Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கட்டைப் பஞ்சாயத்து மூலம் பணம் அறவிட்டவர்கள், அதை தங்கள் சுயவாக்கு மூலமாக நியாயப்படுத்தியவர்கள், தங்கள் செயலை நியாயப்படுத்த ம.க.இ.க. ஊடாக எம்மை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஒரு விசித்திரமான அரசியல் வழக்கு. சம்பந்தப்பட்ட இருதரப்பும், தங்கள் சார்பாக தமது தரப்பு வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கின்றது. அப்படி உண்மைகள் இருக்க, இல்லை அதை நீங்கள் நிறுவ வேண்டும் என்கின்றது மகஇக.

இதன் மூலம் ஏதோ நாங்கள் இதில் ஒருதரப்பாக ஈடுபட்டதாக மகஇக கூற முற்படுகின்றது.   இப்படி இந்த விடையத்தில் கட்டைப்பஞ்சாயத்து செய்தவர்கள்; சார்ந்து, எம்மை  எதிர்த்தரப்பின் ஒரு பிரதிநிதியாக நிறுத்தியுள்ளனர். மகிந்த சரணடைந்தவர்களையும், கைதானவர்களையும் கொன்றான் என்று குற்றம்சாட்டும் நாம் தான், அதை நிறுவ வேண்டும் என்று கூறுவது போன்றது. இல்லையென்றால் அது பொய். இதுபோன்ற விடையங்கள், உலகறிய செய்வது கிடையாது. அருள் சகோதரர்களும், உங்கள் தொடர்பில் உள்ள நாவலனும் உங்களுக்கு சொல்லிய பின் இதில் சம்மந்தப்படவில்லை. பொலிஸ் உள்ளிட்ட இவர்கள் சம்மந்தப்பட்ட இரகசிய நடத்தைகள் இவை. நாம் இந்த விடையத்தை அம்பலப்படுத்தியவர்கள். இதை அரசியல் ர்Pதியாகவும் எடுக்கலாம் அல்லது ஊடகவியல் சார்ந்ததாகவும் எடுக்கலாம். ஆனால் விசாரணைக்கு அழைப்பவர்கள், எம்மை குகநாதன் தரப்பாக காட்டி அழைப்பது மட்டுமின்றி, அவர்களை அழைத்துவர வேண்டிய பொறுப்பும்  எம்முடையது என்று கூறியுள்ளனர். 

விசித்திரமான அரசியல் குளறுபடிகள். இந்த வகையில் ம.க.இ.க. எமக்கு எதிராக எடுத்த நிலை, அரசியல்ரீதியாக ஆச்சரியமானது, அதைவிட ஆச்சரியமானது அதைச் சொன்னவிதம். நாம் இதைக்கண்டு அதிரவில்லை. ஏற்கனவே எங்கள் தோழர்கள், ம.க.இ.க.வின் சமகால நிகழ்வுகளால் அதிருப்தியுற்று இருந்தனர். நான் இந்த அதிருப்திகளுக்கிடையில் அரசியல் ரீதியாக இதைப் பார்க்கும் வண்ணம் கோரி வந்திருக்கின்றேன். ஒரு அரசியல் போக்கில் முரண்பட்ட ஒரு கருத்தாக இருக்கும் என்ற எல்லையில் இதை அணுகி வருகிறோம்.   அதே நேரம் நாம் எமது முரண்பாடுகள் சார்ந்த கருத்துக்களை, எழுத்துபூர்வமாக முன்வைத்து இருக்கின்றோம். அதற்கு அவர்கள் பதில் தராத நிலையில், நாம் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு கொள்வதை நிறுத்தியிருந்தோம். ஆனால் நாம் அவர்களுடன் சர்வதேசிய அரசியலுக்கு ஏற்ப, எமக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் அதை மீறவில்லை. எமது நூல் வருவது நின்றது. நாம் புலிகள் தொடர்பாக எழுதியவை முற்றாக இருட்டடிப்பாகியது

இந்த விவகாரத்தினுள் தமிழ் தேசிய அரசியலை கையாளும் எமது அணுகுமுறை பற்றிய, எதிர் விமர்சனத்தை புகுத்தியுள்ளனர். இதற்குள் அதை புகுத்தியது பொருத்தமற்றது என்று நாம் கருதுகின்றோம். இதற்குள் அவற்றைப் புகுத்தியதன் மூலம், இதை அதற்கூடாக அணுக முற்படுகின்றனர். எமது தேசிய பிரச்சனையில் இந்தியாவில் உள்ள தமிழ்தேசியவாதிகளை அணுகும் வரையறைக்குள், நாம் அணுக முடியாது என்பது எமது அரசியல் நிலை.

