புலம்பெயர் நாடுகளில் இன்று இயங்கும் இணையங்கள் இன்றோ நேற்றோ தோன்றியவை அல்ல. புலம்பெயர் நாட்டில் சஞ்சிகைகள் ('வீடியோ'ச் சஞ்சிகை உட்பட), பத்திரிகைகள், அமைப்பாகி வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள், வானொலிச் செய்திகள்... என்று ஒரு மாற்றுத் தளத்தை உருவாக்கும் பணி தொடர்ந்தது. பலரின் இந்த நெடும்பணியின் தொடர்ச்சியிலே, இன்றும் தொடர்ந்து இயங்கி வருபவைதான் இன்றைய பல இணையத்தளங்கள்.

இவைகள் வெளியிட்ட செய்திகள், பதிவுகள், பதித்த தடங்கள் ஏராளம். யேகேவாவுக்காக தனது பிஞ்சுக்குழந்தையையே 'ஸ்திரிக்கை பெட்டி'யால் எரித்த கொடுமைகள் உட்பட, இன்று வன்னிமக்களின் வேதனைக் கண்ணீர்வரை இவைகள் சொல்லிவைத்த செய்திகளும் மிகமிக ஏராளம்.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில், இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இயக்கங்கள் செய்த அட்டகாசங்களும், அராஜகப் படுகொலைகளானாலும் சரி, புலிகளாலும் அரசாலும் செய்யப்பட்ட அராஜகப் படுகொலைகளானாலும் சரி அன்று புலம்பெயர்ந்த மாற்றுத் தளத்திலேயே வெளியாகியும் இருந்தன.

புலிகள் யாழிலே அரசமைத்த காலத்தில் இருந்து அவர்கள் வன்னியிலே அழிந்து போகும் வரைக்கும், இந்தப் புலம்பெயர்ந்த மண்ணிலே ஒரு மாற்றுத்தளத்தை உருவாக்க உழைத்த ஒருசிலரின் உழைப்பு மகத்தானது. அரசுடனோ, புலிகளுடனோ எந்தச் சமரசமும் இன்றி மக்கள் நலன்சார்ந்த ஒரு மாற்றுத்தளத்தை உருவாக்கிய இந்த நபர்களுக்குள் ரயாகரனும் ஒருவர்.

ரயாகரனின் உழைப்பு வேறு எந்த தனிநபர்களாலும் ஈடுசெய்யமுடியாத, கடினமான பெரும் உழைப்பை அவர் செய்திருக்கிறார். இது முகத்துதியல்ல. உள்ளதை உள்ளபடி பேசத்தெரிந்தவர்களுக்கு இது தெளிவாகப்புரியும்.

'சமரி'ல் இருந்து இன்று 'தமிழ் அரங்கம்' வரையும், செய்தியாகவும் கட்டுரையாகவும் பதியப்பட்டவை ஒரு தொகை. இவை கடந்தகால அரசியல்போக்கில், மாற்றுக்கருத்துக்கான ஒருதொடர் நிகழ்சிநிரலாகும். இதைப் புரட்டிப்பார்த்தால், கடந்தகாலத்தில் அரசியலில் வந்து போனவர்களும், இனி வரப்போகிறவர்களின் கடந்தகால நிலைப்பாட்டுக்குமான ஒரு நிலைக்கண்ணடியாக இது இருக்கிறது.

இந்த உழைப்புக்காக இவர்கள் பெற்ற 'வசையடி' கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு சாதாரண மனிதராக இதைச் சுமப்பதற்கே ஒரு பெரும் மனப்பலம் வேண்டும். ''மஞ்சள் பத்திரிகை'' என்றார்கள். ''மனநோயாளிகள்'' என்றார்கள். ''தனிமனிதத் தாக்குதல்'' என்றார்கள். ''புலியெதிர்ப்பு'' என்றார்கள், ''அரச உளவாளிகள்''என்றார்கள், ''தேசதுரோகிகளின் பத்திரிகை'' என்றார்கள். இந்த ''பட்டங்களே'' போதும், இது மாற்றுத்தளத்தில் தான் இயங்கியது என்பதற்கு....

இதைவிட உரைகல் வேறு என்னவேண்டும்!!

இந்தப்பட்டங்களின் தொடரில், அமைப்புத் தீர்ப்புக்களும் உண்டு. உள்ளுர் புலி அமைப்புக்களின் தீர்ப்புக்கு வெளியே, ஓர் இடதுசாரி அமைப்பின் தீர்ப்பும் இதற்குத்தான் முதன்முதலில் கிடைத்த பெருமையும் இதற்குண்டு. அதுதான் ''அவதூறு பரப்பும் ...'' என்ற தீர்ப்பு. இந்த ''அவதூறு'' பரப்பியது தத்துவத்தின் மீது என்பதாக இருந்தால் நான் இந்தக்கட்டுரையை எழுதவேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் அது வேறு.

