Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ அமைப்பு தனக்குள் இற்றுக்கொண்டிருக்கும் ஓசைகள் வெளிக்கேட்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அது தன் தலை நிலமாகிய அமெரிக்காவிலேயே வங்கிகளாய், பெரு நிறுவனங்களாய் வெடித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் பணம் கொட்டப்பட்டு அவை நிலைத்திருப்பதாய் காட்ட முற்பட்டாலும் படிந்துவிட்ட வெடிப்புகளின் பல்லிளிப்புகளை மறைக்க விழி பிதுங்குகிறது முதலாளியம். உள்ளே எழுந்து கிளைபரப்பி விரியும் வலியை தடுத்தாட்கொள்வதாய் நினைத்துக்கொண்டு முன்னிலும் அதிகமாய் மக்களைக் கடித்து ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. புவியெங்கும் கறைகளாய் அதன் உமிழல்கள்.

 


லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்தனையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அரசுகளை சீர்குலைத்து தன் பொம்மைகளை நிறுவுவதற்கு படுகொலைகளையும் இனவழிப்புகளையும் துணிந்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா. சிலியின் அலண்டே தொடங்கி கியூபாவின் காஸ்ட்ரோ வரை தனது நலன்களுக்கு உகந்ததாக இல்லாத எந்தத் தலைவரையும் சதிப்புரட்சி மூலம் கொலைசெய்வதிலிந்து அடுக்கடுக்காய் வாடகைக் கொலையாளிகள் மூலம் கொலை செய்ய முயற்சிப்பதுவரை அமெரிக்கா செய்யாத பாதகங்களில்லை. வெனிசூலாவின் சாவேஸை கவிழ்த்துவிட வாய்ப்புக்கிடைக்காதா என அலைவது இன்னும் நின்றுவிடவில்லை. தோல்வியுற்ற ஈக்வடார் சதிப்புரட்சியின் சூடு இன்னும் ஆறிவிடவில்லை. இவைகளெல்லாம் முழுமையாக சோசலிசத்தை செயல்படுத்தும் நாடுகளில்லை என்றாலும், சோசலிசம், கம்யூனிசம் போன்ற வார்த்தைகளை எந்தநாடும் மறந்தும் கூட உச்சரித்து விடக்கூடாது என கங்கணம் கட்டுகிறது தன்னை ஜனநாயகத்தின் காவலன் என கருதிக்கொள்ளும் அமெரிக்கா.



மத்திய தரைக்கடல் நாடுகளில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டபின் வளைகுடா நாடுகளைனைத்தும் அறிவிக்கப்படாத அமெரிக்க மாநிலங்கள் என்றே செயல்பட்டுவருகிறது அமெரிக்கா. அவைகள் மீறிவிடக்கூடாது என்பதற்காக இஸ்ரேலை ஆதரித்து உருவாக்கி வளர்த்து வருகிறது. ஈரானில் அமெரிக்கப் பொம்மையான ஷாவை நீக்கி அயதுல்லா கொமேனி வந்ததும், தன்னால் உருவாக்கப்பட்ட பாத் கட்சியின் சதாம் உசேன் மூலம் போர் தொடுத்ததும், சதாம் அடிபணிய மறுத்ததால் அபாயகரமான ஆயுதங்கள் என்று கூறி தூக்கிலிட்டதும், ஈரான் இஸ்ரேலுக்கு அணுஆயுதப் போட்டியாகி வளைகுடா நாடுகளில் தாக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காக, பாகிஸ்தான் துணையுடன் ‘முஜாஹிதீன் ஹல்க்’, ‘ஜண்டுல்லாஹ்’ போன்ற இயக்கங்கள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதும் எல்லோரும் அறிந்த ரகசியங்கள்.
ஆப்பிரிக்க நாடுகளின் கனிம வளங்கள் முதல் அனைத்தையும் மக்களை பட்டினி போட்டுக் கொன்று சுரண்டிக் கொழுக்கின்றன அமெரிக்க ஐரோப்பிய பெரு மூலதன நிறுவனங்கள். மூன்றாம் உலக நாடுகளை கடன்வலையில் சிக்கவைத்து, கடனுக்கான நிபந்தனைகளின் வாயிலாக உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை வளைப்பதுடன் அவைகளின் உற்பத்தியை ஏற்றுமதி எனும் பெயரில் வட்டியாகக் கறந்துவிடுகின்றன. உலகின் வளங்களை கொள்ளையடித்துச் சுருட்டுவது ஒருபுறமென்றால் மறுபுறம் வளங்களையும், சுற்றுச்சூழலையும் மாசடையவைத்து சீர்கெடுப்பதும் முதலாளித்துவம் தான்.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான விவாசாயிகள் முதலாய், நேற்றைய நோக்கியோ அம்பிகா ஈறாய் எத்தனையெத்தனை கொலைகள், என்னென்ன கொடுமைகள். கோடிகோடியாய் முதலாளிகளுக்கு சலுகைகள் என்றாலும் உளுத்த தானியங்களைக்கூட ஏழைகளுக்கு கொடுக்கும் சாத்தியமில்லை என பிரதமரே பேசுவது, உழைப்பவனின் நரம்பை உருவி உதாரிகளுக்கு ஊஞ்சல் கட்டிப்போடும் அயோக்கியத்தனமில்லையா? இதற்கு முதலாளியத்தைத் தவிர வேறெதை நோக்கி விரல் சுட்டமுடியும்?


