தீன் உட்பட), மறுசீர் அமைக்கப்பட வேண்டும் என்ற புதிய, கடுமையான நிபந்தனைகளுக்கு உள்ளாகின்றன. இதன் அடிப்படையில்..

அண்மையில் இலங்கையில் வெளியாகிய இரு செய்திகளைக் கவனித்துப் பாருங்கள்....

ஒன்று: ''யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே தாம் பொலித்தீன் பாவனைகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்திருந்தும், இதுவரையில் செவ்வனே அந்த நடவடிக்கையை முன்னெடுக்காததினால் இத் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மூலம் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தி, இச்சட்டத்தை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

அதிகளவில் பொலுத்தீன் பாவனை காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை நீர் வடிகாலமைப்பில் தடங்கல்கள் ஏற்படுவதாகவும், இதனால் டெங்கு காரணியான நுளம்புகள் உண்டாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் இதுபோன்ற காரணங்களிலாலேயே இந்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக....'' ( July 28, 2010 01:03 pm)

 இந்தச்செய்தி கூறிச்செல்கிறது...


இச்செய்தி உள்ளிட்ட சூழலில், இதன் பின்னணியில்: கடந்த 30 வருடகால யுத்தத்தில் யாழ் ''பெரியாஸ்பத்திரியில்'' மருத்துவத்துக்காக பாவிக்கப்பட்ட , ஏராளமான பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக், உரியமுறையில் மீள் உற்பத்திக்கு - அல்லது எரியூட்டலுக்கு - கொண்டுவரப்பட்ட மீள் ஒழுங்கமைப்பையும் கொண்டிருந்ததா? என்று இன்னொரு கேள்வியும் உண்டு.

இச்செய்திகளோடு செய்தியாகத் தெற்கிலே, இரண்டாவதாக இன்னொரு செய்தியும் வந்திருந்தது. இம்முறை கண்டி 'பெரகெரா' திருவிழாவின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்த்திக் பாவனைப்பொருட்களுக்காக புதிய ஒழுங்குவிதிகளை அரசு அறிவித்திருந்தது. இவை நல்ல விடயம் என்றாலும் இந்த அரசியல் விளையாட்டில், தேர்தல், பொங்குதமிழ், மாவீரர் தினம், அரசியல்வாதிகள் கூட்டம், ஜனாதிபதியின் வருகை ... போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பாவிக்கப்படும் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கொடிகள் போன்றவற்றின் தொகை கொஞ்ச நஞ்சமல்லவே!

கடந்த தேர்தலின்போது மட்டும் 'வேட்பாளர்'களுக்காக தொங்கவிடப்பட்ட, வர்ண பொலித்தீன் கொடிகளில் அகற்றப்பட்டவை மட்மே 16,754 கிலோ! கடந்த கால யுத்தத்தில், யுத்தமுனையில் பாவிக்கப்பட்டு கேட்பாரற்று கைவிடப்பட்ட பொலித்தீன்களின் நிறை - கணக்கில் அடங்காது!! ஆனையிறவுச் சமரின்போது அந்தச் சமர்வெளியில் சிதறிக்கிடந்த உடல்களோடு உடல்களாக கிடந்த (புலிகளின்) 'வெற்றிக்காட்சி'ப் படங்கள் பொலித்தீன் காடாகவே காட்சியளித்தும் இருந்தது. முள்ளிவாய்க்கால் யுத்தப் பிரதேசமும், இன்றைய வன்னி அகதிகள் முகாமும், அதன்கூடாரமும் பிளாஸ்திக் பாவனையை உள்ளடக்கிய, பொலுத்தீன் குப்பைக்காடுகள் என்பதுதான் மறுதலை உண்மையுமாகும்.

இன்று உலகத்து அரசியல்வாதிகள் முதல் உள்நாட்டு அரசியல்வாதிகள் வரை பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் பற்றி வாய்கிழியப் பேசுவது எதற்காக? என்பதுதான், நாம் பகுத்தறியவேண்டிய ஒன்றாகவுள்ளது.

இந்த பிளாஸ்திக் என்ற சொல் கிரேக்க சொல்லில் (plastkos) இருந்து பெறப்பட்டது. இதன் மூலப் பொருளான (cellofan ) 1866 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது உலகமகாயுத்தத்தின் பின்னரே பிளாஸ்திக் வகையானவை உலகில் உருவாகியும் இருந்தன. அதுவரை 'சுப்பர் மாக்கெட்டில்' இருந்துவந்த, 'பிறவுன் பேப்பர்' (எமது நாட்டில் ''மாட்டுத்தாள் பேப்பர்'' - தடிப்பான பாவனைக்கு) படிப்படியாகச் செயலிழந்தன.

