Language Selection

புதிய ஜனநாயகம் 2010

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் - அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.


கட்சிகளின் மேடைப் பேச்சாளர்களைத் தயாரிக்கும் முகமாக தொழிற்பட்டறைகளை அந்தந்த கட்சிகள் ஏற்பாடு செய்து தலைவர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. தலைவர்களின் "மூஞ்சி"களோடு கட்சியின் தேர்தல் சின்னங்களையும் மக்கள் மனதில் பதிய வைப்பதற்கு "ஃபிளக்ஸ்" தட்டிகளும், சுவரோட்டிகளும், கொடிகளும், பதாகைகளும் பெரும் எண்ணிக்
கையிலும் "ராட்சத"  அளவிலும் அச்சிடுவதற்கும், தலைவர்களை வரவேற்பதற்கான சரவெடிகள் வாங்குவதற்கும் சிவகாசியில் "ஆர்டர்கள்" கொடுக்கப்பட்டு விட்டன. சீரியல் விளக்குகளால் மின்னுமாறு தலைவர்கள் மற்றும் சின்னங்கள் அமைப்பதற்கான தயாரிப்புகள் செய்கிறார்கள்.


ஒலி-ஒளிக் குறுந்தகடு, மின்னணுச் செய்தி ஊடகம், கைபேசி போன்ற அதிநவீன சாதனங்களைத் தங்கள் பிரச்சாரங்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று கட்சிகளின் சிறப்புக் குழுக்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றன. வேட்பாளர்கள் தேர்வுக்கான கொள்கை முடிவுகள் வகுக்கப்படுகின்றன. அதற்காகத் தொகுதிவாரியாக முக்கியப் பிரமுகர்களின் பட்டியல்கள், அவர்களைப் பற்றிய மதிப்பீடுகள், வெற்றிவாய்ப்புகளை ஆராய்வதற்குக் கணினி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.


இவையெல்லாம் ஒருபுறம் நடக்க, தலைவர்களிடையே அனல் பறக்கும் அறிக்கைப் போர்களும் முத்திரை வசனங்களும் (பஞ்ச் டயலாக்) இப்போதே தொடங்கிவிட்டன. பெருநகரங்களில் போட்டி போட்டுக் கொண்டு மாறிமாறிக் கட்சிகளின் பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தங்களுக்குத்தான் அதிக ஆதரவு என்று காட்டுவதற்காக ஆளுக்கு நூறு ரூபாயும் பிரியாணிப் பொட்டலம் வீசிக் காக்கைக் கூட்டங்களைப் போல மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.


தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்கள் கூட்டத்தை இழுப்பதற்காக சினிமா நடிகர்களுக்கு வலை வீசப்படுகிறது. ஓட்டுக்கட்சிகளிடையே கூட்டணி பேரங்கள் ஆரம்பிப்பதற்கு முந்தைய பணியாக நோட்டம் விடுவது, ஆழம் பார்ப்பது, தூது அனுப்புவது ஆகியன நடக்கின்றன.


இவையனைத்தும் பற்றிய நடப்பு விவரங்களை இங்கே தொகுத்துத் தரவில்லை. ஏனென்றால், நாளிதழ்கள், வாரம் இருமுறை கிசுகிசு ஏடுகள் முதல் வார இதழ்கள் முதலிய பத்திரிக்கைகளிலும் வானொளிகளிலும் இவை பற்றிய யே்திகள் நிரம்பி வழிகின்றன. ஓட்டுக்கட்சிகளின் இந்த அரசியல் கூத்துக்கள் எல்லாம் இன்றைய நவீன வசதிகள், சாதனங்களைப் பயன்படுத்தி நடக்கின்றனவே தவிர, புதியதல்ல; எண்பது ஆண்டுகளுக்கு முன்பு காலனிய காலத்தில் ஓட்டுக்கட்சி முறை புகுத்தப்பட்ட காலத்திலிருந்தே தலைமுறை தலைமுறையாக நடப்பவைதாம்.


ஆரியம் - திராவிடம், தேசியவாதம் - இனவாதம், சோசலிசம் - முதலாளித்துவம், இந்துத்துவம் - மதச் சார்பின்மை - சிறுபான்மை, தலித்தியம் - ஆதிக்க சாதியம் என்று சித்தாந்த கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து அரசியல் - தேர்தல் கூட்டணிகளைச் சந்தர்ப்பவாதமாக அமைத்துக் கொள்வதும், பதவிக்


காகக் கட்சி மாறுவதும், ஆட்சிக் கவிழ்ப்பும், மைனாரிட்டி ஆட்சிகள் நடத்துவதும் - இவையெதுவும் புதிதில்லை.


இந்தக் கூத்துக்களையே மரபாகவும், விதியாகவும் மாற்றிவிடும் பல நியாயவாதங்களை ஓட்டுக்கட்சித் தலைவர்கள் வகுத்து நிலைநாட்டியும் விட்டார்கள். "அரசியலில் எதுவும் நடக்கலாம்," "அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது", "அரசியல் என்பதே எண்ணிக்கை விளையாட்டுதான்", "தோகுதி உடன்பாடு வேறு, அரசியல் கூட்டணி வேறு"என்று தங்கள் வசதிக்கேற்ப அரசியல் சூத்திரங்களை ஓதுகிறார்கள்.