இந்த நிலையில் புலிகளை நாம் அம்பலப்படுத்தி அணுகும் முறையில் இருந்து தம்மை தமிழகத்திலும் புலத்திலும் வேறுபடுத்திக்காட்ட முனைகின்றனர். எமது நிலையை மறுத்து, நாம் சொல்வது தவறானது என்று கூறி அதை செய்யமுடியாது. அதனால்தான் இந்த விவகாரத்தை இப்படி கையாளுகின்றனர். 

இங்கு விசாரணைக்கு அழைத்த இந்த விவகாரத்தின் பின், இதை எந்த அடிப்படையில் நாம் அணுகுகின்றோம் என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு செல்ல முனைகின்றோம். ம.க.இ.க. வை, அதன் பொது அரசியல் தளத்தில் மார்க்சிய இயக்கமாக கருதும் அதேநேரம், இலங்கை தமிழ்த்தேசியம் பற்றிய இன்றைய (இறுதி யுத்தம் தொடங்கிய பின்) அவர்களின் சில அணுகுமுறைகளுடன் முரண்பட்டு வந்திருக்கின்றோம். கடந்த ஒரு சில ஆண்டுகளாக, இந்த நிலைப்பாடு சார்ந்து அவர்களுடன் விவாதிக்க முனைந்திருக்கின்றோம். இந்த எல்லையிலேயே இந்த விவகாரம் உள்ளது.

குறிப்பாக விசாரணைக்கு அழைத்த இந்த நிகழ்வின் பின், எமக்கு எதிராக அவர்கள் ஒரு அரசியல் நிலையை அறிவித்தாலும் கூட, பொது அரசியலில் அவர்கள் சரியாக இருக்கும்வரை நாம் அவர்களை அதற்காக ஆதரிப்போம்.

கட்டைப் பஞ்சாயத்து நடத்தியவர்கள் சார்பாக, தம் மீதும் எச்சில் பட்டுவிட்டதாக கூறி இதில் தலையிட்டது போல், அவர்களின் அணுகுமுறைக்கு உட்பட்ட எல்லையில் நின்று பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டுடன் தான் தொடர்ந்து அணுகுவோம்.

கடந்த ஒரு இரு வருடங்களாக, திடீர் மார்க்சியவாதிகள், தமிழனவாதிகள் சிலர் எமக்கு எதிரான பிரச்சாரத்தை ம.க.இ.க.வுடன் நடத்துவது தெளிவாகின்றது. இதில் நாவலன் முதன்மையானவர். மகஇக கட்டுரையை இனியொருவில் வெளியிட்ட நாவலன், இதன் பின்னூட்டத்தில் சொந்த பெயரிலும் "எஸ்எஸ்எஸ்" புனை பெயரிலும் இதை அம்மணமாக்கியுள்ளார். இதில் மற்றப் பெயர்களில் சில, எமது தோழர்கள் பெயரால் அவர்கள் நடத்துகின்ற பின்னூட்டங்கள்தான். அவரே எல்லாம். ம.க.இ.க.வுடன் எம்பற்றிய தொடர்ச்சியான இவர்களின் குற்றச்சாட்டும், புலித் தேசியம் மீதான எமது அணுகுமுறைக்கு மாறான அவர்களின் நிலைப்பாடும், பின்னிப்பிணைந்து விடுகின்றது என்று நாம் கருதுகின்றோம். இந்த வகையில்  

1. புலிகளை நாம் விமர்சனம் செய்யும் முறை

2. திடீர் மார்க்சியவாதிகளாக உருவானவர்கள், வேசம் போட்டுக் கொண்டு திடீரென உலாவும் கூட்டம், எம்மை தனிமைப்படுத்த இன்று அனைத்தையும் செய்கின்றது.