1958 ஆம் ஆண்டு, முதல்முதலாக பிளஸ்திக் போத்தலில் 'கொக்கோ கோலா' வெளியானதுடன் இந்தப் பிளாஸ்திக் பிரசித்தமானது, அல்லது வியாபாரத்துக்காகப் பிரசித்தப்படுத்தப்பட்டது! இந்த பிளாஸ்திக்கின் வருகை மலிவான, ஆகாத மூலங்களைக் கொண்டது என்பது இந்த உலக வியாபாரத்துக்குத் தெரியாததுமல்ல. இலேசான நுகர்வை மையப்படுத்தியும், இன்று கருத்தடை சாதனங்கள் (பிரிதி) முதல் ஆகாய விமானத்தில் உதிரிப்பாகங்கள் வரை இது உலகில் நிறைந்தும் விட்டது.

1950 ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களான 1960 வரை, 1.5 மில்லியன் மக்கள் இதைப் பாவிக்கும் நிலைக்குள் இது நகர்த்தப்பட்டும் இருந்தது. இது இன்று 250 மில்லியன் தொன்னைத் தாண்டி இன்று தலைவிரித்தாடும் உலகப் பிரச்சனையாக மாறியும் விட்டது.

இந்தப் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியை இவர்களால் கைவிடவும் முடியாது! ஏனென்றால் கடந்த 30 வருடங்களில் இதில் சாதாரண மனிதனின் பாதத்திலிருந்து ஆகாயம் வரை அவனது தேவைகளாகக் கலந்து இந்த உலகத்தை, 'ஏகே 47' வரை (இலகுவான - 'பாரம் குறைவான' - சுடுகலன்- உற்பத்திவரை) வளர்ந்து வந்த உலக மனிதவிரோத, உற்பத்தியில் ஊறிப்போன - நாறிப்போன - முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தேவைக்கான  உலகமிது!

உலகத்தில் குழந்தைகள் கடற்கரையில் மணல்வீடு கட்டியும், முற்றத்தில் காலைமுதல் மாலை வரை ... ('நிலாச்சோற்றில்' படுத்துறங்கும் வரை .... )அவர்கள் பாவித்து வந்த இயற்கையான விளையாட்டுச்சாமானான  மரஉற்பத்தி மற்றும் - (இயற்கை சார்ந்த) - அவர்களின் விளையாட்டுச்சாமான்கள் ,- இந்த  விளையாட்டுப் பொருட்கள்- , இன்று உலகத்தின் நடைமுறையில் காணாமலும் போய்விட்டது.  உலகத்துக்கான குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்திக் உருவாக்கமாக  இன்று உலகச்சந்தையில் 60 பில்லியன்  - 'ஈரோவில்' - உருவாக்கி இவர்கள் குழந்தைகளைப்  பிராக்காட்டப் - பாடுபடுகிறார்கள். இவர்களை விட இவ்வுலகத்தில் 20 மில்லியன் வரையிலும் மேலான குழந்தைகள் ஒருநேர வயிற்றுக்கு உணவின்றி (கடந்தகால யுத்தங்களால்) கதறியழும் எந்தக் குரலும்  இந்தப் 'புதிய உலக ஒழுங்கமைப்பு', ''ஜனநாயக விளையாட்டு உலகுக்கு'' நடைமுறையில் கேட்காமல் போனதேன்?

 


2009 ஆம் ஆண்டு  -  (G-8)   - மாநாட்டில்,

''வறியநாடுகளின் உணவுத் தேவைகளுக்கான பாதுபாப்புக்காக 20 பில்லியன் ($) - மூன்று வருடங்களுக்குத் -  தேவைப்படுவதாக'' இது பரிந்துரைத்திருந்தது! இது சாராம்சத்தில் உலக உணவுத்தேவையின் அடிப்படையில் , இவை இன்றைய உலகத்தின் பட்டினியையும் பசியின் கொடுமையையும் நிர்வாணப் படுத்தியுமுள்ளது.