சமுதாய ரீதியில் மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் இசுலாமிய மக்களின் மீட்புக்காக புதிதாக அவதாரம் எடுத்துள்ள தலைவர்களாகவும்  தலித்திய - இசுலாமிய அறிவாளிகளாகவும் காட்டிக் கொள்ளும் திருமாவளவனும் பேராசிரியர் ஜவாகருல்லாவும் ஓட்டுக்கட்சிக் கூட்டணி அரசியல் சாக்கடையில் சங்கமமாகிய பிறகு, மேலும் புதிய நியாயவாதங்களையும் அதற்கான சூத்திரங்களையும் சொல்லத் தொடங்கியுள்ளனர். அரசியலை அரசியலாகத்தான் அணுகவேண்டும், கோட்பாடு, தர்க்கம், பகுத்தறிவு எல்லாம் அதற்குப் பொருந்தாது என்று உபதேசிக்கிறார்கள்.


பிரபாகரன் "கெட்-அப்"பில் தோன்றி முழக்கமிடும் திருமாவளவன், ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதில் ராஜபக்சேவுக்கு உடந்தையாயிருந்த காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளதை நியாயப்படுத்துகிறார். நாடு முழுவதும் இசுலாமியரைக் கொன்று குவித்த பா.ஜ.க.வுடனும், குறிப்பாக குஜராத்தில் அவர்களுக்கெதிராக பாசிச கொலைவெறியாட்டம் போட்ட மோடியுடனும் தோளோடு தோள் உரசும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதை ஜவாகருல்லா கும்பல் நியாயப்படுத்துகிறது.


தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைக்கும் பச்சோந்தி ராமதாசு என்று கிண்டலடிக்கப்பட்டவர், இப்போது சீந்துவார் இல்லாமல் சாயம் போன ஓணான் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் காங்கிரசு தலைமையில் மூன்றாவது அணி அமைக்க வேண்டும்; நடிகர் விஜயகாந்த் கட்சியுடன்கூடக் கூட்டணிக்குத் தயார் என்று நடுத்தெருவில் நின்று கூவுகிறார்.


இப்போது தேர்தல் கூட்டணிகளை அமைப்பது என்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கியின் ஆதரவு சதவீதம், அதன் மீதான கூட்டல் - கழித்தல் என்ற எண்ணிக்கைக் கணக்காகிவிட்டது. அரசியல் என்பது ஆளும் கட்சிகளின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளை அம்பலப்படுத்துவதும் குற்றஞ்சாட்டுவதும் எதிர்க்கட்சிகள் மீது "நீங்கள் மட்டும் யோக்கியமா?" என்ற கேள்வி எழுப்பி எதிர்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும் என்றாகிவிட்டது.


மக்களை ஈர்ப்பதற்கு ஆளும் கட்சிகள் இலவசக் கவர்ச்சி அறிவிப்புகளை செய்வதும் (முன்பு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு, இனி காங்கிரீட் வீடு, விவசாயிக்கு பம்பு செட் ஆகியவை); அவற்றையும் "போதாது, போலி" என்று எதிர்க்கட்சிகள் குறைகூறுவதும் என்றாகி விட்டது. போலி கம்யூனிஸ்டுகள் தமது காலாவதியான கொள்கைகளையும் கைகழுவிவிட்டு, பல சமயங்களில் அரசியல் அனாதைகளாகிவிட்ட நிலையில், ஏதாவது ஒரு அணியில் ஒட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளுகின்றனர்.


தனியார்மயம் - தாராளமயம் - உலகமயமாக்கத்தை ஓட்டுக்கட்சிகள் பெரும்பான்மையாக நேரடியாகவும், சில கட்சிகள் (போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசக் கட்சிகள்) மறைமுகமாகவும் ஏற்றுக் கொண்டுவிட்டன. இதனால்தான் சிறுபான்மையாக உள்ள நிலையிலும் பா.ஜ.க., காங்கிரசு ஆட்சிகள் மாறிமாறி நீடிக்க முடிகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான சட்டதிட்டங்கள் வெறியுடன் அமலாக்கப்படுகின்றன.


தொடர்ந்து மேற்கண்டவாறு பல அரசியல் கூத்துக்கள் அரங்கேற்றப்படுவதால், செய்தி ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்கட்சிகளின் ஊது குழல்களாகவும், வெறுமனே களியாட்ட வியாபாரிகளாகவும் செயல்படுவதன் காரணமாக மக்கள் ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். கணிசமான அளவு இலவசத் திட்டங்கள், ஓட்டுக்குப் பணம் ஆகியவற்றால் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டுக்கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கோ, அணிக்கோ மக்கள் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.


-ஆர்.கே.