Language Selection

முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த போலீசு எஸ்.பி பிரேம்குமாரை, 2.8.2010 அன்று, மாரக்கண்டேய கட்ஜு, சி.பி.தாகுர் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விடுதலை செய்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நீதிபதிகளுக்குக் கும்பிடு போட்டார், பிரேம்குமார்.


சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து விடாப்பிடியாக நீதிமன்றங்களில் போராடி, வழக்குக்காக சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவிட்டு, சொத்துக்களை விற்று, உறவினர்களின் ஏச்சுக்கு ஆளாகி, நீதி கிடைக்கும் என்று 28 ஆண்டு காலம் காத்திருந்த நல்லகாமன் என்ற முதியவரின் நம்பிக்கை மீதும், நீதியின் மீதும் மண்ணள்ளிப் போட்டது நீதிமன்றம். பிரேம்குமாரின் கட்டப் பஞ்சாயத்துக்கு எதிராக 1982-இல் நல்லகாமன் தொடுத்த வழக்கு, 2010-இல் உச்ச நீதிமன்றத்தின் கட்டப் பஞ்சாயத்தால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.


இவ்வழக்கு குறித்து ஏற்கெனவே சிலமுறை புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிருக்கிறோம். 1982-இல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தில் வீட்டைக் காலி செய்வதற்கான சிவில் வழக்கு ஒன்றில், ஒரு போலீசு அதிகாரிக்கு ஆதரவாக கட்டப் பஞ்சாயத்து செய்தார் அன்று வாடிப்பட்டி எஸ்.ஐ. ஆக இருந்த பிரேம்குமார். பணிய மறுத்த நல்லகாமனையும் அவரது மகனையும் மனைவியையும் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து, சங்கிலியால் கட்டித் தெருவில் இழுத்துச் சென்றதுடன், அவர்கள்  தன்னைக் கொல்ல முயற்சி செய்ததாக பொவழக்குப் போட்டு சிறையிலும் அடைத்தார். கொதித்தெழுந்த வாடிப்பட்டி மக்கள் பேரணி, கடையடைப்பு என்று போராடினர். நூற்றுக்கணக்கான மக்கள் அளித்த சாட்சிகளின் அடிப்படையில் ஆர்.டி.ஓ. அளித்த அறிக்கையை ஏற்று, பிரேம்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றப்பிரிவுகளின் கீழ் தமிழக அரசு வழக்கு பதிவு செய்தது. பிரேம்குமார் மீதும் தன்னைத் தாக்கிய 11 போலீசார் மீதும் நல்ல காமன் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடுத்தார்.


தன் மீது தமிழக அரசே கிரிமினல் வழக்கு தொடுத்திருந்த நிலையிலும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி டி.எஸ்.பி. யாகப் பதவி உயர்வு பெற்றார் பிரேம்குமார். சுமார் 20 ஆண்டு காலம் ஒரு வாய்தா தவறாமல், நல்லகாமன் நீதிமன்றத்தில் ஆஜராகிக் கொண்டிருக்க, பிரேம்குமாரோ  நீதிமன்றத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. உண்மை இவ்வாறிருக்க, ‘நல்லகாமன் நீதிமன்றத்துக்கே வருவதில்லை என்றும், தன்னை வேண்டுமென்றே  அலைக்கழிப்பதாகவும் தன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும்’ சென்னை உயர் நீதிமன்றத்தில் பொயாக ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் பிரேம்குமார். வழக்கு விவரங்களைத் துருவி ஆராந்த நீதிபதி கற்பகவிநாயகம், தனது தீர்ப்பில் (ஜூன்,2002) பிரேம்குமாரைப் பற்றி கீழ்க்கண்டவாறு கண்டனங்களைப் பதிவு செய்தார்:


"பிரேம்குமார் மீது 13 முறை பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உயர் போலீசு அதிகாரி என்பதால் இவரைக் கைது செய்ய போலீசு முயற்சிக்கவே இல்லை. இவர் எப்படிப் பதவி உயர்வு பெற்றார் என்பதும் தெரியவில்லை. சட்டத்தின் மீதோ, உண்மையின் மீதோ பிரேம்குமாருக்கு கடுகளவும் மரியாதை இல்லை. இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால், இப்படி ஒரு ஆளை போலீசு துறையில் வைத்திருந்ததே மிகப்பெரிய வெட்கக்கேடாக இருக்கும்."


இந்தத் தீர்ப்பை நாளிதழ்களில் பார்த்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (ஏகீகஇ) வழக்குரைஞர்கள் நல்லகாமனைத் தொடர்புகொண்டு வழக்கை ஏற்று நடத்தினர். "நல்லகாமன் பிரேம்குமாரை அடித்ததும் குற்றம், பிரேம்குமார் நல்லகாமனை அடித்ததும் குற்றம்" என்று தீர்ப்பளித்த மதுரை விரைவு நீதிமன்றம், இருவருக்கும் தண்டனை விதிக்காமல் கண்டனம் மட்டும் செய்தது. இதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் நல்லகாமன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் பிரபல மனித உரிமை வழக்குரைஞர் கே.ஜி.கண்ணபிரான் வாதாடினார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம், பிரேம்குமாரின் மீதான கண்டனத்தை, ஒரு மாத  சிறைத்தண்டனை என்று மட்டும் உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பிரேம்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