இன்று ஜரோப்பாவில் (2008ஆம் ஆண்டு) 250 மில்லியன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் பாவனையில், 12 மில்லியன் தொன் குப்பையாய்ப் பெறப்படுகிறது. இதில் 5. 3 மில்லியன் தொன் மீள்அரங்க உற்பத்திக்குச் செல்கிறது. கிட்டத்தட்ட 7.5 மில்லியன் தொன் எரியூட்டப்படுகிறது. மீளப்பெறப்படும் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீனில்,  மீள் உற்பத்தியில் 7 ஆயிரம் தொன்  நிலப்பயன்பாட்டுக்கும், காட்டுப் (வீட்டுத் தோட்டம் உட்பட) பயன்பாட்டுக்கும் சென்று விடுகிறது. (இது புதிய பிளாஸ்திக் மற்றும் பொலுத்தின் தெரிவுக்கு கலக்க முடியாதவையாகத் தவிர்க்கவும் பட்டிருக்கிறது)

இன்று உலகத்தில் சந்தைப் பாவனைக்காகப் பயன்படுத்தப்படும், 'சொப்பிங் பாக்' வீட்டுவாசல் வரையான  வரவுக்குப்பின் இது பெரும்பாலும் வீசியெறியப்படுகிறது. மேற்கூறிய 250 மில்லியன் தொன் பாவனையில் இது 100 மில்லியன் தொன்கள் கண்கடையற்று சூழலில் வீசப்பட்டும் விடுகிறது.

2007ஆம் ஆண்டு அமெரிக்காவின் சண் பிரான்சிஸ்கோவில் 'சொப்பிங் பாக்'கின்  தடை வந்ததை அடுத்து, சீனா இலவசமாக வழங்கிய 'சொப்பிங் பாக்'கை காசாக்கியது. இதனால் சீனா 40 மில்லியாடர் 'சொப்பிங் பாக்'கை மிச்சம் பிடித்தது, 1.6 மில்லியேனர் தொன் உற்பத்திக்கான தூய எண்ணையை பசுந்தாக மிச்சமும் பிடித்தும் வைத்தது.

இன்றைய பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக் உற்பத்தியால் வெளியேறும் கரியமிலவாயுவை,  'பயோ -BIO- பிளாஸ்திக்'கால் ( தாவர மூலங்களில் இருந்து உருவாக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்) நாலில் ஒரு பங்காகக் குறைக்கமுடியும்! அதாவது பயோ பிளாஸ்திக் உருவாக்கத்தால் -ஒரு கிலோவில் - முன்னர் தயாரிக்கப்பட்ட உற்பத்தி முறையிலிருந்து நாலில் மூன்று பங்கு கரியமில வாயுவெளியேற்றத்தை வளிமண்டலத்துக்குத் தடுக்கலாம் என்பது இதன் பிரதான தொனியாக அமைகிறது.


இன்று உலகத்தில் இருக்கும் மனிதப் புழக்கத்துக்கான  உலகப் பரப்பளவு 45.45 சதவீதமாகும். இதில் தொழில் புரியும் மனிதத்தின் (இயற்கை சார்பான தொழில் -பாரம்பரிய விவசாயம் - உட்பட)  இயற்கைவளம் 24.24 சதவீதமாகும். 2006 ஆம் ஆண்டு இயற்கையில் வெறுமனேயான -நிராகரிக்கப்பட்ட  - நிலப்பரப்பு 13.04 சதவீதமாகும். இதில் 3 வீதமானவை போக்குவரத்து வீதிகள், புகையிரதப் போக்குவரத்துக்கள் போக, எஞ்சிய 10.4 சதவீதமான நிலங்கள் இன்று எல்லாப் பிரச்சனையையும் போக்கும் மூல மருந்தாக எஞ்சியும் இருக்கிறது. (இங்கு மூலமருந்து என்பது புதிய உலக ஒழுங்கமைப்பின் நிலசார்பான, எதிர்காலத்துக்கான  -சந்தை நுகர்வுக்கான- புதிய வழிகள்!

இதைவிடவும் எஞ்சிக் கைவிடப்பட்ட நிலமாக இருக்கும் 17.27 சதவீதமான நிலங்கள் இருக்கின்றன. இது இரசியா, ஆபிரிக்கா, சவுத் அமெரிக்கா மற்றும் கஷகத்தான் ( Kazahstan) ஆகியவையை பெரும்பாலும் கொண்டும் இருக்கிறது. இதில் 2006 ஆண்டுமுதல் 2020 ஆண்டுவரைக்காக பாவனைக்காக சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டுமுள்ளது.  இதில் 6.36 சதவிகிதம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது 210 மில்லியோன் கெக்கர்  பயன்படுத்தப்படுகிறது.  (மொத்தமாகவுள்ள 570 மில்லியன் கெக்கரில்) மிகுதியாக உள்ள 360 மில்லியன் கெக்கர் சும்மா கிடக்கிறது. 

