10252021தி
Last updateச, 09 அக் 2021 9am

இன்னுமா இந்த ஊர் என்னை நம்புது-மோகன் ஜெயக்குமார்

புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இதழ்களை அவற்றின் முதலாவது இதழ்களில் இருந்து இன்று வரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான். சில விடயங்களில் இவற்றில் வரும் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கின்றது. ஆனால் அக்கடடுரைகளில் அவர்களின் பக்கத்து, நியாயமும் நேர்மையும் தர்க்க ரீதியாக இருந்திருக்கின்றது. ஆனால் குகநாதன் கடத்தல் விவகாரத்தில் அவர்கள் தீர்ப்பை மாற்றிச் சொல்லும்  நாட்டாமைகளாக ஒரு அறிக்கை எழுதியிருப்பதனை வாசித்த போது இவ்வளவு காலமும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும் மண்ணாகிப் போய் விட்டது. இந்த அறிக்கை எழுதுவதற்காக தேசம்நெற்றினை அடிக்கடி பார்த்திதிருப்பார்களோ?. ஏனெனில் ம க இ க இன் வினவில் வந்த அறிக்கை தேசம்நெற்றில் வெளிவரும் கட்டுரைகள் போல் வந்திருக்கின்றது.

இந்த பிரச்சினையில் குகநாதன் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறும் ரயாகரன் என்று அறிக்கை சொல்கிறது. குகநாதன் தரப்பில் நியாயமிருப்பதாக ரயா எங்கே எழுதியிருந்தார் என ரயாவின் கட்டுரையை மறுபடியும் ஒருமுறை படித்து விட்டு சொல்லட்டும். குகநாதன் கடத்தப்பட்டார் என்றே ரயாவின் கட்டுரை சொல்கின்றது. ஏங்களது நாடுகளில் பொலீஸ் தான் ரவுடிகளை மிஞ்சிய ரவுடிகள் என்பதும் தமிழ்நாட்டுப் பொலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என்பதும் மகஇக விற்கு என்ன தெரியாத விடயமா?. சங்கராச்சாரியை கைது செய்த பிரேம்குமார் என்ற பொலீசு, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நல்லகாமனுக்கு செய்த கொடுமைகளை பக்கம்பக்கமாக புதிய ஜனநாயகத்தில் படித்து இருக்கிறேன்.

குகநாதன் சொல்வதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஜயம் கூட ரயாவிற்கு ஏற்பட்டதாக தெரியவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகின்றது. குகநாதன் உத்தமபுத்திரன், சத்தியவான் என்று எங்காவது ரயா எழுதியிருக்கின்றாரா?. மகஇக திடீர் நம்பிக்கை வைத்திருக்கும் அருட்செழியன் கொடுத்த புகாரின் பேரில், தர்மபுரியில் தோழர்களைக் கொலை செய்த தேவாரம் போன்ற காவல் நாய்களை கொண்டுள்ள தமிழ் நாட்டுப் பொலிசாரால் குகநாதன் கைது செய்யப்பட்டார். அவர்களின் கட்டப்பஞ்சாயத்தினால் பணம் கொடுத்து வழக்கு ஏதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டார். இதில் அருள்எழிலன், நாவலன் பங்குகள் என்ன என்பதனைத் தான் ரயா கேட்டிருந்தார். அருள்செழியனுக்கும் குகநாதனிற்குமான பிரச்சினைக்கோ யார் உண்மை சொல்கின்றனர் என்ற ஆய்வுக்கோ ரயா போகவில்லை. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கட்டப்பஞ்சாயத்தில் ஏன் நாவலன் தலையிட வேண்டும். அது தான் இங்கு கேட்கப்படும் கேள்வி.

அருள்எழிலன் காவல் நிலையத்தில் நிற்கிறார் சரியாக அதேநேரத்தில் நாவலன் தற்செயலாக தொலைபேசியில் அழைக்கிறார். அருள்எழிலன் பேசிவிட்டு “இந்தாங்க பக்கத்திலே நம்ம மச்சான் ஒருத்தர் நிற்கிறார். அவன் கிட்டேயும் பேசுங்க” என்பது மாதிரி தடுப்புக்காவலில் இருக்கும் குகநாதனிடம் பேசக் கொடுக்கின்றார். தடுப்புக் கைதியிடம் எதற்காக அருள்எழிலன் நாவலனை பேசச் சொல்ல வேண்டும்?. இலங்கை அரசின் கைக்கூலி குகநாதன் என்று இன்று எழுதித்தள்ளும் நாவலன் எதற்காக அவரிடம் பேச வேண்டும்?. ஒரு அப்பாவி பொலிஸின் கட்டைப்பஞ்சாயத்தில் சிக்கியிருந்தால் அவரை காப்பாற்றுவதற்காக பேசியிருந்தால் நல்ல முயற்சி என்று சொல்லலாம். இலங்கை அரசின் கைக்கூலி பலரிடம் மோசடி செய்த பேர்வழியான குகநாதனிடம் எதற்காக பேச வேண்டும்?. இன்றைக்கு தனக்கும் நாவலனிற்கும் இச் சம்பவத்துடன் தொடர்பில்லை என்று விளக்கம் சொல்லும் அருள்எழிலன் எதற்காக காவல் நிலையம் செல்ல வேண்டும்? ஒரு தடுப்புக் கைதியிடம் அந்த புகாரிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லாத முன்றாவது பேர்வழி பேசமுடியுமா?. போராட்டங்களில் கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லப்பட்டதும் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கிடைக்காமல் மயங்கி விழுந்ததும் தோழர்களிற்கு இந் நேரத்தில் ஞாபகம் வரவில்லையா?.