மக்களின் வறுமைக்கும், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களின் நாசத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாக இருக்கும் முதலாளித்துவத்தை மக்கள் எட்டி உதைத்திருக்க வேண்டும், ஆனால், முதலாளிய பொருளாதாரக் கொள்கைகள் முன்னேற்றமாகவும், ஏகாதிபத்திய நாடுகளை சொர்க்கமாகவும், அங்கு செல்வதை லட்சியமாகவும் கொள்ளுமளவுக்கு மக்கள் மந்தைகளாக்கப்படுகின்றனர். காரணம் உலகின் மொத்த ஊடகங்களும், கருத்துப்பரவலுக்கான கருவிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்திருப்பதாலும் மக்களின் மனங்களை தங்களின் வசதிக்கேற்ப திருப்பியெடுக்குமான வாய்ப்பு வாய்க்கப்பெற்றிருப்பதும்தான். தாங்கள் வளர்த்துவிட்ட ஒரு சதாம் உசேன் தங்களுக்கெதிராய் திரும்ப எத்தனித்ததும் பேரளிவு ஆயுதங்கள் எனும் உலகின் மோசமான பொய்யை காரணமாகக் கூறி தூக்கிலிட்டுக் கொல்லவும், தடைகளின் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளை கொன்றொழிக்கவும் சுலபமாக முடிகிறது. இன்றுவரை ஒரு குண்டூசியைக் கூட பேரழிவு ஆயுதமாக கண்டெடுக்க முடியவில்லை என்றாலும், எந்த நாட்டாலும், எந்த அமைப்பாலும் இந்தக் கொடூரத்தை, நரவேட்டையை தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடிந்ததில்லை. இதை கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கும் போதிலுமே கம்யூனிசம் மக்களை வதைத்தது, ஸ்டாலின் கோடிக்கணக்கில் கொன்றார் எனும் கடந்த காலக் கட்டுக்கதைகளை நம்ப விரும்பும் மக்கள் இருக்கிறார்கள் என்பது, முதலாளித்துவம் எந்த அளவில் மக்கள் மனங்களையும் அரித்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாய் நிற்கிறது.


இந்தக் கொடுமைகளிலிருந்தும் கொடூரங்களிலிருந்தும்; உலகைச் சீரழிப்பவர்களிடமிருந்தும், மக்களைச் சுரண்டி அவர்களை ஏழ்மையிலும் அடிமைத்தளையிலும் கட்டிவைத்திருப்பதிலிருந்தும் மக்களை விடுவிப்பது யார்? எது உலக மக்களுக்கான விடிவைத்தரும்? மதங்களா? காப்பது கிடக்கட்டும், இவைகளை சுட்டிக்காட்டி கண்டிக்கும் வீரியம் இருக்கிறதா அவைகளிடம்? செத்தபிறகு சொர்க்கமென்றும், மறுபிற‌வியில் வாழவைப்பேன் என்றும் மக்களை ஏமாற்றி இந்த சமூக அமைப்புகளைத் தக்கவைத்ததைத்தவிர மதங்கள் செய்ததென்ன? ஒன்றுமில்லை.


இந்த உலகில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் போராட்டத்தின் ரத்தச்சகதியிலிருந்து முளைத்து வந்தவைதான். அத்தனை உரிமைகளையும் நோகாமல் அனுபவிக்கும் நாம், நம் தோள்களில் தங்கி நகர்த்திச் செல்லவேண்டிய போராட்டக் களத்தை, சுகம் சொகுசு எனும் தனிமனித நத்தைக் கூட்டுக்குள் சுருக்கிக் கொள்வதேன்? நம் சொகுசுகளின் உறைகுளிரில் தீயைக் கிழித்துப்போட்டது ஒரு கொள்கை. இந்த உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதை புரட்சிகரமாக மாற்றியமைப்பதே நம் முதல் தேவையாக இருக்கிறது என்று நம் செல்களின் தடித்தனங்களை ஊடுருவி, ஊடுருவி உரத்துச் சொன்னது அந்தக் கொள்கை. அது தான் கம்யூனிசம்.
மகிழ்ச்சி என்பது உளவியல் சார்ந்ததல்ல, அது செயல்களைச் சார்ந்தது, போராட்டத்தின் வழியே வருவது என ஒவ்வொரு மனிதனையும் உலுக்கிச் சொன்னது 1917 நவம்பர் 7. ஆம் இன்றுதான். உலகின் புரட்சிகர இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்த நாள். அந்த மகத்தான ரஷ்யப் புரட்சியின் நாள் இன்று. மக்கள் மீது சுமத்தப்படும் கொடுமைகளை, முதலாளித்துவ அநீதிகளை எதிர்த்து முறியடிக்கும் திறனை தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் கம்யூனிசத்தின் கீழ் அணிவகுப்போம், சுடர்களாய் அல்ல தீப்பந்தமாய்.
எழுந்து வாருங்கள் சுடர்களே,

அகல்விளக்கின் அங்கமாய்

மினுக்கிக்கொண்டிருந்தது போதும்

வெடித்துப்பேசும் நெருப்பு நாக்காய்

கொழுந்துவிட்டெரிவோம்

தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி நாள் வாழ்த்துக்கள்

http://senkodi.wordpress.com/2010/11/07/nav-7/