இப்படி இவை அனைத்தும் இங்கு ஒருபுள்ளியாக குவிகின்றது. புலிகள் பற்றிய எம் பார்வையும், அதை விமர்சனம் செய்யும் முறையும் தவறானது என்ற அரசியல் கண்ணோட்டம் தான், தீர்மானகரமாக எமக்கு எதிரான ம.க.இ.க.வின் நிலையாக மாறுகின்றது என்று கருதி வருகின்றோம். அனைத்தும் அரசியல் என்ற வகையில், இந்த விசாரணையும் தற்செயலானதல்ல. 

எதார்த்தத்தை கண்டுகொள்ளாத கோரிக்கை    

தன்னிச்சையான எம் அபிப்பிராயமின்றி வரைமுறை மீறிய தீர்ப்பு. நாங்கள் இதில் பங்குபற்றுவதாக இருந்தால் கூட, நான் அங்கு வரமுடியுமா என்ற எதார்த்தத்தை, இந்த விசாரணை அரசியல் கருத்தில் எடுக்கவில்லை. ஆனால் தீர்ப்பு வருகின்றது. ஒரு இரு ஆண்டுகளாகவே என்னை இந்தியா வரும்படி தோழர்கள் கோரியிருந்தும், அது சாத்தியமற்றது என்பதை தெரிவித்து வந்திருக்கின்றேன்.

1. இந்தியா வருவதற்கான விசா எனக்கு கிடையாது.

2. என்னுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. எப்படி இலங்கை செல்ல முடியாதோ, அப்படித் தான் இந்தியாவும். இரண்டு அரசு சம்மந்தப்பட்டது.

எனக்கு இந்தியா வருவதற்கு விசா கிடையாது என்பதை, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே, தோழர்களுக்கு தெரிவித்தது தான். இன்று இந்த எதார்த்தத்தைக் கடந்த பகிரங்கக் கோரிக்கை, எமது அரசியல் நிலையை கேலியாக்குகின்றது. நீங்கள் எமது முரண்பாடுகளுக்கு எழுத்தில் பதில் தராது தவிர்த்த பின், தொலைபேசியில் அதை விவாதிப்பதை தவிர்த்த பின், நாங்கள் உங்களுடன் பேச வேண்டும் என்ற தேவையிருந்தது. ஆனால் அந்த சாத்தியமற்ற சூழலை முன்பே தெளிவுபடுத்தியிருந்தும், அங்கு வரும்படி கோரிக்கை விடுவது என்பது வேடிக்கையானது.

நாங்கள் வர விரும்புகின்றோம், ஆனால் இந்த விசாரணைக்கல்ல

ஏன்? நாங்கள் இந்தக் கட்டைப்பஞ்சாயத்தை நடத்தியவர்கள் அல்ல. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இதில் சம்மந்தப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் இதை அம்பலப்படுத்தியவர்கள். ஒரு ஊடகவியலாளனாக, அரசியல்வாதியாக நின்று அம்பலப்படுத்தியவர்கள். இது நடக்காத ஒரு சம்பவம் என்றால், நாங்கள் இட்டுக்கட்டிய ஒரு பொய் என்றால், நாம் அதற்கு பொறுப்புடன் பதிலளிக்கவேண்டும். அதற்காக மனம் வருந்த வேண்டும்;.

சம்பந்தப்பட்ட இருதரப்பும், நாம் குற்றஞ்சாட்டிய நாவலனும் கூட, இதில் தாங்கள் பங்குபற்றியது எந்தளவில் என்ற சுயவாக்கு மூலத்தை முன்வைத்துள்ளனர். இனி இதில் நடந்தது என்ன என்று சொல்ல, இதைவிட வேறு ஒன்றுமில்லை. அவர்களே ஏற்கனவே ஓத்துக்கொண்டது தான். முதலாவது எனது கட்டுரையில், இந்த வரையறையை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

எமது கட்டுரைக்கு வெளியில் இதைப்பற்றி நாம் பேச ஒன்றுமில்லை. குறித்த கட்டுரை மூலம் தான், பொது அரங்கில் இதை கொண்டு சென்று இருக்கின்றோம். முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போல் இதை மறுக்கலாம், விவாதிக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளோம். 

இனி இதை அரசியல் ரீதியாக பார்க்கும் முறைதான், இங்கு பரஸ்பர முரண்பாடாக உள்ளது. இதை அரசியல் ரீதியாக எப்படிப் பார்த்தல் என்பதற்கு மாறாக, சம்பந்தப்பட்டவர்களுடன் விசாரணை என்பது அரசியலை கேலிக்கூத்தாக்கிவிடுகின்றது.

