பௌத்த-சிங்களப் பேரினவாத அரசு தனது இறைமையை முற்று முழுதாக இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்திடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. தமது சுயநிர்ணய உரிமையையும் இழந்துவிட்ட சிங்கள மக்கள் அதனைப் புரிந்துகொள்ளாததுடன், ஏனைய இனங்களின் சுயநிர்ணயப் பிரச்சினை குறித்தும் அக்கறை அற்று, அன்றாட சுகபோக மோகத்திற்கு தீனிபோடும் நுகர்வு நாட்டத்தில் மென்மேலும் மூழ்கி மோசமாக சிதைந்தபடி…
வெளிநாடுகளில் இன்று உல்லாசப் பயணிகளைக் கவரும் விளம்பரங்களைப் பார்த்தால் தெரியும், இலங்கை உல்லாசப் பயணிகளுக்கு எதைக்காட்டி அவர்கனைத் தன்பால் ஈர்க்க எத்தனிக்கிறது? சூதாட்டத்திற்கும், பாலியல் தொழிலிற்கும் உகந்த சொர்க்கபுரியாக விளம்பரங்கள் இலங்கையைச் சித்தரிக்கினறன. சிறுவர்-சிறுமியர்களுடன் கடற்கரை உல்லாசங்கள் குறித்த கூச்சநாச்சமற்ற பிரசாரங்கள். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகரான “அந்த” வளத்தில் இலங்கையின் கீர்த்தி சொல்லிமாளாது.
பொருளாதாரத் தேட்டம் இவ்வழியில் அமையும்போது, அரசியல் நாட்டம் மாத்திரம் வேறு எவ்வகையில் அமைந்துவிடப் போகிறது.? நாட்டை எவர்க்கும் காட்டிக்கொடுத்து ஆளும் சாதிய வர்க்கங்களின் வேட்டைக்காடாக அனைத்து வளங்களையும் ஆக்கிவிடுவதில் யாருக்கும் வெட்கமில்லை!
அந்நிய ஏகாதிபத்தியச் சார்பு மோகம்!
அந்நிய மோகம் ஒடுக்கும் பேரினவாத சக்திகளுக்ககு மட்டும் உரியதா? அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி. ஆளும் பேரினமே நாட்டை அந்நியர்க்கு தாரைவார்க்கும்போது, ஆளப்படுவோரிடம் மண்ணைப் பாதுகாக்கும் உணர்வு எங்கிருந்து வந்துவிடப்போகின்றது? எந்தப் பேய்-பிசாசுடனும் கூட்டுச் சேர்ந்து எதிரிக்கு சகுனப்பிழை ஏற்படுத்திவிட்டாலே வெற்றிதான் என்ற நினைப்பு.
இப்போதைய இலங்கை நட்பு இப்படியாக இந்தியாவிடம் சிங்களப் பேரினவாதம் சரண் புகுவதால், மற்றைய இனங்கள் அதன் எதிரியை நாடவேண்டியதுதானே? இன்று ஈழத்தேசியம் கிலாரி கிளின்டனின் திருவாய் மலர்ந்து அருளும் வார்த்தையிலும், அமெரிக்கக் கடைக்கண் வீச்சிலும் வைத்திருக்கும் நம்பிக்கை–இந்த ராஜதந்திர உத்தியின் பாற்பட்டது மட்டுமல்ல, நீண்டகாலமாக இந்த வகையிலான அமெரிக்க மோகமே முனைப்புற்று வளர்ந்து வந்ததென்பதும் பரகசியம். தோற்றம் பெற்ற நாள் முதலாயே மக்கள் விடுதலை என்பதைவிட ஏகாதிபத்தியச் சார்புநிலை என்பதாகவே ஈழத் தமிழ்த்தேசியம் அமைந்திருந்தது என்பது இரகசியமானதல்ல. எழுபதுகளின் பிற்கூறில் எழுச்சிபெற்ற இளைஞர் இயக்கங்களிடையே விடுதலை உணர்வு அரும்பத் தொடங்கியபோதிலும், அது முளையிலேயே கருகியமை வரலாறு. அவ்வளவிற்கு ஏகாதிபத்தியச் சார்புநிலைத் தீ வலுவுடையது.
ஈழத்தமிழ்த் தேசியத்தின் அந்நியமோகம் பக்கச்சார்பற்றது. தனியே அமெரிக்க நலனுக்கு மட்டும் இரைபோக அவசியமற்றது. ஆரம்பத்தில் பிரித்தானியாவிற்கும், இப்போது யப்பானுக்கும், எப்போதும் இந்தியாவிற்கும் பங்குபோட்டு விசுவாசம் காட்ட பின்நின்றது கிடையாது. இன்று இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவிற்கு உள்ள அதிக வாய்ப்பை உத்தேசித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பரிபூரண இந்திய விசுவாசிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டமை இரகசியமான ஒன்றல்ல. வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்னைக்கும், டில்லிக்கும் காவடி தூக்கியே களைத்துப்போய் விடுவதால், ஈழமண்ணில் எதுவும் பண்ண வக்கற்றுப் போயிருக்கிறார்கள்.