நாவலனின் வழக்குக்கு 'வால்தா' வாங்காததும், வராததுக்குமாக தீர்ப்பு!

என்ன வழக்கு என்று கேக்கிறியளா?

குகநாதன் - அருள் செழியனுக்கு இடையிலான கொழுத்த வியாபாரப் பிணக்கு இது. அருள் செழியன் இந்தியாவிலிருந்து குகநாதன் என்ற முதலாளிக்கு (வெளிநாட்டுக்கு) பொழுதுபோக்குக்களை ஏற்றுமதி செய்த இன்னொரு வியாபாரி. இவர்களுக்கு இடையிலாக கைமறைவான இந்த வியாபாரப்பிணக்கு எப்படி இந்தச்சமுதாயத்தில் வழக்கத்தில் தீர்க்கப்பட்டு வந்ததோ, அதேபாணியில் இது தீர்க்கப்பட்டும் இருக்கிறது. இவ்வாறு வழக்கத்தில் இருந்து நடந்துவரும் பணக்காரர் சங்கதிகள் ஊடகங்களின் செய்தியாக ஒருபோதும் வருவதுமில்லை. அது ஊடகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அதற்கு வெளியே இருப்பவர்களாக இருந்தாலும் சரி இதுதான் சமூகத்தில் நிலவிவரும் நடப்பு.

இப்பிரச்சனையும் இவ்வாறுதான் ஊடகத்துக்கு வரவில்லை. இதில் நாவலன் என்றொருவர் சம்மந்தப் பட்டிருக்கிறார் என்ற அரசல்புரசலான பேச்சு (அவர் வாழும் சூழலில் - இந்தியாவில் அல்ல வெளிநாட்டில்-)அடிபட்டதைத் தொடர்ந்து, இது வெளிநாட்டிலேயே செய்தியானது. இதை தமிழரங்கம் வெளியிட்டிருந்தது. பின்னர் தேசம்நெற்றும் செய்தியாக்கியது

இதுதான் வழக்கு...

என்ன ஒரு இழவும் விளங்கவில்லையா?

நாவலன் இதை மறுத்திருந்தார். இரயா தன்னுடனான நீண்டகால கோபத்தால் தான் இதைச் செய்தியாக்கி தன்மீது ''அவதூறு'' பொழிந்ததாக, தனது தரப்பில் மறுத்திருந்தார். தேசம் நெற்றும் ''அரச ஊதுகுழல்'' என்பதால்தான் தன்மீது சேறடிக்க முற்பட்டதாகவும் நாவலன் தன்மீதான நியாயத்தை கற்பித்தார்.
இதுக்குத்தான் தீர்ப்பு வழங்கியிருக்கிறது, மகஇக.

சரி, அப்படியென்றால் உண்மையில் யதார்த்தமாக என்ன நடந்தது?

02.08.10 ஆம் திகதி இச்சம்பவம் சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. 02.09.2010 தமிழரங்கம் இதைச் செய்தியாக்கி இருக்கிறது. இது வெளிவந்து 06 நாட்களின் பின் (08.09.10), நாவலன் இதை மறுத்து ஒரு கட்டுரை 'இனியொரு'வில் வெளியிட்டார். (இதற்கு முதல்,  தான் வேறு ஒரு நாட்டில் இருப்பதாகவும், திரும்பியதும் இதற்குப் பதில் எழுத இருப்பதாகவும், அதுவும் ஓர் அமைப்பை இதில் தொடர்புபடுத்தி இருப்பதாலேயே தான் இதை எழுத விரும்புவதாகவும் - பொருள்பட - ஒரு பின்னூட்டத்தை தனது கட்டுரையில் -இனியொருவில்- வெளியிட்டும் இருந்தார்)

08.09.10 ஆம்திகதி நாவலனின் கட்டுரையில், ஓரிரு தினங்களின் பின் குகநாதனின் மனைவியின் குரல் பதிவிடப்பட்டது. இது 17.09.10 இல் பதிவு செய்ததாக அக்கட்டுரையின் அடிக்குறிப்பு குறிப்பிட்டது. (இத் திகதியிலுள்ள மாதம் தவறானது என்பது எந்தக் குழந்தைப்பிள்ளைக்கும் விளங்கும். 08 ம் திகதி வெளியான கட்டுரையில், 17ம் திகதிக்கு முன்னர் இக்குரலை இணையத்தில் ஏற்றுவது?)
ஆக, தமிழரங்கத்தில் வெளியான செய்திக்கட்டுரைக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் (17.08.10 இல்) இது பதிவாகியிருக்க வேண்டும். இதுவும் நாவலனின் தகவலின் படி...

இதைக் கேட்டியளோ? கேட்டவர்களுக்குப் இப்பிரச்சனை தெளிவாகி இருக்கும்!

