10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

பத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி?

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் நாங்கள் வெள்ளாளர்.  நீங்கள் கரையார். எங்கள் மகன் உங்களது மகளை காதலிக்கிறேன் என்று அடம் பிடிப்பதனால்,  தான் நாங்கள் வேறு வழியில்லாமல் உங்களது மகளை மணம் செய்ய எங்களது தராதரத்தை விட்டு இறங்கி வந்து சம்மதித்திருக்கிறோம். திருமணத்திற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மட்டும் தான் வரலாம். உங்களது உறவினர்கள் ஒருவரும் வரக் கூடாது. உங்கள் சாதிக்காரர்கள் திருமணத்திற்கு வந்தால் எமது சொந்த பந்தங்கள் எம்மைக் கேவலமாக பார்ப்பார்கள். இது நடந்தது இலங்கையிலோ அன்றி தமிழ் நாட்டின் தொலை தூரக் கிராமம் ஒன்றிலோ அல்ல. என்ன எங்கே என தலையை போட்டு குழப்புகின்றீர்களா?.  இப்படியான கேவலம் நடந்தது லண்டனில் தான். லண்டனில் பிறந்து கல்வி கற்று தொழில் புரியும் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முற்பட்ட போது குறுக்கே வந்து குரைத்த ஒரு சாதி வெறிக் கும்பலின் கூச்சல்கள் தான் இவை.

இரண்டாவது நிகழ்வும் லண்டனிலேயே நிகழ்ந்துள்ளது.  ஒரே இடத்தில் வேலை செய்த ஒரு உயர்சாதி வெள்ளாள ஆணும்,  தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணும் காதலித்தனர். அப்பெண் தனது சாதி பற்றி ஆரம்பத்திலேயே தன் காதலனுக்கு சொல்லியுமிருந்தார். பெண் வீட்டில் திருமணம் முடிக்கும் படி வற்புறுத்தியதால் காதலன் அவரின் வீட்டில் தனது காதல் கதையினைக் கூறி,  தான் அப் பெண்ணை மணம் முடிக்க வேண்டும் என்று சம்மதம் வேண்டி நின்றான்.  சாதி குறைந்தவர்களின் வீட்டில் நாங்கள் தண்ணீர் கூட குடிக்க மாட்டோம்.  நீ பெண் எடுக்க போறியோ? நீ அந்த பெண்ணை மணம் செய்தால் நான் நஞ்சு குடித்து சாவேன் என்று அந்த மணாளனைப் பெற்ற மகராசி வீரசபதம் செய்தாள். ஆப்பிள் யூஸ் குடிப்பேன் என்பது போல சர்வசாதரணமாக நஞ்சு குடிப்பேன் என்கிறாளே,  மணந்தால் மரணதேவி என்று வசனத்தினை மாற்றி பொம்பிளை வீரப்பா மாதிரி பேசுகின்றாளே அம்மா என்று பொடியன் பயந்து போனான். தாயில்லாமல் நானில்லை என்று குழந்தை அழுதது. சிறிது காலம் பொறுத்துப் பார்த்த பெண் இன்னொருவரை வீட்டாரின் நெருக்குதலினால் மணம் செய்ய போனபோது,  உன்னை விட்டால் யாருமில்லை என்று காதலன் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அம்மா சாகும் வரை எனக்காக பொறுத்திரு என்றது. உன்னை போன்ற கோழைக்கு என் வாழ்வில் இடமில்லை என்று உறுதியாக மறுத்து விட்ட அப்பெண் தனது வீட்டாரின் விருப்பத்திற்கு இணங்கி புது வாழ்வு தொடங்கினாள்.

தமிழ் இளைஞர்கள் போல்,  குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் இளைஞர்கள் போல் நல்லவர்கள் யாருமில்லை. ஏனென்றால் வாலிப வயதில் புகை பிடித்தல், மது அருந்துதல்,  பாடசாலைக்கு போகாது வெளியே சுற்றித் திரிதல்,  கள்ளக் கோழி பிடித்தல்,   சந்தர்ப்பம் கிடைத்தால் காதலிக்கும் பெண்ணுடன் உடல் உறவு கொள்ளுதல் போன்றன எல்லாவற்றினையும் செய்தாலும்,  திருமணம் என்று வரும் போது தாய் தந்தையின் சொற்கேட்டு நடக்கும் புத்திரசிகாமணிகளாக மாறிவிடுவார்கள். அப்போது தான் பெற்றோர் பார்க்கும் சொந்த சாதிப் பெண்ணை கொழுத்த சீதனத்துடன் கட்டிட முடியும். யாராவது வீணாய் போனவர்கள் காதல்,  கத்திரிக்காய்  என்று கதைத்தால்,  நாங்கள் அப்பா அம்மாவிற்கு அடங்கின பிள்ளைகளாக்கும் என்று கை கட்டி வாய் பொத்தி சொல்லிவிடுவார்கள்.

மேலை நாடுகளில் சிறுவகுப்புகளில் இருந்தே ஆசிரியர்களினால் ஒருவரை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என்பது சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் குழந்தைகள் சிறு வயதிலிருந்து தமது பெற்றோரின் பிற்போக்கான நிலப்பிரவுத்துவ சிந்தனை முறைகளிற் கூடாக வளர்க்கப்படுவதினால்  தாராளவாத பொருளாதார முதலாளித்துவ வாழ்க்கையினை வாழ்ந்தாலும்,  சிந்தனை முறைகளில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய இருண்ட காலத்தினுள் வாழ்கின்றார்கள் என்பதற்கு மேலே கூறிய நிகழ்வுகள் எடுத்துக் காட்டாக இருக்கின்றன.

