பகிஸ்கரிப்பு இலங்கையில் மக்கள் வாழ்கின்றனர் என்பதை மறுதலிக்கின்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தையே மறுதலிக்கின்றது. இலங்கையில் சுயாதீனமான அரசியல் செயல் தளங்களை மறுதலிக்கின்றது. தாம் அல்லாத அனைத்தையும், அரசு சார்பானதாக முத்திரை குத்துகின்றது. இதைத்தான் புலம் மற்றும் தமிழ்நாட்;டு, புலித் தமிழ்தேசியம் முன்தள்ளுகின்றது. இதற்குள் இடதுசாரியம் நீந்துகின்றது.

இந்த மாநாட்டுக்கான எதிரான எதிர்ப்பு அரசியல், புலி பாசிசத்தினால் கட்டமைக்கப்பட்டது. அதன் சாதக பாதக அம்சங்கள் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இலங்கை பாசிசத்தை இலங்கை மக்கள் தான் முறியடிக்கவேண்டும். இந்த அரசியல் அடிப்படையைக் கூட, தொடர்ந்து இன்று புலி அரசியல் மறுதலிக்கின்றது. அங்கு வாழும் தமிழ்மக்கள் சுயாதீனமாக கூடுவதைக் கூட, இவர்கள் அனுமதிக்கத் தயாராகவில்லை. புலிகள் கடந்த காலத்தில் எதைச்செய்தனரோ, அதையே இன்று செய்கின்றனர். புலியைப் போல் தான் அரசும், தான் அல்லாத எதையும் சுயாதீனமாக செய்வதை விரும்பவில்லை. அதை தன் ஜனநாயக வே~ம் மூலம் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. இன்று புலம் மற்றும் தமிழ் நாட்டு புலித் தமிழ்தேசிய பினாமிகள், இந்த வகையில் அரசுக்கு தாராளமாகவே உதவுகின்றனர். அரசுக்கு பதில் புலியே அதைச்செய்து முடிக்கின்றது.

முன்னாள் புலம்பெயர் புலிப்பினாமி எழுத்தாளர் கூட்டமும், தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டமும் சேர்ந்து, அண்மையில் இதை பகிஸ்கரிக்க கோரி அறிக்கையையும்  விட்டனர். இடதுசாரிகளோ இதன் மேல் தங்கள் சொந்த அரசியல் நிலைப்பாட்டை வைக்க முடியாது, புலித் தமிழ் தேசியத்தின் பின் வால் பிடித்த பகிஸ்கரிக்கக் கோருகின்றனர். கடந்த ஒரு இரு வருடமாக புலிப் பாசிசத்தின் பின் நின்று தமிழ்தேசியத்தை உயர்த்துவதன் மூலம் தான், இடதுசாரி தமிழ் தேசியம் இயங்க முடியும் என்ற போக்கு, அரசியல் ரீதியாக முன்தள்ளப்படுகின்றது. இந்த வகையில்தான் அண்மையில் எமக்கு எதிரான ம.க.இ.கவின் அரசியல் கூட வெளிப்பட்டது. புலித் தமிழ் தேசியத்துடன் சென்றுதான் அல்லது அதை விமர்சிக்காது மௌனம் சாதித்தபடி தான், தமிழ் தேசியத்தை உயர்த்த வேண்டும் என்ற இடதுசாரி அரசியல் சந்தர்ப்பவாதத்தை, நாம் அரசியல் ரீதியாக தனியாக ஆராய வேண்டியுள்ளது.

இலங்கை எழுத்தாளர் மாநாட்டை ஒட்டிய இடதுசாரிய நிலைப்பாடு என்பது, புலிப்பாசிசத்தின் அதே நிலைப்பாடாக காணப்படுவதை நாம் இங்கு காண்கின்றோம். மாற்று அரசியல் பேசும் பலர் மதில் மேல் பூனையாக மாறி, கருத்துகள் எதுவும் சொல்லாது புலித்; தேசிய அரசியலின் பின் வால் பிடிக்கின்றனர்.

இந்த நிலையில் புதியஜனநாயகம் அக்டோபர் இதழில் ".. ஜனவரியில் அனைத்துலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதென்றும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது" என்று எழுதுகின்றனர். ஆச்சரியமான ஆதாரமற்ற தரவுகள், முடிவுகள். வலதுசாரி புலிகள் கூட இதை இலங்கை அரசுதான் நடத்துவதாக கூறவில்லை. பலர் கையெழுத்திட்ட அறிக்கையில் கூட இப்படி அவர்கள் கூறவில்லை. இதை பகிஸ்கரிக்க கோரி முன்னின்று கையெழுத்து வாங்கிய  மு.புஸ்பராஜன் பிபிசி க்கு வழங்கிய பேட்டியில் "சிறிய விடயங்களைக் கூட தமக்குச் சாதகமான பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள விளையும் இலங்கை அரசாங்கம், இந்த எழுத்தாளர் மாநாட்டை நிச்சயமாக பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விளையும் என்று கூறுகிறார்" இந்த வகையில் தான், இந்த எதிர்ப்புக் கட்டமைக்கப்படுகின்றது. இது சரியானதா? அப்படி பயன்படுத்தும் என்பதால் இது தவறானதா? வேடிக்கையானது.