புலிகள் பற்றிய அபிப்பிராயத்திற்கும் அருள்எழிலன் நேர்மைக்கும் சின்னப்பிள்ளைத்தனமாக முடிச்சு போடக் கூடாது என்று அறிவுரை கூறப்படுகின்றது. அருள்எழிலன் ஒரு தொழில்முறை பத்திரிக்கையாளன். தமிழ்நாட்டில் உள்ள ஒரு கைப்பிள்ளை புலிகளை ஆதரித்தார் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஜனநாயக மறுப்பு, பாசிசம், கடைசி நேரத்தில் கூட தங்களின் பாதுகாப்பிற்காக மக்களை பலி கொடுத்தமை போன்றவைகளை செய்த புலிகளை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியும். ஈழமக்களை கொலை செய்த ராஜீவின் மரணத்தின் போது தமிழ்நாட்டில் வாழ்ந்த ஈழமக்களை காங்கிரஸ் அ.தி.மு.க குண்டர்களிடமிருந்து காப்பாற்றிய ம.க.இ.க மேல் கிட்டு பழி போட்டதனை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை.

நல்லவர் வல்லவர் என்று ம.க.இ.க வால் சொல்லப்படும் அருள்எழிலன் எழுதுகின்றார் தனது நண்பர் ஒருவர் சொல்கின்றாராம் ரயா மனநிலை சரியில்லாதவர் என்று. மனநிலை சரியில்லாத ஒருவர் தானா ம.க.இ.க வின் அரசியலை இன்று வரை ஏற்று வந்திருக்கின்றார்?. மனநிலை சரியில்லாத ஒருவர் எழுதியதற்கு ஏன் அருள்எழிலன் வேறு வேலை இல்லாமல் காலத்தை விரயம் செய்து மறுமொழி எழுத வேண்டும். அவரின் இன்னொரு நண்பர் சொன்னாராம் ரயா கட்டுரை எழுதிவிட்டு தானே பத்து பின்னோட்டங்களையும் எழுதி விடுவார் என்று. ரயாவின் கட்டுரைக்கு பெரும்பாலும்  பின்னூட்டங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. ம.க.இ.க வின் நாட்டாமை தீர்ப்பு பற்றிய கட்டுரைக்குத்தான் ஒருவரிற்கு அருள் வந்து சாமியாடி மணி அடித்து பின்னூட்ட மழை பொழிகின்றார்.

மருதையனின் சூரியோதயம் வானொலி  நிகழ்ச்சியின் போது நூற்றுக்கணக்கான கேள்விகள் வந்துள்ளன என நாவலன் மருதையனை சந்தோசப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பொய்க்கணக்கு சொன்னார். பின்பு வினவுதளத்தில் இதைப் பற்றி கேட்டபோது நேர்மையாக ஒத்துக்கொள்ளாமல் தோழர்கள் கூறியதைத் தான் நான் சொன்னேன் என்று மேலும் ஒரு பொய் கூறி தன் சக தோழர்களின் மேல் பழியினைப் போட்டார். இந்த சின்ன விடயத்திற்கே பொய் சொல்பவரின் வாக்குமூலத்தை நம்பித்தான் ம.க.இ.க தீர்ப்பு எழுதியிருக்கின்றது.

தான் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை என்று அகிம்சை பேசும் நாவலன், ரயா வங்கிக் கொள்ளை காசை மடக்கி விட்டார் என்று அசோக் எழுதிய அவதூற்றினை எப்படி இனியொருவில் வெளியிட்டார்? NLFT – PLFT பிரிந்த போது பணம், ஆயுதங்கள் என்பன அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டன. ஈழப் போராட்ட இயக்கங்களின் ஒரே ஒரு ஜனநாயக பூர்வமான பிரிவு இது என்றே கூறலாம். இச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரயா காசை களவாடி இருந்தால் ஏன் ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. NLFT இன் நிதிப்பொறுப்பாளராக இருந்தவர் இனியொருவுடன் தொடர்பில் தானே இருக்கின்றார். அவரிடம் இது பற்றி அறிய முடியும் என கருதுகின்றேன். சமர் பத்திரிக்கை பிரான்ஸிலிருந்து வந்தபோது நாவலனும் ஆசிரியர் குழுவில் ரயாவுடன் இருந்தவர் தானே, அப்போது இந்தக் கேள்வி ஏன் நாவலனிற்கு எழவில்லை?.

