நாம் ஏன் தோற்றோம் என்பதை அரசியல்ரீதியாக சுயவிமர்சனம் செய்யாது இருக்கும் வலதுசாரியம், அதை திசைதிருப்ப முனைகின்றது. தோல்விக்கான காரணத்தை எதிரி மீது கூறி, மக்களை தொடர்ந்தும் தனக்கு கீழாக தோற்கடிக்க முனைகின்றது. தீபச்செல்வன் அதை மிக நுட்பமாகவே முன்வைக்கின்றார். "தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராட்ட அமைப்புமீது உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுகள் தாக்குதல் நடத்தின. அரசாங்கம் புலிகளை அழிப்போம், யுத்தத்தை முடிப்போம், இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சில தேதிகளை குறிப்பிட்டது. அந்த அவகாசங்களைப் புலிகள் முறியடித்தார்கள். உலகமே சேர்ந்து தொடுத்த யுத்தத்திற்கு அவர்கள் முகம் கொடுத்தார்கள்." என்கின்றார். இதனால் தான் புலிகள் தோற்றனர் என்பது, ஒரு அரசியல் உண்மையல்ல. ஒரு உண்மைக்கு எதிராக மற்றொரு உண்மையை முன் நிறுத்துகின்றனர்.

உலகின் எந்த விடுதலைப் போராட்டத்துக்கும், இந்த நிபந்தனையும் நிலைமையும் பொதுவானது. இதைத் தெரிந்து கொள்ளாத, எதிர்கொள்ளாத போராட்டத்தை நாங்கள் நடத்த முனைந்ததாக இன்றும் கதை சொல்வது, மக்களை இதன்பால் தொடர்ந்து ஏய்ப்பதாகும். இதனால்தானா புலிகள் தோற்றனர்? இல்லை. புலிகளின் அரசியலும் அதன் வழிமுறையும் தான் தோற்றது.

புலிகள் தங்கள் அரசியலை சுயவிமர்சனத்தை செய்யாது இருக்க, இவைகள் உண்மைகள் மேலான ஒரு அரசியல் பொய்யாகும். வலதுசாரிகள் கையாளும் மூடிமறைத்த தந்திரம்.

புலிகள் காட்டிய எதிரி, உலகில் முன்கூட்டியே தொடர்ந்து இருகின்றான். அந்த எதிரியை தமிழ்மக்களின் சொந்த நண்பனாக காட்டிய வலதுசாரியம், மக்களை சொந்த எதிரியாக்கி அவர்களை எட்டி உதைத்தது. இப்படி தோல்வி என்பது சொந்த அரசியல் வழியால் தான் ஏற்பட்டது.

இப்படி ஒரு உண்மை இருக்க இல்லையில்லை "உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுக" ளால் தான் தோல்வி என்று கூறும் அதேகணம், இன்றைய நிலையில் இருந்து மீள எதைக் மறுபடியும் காட்டுகின்றார் என்று பாருங்கள்

"தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உண்மையுணர்வுடன் இந்தியா பங்கு வகிக்க வேண்டும் என நினைக்கிறேன். எங்கள் போராட்டம் அழியவும், மக்கள் கொல்லப்படவும் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. யுத்தத்திற்கான ஆசியையும், ஆதரவையும், உதவியையும் வழங்கியது. பலிக்குப் பலி என்று எத்தனை இலட்சம் மக்களை இந்தியா பலியெடுத்து விட்டது. ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை இந்தியா நன்கு புரிந்து கொண்ட நாடு. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாடு. தனது வல்லமையை தமிழர்களைக் கொல்லவே இந்தியா பயன்படுத்தியது. இப்படியான பங்கையே இந்தியா இதுவரை வகித்தது. இனியாவது இந்தியா ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உதவ வேண்டும். தனது அரசியல் - பொருளாதார நலன்களிற்காக எங்களைப் பலியிடாமல் இருக்க வேண்டும். இந்தப் பங்கை எதிர்பார்ப்பதற்கு முக்கிய காரணம் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் உறவும் ஈழத் தமிழர்களின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதும்தான். இந்தியா அவ்வாறான பங்கை வழங்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்." எல்லா வலதுசாரிகளும் இதைத்தான் மீளவும் கூறுகின்றனர். மீண்டும் அவர்கள் சொந்த மக்களை நம்பவில்லை. அவர்கள் மேல் தொடர்ந்து சவாரி செய்கின்றனர். முன்னின்று யுத்தத்தை நடாத்திய இந்தியாவின் கால்களில் மீண்டும் விழ வேண்டும் என்கின்றார். இந்தியா "உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுக" ளில் அடக்கமல்ல என்று பசப்புகின்றார்.

யார் எம் போராட்டத்தை அழித்ததாக அவர்கள் கூறுகின்றனரோ, அவர்களை மீள நம்புகின்ற, அவர்களை மீளப் பின்பற்றக் கோருகின்ற அரசியல் அபத்தத்தை இங்கு காண்கின்றோம். இங்கு எது தான் உண்மை? இப்படித்தான் கடந்த காலத்தில் தமிழ்மக்களின் போராட்டத்தையே அழித்தனர். எதிரியை நண்பனாக காட்டியவர்கள், அவர்கள் தம்மை அழித்த போது அதைக் காட்டி தம் தவறுகளை மறைத்தவர்கள், மீண்டும் அதே எதிரியை நம்பக் கோருகின்றனர். அரசியல் வித்தை காட்டி பிழைக்கின்றனர்.