பாபர் மசூதி இடித்தது உண்மையாக இருக்க, 400 வருடத்துக்கு முன் சென்று தீர்ப்பு சொல்வது போல் உள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் நடந்ததை தங்கள் அளவில் அது சரியானது என்று ஒத்துக்கொண்டபின், அதை இல்லை நாம் 400 வருடத்துக்கு முன்சென்றுதான் தீர்ப்புக் கூறும் ஒரு விசாரணைக்கு வா என்பது நகைப்புக்குரியது. அத்வானி தலைமையில் இந்து பாசிட்டுகள் இடித்தனர் என்பதை, அதற்கு எதிராக போராடும் மக்கள் நிறுவ வேண்டும் என்று கோருவது போன்றது இந்த விடையம். நடந்ததைப்பற்றி அவர்களின் சொந்த சுய வாக்குமூலத்தில் இருந்து, தங்கள் கருத்தைக் முன்வைக்க மறுப்பதன் மூலம், எமக்கு எதிராக நகர்த்தும் அரசியலை நாம் இங்கு எதிர்கொள்கின்றோம்.        

அடுத்து "குற்றம் சாட்டுகின்ற இரயாகரன், குகநாதன், ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும்." என்கின்றனர். இந்த விடையத்தைச் செய்தவர்கள், தாங்கள் என்ன செய்தோம் என்று ஓத்துக்கொண்டு இதைப்பற்றிக் கூறுகின்ற ஒரு நிலையில், இந்தக் கோரிக்கையை ம.க.இ.க. வைக்கின்றது. அதேநேரம் "குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு." என்கின்றனர். மிகமிக வேடிக்கையான வழிகளும் தீர்ப்புகளும். "அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து" அல்ல, நடந்த குற்றத்தை மூடிமறைத்தது பற்றியது எமது தீர்ப்பு. இது அரசியல் ரீதியான அம்பலப்படுத்தல். குகநாதனை மேய்க்கின்ற - மேய்கின்ற தொழிலை நாம் செய்வது கிடையாது. அவரை தங்கள் சதி மூலம் வரவழைத்து, கட்டைப்பஞ்சாயத்து செய்யும் அரசியல் வழியும் எமக்கு கிடையாது.

நாம் மார்க்சியம் பேசும் நாவலன் பற்றி தான் குறிப்பாக பேசினோம். இதை தனி மனித அவதூது என்றார். மகஇக இதை “தனிப்பட்ட வன்ம" மாக காட்ட முனைகின்றது. நாவலன் இதை மறுத்தவர், தற்செயலாக பேசியதாக கூறியவர், இறுதியில் குகநாதனின் மனைவியுடன் பாரிசில் பேசியதையும், அதை மூடிமறைக்க முனைந்த அவரின் குள்ளநரித்தன தொடர் பதற்றத்தின் மூலம் தானே அம்பலமாக்கினார். 

நாம் இதை அம்பலப்படுத்த முனைந்ததை, மகஇக குகநாதன் - செழியன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்குள் இதை புதைக்க முனைகின்றது. இது பற்றி எமக்கு அக்கறை கிடையாது.    இப்படியிருக்க “சூழ்நிலையின் கைதி என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.." என்றும் எம்மை நோக்கிய ம.க.இ.க.வின் வாதம், அரசியல்ரீதியாக அந்த நடத்தையை சரியானதாக காட்டிவிடுகின்றது. எதிரி என்றால், எதிரியுடன் நிற்பவன் என்றால், மோசடிக்காரன் என்றால்… இது போன்ற செயலை செய்வது தவறல்ல என்பதா, ம.க.இ.க. வின் அரசியல் நிலைப்பாடு?! இங்கு அவன் சூழ்நிலைக் கைதிதான். இந்தச் சரியான சொல்லை, நாங்கள் பாவித்திருக்கவில்லை என்றபோதும் எமது பெயரால் ம.க.இ.க. எடுத்துக் கையாண்டிருக்கின்றது, கூறியிருக்கின்றது. மறுபக்கத்தில் எதிரியாக இருந்தாலும் சரி, அவனுக்கு எதிரான மற்றொரு தரப்பின் இது போன்ற செயலை அரசியல் ரீதியாக நாம் எற்றுக்கொள்வதில்லை. அதை மார்க்சியம், தேசியம் பெயரில் செய்வது தான், இங்கு எமது விசேட கவனத்துக்குள்ளாகின்றது.

"மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன…" என்று ஏதோ நாங்கள் யாருக்காகவோ வேலை செய்வதாக மறைமுகமாக கூறுகின்ற அரசியல், இங்கு முன்வைக்கப்படுகின்றது. அருமையான சேறடிப்பு. மகிந்த அரசு இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை கைது செய்து பழிவாங்கிய அரசியல் பின்புலத்தில், அந்தப் பாசிச நடவடிகைக்கு எதிராக குரல்கொடுத்தோம். பாசிசத்தின் அரசியல் கூறுக்கு எதிரான அந்த அரசியல் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு, இதை  எதிர்த்தோம். தமிழ்மக்களை கொன்ற சரத்பொன்சேகா என்பதால், இந்த மகிந்தா அரசியலை  நாம் ஆதரிக்கவில்லை. அதை மௌனமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியம் அப்படித்தான் பார்த்தது. இது எங்கள் அரசியல் நிலை. இதே அடிப்படையில்தான் குகநாதனையும் பார்க்கின்றோம். இந்த விடையத்தில் அவர் இலங்கை அரசுடன் நிற்கின்றார் என்பதால், இதை நியாயப்படுத்தவும் கண்டும் காணாமல் போகவும் நாங்கள் தயாராக இருக்கவில்லை. இதைத்தாண்டி  இதற்குள் "மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன…" என்று ஏதாவது இருக்கும் என்று நீங்கள் கருதினால், அதை வரலாற்றுக்கு விட்டுவிடுகின்றோம். அது பலவற்றுக்கு பதில் சொல்லும்.              

“இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின." ம.க.இ.க பற்றிய பின்னூட்டம் இனியொருவிலும் தான் வந்தது. அதை தவிர்த்துக் கூறும் ஒரு குற்றச்சாட்டு. முதலில் நமது தளத்தில் ம.க.இ.கவின் பெயர் பாவித்த நான்கு பின்னூட்டங்கள் உள்ளது. இதில் ஒன்று உங்கள் தோழருடையது. மற்றையது அதற்கு சுயவிளக்கம் கொடுத்த மற்றொருவருடையது. இவை இரண்டும் இனியொருவிலும் வந்தது. மற்றையது ரூபனுடையது. அவர் நமக்கு தெரிந்தவர். அவர் இனியொருவில்தான் அதிகம் பின்னூட்டம் எழுதுபவர். அவர் உங்கள் தோழரின் கருத்துக்குப் பதிலாக, தன் அபிப்பிராயத்தை எழுதியுள்ளார். ரூபன் எமது கருத்துக்கு உடன்படாதவிடத்தும்,  எமக்கு எதிராக பின்னூட்டங்கள் போடுபவர். எமக்கு கருத்துக்கள் தனக்கு ஒவ்வாதிருக்கின்றபோது, எமக்கு எதிராக தனிக் கட்டுரையும் எழுதியுள்ளார். அவையும் கூட தமிழரங்கத்தில் வெளியாகியுள்ளது. எமக்கு எதிரான அவருடைய கருத்துக்கு பதில் எழுதுவது கிடையாது. எம்தளத்தில் எமக்கு எதிரான பின்னூட்டங்களை அனுமதிக்கின்றோம். நான்காவது பின்னூட்டம் உங்களுக்கு சார்பாக எழுதி, அதில் இந்தக் கேள்வியை எழுப்புகின்றார். அவரோ, இது போன்று மற்றவர்கள் உங்களிடம் இதை எழுப்புவது என்பது, சம்பந்தப்பட்ட நபர்களுடன் நீங்கள் கொண்டுள்ள உறவிலானது. இந்தவகையில் அதைக் கேட்கின்றவரின் கருத்தை "சேறடிக்கின்ற" பின்னூட்டமாக நாம் கருதவில்லை. அவர் திட்டமிட்டு கேட்டாரா அல்லது உங்கள் நிலையை அறியும் நோக்குடன் கேட்டாரா என்பது எமக்குத் தெரியாது.