பயன்படுத்தப்படும் 6.36 சதவீதத்தில் இறைச்சிக்கான தேவைக்காக மட்டும் 2.9 சதவீத நிலம் பயன்படுத்தப்படுகிறது (96 மில்லியன் கெக்கர்). இந்த முனைப்பில் மனிதருக்கான உணவு உற்பத்தியின் மேலதிகத் தேவைக்காக 1.9 சதவீதமே இந்த உலகம் ஒதுக்கியுள்ளது (64 மில்லியன் கெக்கர்) . இதில் 0.97 சதவீதம் புதிய பாதைகளுக்காக - புகையிரதப்பாதைகள் உட்பட -  வடிவமைக்கிறது ( 32 மில்லியன் கெக்கர்) . மற்றும் தாவர உரங்கள் , விறகுகள், 'பயோ' பொலித்தீன் பிளாஸ்திக்குக்களுக்கான பிரயோகங்கள் 0.5 சதவீதமாகவே காணப்படுகிறது.

இன்று உலகத்தில்  பாவிக்கப்படக் கூடிய  -விவசாய நிலங்களில் - 92 சதவீதமன நிலங்கள் உலக சனத்தொகைக்காகவும், அதன் பயன்பாட்டு விலங்குகள் (கால் நடைகளுக்காகவும்) உட்பட்ட நித்த உணவுத் தேவையை  தயாரித்தும் வருகிறது.  6 சதவீதம்  தொழிற்சாலைக்கான  மூல உற்பத்திகளும்,  இதில் 2 வீதமானவையே எரு, விறகுகளைத் தயாரிக்கின்றன. மொத்தத்தில் இன்றைய 'பயோ' தாவர மூலத்துக்கான, தயாரிப்புக்கள் 0.1 சத விகித நிகழ்தகவுக்கும் குறைவான நிகழ்தகவையே , இன்றைய நடப்பு  'உலக அமைப்புக் கொண்டும் இருக்கிறது!'


இப்படி இருக்கையில், எப்படி இவர்களால் (மேற்குலக ஏகாதிபத்தியங்களால்)  'பயோ மாசை' உற்பத்தி செய்யலாம்?

முதலில் பிளாஸத்திக், பொலித்தீன் போன்ற  அடிப்படைத் தயாரிப்புக்களான மூலங்களில் , குறைந்தது 14 சதவீத  உலர் தாவரமூலங்களைக் கொண்டே இவை தயாரிக்கவும் படுகிறது.  ஆனால் 2025ஆம் ஆண்டு பயோபிளாஸ்திக்கை ஜரோப்பிய யூனியன் 31 சதவீதத்தையும், அமெரிக்கா 28 சத விகித்தையும், ஆசியா 32 சதவீதத்தையும் உலக சந்தைக்குக் கொண்டுவரும் என்று இவ் ஆய்வுகள் கூறுகின்றன.

பயோ பிளாஸ்திக் உற்பத்தி என்பது புற்கள் ,சோளம்,  கரும்பு.... வகைகளை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும், தாவர மூலங்களைக் கொண்ட அதிஉயர் 'புரோட்டின்' உற்பத்தியுமாகும்.  இதனால் கால்நடைகளுக்குத் தேவையான பெருமளவு புரோட்டின் நெருக்கடிகளைச் சந்திக்கும் என்பதைப்பற்றி இவர்கள் அதிகம் கவலைப்படப் போவதில்லை. பயோ பிளாஸ்திக்கின் உற்பத்தியில் சோளம் பிரதான பங்கை இங்கே வகிக்கிறது, என்பது முக்கியமானது. அதனால் சோளக்காடுகளையும், கரும்புத் தோட்டங்களையும் பொலித்தீனுக்காக (பிளாஸ்திக்குக்காக) இவர்கள் உருவாக்கப் போகிறார்கள்.