பெரும்பாலான தமிழ் பெற்றோர்கள் மேலைநாடுகளில் இரண்டு இடங்களிற்குத் தான் தமது குழந்தைகளை கூட்டிச் செல்வார்கள்.  சைவ பெற்றோர் என்றால் கோயில்களிற்கும்,  கிறீஸ்தவ பெற்றோர்கள் தேவாலயங்களிற்கும்  இரண்டாவதாக இந்த இடங்களை விட மிகவும் பயங்கரமான இடமான தமிழ்ப் படங்கள் ஓடும் திரையரங்குகளிற்கு கூட்டிச் செல்வார்கள். கோவில்களிற்கு போகும் ஒரு குழந்தை சமஸ்கிரிதத்தில் வழிபாட்டினை செவிமடுக்கின்றது. சமஸ்கிரிதம் தான் கடவுளுக்கு பூசை செய்யும் பாசை என்பதைக் கேட்டு வளர்கின்றது. மொழிகளிற்கிடையே உயர்வு,  தாழ்வு கற்ப்பிக்கப்படுகின்றது.  தாழ்வு என்று சொல்வது போதாது என்று தமிழ் ஒரு “நீச பாசை” என்று ழூத்த சங்கராச்சாரி வாக்குழூலமே கொடுத்து விட்டு பரலோகம் போயிருக்கின்றது.

தனது தாய் மொழியான தமிழை விட ஒருவராலும் பேசப்படாத செத்த மொழியான சமஸ்கிரிதம் தான் உயர்ந்த மொழி என்று கற்பிக்கப்படும் ஒரு குழந்தை,  எப்படி தன் தாய் மொழியினை பேசவோ அன்றி கற்றுக் கொள்ளவோ முன்வரும். தமிழை ஒரு விருப்பப் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழிப் பாடமாகவோ இங்கிலாந்தில் கற்க முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தாமே சொல்லிக் கொடுக்க கூடிய தமிழ் மொழியை விட்டு விட்டு பிரெஞ்சு அல்லது ஜேர்மன் மொழிகளை பெரும் பணம் செலவழித்து கற்பிக்கும் அவலநிலை தான் இங்கிருக்கின்றது.

அய்யர் மட்டும் தான் பூசை செய்ய முடியும். ஏனென்றால் அவர் உயர்ந்த சாதியில் பிறந்தவர் என்றும்,  நாங்கள் வெள்ளாளர் அவர்களிற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்றும் பிஞ்சு வயதிலேயே நஞ்சூட்டப்படுகின்றது.  இதுவே கரையாரை விட பள்ளர்கள் குறைந்தவர்கள் என்றும் பள்ளரை விட பறையர் குறைந்த சாதியினர் என்னும் சங்கிலித் தொடராக நீள்கின்றது. மனிதத்தினை மண்ணில் போட்டு மிதித்துக் கொண்டு மனங்களில் சாதிவெறியை ழூட்டி மனிதர்களை ஒன்றுபட விடாமல் செய்து அதிகார வர்க்கத்தின் சுரண்டல்களை சுலபமாக செய்வதற்கு வழி செய்து கொடுக்கின்றது.

உயர்சாதிக் கொழுப்பை அதிகார வர்க்கத்தின் போலி வாழ்க்கையை எளிய உழைக்கும் மக்கள் தமக்கே உரித்தான கிண்டல் மொழியில் வெளிப்படுத்துவார்கள். அதன் ஒரு வெளிப்பாடு தான் “உடையார் உடலுறவு கொள்ளும் போது இடுப்பிலே சலங்கை கட்டிக் கொண்டு செய்தார்” என்பது. அவரது இடுப்பு அசைய அசைய மணிச் சத்தம் வெளியே வந்து அவர் ஒரு பிரதான வேலையாக இருக்கின்றார் என்பதனைச் சொல்லுமாம்.

ஒரு ஆணும் பெண்ணும் கூடும் போது குழந்தை பிறக்கும் என்று தான் உலகம் முழுக்க அறிந்து வைத்திருக்கின்றார்கள். உயர் சாதிக் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும். உடையார் இடுப்பினிலே சலங்கை கட்டிக் கொண்டு செய்தது போல இவர்கள் “அதிலே” எதையாவது கட்டிக் கொண்டு செய்வார்களாக்கும்.

பறைச்சியாவது ஏதடா?.  பணத்தியாவது ஏதடா?.  இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?.  பறைச்சி போகம் வேறதோ?.  பணத்தி போகம் வேறதோ?

பணத்தி – பிராமணப் பெண். இது 18ம் நூற்றாண்டின் போது வாழ்ந்ததாக சொல்லப்படும் சிவவாக்கியர் எனும் சித்தரின் பாடல்.  18ம் நூற்றாண்டில் நாடோடியாக சுற்றித் திரிந்த ஒரு மனிதனிற்கு இருந்த அறிவு இன்றைய நூற்றாண்டு மனிதர்களிற்கு இல்லாமல் போனது வெட்கித் தலை குனிய வைக்கின்றது.

வானம் தேன் சிந்தும் பொன்மாலைப் பொழுதுகளில் வண்ணம் மிகு நறுமலர்கள்
பூத்துச் சொரிய காதல் கீதங்கள் தாலாட்டு பாடும் போது,  ஊனாய்- உயிராய்-உள்ளொளியாய் ஒளிர்ந்த காதல் திருமணம் என்று வரும் போது சாதி, மதம் , அந்தஸ்த்து,  பணம் என்ற சகதிகளில் சிக்கிக் கொள்வதேன். இருவர் மனம் ஒப்புதலே சேர்ந்து வாழ தேவையான அடிப்படை என்பது எம்மவருக்கு தெரியாமல் போவதேன்?


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்