ஏப்பமிடத் துடிக்கும் அந்நியங்கள்!
வெற்றிகளிப்பில் இலங்கைச் சந்தையை இந்தியா முழுதாக முழுங்கி ஏப்பமிட எத்தனிக்கையில், யப்பான் இழப்பை ஈடுசெய்து மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்தும் முயன்றபடி–இந்தியச் சந்தையில் நுழைவதற்கான சாளரமாக இருக்கும் இலங்கையின் கவர்ச்சியான பிரசன்னம் தொடர்ந்தும் யப்பானுக்கு அவசியமாயுள்ளது. பல்தேசியக் கம்பனிகளோடான கூட்டில் சல்லாபம் புரியும் இந்திய—யப்பானிய முதலாளிகளிடையே இப்படியும் ஒரு குரூரமான போட்டி.: “ஊடுதல் காமத்துக்கின்பம் , அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” என்ற குறள் பிரகாரம் வேண்டியபோது விலகி மோதவும் தெரிகிறது, கூடிக்குலாவி வேட்டையாடவும் முடிகிறது.
அமெரிக்க மேலாதிக்கத்துக்கோ பொருளாதார நலனை விடவும் தனது அரசியல் வல்லாண்மையை நிலைநிறுத்துவதில் இலங்கையை வசப்படுத்த வேண்டியுள்ள அவசியம் அதிகம் கவனங்கொள்ளத் தேவையானது. அமெரிக்காவுக்கும் ஒருபுறம் இந்தியாவுடன் கூடிக்குலாவியபடியே இலங்கையில் இந்தியா வென்றெடுததுள்ள பூரண உரிமையை மறுத்து, தனது ஊடுருவலுக்கான இடைவெளியைத் தேடவேண்டியுள்ளது. பொருளாதாரப் போட்டியில் ஏற்கனவே அமெரிக்கா பலவீனப்படத் தொடங்கிவிட்டது. முன்னதாக யப்பானும், இப்போது சீனா–இந்தியா போன்ற நாடுகளும் வளர்ச்சி வேகத்தில் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றன். ஆயினும் அமெரிக்காவின் முதல்நிலை இன்னும் ஆட்டங்காணவில்லை. அதைவிடவும், உலக மேலாதிக்கத்துக்கு அடிப்படையான இராணுவ வல்லாண்மையும், அதற்கு உறுதுணையாகும் விஞ்ஞான—தொழில் நுட்பமும் இன்னமும் அமெரிக்காவை உறுதியுடன் திகழும் ஆதிக்க சக்தியாக நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது. அந்தவகையில் இலங்கையின், அதன் நாட்டம் சந்தை நலனை விடவும், இராணுவக் கேந்திர முக்கியத்துவம் சார்ந்த தேவை வலுவானதாகியுள்ளது. இராணுவ மேலாண்மை அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்துமாதலால் நீண்டகால நோக்கில் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதாகும் என்பது அமெரிக்கக் கணக்கு.
வல்லாதிக்கப் போட்டிகள்!
தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கத்தை வலுப்படுத்துவது முன்னொரு காலத்தில் அமெரிக்காவிற்கு சவாலாக இருந்ததுண்டு—அது சோவியத்துடன் வைத்திருந்த கூட்டு காரணமாக. இன்றோ தன்னோடு அணி சேர்ந்து விட்ட இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கம் தனக்கு ஆபத்தற்றது என்பது அமெரிக்காவின் கணிப்பு. அதை விடவும் முதல் எதிரியாக வளர்ந்து வரும் சீனாவைப் பலவீனப்படுத்துவதற்கு ஏற்ற விழிப்புணர்வுடன் இலங்கை விவகாரத்தை கையாள வேண்டும் எனும் அவசியம் அதற்கு. (ஒன்று நினைக்க வேறொன்று ஆகலாம் என்ற கதையிலும் கவனம் இல்லாமல் இருக்காது. எல்லையை மீறி இந்தியா தனக்கே போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதில் அதன் கவனம் அவ்வப்போது மையங் கொள்ள இடமுள்ளது.)