(இது அகற்றப்பட்டதே வரவேற்கத்தக்கது. இதை யாரும் மீண்டும் இணையத்தில் இடக் கோரக் கூடாது!, இது நாகரீகமும் தர்மமும் அற்ற செயல்!! என்பதை நான் மீண்டும் கூறுகிறேன்)

இனி, நாவலன் 'புதிய திசைகள்' என்ற அமைப்பின் முன்னணி உறுப்பினர். இவர் தொடர்பாக (தமிழரங்கத்தில் இச் செய்தி வெளியாக முன்னர்) ''அவதூறுகள்'' சமூகத்தில் பரப்பப்பட்டால் - அதை நாவலனோ, அல்லது அவ்வமைப்போ - இதை அறியும் போது என்ன செய்ய வேண்டும்? (இந்தக் கேள்விக்கு முதல் மகஇக விடம், உங்கள் அமைப்பின் முன்னணி உறுப்பினர் ஒருவர் பற்றி சமூகத்தில் ''அவதூறு'' பரப்பப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ) ஆகக்குறைந்தது இவ் ''அவதூற்றை'' மக்கள் நம்பவேண்டாம் என்று, இந்த அமைப்பு (''மக்கள் அமைப்பு'') - 'புதியதிசைகள்' - மக்களுக்கு வலியுறுத்தியிருக்க வேண்டுமல்லவா? ஏன் அவர்கள் உங்கள் வழக்கு வரைக்கும் அதனைச் செய்யவில்லை? (இது உங்கள் வழக்குக்கும், அதன் தீர்ப்பு வரைக்குமான கட்டுரை).

நாவலனின் வாழ்நிலைச் சூழலுக்குள்ளே, அவரை முன்னணி உறுப்பினராகக் கொண்ட ஒரு -''மக்கள் அமைப்பே'' - 'புதிய திசைகள்' - . இவ்வமைப்பு, நாவலனின் இந்தப் பிரச்சனையை, ''அவதூறு'' என்று கூற  மக்கள் முன் முன்வரதபோது, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் தமிழரங்கத்துக்குத் தீர்ப்பளிக்க?

நாவலனைத் தவிர, நாவலனை முன்னணி உறுப்பினராகக் கொண்ட அமைப்புக்கள் உட்பட, அவரது ஆதரவு அமைப்புக்கள் ஈறாக - எந்த அமைப்பும் இச் செய்திக்கான மறுப்பறிக்கை விட்டது கிடையாது!

(நாவலனின் மறுப்பறிக்கையும், அதன் ஆதாரங்களும் அது எதற்;காக என்பதும் மேலே கூறிவிட்டேன். 'நாவலன் மறுப்புக் கட்டுரை எழுதினார் தானே' என்று யாரும் என்னிடம் கேட்க வரவேண்டாம்! பின்னூட்டக்காரருக்கும் சேர்த்துத்தான்.)

-நாவலன் பிரச்சனைக்குரிய நபர் - அவர் சார்ந்த அமைப்புக்களின் நடவடிக்கையே இங்கு பேசப்படுகிறது.... -
இவர்களின் தீர்ப்புக்கள் என்னவாக இருந்தது?

மகஇக வின் தீர்ப்பு, என்பது என்னைப் பொறுத்தவரை....

'காகம் இருக்கப் பன(ண)ம்பழம் விழுந்த கதை' க்கான தீர்ப்பே!

இவை தொடரும்...

சுதேகு
081010

பி.கு.

ஜயருக்கான எனது 'பின்னூட்டத் தொடர்' , ''செழுமைப்படுத்தி வரும்'' ஜயரின் அச்சுப்பதிவைத் தொடர்ந்து வெளிவரும்.

வாசகர்கள் கவனிக்கவும்: துரையப்பா கொலைக்கான காலத்தின் பின் எனது கட்டுரையை நிறுத்தியுள்ளேன். இதன் பின்னர்தான் 'ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்டங்களும்' என்ற, முக்கிய முரண்பாடுகளும் தொடர்கின்றன. ஜயாவின் பதிவின் பின்னர், முடிந்தளவு ஆதாரங்களுடன், இந்த வரலாற்று முரண்பாடு தொடரும்....

(அவரின் தெளிவுபடுத்தும், புதிய அச்சுப்பதிவின் வெளியீட்டு முரண்பாடுகளுக்குப் பின்....)

மேலும் 1987 ஜனவரி 24ம் திகதிக்கு முற்பட்ட எனது பதிவுகள் 'ரூபன்' என்ற எனது புனைபெயரில் பதிவிடப்படும். அதன் பின்னான, எனக்குத் தெரிந்த கேட்ட, அறிந்த எந்த புலம்பெயர் வரலாறும் சுதேகு என்ற பெயரில் பதிவிடப்படும்)

இதுவும் வாசகர் கவனத்துக்காக.
 
புலிகளின் அழிவுக்கு முன்னதான எனது எல்லாக் கருத்துக்களும், அதன் ஆதாரங்களுடன் - சுதேகு - என்ற பேரில் உரிமை கோரப்பட்டு மக்கள் முன், பழைய பல புனைபெயரின் ஆதாரத்துடன் முன்வைக்கப்படும்.

ரூபன்
081010