இது இலங்கை மக்களின் சுயாதீனத்தை மறுக்கின்றது. அவர்கள் கணக்கு தீர்க்கவேண்டிய சுயாதீனமான செயல்பாட்டை தமக்க அடிமைப்படுத்த கோருகின்றது. புலத்து மற்றும் தமிழ்நாட்டு பெரியண்ணாமார்கள், இலங்கை மக்களின் சுயாதீனத்தை மறுதலிக்க முனைகின்றனர்.

இந்தப் பகிஸ்கரிப்புக்கு வைக்கும் காரணங்களை எடுப்போம். இலங்கையில் பாசிசம் நிலவுவதாலும், அங்கு ஊடகவியலாளர்கள் பலவிதமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாலும் இந்த மாநாட்டை இலங்கை அரசு சார்பானதாக கூறுகின்றனர். இதை அரசு பயன்படுத்தும் என்கின்றனர்.

சில உண்மைகள் மீது கட்டமைக்கப்படும் இந்த எதிர்ப்பு அரசியல், புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு புலிசார்பு தமிழ்தேசிய அரசியலாக உள்ளது. ஒரு பாசிசத்துக்கு எதிராக மற்றொரு பாசிசத்தை சார்ந்து வெளிப்படுகின்றது. அது முந்தைய பாசிசத்துக்கு உதவுகின்றது.

இலங்கை வாழ் மக்கள் இலங்கை அரச பாசிசத்தை முறியடிப்பது எப்படி? இந்தக் கேள்வியும், அங்குள்ள எழுத்தாளர் இதை எப்படி எதிர் கொள்வது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. புலத்து மற்றும் தமிழ்நாட்டு தமிழ்தேசிய புலி அரசியலுக்கு இது பற்றி எந்த அக்கறையும் கிடையாது. தங்கள் குறுகிய நலன் சார்ந்த எதிர்ப்பு அரசியல் இவர்களின் குறிப்பான குறியாக இருக்க, இலங்கையில் பாசிசத்தை முறியடிக்கும் அரசியலை மறுதலிக்கின்றனர். முன் கூட்டியே முத்திரை குத்தி, தீர்ப்புகளை வழங்குகின்றனர்.

புலத்து மற்றும் தமிழ்நாட்டு புலி தமிழ்தேசியம், இலங்கை அரச பாசித்தை முறியடிக்க ஏகாதிபத்தியத்தை நம்புகின்றது. ஏகாதிபத்தியம் சார்ந்த போர்க்குற்ற விசாரணை மூலம், இலங்கை அரசை எதிர்கொள்ளும் கனவுலகில் எதிர்ப்பு அரசியலை திணிக்கின்றனர். இதை ஓட்டி மே 18 வியூகம் இதழ் இரண்டும், இதைக் குழப்பாத வண்ணம் இதை உயர்த்திப்பிடிக்கக் கோருகின்றது. இது பற்றி தனியாக நாம் பார்க்க உள்ளோம். புலத்து மற்றும் தமிழ்நாட்டு புலித் தமிழ்தேசியம், ஏகாதிபத்திய தலையீட்டை நம்பி எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கின்றது.   இலங்கை மக்கள் தான் இதைக் கணக்கு தீர்க்க வேண்டும் என்பதை அது மறுதலிக்கின்றனர்.

இலங்கை மக்கள் பாசிசத்தை எதிர்கொள்வது எப்படி? சுயாதீனமான பலதரப்பட்ட செயல்பாடுகளுக்குள் தான், பாசிசத்தை எதிர்கொண்டு போராடும் ஆற்றலை அந்த மக்கள் வளர்க்க முடியும்;. வெற்றிடத்தில் அல்ல. எதையும் தமிழ்மக்கள் மத்தியில் புலிகள் விட்டுவைக்கவில்லை. புலிப் பாசிசத்துக்கு பதில் அரச பாசிசம் இன்று. தமிழ் மக்கள் மீள்வதற்கான முயற்சயில், அந்த மக்களின் சுயாதீனமான செயல்பாடுகள் அவசியம். அரை சுயாதீனமான அமைப்புகள் கூட, இதற்குப் பொருந்தும். 1930 களில் கம்யூனிச அகிலத்தில் டிமித்ரோவால் முன் வைக்கப்பட்ட பாசிச எதிர்ப்பு போராட்ட வழிகாட்டு நெறி இங்கு பல வகையில் உதவும்.

