தமிழச்சி இணையத்தை முழுமையாகவே, அவருடன் மோதியவர்கள் கைப்பற்றியுள்ளனர். http://thamilachi.blogspot.com/ இது தமிழ்வலைப்பதிவாளர்கள் மத்தியில் பெரும்பாலும் மௌனமாக ஜீரணிக்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய கருத்துக்களை இணையத்தில் கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்ட தமிழச்சிக்கு, நடந்த இந்தக் கொடுமை. கழுத்தை வெட்டிப் போடுவதற் ஒப்பான கருத்துக் கொலை தான்.

 

 

பெரியார் பற்றிய கருத்துக்களை கொண்டு செல்வதில் அவர் செயற்பட்ட விதம் பற்றி , பலருக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம். அதைக் கடந்து தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

 

அவரின் துணிவு, அதை வெளிப்படுத்தும் விதம், உலகம் பற்றிய அப்பாவித்தனமான பார்வை, வெகுளித்தனமாக அவரின் அணுகுமுறை, இதைக் கடந்து அவர் ஒரு பெண் என்ற எல்லையில் சந்திக்கின்ற நெருக்கடிகள் தான், அவரின் வெளிப்பாடுகள்.

 

இந்த எல்லையில், பெரியார் கருத்துக்களை கொண்டு செல்வதன் மூலம் பகுத்தறிவை சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை கடும் உழைப்பாகியது. அதனால் இணையத்தில் அச்சேற்றுவதில் காட்டிய ஆர்வம், அது சார்ந்த உழைப்பு அனைத்தையயும் தொழில்நுட்ப கிரிமினல்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் திட்டமிட்டு திருடியுள்ளனர். இணையத்தை முற்றாக கைப்பற்றி வைத்துள்ளனர்.

 

தனது கடுமையான உழைப்பு திருடப்பட்டு அழிக்கப்பட்டதை, கடுமையான வேதனையுடன் எனக்கு வெளிப்படுத்தினார். ஒரு பெண்ணாக இந்த சமூக அமைப்பில் எதிர் கொள்ளும் சவால்கள் பலவிதமானது. பொது வாழ்வில், அதுவும் பொது சமூக ஓட்டத்துக்கு முரணான கருத்துகளுடன் இயங்குதல் என்பது, மிகக் கடினமானது.

 

இந்த நிலையில் எல்லாவற்றையும் வெள்ளையாகப் பார்க்கின்ற வெகுளித்தனம், அனுபவமின்மை, அப்பாவித்தனம், பிறரை நம்பிச் செயற்படும் வேகம் அது ஏற்படுத்துகின்ற பாதிப்புகள் கடுமையானது. திட்டமிட்ட சதி மூலம் கிடைக்கின்ற அவமானம், உளவியல் ரீதியாக பலத்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மனிதர்கள் எவரையும் வெள்ளையாக நல்லவராக பார்க்கின்ற அப்பாவித்தனம், எதிர்பாராத வகையில் அவரின் முகத்தில் அடிக்கின்றது.

 

இது உணர்ச்சியை, கோபத்தை, ஆவேசத்தை உருவாக்குகின்றது. மற்றவர் பற்றிய நம்பிக்கையீனத்தை விதைக்கின்றது. துருவி விசாரிக்கத் தூண்டுகின்றது. நிதானமற்ற நிலைக்கு அவரை இட்டுச்சென்று விடுகின்றது. இது அவரின் குறைபாடாக எதிர்நிலைக்கு மாறிவிடுகின்றது.

 

இதை அவர் கவனத்தில் கொள்வது அவசியம். பழையபடி பழைய தளம் மூலம் மீள முடியாது என்ற உண்மையை அவர் துணிவுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதை எதிர்கொண்டு போராடும் துணிச்சலை, ஆற்றலை அவர் கொண்டே காணப்படுகின்றார். சமூகத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், அனுபவத்தை உள்வாங்கியும், சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தனது உழைப்பையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள, எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

பி;.இரயாகரன்
26.11.2007