07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும்என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".இந்தக் கருத்தரங்கம் நடந்த முடிந்தவுடன், உள்துறை அமைச்சரை சந்திக்க ஓடி வந்தனர் எதிர்கட்சி பாஜகவினர். உள்துறை அமைச்சரும் விடியோ ஆதாரங்களைப் பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்துள்ளதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.


டீச்சர்.. அவன் என்னக் கிள்ளிட்டான் - கோள் மூட்டும் துஸ்டத்தனமான சிறுமிமனித உரிமை என்ற பெயரில் பிரிவினைவாதிகளையும், நக்சல்களையும் ஆதரிக்கிறார்கள் அருந்ததி ராய் போன்றோர் என்று மதவாதிகளையும், காவி பயங்கரவாதிகளையும், தேச விரோதிகளையும், நாட்டின் எதிரிகளையும் வைத்து கட்சி நடத்தும் பாஜக குதியோ குதி என்று குதிக்கிறது.

வரலாறு முழுவதும் இந்துத்துவத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பாத்திரம் ஏற்றுள்ள காங்கிரசு, இதற்கும் வாசித்துள்ளது. காங்கிரசுத் தலைவர் சத்யப் பிரகாஷ் மால்வியா அருந்ததிராய் தனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார். சட்ட அமைச்சர் மொய்லி, 'ரெண்டு பேரும் இப்படிச் சொன்னது ரொம்ப துரதிருஷ்டமானது' என்று சொல்கிறார். யாருக்கு துரதிருஷ்டம்? யாருக்கோ.... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் பேசிக் கொள்வார் போல என்று நினைத்தால் அடுத்த வரியில் சொல்கிறார்,'பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கத்தான் செய்யுது.. ..அதுக்காக மக்களோட தேசப் பற்றுணர்வை புண்ணாக்கும் விதமாகப் பேசக் கூடாது' என்று தொடர்கிறார். யாருக்கு துரதிருஷ்டம் என்று தெளிவாகவே எச்சரிக்கை செய்து விட்டார்.

பேச்சு சுதந்திரம் பற்றி மொய்லி சொல்வது இருக்கட்டும், ஜான் ஸ்டுவர்ட் மில் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்ப்போம். ஜான் ஸ்டுவர்ட் மில் யாரென்று தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், எனக்கும் அவர் யாரென்று தெரியாது. பேச்சு சுதந்திரம் என்பது என்னவென்றால், 'ஒருவருடைய கருத்தினால் பலருக்கு துன்பம் ஏற்படுவதை தடுப்பது என்ற நோக்கத்தில் மட்டுமே அவருடைய வாயை பலவந்தமாக அடைப்பதை நியாயப்படுத்த முடியும்' என்கிறார்(நன்றி: தி இந்து - அக்டோபர் 27, 2010 தலையங்கம்). எடுத்துக்காட்டுக்கு நம்ம நண்பர் அதியமானின் கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் அதை அவர் பேசும் உரிமை அவருக்கு உண்டு என்ற உண்மையை நான் அங்கீகரிப்பதாகும். இதைத்தான் அருந்ததி ராயும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார், 'மதவெறி படுகொலையாளர்களாயும், மொத்த மொத்தமாக படுகொலைகள் செய்தவர்களையும், ஊழல்வாதிகளையும், கொள்ளையர்களையும், பாலியல் வன்புணர்வாளர்களையும், ஏழைகளைச் சுரண்டி கொழுப்பவர்களையும் சுதந்திரமாக அலைய விட்டு விட்டு, நீதி வேண்டும் என்று கேட்க்கும் என்னைப் போன்றவர்களை சிறையிலடைக்க முயலும் இந்த தேசத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன்' என்று. கிலானி இன்னும் ச்ஜிம்பிளாக முடித்துக் கொண்டார்,'எம்மேல ஏற்கனவே 70 கேசு இருக்கு இது 71வ்து' என்று.