இன்று எம் மண்ணில் சுயாதீனமான செயல்பாடுகள், பல மட்டத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவைகளை பகிஸ்கரிக்க கூடாது. மாறாக அதில் பங்கு கொள்ள வேண்டும். இது பாசிச எதிர்ப்பு இடதுசாரிகளின் அரசியல் கடமையாகும். அங்கு பாசிசத்துக்கு சார்பான நிலைப்பாடுகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் தான், பாசிசத்தை எதிர்கொள்ளும் புரட்சிகர அரசியல் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். வேறு எங்கும் இதை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடியாது.

எந்தளவுக்கு சுயாதீனமாக, அரை சுயாதீனமான செயல்பாடுகள் அதிகரிக்கின்றதோ, அங்கு பாசிசத்தை எதிர்கொண்டு போராடும் ஆற்றல் வளம் பெறும்;. இதைப் பகிஸ்கரிப்பதன் மூலமோ அல்லது நிராகரிப்பதன் மூலமோ. சுயாதீனமான, அரை சுயாதீனமான செயல்தளத்தை நிராகரிக்கப்பதன் மூலம், பகிஸ்கரிப்பதன் முலம் வரட்டுவாதத்துக்குள் குறுகிவிடுவது நிகழும்.

இலங்கையில் நிலவும் பாசிசம், அனைத்து ஜனநாயக வடிவத்தையும் தனக்குள் வளைத்துப் போடும் எல்லைக்குள் தான் தகவமைக்க முனைகின்றது. அது தன்னை ஜனநாயகத்தின் காவலனாக காட்டிக்கொள்ள முனைகின்றது. ஜனநாயகத்தின் முழுக் கூறுகளையும் முற்றாக மறுத்து நிற்கவில்லை. அங்கு ஜனநாயகத்தின் அடிப்படையில் வெளிப்படையாக செயல்படக் கூடிய வடிவங்கள், அரை வடிவங்கள் இன்னமும் இருக்கின்றது.

முன்பு புலிகள் பிரதேசத்தில் அவை முற்றாக மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு சுயாதீனமான எந்தச் செயலையும், புலிகள் அனுமதிக்கவில்லை. இந்த வேறுபட்ட பாசிசத்தின் தன்மையையும், இயல்பையும் கவனத்தில் எடுத்து அதை அணுகத் தெரிந்து இருக்கவேண்டும்.

இலங்கையில் நிலவும் பாசிசத்தை அந்த மக்கள் தான் முறியடிக்க முடியும். வெளியில் இருந்ததல்ல. புலம் மற்றும் தமிழ்நாட்டு எதிர்ப்பு அரசியல், இதை மறுக்கின்றது. புலித் தேசியத்தால் தான் அதை முறியடிக்க முடியும் என்ற, அதன் ஒழுங்குபடுத்தப்பட்ட புலத்து மாபியா தேசியத்தை சார்ந்து நின்று, இலங்கை மக்களின் எதிர்ப்பு அரசியலை இல்லாதாக்க முனைகின்றனர்.

இலங்கை மக்களின் சுயாதீனமான பாசிச எதிர்ப்பு அரசியல்தான், வளர்த்து எடுக்கப்படவேண்டும். இதற்கு புலம் மற்றும் தமிழ் நாட்டு மக்கள் உதவவேண்டும். இல்லாது தங்கள் குறுகிய அரசியல் நலனுக்காக, அங்கு வாழ் மக்களுடன் சேர்ந்து நடத்துகின்ற சுயாதீனமான செயல்தளங்களை அரசு என்று முத்திரை குத்திவிடுவது, தாம் அல்லாத அனைவரையும் துரோகியாக முத்திரை குற்றிய அதே புலி அரசியலாகும்.

இதன் மூலம் அரசுக்கு எதிரான சுயாதீனமான செயல் தளங்களை முத்திரைகுத்தி அழிப்பதன் மூலம், அரசுக்கே உதவுகின்றனர். இதுதான் கடந்தகால புலி அரசியல். இன்று கூட. இதற்குள் தான் இன்று வலதுகள் இடதுகள் என அனைவரும், தங்கள் குறுகிய எதிர்ப்பரசியல் ஊடாக அரசியலை கட்டமைக்கின்றனர். இது இலங்கை அரச பாசிசத்தை வெளியில் இருந்து பாதுகாக்கும், ஏகாதிபத்திய சார்பு எதிர்ப்பு அரசியலாகும்.

பி.இரயாகரன்
07.11.2010