யூ.எஸ் (US) நாடுகளில் உற்பத்தியாகும் சோளம் மனித உணவுக்கு அதிகம் பயன்படுவதில்லை. இதில் 70 சதவீதமானவை  கால்நடை உணவுக்கே பயன்படுகிறது. யூ.எஸ் (US) நாட்டில் ஒரு மனிதனுக்கான இறைச்சித்தேவை - 1950 இல் - 62 கிலோவாக இருந்தது. இது இன்று 170 கிலோவாக அதிகரித்துமுள்ளது. 'சீசும்' பாலும் 81 கிலோவால் அதிகரிக்கிறது. மேலதிகமான நிலஉற்பத்தி சராசரி 29 கிலோவால் அதிகரிக்கிறது.

யூ.எஸ் (US) நாடுகளின் இறைச்சித் தேவை இனிவரும் 40 வருடங்களில்  (2050) பிளஸ் 103 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது. 229 மில்லியன் தொன்னில் இருந்து ,465 மில்லியன் தொன்னாக அதிகரிக்கிறது.

பால் உற்பத்தி பிளஸ் 90 சதவீதத்தால் அதிகரிக்கிறது .580 மில்லியன் தொன்னில் இருந்து 1043 தொன்னாக அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரித்துவரும் சந்தைத் தேவைகளுக்கான 'பக்கிங்' மற்றும் நுகர்வுக்கான பணப்பிரச்சனையைத் தீர்பதற்கான இலாபங்கள் கருதியே இந்த பயோபிளஸ்திக் கோரவும் படுகிறது.  

உலக பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் உற்பத்தியில் 1.6 மில்லியோனர் தொழிலாளர்கள்  ஈடுகின்றனர். இதேபோல உலக விவசாயத்தில்  நூற்றுக்கு மேற்பட்ட மில்லியோன் தொழிலாளர்கள்  ஈடுபடுகின்றனர். இந்த விவசாயிகளில் 75 வீதமானவர்கள் தமது வாழ்வாதாரத்தை நிறைவு செய்யமுடியாது திண்டாடுகின்றனர். தாங்கமுடியாத வறுமையால் தற்கொலையும் செய்கின்றனர். உலகத்துக்காக உணவு உற்பத்தியின் தேவையோடு ஒப்பிடும்போது, பயோ பிளாஸ்திக்கின் தேவை 250 மடங்கு குறைந்ததாகக் கருதவும் படுகிறது.

இன்று பேசப்படும் 'சூழல் மாசுபடுதல்' என்ற பேச்சுக்கூட, இயற்கையோடு இணைந்து உற்பத்திசெய்யும் விவசாயிகளையும் கால்நடைகளையும் எவ்வாறு பாதிக்கின்றது என்ற கருசனையில் கூட எழுப்பப்படவில்லை. இந்த முதலாளித்துவத்தின் சந்தைத் தேவைகளின் நெருக்கடிகளாலேயே இவை கதிரையில் இருந்தபடி எழுப்பப்படுகிறது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கமுடிந்தது. இந்தியாவில் ஒருமாடு தீவனம் இல்லாமல் குப்பைத்தொட்டியை மேய்ந்தும் இருந்தது. இதை நிற்கவைத்து அதன் வயிற்றைக் கீறி சுமார் 14 கிலோ பொலித்தீனை அகற்றியும் இருந்தனர். இது ஜரோப்பாவில் ஒரு மனிதன் சுமார் நான்கு நாட்கள் பாவிக்கும் பொலுத்தீனுக்குச் சமமாவும் இருந்தது. இவ்வாறு கால்நடைகளுக்கே போதிய அளவு தீவனம் இல்லாத நிலையில் தான் இந்த பயோ பிளாஸ்திக் உற்பத்தியும் பேசப்படுகிறது.

உண்மையில் ஆசிய பசுபிக், மத்திய கிழக்குச் சந்தைகள் இப்புதிய ஒழுங்கமைப்புக்குள் இணைவதே இங்கு முக்கிய சந்தைப் பிரச்சனையாக இருக்கிறது. பொலித்தீன் உலகச்சந்தையில் 80 வீதத்தை இவைகள் கொண்டிருப்பதால், மேற்குலக நாடுகள் பயோ பிளாஸ்திக்கை உருவாக்கி மீள் உற்பத்திக்கான மூலமாக இவற்றைத்தாம் எதிர்காலத்தில் தக்கவைப்பதே இவர்களின் முதன்மை நோக்கமும் ஆகும். இதனால் இவர்கள் தமது உற்பத்திகளை இலகுவாகச் சந்தைப்படுத்தும் பணப்பிரச்சனையை சரிக்கட்டுவதுமே பிரதான நோக்கங்களாக அமைகிறது.

 

சுதேகு
061110


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்