"நான் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்குவதுடன், எனது மேல்முறையீட்டையும் உடனே எடுத்துக் கொள்ளவேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தில் பொ வாக்குமூலம் தாக்கல் செய்து ஜாமீன் வாங்கினார், பிரேம்குமார். சாதாரணக் குற்றப் பிரிவுகளிலான (இ.பி.கோ. 323 ) இத்தகைய வழக்குகளில், மேல்முறையீட்டை அனுமதிக்காத உச்சநீதிமன்றம், போலீசு அதிகாரி என்பதால் கருணை காட்டி பிரேம்குமாரின் மனுவை ஏற்றது.  அந்தக் கருணையின் தொடர்ச்சி தான் தற்போது உச்சநீதிமன்றம்  வழங்கியிருக்கும் விடுதலை.


"குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் நல்லகாமன், பிரேம்குமார் ஆகிய இருவரையுமே குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் கூறியிருப்பது முரண்பாடானது. எனவே சந்தேகத்தின் பயனை  அனைவருக்கும் வழங்கி அனைவரையும் விடுவிக்கிறோம்" என்று கூறுகிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. "ஒரு சம்பவத்தில் இரண்டு தரப்பினரும் எப்படிக் குற்றவாளிகளாக இருக்க முடியும்?" என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பும் கேள்வி. ஆனால் "ஒரு சம்பவத்தில் இரண்டு தரப்பினருமே நிரபராதிகளாக இருக்க முடியும்" என்பதுதான் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்குப் பொருள். நீதிமன்றத்தையோ, நீதி வழங்கும் முறையையோ இதைவிடக் கேவலமான முறையில் யாரேனும் அவமதிக்க முடியுமா?


இந்தத் தீர்ப்புக்கான நியாயத்தை உச்ச நீதிமன்றம் விளக்கவில்லை. ஏனென்றால், இத்தீர்ப்பு உண்மை விவரங்களிலிருந்து பிறக்கவில்லை. ஒரு நாட்டாமையின் ஆதிக்கசாதிக் கண்ணோட்டம்  அவன் வழங்கும் நீதியைத் தீர்மானிப்பதைப் போலவே, நீதிபதிகளின் வர்க்கப் பார்வைதான் இத்தீர்ப்பைத் தீர்மானித்திருக்கிறது. அவர்களுடைய பார்வையில் நல்லகாமனுக்கு நேர்ந்த கொடுமை என்பது ஆயிரக்கணக்கான மக்கள் மீது போலீசு அன்றாடம் இழைத்துவரும் மிகச் சாதாரணமான வன்முறை. சாட்சியங்களே இல்லாத போதும், தேசத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்திப்படுத்துவதற்காக அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்த  உச்சநீதிமன்றம், சாட்சியங்களை ஒதுக்கிவிட்டு பிரேம்குமாரை விடுவித்திருப்பதில் வியப்பில்லை.


எனினும், இது பிரேம்குமாரின் வெற்றியல்ல. எந்த அதிகாரத்திமிர் பிரேம்குமாரை  ஆட வைத்ததோ, அந்த அதிகார நாற்காலியின் மீது அழுந்தி உட்கார இயலாமல் 28 ஆண்டுகளாக  தவிக்க வைத்ததும், அமைச்சர்கள் முதல் அவர்களது அல்லக்கைகள் வரையிலான அனைவரின் கால்களிலும் பிரேம்குமாரை விழவைத்ததும், கண்ணீர் விட்டுக் கதற வைத்ததும் நல்லகாமனின் வெற்றிகள்.


2004-இல் இவ்வழக்கின் விசாரணையின்போது மதுரை நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களிடம் வம்பிழுத்து தரும அடி வாங்கினார் பிரேம்குமார். வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்று வக்கீல்கள் கூறியபோதும், புகார் கொடுக்கும் துணிவின்றி பிரேம்குமார் பின்வாங்கினாரே, அது விசாரணை முடியுமுன்னரே நல்லகாமன் பெற்ற வெற்றி.


போலி மோதல் கொலைகள் முதல் ரெட்டி சகோதரர்களின்  கொள்ளை வரை எதையும்  தடுக்க முடியாத இந்நாட்டில், போலீசின் திமிரை, அவர்களுடைய மைதானமான நீதிமன்றத்தில், அவர்கள் வகுத்த ஆட்டவிதிகளுக்கு உட்பட்டே ஒடுக்கிக் காட்டியிருக்கிறார்களே மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள், அதனைத் தோல்வி எனக் கொள்ள முடியுமா?


வெல்வது அரிது என்று தெரிந்தே இறங்கிய மோதலில் தொடர்ந்தும் நின்று போராடியிருப்பது வெற்றியா, தோல்வியா?  போராட்டம் என்பதன் பரிமாணத்தை வெற்றி அல்லது தோல்வி என்ற எடைக்கற்களால் அளந்து கூற முடியாது. ஏனென்றால், போராட்டம் என்பதுதான் வெற்றி - தோல்வியை எடைபோடுவதற்கான தராசு.


பின்குறிப்பு: தீர்ப்பை மீளாவு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்யவிருக்கிறார் நல்லகாமன். அது, நீதியை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு. நீதியைப் பெறுவதற்கான கடைசி வாய்ப்பு அல்ல.


-சூரியன்.