எந்த ஏழையும் வாளும் தீப்பந்தமுமாய்
இன்னோர் ஏழையை எரித்ததாயில்லை
காத்து அனுப்பியதும் கண்ணீர் விட்டதுமே கண்டோம்
வடக்கும் கிழக்கும் வரவேற்காதிருக்க நியாயமில்லை
வெதுப்பகங்களில் தணலோடு கருகிய காலமாய்
தெருவோரக் கடைகளும்
தெற்கு நிலப் பழவகைகளுமாய்
விகாரையும் மசூதியும் கொண்ட அமைதியான பொழுதுகள்
உழைப்பிற்காய் எந்தத் திசையும்
பிரிந்து கிடக்காமண் ஒன்றாய்த்தான் இருந்தது
எமை ஒட்டச் சுரண்டியவர்களும்
முட்டி மோதென வெட்டிப் பிரித்தவர்களும்
இன்றுபோல் அன்றும் ஒன்றாய்த்தான் இருந்தனர்
பிளந்தவர் பின்னணியை தூக்கி வீசி
பிரிந்தவர் கூடிவாழ்வோம்
–நீங்களாய் வருக
வாழ்ந்த நிலமும் வலைவீசிய கடற்கரையும்
ஏர்பிடித்து உழுதவயலும் உங்களிற்கும் சொந்தம்
– நீங்களாய் வருக
மணலாறும் இராணுவ அரணான பூமியும்
வளமாக்கிய கைகளிடம் சேர்க்கச் சொல்வோம்
– நீங்களாய் வருக
சூழக்கடலும் கங்கையும் ஆறுகளும்
தேயிலையும் முத்தும் இரத்தினமும் உழைப்பவர் சொத்து
– நீங்களாய் வருக
இரத்தமும் வியர்வையும் சிந்தி செழித்த தீவு
எவன் இருப்புக்காயும் எம்மிடை மோதுவதேன்
– நீங்களாய் வருக
வறுமை ஏன் எனப் பேசுவோம்
வாழ்வைச் சிதைத்தவர் வேறெனக் காணுவோம்
– நீங்களாய் வருக
யுத்தம் தின்று எஞ்சிய உறவுகட்கு
புத்தர் சிலையல்ல வாழ்ந்த நிலத்தை வழங்கெனக்கேட்க
– நீங்களாய் வருக
ஊனமாய் உறவிழந்து நடைப்பிணமாய் வன்னிமண்
பேயரசர் ஆட்சியை பேசுவோம் உறவுகளே
– நீங்களாய் வருக
சிங்கக் கொடி வேண்டாம்
சேர்நது நாம் செங்கொடியில் திரள்வோம்………