தங்கள் அரசியலில் தவறு எதுவுமில்லை என்பதும், சுயவிமர்சனம் செய்யாத அரசியல் தன்மை என்பதுவும், மறுபடியும் மக்களை தமக்கு கீழ் அடிமையாக வைத்திருக்கின்ற வலதுசாரியத்தின் வக்கிரமே இங்கு அரசியலாகின்றது.

புலி அரசியல் எந்த சுயவிமர்சனமுமின்றி, எப்படி மறுபடியும் நியாயப்படுத்தப்படுகின்றது என்பதை இங்கு பாருங்கள். "ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அவர்கள் மாற்றம் பெற்று உண்மையில் மக்களுக்காகச் செயற்பட வேண்டும் என்பதற்காக அவரை ஆதரித்திருக்கலாம். தமிழகத்தில் எல்லா வழிகளிலும் ஈழத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் குரல்கள் அழுத்தங்களைக் கொடுக்கின்றன, கேள்விகளை எழுப்புகின்றன என்ற அபிப்பிராயம் இங்கு இருக்கிறது. விடுதலைப் புலிகள்கூட அதை விரும்பினார்கள்." இப்படி வெளிப்படையான எதிரி அல்லாத எதிரியை சார்ந்து நின்ற புலிகள் தான், மக்களைக் காவு கொடுத்தனர். இன்று  மீண்டும் அது கொக்கரிக்கின்றது. "ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்."  என்ற கூறுகின்ற அரசியல் கோமாளித்தனத்தை இங்கு நாம் காண்கின்றோம். சொந்த மக்களை புரிந்துகொள்ளவே முடியாது வக்கற்றுப் போன புலிக் கூட்டம், தங்களுடன் முரண்பட்டவர்களை புரிந்து கொள்ள முடியாது கொன்றே குவித்தனர். மற்றொரு பாசிட்டான ஜெயலலிதாவிடம், புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுகின்ற மாபியா அலுக்கோசுத்தனத்தை இங்கு நாம் காண்கின்றோம்.

இந்த வலதுசாரிய மக்கள்விரோத அரசியல்தான், எங்கள் தமிழினத்தை அழித்தது. இது சந்தர்ப்பவாதத்தை அரசியல் அடிப்படையாகக் கொண்டது. பாருங்கள் "தன்னலமிக்க, ஆற்றலற்ற கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்பொழுது தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளைக் கொண்டுசென்று அவற்றுக்காக வைகோ, சீமான் போன்றவர்கள் நடத்திய போராட்டங்கள் எமது மக்களை ஆறுதலடையச் செய்திருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக மக்களிடம் இருக்கும் எல்லையற்ற நெருக்கம் முக்கியமானது. ஈழப் பிரச்சினையில்  வைகோ, சீமான் போன்றவர்களது செயற்பாடுகள் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை என நினைக்கிறேன்." ஆம் இந்த அரசியல்தான், சொந்த மக்களை குழி தோண்டிப் புதைத்தது.

வைகோ, சீமான் போன்ற பொறுக்கிகள், என்றும் தங்கள் சொந்த மக்களுக்காக போராடியவர்களல்ல. மாறாக அரசியல் பிழைப்புக்காக ஈழத்தமிழர் என்று கூறி, தமிழ்மக்களின் போராட்டத்தை புலிகளுடன் சேர்ந்து தம் பங்குக்கு அழித்தவர்கள்.

இவர்களை நம்புகின்ற வலதுசாரிகள், என்றும் தமிழ்மக்களை நம்பியது கிடையாது. எதிரிக்கு எதிராக தங்கள் மற்றொரு எதிரியை நண்பனாக காட்டி அவனை நம்புகின்றவர்கள், மக்களை அணிதிரட்டும் அரசியல் வழிமுறை அற்றவர்கள். மக்களை ஒடுக்க மட்டும் தெரிந்தவர்கள்.

பி.இரயாகரன்
16.10.2010     

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

 

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

 

10.செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)

 

11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)

 

12புலித் தலைமையின் "தியாகம்" "வீரம்" உண்மையானதா!? பொய்யானதா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 12)

 

13. "உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மரண எச்சரிக்கை குறிக்கப்பட்டவனாக வாழ்ந்தேன்." உண்மை, ஆனால்… (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 13)

 

14.மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற புலிகள் விரும்பியிருந்தால்!... அதைச் செய்திருக்க முடியும் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 14)

 

15.அரசின் எதிரியாக புலி இருந்ததால், புலியை ஆதரிக்க முடியுமா? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 15)

16."புலிகள் உண்மையில் தோற்றார்களா…. புலிகள் தோற்கவில்லை." உண்மைகள் மேலான பொய் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 16)