11272020வெ
Last updateசெ, 24 நவ 2020 7pm

இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக....தமிழகத்திலும் இலண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள்

ஈழப்போரைத் துணைநின்று வழிநடத்தி போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலை ஆதரித்து நிற்கும் இந்திய மேலாதிக்க அரசோ,ஈழத்தமிழரின் ‘மறுவாழ்வு’க்கு நிதியளித்து மேற்பார்வையிட்டு வருவதாகக் கூறிக்கொண்டு இன்னொருபுறம், வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் ஈழத் தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமிக்கக் கிளம்பியுள்ளது. இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் கைகாட்டும் இடங்களை ராஜபக்ச அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கிறார். ராஜபக்சே கைகாட்டும் இடங்களில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் போகிறது.


இத்தகைய சூழலில், தமிழின அடையாளத்தையே அழித்து ஆதிக்கம் செய்யத் துடிக்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலைத் தண்டிக்கக் கோரியும், இந்திய மேலாதிக்க அரசின் சூழ்ச்சிகள்-சதிகளை தோலுரித்துக் காட்டியும், இலங்கை இனவெறி பாசிச அரசுக்கும் அதனைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தையும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரண்டு போராட அறைகூவியும் ஆகஸ்ட் 21 அன்று தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து  ஆர்ப்பாட்டங்களை நடத்தின. சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல்-பள்ளிப்பாளையம், ஓசூர், தஞ்சை, வேலூர், கடலூர் - எனத்  தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் விண்ணதிரும் முழக்கங்களுடன் உணர்வு பூர்வமாக நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களை, திரளான உழைக்கும் மக்கள் வரவேற்று ஆதரித்தனர்.


இதே நாளில்  "புதிய திசைகள்" எனும் ஈழத் தமிழர் அமைப்பு சார்பாக பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு இலண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் இலண்டன்-வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தவரும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் முன்னணியாளர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கண்டன உரையாற்றினர்.


ஏகாதிபத்தியவாதிகளும் மேலாதிக்கவாதிகளும் இனவெறி பாசிஸ்டுகளுமான எதிரிகள் ஓரணியில் திரண்டு நிற்கும் இன்றைய உலகமயக் காலகட்டத்தில், போராடும் சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்ற உணர்வூட்டிய இந்த ஆர்ப்பாட்டமும் அதற்கான முயற்சியும், ஈழத் தமிழர்களிடையே உவப்பூட்டிப் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. போராட்டக் குரல் கண்டங்களைக் கடந்து எங்கும் எதிரொலித்தது.


-பு.ஜ.செய்தியாளர்கள்.