குகநாதன் பிரச்சினையில் நாவலன், அசோக் இருவரும் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள். குகநாதன் இலங்கை அரசின் கைக்கூலி என்பதால் தன் மீது தேசம்நெற்றில் அவதூறு செய்துள்ளார் என நாவலன் சொல்கின்றார். அசோக்கும் தமிழ் தேசியவாதி, இலங்கை அரசினை எதிர்ப்பவர். ஏன் அவரை குகநாதன் அவதூறு செய்யவில்லை? முன்னர் பின்னர் தெரியாத நாவலனின் மீது மட்டும் குகநாதன் பழி சொல்லும் காரணங்கள் தான் என்ன?.

ரயாவும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர் என்று ஒரு வசனம் வருகின்றது. ரயா இடதுசாரி நிலையிலிருந்து கேட்ட கேள்விக்கும் ஜெயபாலன் தன்னுடைய இலங்கை அரசுசார்பு நிலையிலிருந்து கேட்கும் கேள்விகளிற்கும் ஏன் முடிச்சுப் போடுகின்றீர்கள்? ரயாவும் ஜெயபாலனும் கூட்டாக இந்த கட்டுரைகளை எழுதினார்களா?. 2008 இல் நாவலனை அவதூறு செய்த தேசம்நெற்றினை மறுத்து நாவலனிற்கு நற்சான்றிதழ் கொடுத்தீர்கள், நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது, இப்ப என்ன வந்தது என்று கேட்கிறீர்கள். ரயா நாவலனிற்கு சான்றிதழ் கொடுத்தது நாவலனின் இலங்கை அரசிற்கு எதிரான கருத்துக்களிற்காகவே. அரசசார்பு தேசம்நெற் நாவலனை விமர்சிக்க எந்தவிதமான தகுதியும் அற்றது என்பதற்காகவே. ரயா நாவலனை அல்ல மாறாக நாவலன் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டின் சரியான கூறுகளை தூக்கிப் பிடித்திருந்தார்.

புதிய திசைகள் - ம.க.இ.க இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்தினை சீர்குலைப்பதற்காக ரயா முயற்சித்ததாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று ரயா எழுதி இருக்கின்றார். அத்தகைய கருத்து எதனையும் எம்மிடம் நாவலன் கூறியதில்லை என்று எழுதி இருக்கின்றீர்கள். ரயாவும் அதைத்தானே கூறியிருக்கின்றார். ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ரயாவோ அன்றி அவருடன் இணைந்துள்ள தோழர்களோ ம.க.இ.க விடம் பேசவில்லை. நாவலன் தான் தன்னிடம் ம.க.இ.க வினர் தங்களிற்கு ஜரோப்பாவிலிருந்து  வந்த தொலைபேசியில் இது புலிகளின் பினாமி அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் என எச்சரித்திருந்ததாக கூறியதாக புதியதிசைகள் அமைப்பினரிடம் கூறியதுடன்  இது நிச்சயமாக ரயாவாகத்தானிருக்க முடியும் எனவும் கூறியிருந்தார். உங்களிற்கு தெரிந்த புதிய திசைகள் அமைப்பினரிடம் இதைப் பற்றி விசாரிக்கலாம். புதிய ஜனநாயக மக்கள் முன்னணியையும் புதிய திசைகளையும் எதிர்நிலைகளில் வைத்திருப்பதற்கான நாவலனின் கட்டுக்கதைகள் தாம் இவை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உங்கள் மூலமே இது வெளிவந்து விட்டது.

ரயாகரனிற்கு அரசியல் இல்லை. தனிமனித தாக்குதல்கள் தான் தெரியும் என்கின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை போன்றதொரு கட்டுரையை CIA இனாலும் எழுத முடியும். ஆனால் எழுதுபவர்களின் அரசியல் நேர்மையும் தனிப்பட்ட நேர்மையும் தான் நாங்கள் வேண்டுவது. ஈழப் போராட்ட வரலாற்றில் விமர்சனங்கள் சுயவிமர்சனங்கள் என்பன இல்லாமல் போனதால் தான் எம் மக்கள் ஆயிரக்கணக்கில் இயக்கங்களினால் படுகொலைகளுக்கு உள்ளாகினர்.

ரயாவுடன் NLFT இல் இருந்தவர்கள் சமர் பத்திரிகையில் இருந்தவர்கள் இன்றைக்கும் அவருடன் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். பல புதியவர்களும் இணைந்து செயற்படுகின்றார்கள். ஆனால் நாவலனுடன் TELO இல் இருந்தவர்கள் சமரில் இருந்தவர்கள் எவரும் இன்று கூட இல்லை. இணையத்தள எழுத்துக்களில் இருந்து ஒருவரை மதிப்பிட முடியாது. நடைமுறை இல்லாத தத்துவம் படுகுழியில் தள்ளும் என்பது ம.க.இ.க வினரிற்கு தெரியாதா?. ம.க.இ.க வுடன் தொடர்பில் இருக்கும் ஈழத்தினை சேர்ந்த தோழர்களிடம் நாவலனின் தனிப்பட்ட நேர்மையையும் நடைமுறையையும் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.