அந்த வகையில் இலங்கையை இந்தியாவிடம் முற்றாகக் கைகழுவி விட்டு விட்டு அமெரிக்கா திருப்திப்பட்டுக் கொண்டு இருந்துவிட முடியாது. இந்திய ஆதிக்க சக்தியும் அமெரிக்காவுடன் தனது நலனின் பொருட்டு கூட்டுச் சேர்ந்திருப்பதற்காக, இலங்கைக்குள் தலைப் போடுவதற்கு அமெரிக்காவை அனுமதிக்கப் போவதில்லை. இவர்களது இந்தக் கபட நாடகத்திற்குள் சிக்கி அல்லலாடுகிறது ஈழத்தமிழ்த் தேசியத் தலைமை. இப்போதைக்கு ஒரு வெற்றி, இலங்கைக்குள் இந்திய சார்பு அணி அரசியல் தலைமையை முழுதாக வைத்துக்கொண்டுள்ளது. நாடு கடந்த ஈழத் தலைமை அமெரிக்க சார்புடன் இயங்க முடியும். ஆகா, என்னவொரு ராஜதந்திரம்?
அமெரிக்க இறை!
ஒரே குறியாக காரியத்தில் கண்ணாயிருந்து கொண்டு, அமெரிக்க துதிபாடிக் கெஞசிக் கூத்தாடினால், என்றோவொருநாள் மனமிரங்கி அமெரிக்கா தமிழீழம் பெற்றுத்தராதா என்ன?. இஸ்ரேல், கிழக்கு திமோர், குட்டிக்குட்டிக் கிழக்கு ஜரோப்பிய நாடுகள் எத்தனைக்கு அமெரிக்கா சுயநிர்ணயத்தை பெற்றுக்கொடுத்து இருக்கிறது? முழு விசுவாவாசத்துடன் சரணாகதியடைந்தால் இரங்காத இறையுமுண்டோ?
அமெரிக்க இறை எப்போதும் உலக மேலாதிக்கதிதில் தன் இருப்புக்கு அவசியப்படுகிற அளவிலேயே, ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதிப்பிட்டுக்கொள்ளும். அதற்கு அவசியப்படாத போது நாடொன்றின் இறையாண்மைக்குள் அது தலைப் போடாது. தேவைப்படுகின்ற போது போராடும் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை அழுத்திப் பேசும். எந்த நாட்டு மக்களது அடிப்படை உரிமைகள் பற்றியும் அதற்கு அக்கறை கிடையாது. தனது ஆதிக்க நலனுக்கு எது தேவையோ, அது எத்தகைய அவக்கேடாதாயினும் செய்து முடிக்க எப்போதும் பின்நின்றதில்லை.
இன்று இஸ்ரேலின் ஆதிக்கப் பிடிக்குள் அழியும் பாலஸ்தீனத்தின் சுயநிர்ணயம் குறித்து அமெரிக்க நிலைப்பாடு எவரும் அறியாத ஒன்றா?. காஸா அகதிகளின் அல்லல் தீர்க்க முன்வந்த தன்னார்வத் தொண்டர்களின் கப்பல்களை கைப்பற்றி பலரை கொன்றொழித்து மிஞசியவர்களை சிறையிட்டபோது, அமெரிக்கா என்ன செய்துகொண்டிருந்தது?. நூற்றாண்டு கடந்து போராடும் அயர்லாந்தை கண்டு கொள்ளாதிருக்கவில்லையா?. ஒவ்வொரு சிறிய வெற்றிகளையும் அவர்கள் பல தியாகங்கள் வாயிலாகவே பெற்றுக் கொள்ள வேண்டியநிலை. மாறாக, தனக்கு அவசியப்பட்ட போது சேர்பியர்களுக்காகவும், கிழக்கு திமோருக்காகவும் முதலைக் கண்ணீர்!
இத்தகைய மேலாதிக்க நலன்களுக்குள் எமது தேசிய அபிலாசையை முடக்க வேண்டுமா?. அன்றைய பாராளுமன்றத் தலைவர்கள் இஸ்ரேலைப் பாருங்கள் என்ற போது—உலகில் யூதர்களும், யாழ்ப்பாணத் தமிழர்களும் மேதாவிகள் என்ற போது—ஏதோ அப்பிராணிகளாய் இருந்து புள்ளடி போட்டுத் தொலைத்தோம். இன்று மரணஅடி வாங்கிய பினன்ரும், வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மாட்டோமா?. உலக அமைதிக்கு கேடாக இருக்கும் இஸரேலின் உடல்-பொருள்-ஆவியாகவும் அமெரிக்க கொலைவெறி இராணுவத்தின் மூளையாகவும் உள்ள யூதர்கள் போல, ஆண்ட பரம்பரைத் தேசியமா இன்னமும் எமக்குரியது?. வெறும் வணிக ஆதாய நலனுக்குள் முடங்குவோமா, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டப் பாதையை நாடுவோமா?. அனைத்து வகையான ஆதிக்கங்களையும் தகர்க்கும் ஒடுக்கப்பட்டோருக்கான சுயநிர்ணயத்தை வென்றெடுக்கும் வழிமுறைகள் குறித்த தேடல் இனியாவது சாத்தியமாகுமா?
1.“இனியொரு விதி செய்வோம்” - 01 4.