இந்த லாவணிகள் எல்லாம் முடிவதற்குள்ளாக அருந்ததி ராயையும், கிலானியையும் கைது செய்வது பற்றிய பரிசீலனைகளை காங்கிரசு முடித்துக் கொண்டு ரிசல்டை அறிவித்துவிட்டது. இதுக்கெல்லாம் கைது செய்ய முடியாது என்று. சரி, உண்மையிலேயே காங்கிரசு பேச்சு சுதந்திரத்தை மதித்துத்தான் இந்த முடிவை எடுத்ததா? இல்லை நண்பர்களே, அத்வானி, மோடி போன்ற கிரிமினல் பாசிஸ்டுகளை பெருமைமிக்க தலைவர்களாக அலைய விடும் காங்கிரசு, எளிய உண்மைகளை உரக்க பேசிய குற்றத்திற்காக சீமான், பினாயக் சென்,ஹிமான்சு குமார், ஐரோம் சர்மிளா உள்ளிட்ட பலரை சிறையிலடைத்தும், அடித்து மிரட்டியும் ஒடுக்கியுள்ளது.

அருந்ததிராய், கிலானி இருவரையும் சதி செய்ய முயன்றதாகக்(124A) கூறி கைது செய்யவே டெல்லி போலிசுக்கு முதலில் மத்திய காங்கிரசு அரசு பரிந்துரைத்துள்ளது. பிறகுதான் பின் வாங்கியுள்ளது.

அருந்ததிராய் விசயத்தில் அவரை முடக்கிப் போட நடந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதைத் தாண்டி இதில் காங்கிரசின் ஜனநாயக முகம் எதுவும் இல்லை. காஷ்மீர் மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களும், அருந்ததிராயின் செல்வாக்குமே காங்கிரசை பதுங்கித் தாக்க அறிவுறுத்துகிறது. சுருக்கு இறுகுகிறது, வாயை அடைத்துக் கொள் என்று சாத்வீகமாக அருந்ததிராயை மிரட்டுவது ஒன்றுதான் இந்த விசயத்தை பொறுத்த வரை காங்கிரசின் அதிகபட்ச இலக்கு. மிரட்டல் அருந்ததிக்கு மட்டுமல்ல, மனசாட்சியுள்ள எல்லாருக்கும்தான்.

மக்களின் வெறுப்பை மேலும், மேலும் சம்பாதித்து நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் போயுள்ளது இந்திய அரசு. இந்நிலையில் பெரும் பீதியுற்றுள்ள அரசு தனது பாசிச அஸ்திரங்களைத்தான் ஒரேயடியாக நம்பியுள்ளது. எனவேதான் தன்னை நோக்கிய சிறு சலசலப்பையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிறது. அதை தேசப் பற்று என்று நியாயம் பேசுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் பிரச்சினைகளுக்காக களம் இறங்கிப் போராடிய பல்வேறு ஜனநாயக சக்திகளை சமீப காலங்களில் கைது செய்தும், மிரட்டியும் முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு(தெஹல்கா). சீமான் கைதின் போது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் மையக் கருவும் இதுதான், 'சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே'.

பன்னாட்டு கம்பனிகளுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களைக் கொல்லும், காங்கிரசும், சிபிஎம்மும் ஒரு பக்கம் என்றால், அதே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களை மதத்தின் பெயரால் கொல்லும் பாஜக இன்னொரு பக்கம். இதுதான் இந்திய 'ஜனநாயகம்'. இப்படி அரசியலமைப்புச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்துத்துவத்திற்கும் மீறப்படுமானால் அது தேசப்பற்றுக்கு விரோதமானது அல்ல என்பதே இவர்களின் நியாயம். தேசப்பற்று என்றால் என்னவென்று இந்தச் சிறுபிள்ளைகளுக்கு சரியான வகையில் பாடம் புகட்டுவதே ஜனநாயக சக்திகளின் இன்றைய பெரும் கடமையாக முன்னெழுந்துள்ளது.

அசுரன்

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்