இந்த இடத்தில் "தற்செயலானதல்ல" என்ற தீர்ப்பு அபத்தமானவை. அப்படி நீங்கள் கருதினால், உங்களுடன் நாம் கடைப்பிடித்த உறவு, முரண்பாடுகளுடன் உங்கள் பதில் இன்றி நாம் கடைப்பிடித்த சர்வதேசிய நிலை மற்றும் இதனால் நாம் பாதிக்கப்பட்ட போதும் உங்களை கடந்து இந்தியாவுக்குள் எம் கருத்தை எடுத்துச்செல்லாத எமது சர்வதேசிய நிலை, ஒருபக்கமாக இருந்திருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.

நாம் பின்னோட்ம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வது கிடையாது. நீங்கள் பதில் சொல்வது சொல்லாதுவிடுவது உங்களைப் பொறுத்த விடையம். இந்த இடத்தில் நாங்கள் புதிய திசைகளின் நிலை என்ன என்று, ஒரு கட்டுரை தலைப்பில் எழுதினோம். அதுபோல் நீங்கள் அவர்களுடன் கொண்டிருக்கக் கூடிய உறவு பற்றி அரசியல் தெளிவின்றி, நாங்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து உங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இது எம் நிலை.  

நீங்கள் குறிப்பிட்டது போல் "எங்களைப் பொருத்தவரை, வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம்." என்ற உண்மை, அவர் இதற்கு முன் எங்கே என்ன செய்தார் என்பதை கேள்விக்குள்ளாக்கவில்லை. அதை எங்களிடம் நீங்கள் கேட்கவில்லை. அதை பற்றி சொல்லவும் நாங்கள் வரவில்லை. ஆனால் எப்படி நீங்கள் அதை புரிந்து இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் கேள்வியும், நாங்கள் எப்படி அதை தவறாக புரிந்திருக்கின்றோம் என்ற உங்கள் பார்வை சார்ந்த கேள்வி எம்முன்னுள்ளது.  அவர் பேசிய மார்க்சியம் முதல் அவரின் விளம்பர அரசியல் உங்களுக்கு "குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம்." என்ற எல்லையில் வைத்து, எம்மை புறந்தள்ளியிருக்கின்றது. உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு, எங்கள் வாழ்த்துக்கள் தோழர்களே. அவர்களின் "சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றி"ல் நேர்மையை கண்டுபிடித்து உலகறிய சொன்ன உங்கள் அரசியலை நாங்கள் வரலாற்றுக்கு விடுகின்றோம். இப்படி உங்கள் நிலைப்பாடுகள் மூலம், புலத்தில் எனது சரியான நேர்மையை மிகத் துல்லிமாக்கியுள்ளது. கண்முன் கடந்தகால பல சம்பவங்களை மறுத்து "சமூக செயல்பாடு, நடைமுறை" என்ற அதற்கு விளக்கம் கொடுத்த உங்கள் நிலை, உங்கள் பற்றிய கடந்தகால மதிப்பீட்டை பரந்ததளத்தில் அரசியல் ரீதியாக தகர்த்திருக்கின்றது.  

இந்த இடத்தில் "மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை." என்ற உண்மை மதிப்புப்குரியது. இங்கு எமது நேர்மையைக் கூட, எந்த எதிரியும் சந்தேகித்தது கிடையாது. ஆனால் "குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம்." என்று நீங்கள் குறிப்பிட்டவர்கள் பற்றிய நேர்மையை உலகறியும். இங்கு அருள் எழிலன் பற்றி, நாம் குறிப்பிடவில்லை. அவரைத் தெரியாது. ம.க.இ.க சொல்வதன் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள முனைகின்றோம். ஆனால் இந்த சம்பவத்தின் பின், அவர்கள் அதை நியாயப்படுத்திய வாதங்களின் பின், அந்தவகையில் அதைப் பார்க்க முடியாதுள்ளது.

ம.க.இ.க "தமிழரங்கம், தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்." என்று கூறும் நீங்கள், அதை ஏன் என்று கூறாத உங்கள் தீர்ப்பு உங்களளவில் இறுதியும் அறுதியுமான தீர்ப்புத்தான். நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை முன்மொழிந்து, அதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கின்ற ஒரு வழியை இந்தத் தீர்ப்பு முன்மொழிகின்றது.

மாறாக அவர்கள் மற்றும் எங்கள் கருத்துக்கள் மீது நீங்கள் கருத்துக் கூறாது இருப்பதன் மூலம், "குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்." என்று தீர்ப்பை இறுதியாக்கியுள்ளீர்கள். இதனால் இது நடக்காத ஒரு உண்மையாகி, அது அவதூறாகிவிடாது.

"பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல, அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும், ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும், தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம் எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும் இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது." இப்படி அம்சா மூலம் இதைக் கூறுகின்ற அரசியல், அம்சாவுக்கு முன் இது பற்றிய மதிப்பீடு இருக்கவில்லையா என்ற அரசியல் கேள்விக்குள் இதை இட்டுச்செல்கின்றது.
 
இந்த இடத்தில் எம்மைப்பற்றி "தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது." என்ற உங்கள் மதிப்பீடு அபத்தமானது. என்னை மையப்படுத்தி நாங்கள் இயங்குவதாக கூறுவது, ஆதாரமற்றது, அவதூறு. நாங்கள் இன்று ஒரு திட்டத்தின் கீழ் இயங்குகின்றோம். சர்ச்சைக்குள்ளாகக் கூடிய எந்த எனது கட்டுரையும், சில தோழர்களின் பார்வையூடாகத்தான் வெளிவருகின்றது. ஒரு அமைப்பு வடிவத்துக்குள்  இயங்குவதை, அதற்கு கட்டுப்பட்டு நிற்பதையும் உருவாக்கி அதை முன்னிறுத்தி செயல்படுத்தும் போராட்டத்தை நடத்துகின்றோம். இங்கு முரண்பாடுகள் உடன்தான், போராட்டம் தொடருகின்றது.  

கடந்தகாலத்தில் (குறிப்பாக மே 16 க்கு முன்) மார்க்சியத்தை முன்னிறுத்தி நான் மட்டும் போராடியது, இதில் சந்தித்த நெருக்கடியை நான் பேசியது எவையும் என்னை மையப்படுத்தியதல்ல. நான் எழுதிய கட்டுரைகளை எடுத்தால், அதில் எந்தக் கட்டுரை என்னைப்பற்றி பேசுகின்றது? நான் முன்வைத்த அரசியலை மையப்படுத்தி, இதை நான் மட்டும்  செய்கின்ற நிலையை பற்றி, ஒரு இரு கட்டுரை மூலம் பேசியிருக்கின்றேன். இதற்கப்பால் தனிநபர்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் எத்தனை? ஒரு சில. அப்படி எம்மால் எழுதப்பட்டவர்கள், எவர் சரியான அரசியலுடன் நிற்கின்றனர். அவர்கள் யார், அதை எடுத்துக்  காட்டுங்கள். மே 16 க்கு பின் திடீர் அரசியலுக்கு வந்தவர்கள் பற்றிய விமர்சனம், அவர்கள் கடந்தகாலம் பற்றி அவர்கள் செய்யாத சுயவிமர்சனம் மட்டும் போதுமானது, அவர்களின் அரசியல் நேர்மையை அளக்க.

இங்கு "2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து, நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும்" கூறுவதாக கூறுகின்றீர்கள். நாவலன் தான் இப்படிக் கூறுகின்றார் என்றால், ம.க.இ.கவும் இதே வார்த்தைகளை கொப்பி பண்ணுவது (பல வார்த்தைகள் அப்படி உள்ளது) ஆச்சரியம்தான். இது தேசம்நெற்றில் மட்டுமல்ல, ஈபிடிபி இணையத்திலும் நடந்தபோது தான் நாம் பேசினோம். இது தனிப்பட்ட நாவலனைப் பற்றியதல்ல. மாறாக கடந்தகால, நிகழ்கால சரியான அரசியல், நாவலன் பெயரால் தாக்கப்பட்ட போது, அந்த அரசியல் எங்கள் அரசியலாக இருந்ததால் அந்த அரசியலுக்காக நாம் போராடினோம். நாவலின் தனிப்பட்ட நடத்தைக்காகவல்ல.  "தன்னை மையப்படுத்தி" என்று எம்மைக் தவறாக அவதூறாக குறிப்பிட்டது போல், இது நாவலனை மையப்படுத்தியல்ல. அரசியலை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டது.

"பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம்" மிகச்சரியான இந்த உண்மையை, அன்று புரிந்து கொண்டு அம்பலப்படுத்தாத தனிமைப்படுத்தாத அதே அரசியல் தவறை இன்று நாங்கள் மீள விடத்தயராயில்லை. மே 16 உடன் வெளிக்கிட்ட பலர், பழைய பெருச்சாளிகள். சுயவிமர்சனம் செய்யாத கூட்டம். "பிறக்கும்போதே கருச்சிதைவு"டன் பிறக்காது இருக்க, நாம் நடத்தும் போராட்டம். இல்லை அதுதான் கருச் சிதைவு என்றால், இதுதான் "புத்தாக்கம்" என்றால் அதை அரசியல் ரீதியாக நாம் மறுக்கின்றோம். அரசியல் சந்தர்ப்பவாதத்துடன், எதையும் ஆதரிக்க நாம் தயாராயில்லை. அரசியல் ரீதியாக மட்டும்தான் எதையும் அணுக முடியும்.     

“எது தனிப்பட்ட வன்மம் - எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல் - எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம் - எது சீர்குலைவு” என்று இதற்குள் அரசியல் விமர்சன  உள்ளடகத்தை முன்வைக்கின்றது இந்தப் பகுதி தான். உண்மையில் இதை அரசியல் அடிப்படையில் குற்றச்சாட்டாக எமக்கு எதிராக முன்வைக்கும் பட்சத்தில், அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளோம். இந்தக் கட்டைப்பஞ்சாயத்து விவகாரத்தில் இதை உள் நுழைப்பதன் மூலம், அதை நியாயப்படுத்த முனைவது அபத்தமானது.

இன்றைய அரசியல் புலம் பெயர் இயங்குதளத்தில், “எது தனிப்பட்ட வன்மம் - எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல் - எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம் - எது சீர்குலைவு” அனைத்தையும் புரிந்து கொண்டுதான் செயல்படுகின்றோம். நாங்கள் யாரையும் "ஆள்காட்டி வேலை" செய்யவில்லை. "புத்தாக்கம் - சீர்குலைவு” என்ற விடையத்தில் நாம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சார்ந்த, எந்த நேர்மையான உண்மையான புத்தாக்க முயற்சியையும் தனிமைப்படுத்தி சீர்குலைக்கவில்லை. அப்படி ஒன்றைச் செய்தாக சரியாக சுட்டிக்காட்டும் பட்சத்தில், இதைச் சரிசெய்யவும் நாம் தயாராக உள்ளோம். "தனிப்பட்ட வன்மம்" எதையும் நாம் யார் மீதும் வெளிப்படுத்தியது கிடையாது. அப்படி யாரை எப்படி செய்தோம், காட்டுங்கள். "அரசியல் விமரிசனம்" "அம்பலப்படுத்தல்" என்பனவற்றை எம்மைப் பொறுத்தவரையில் மிகச் சரியாக கையாளுகின்றோம்.

இன்றைய ஈழத்து எதார்த்தம், தனிநபர்களை மையப்படுத்தி இயங்குகின்றது. அது சார்ந்து தனிநபர்கள் ஆற்றும் பங்கு, குறிப்பாகி விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. அது தனிநபர் அவதூறல்ல. இப்படி மையப்படுத்திய வாதங்கள் முடிவுகள் தவறானவையாகி விடுகின்றது. இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாத வாதங்கள் தான் "தன்னை மையப்படுத்தி" தனிநபர் எல்லைவரை விரித்துக் கூறும் அரசியலாகிவிடுகின்றது என்று அவதூறு செய்கின்றது. .

"நாவலன், எழிலன், செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல், பணம் பறித்தல், மஃபியா வேலை, மாமா வேலை”  என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து."

உங்கள் கருத்து மிகச் சரியானது. நாங்கள் இதில் நாவலன் பேசியது, இதில் அவர் உணர்ந்து கொள்ளாது தலையிட்டு இருந்தால் அதை சுயவிமர்சனமாக ஏற்றுக் கொள்ளும் அடிப்படையில்தான். இப்படி கருதியதும் தவறுதான். இன்று திடீர் மாhக்சிய அரசியல் செய்ய முன் என்ன செய்தார் என்பதை சுயவிமர்சனம் செய்யாது அவரின் அரசியல், இதில் மட்டும் எப்படி என்று கேள்வியை எழுப்பியிருக்கவில்லை. இந்த வகையில் நாம் அணுகாதது தவறானது தான். இதைச் சுட்டிக்காட்டி திருத்தியதுக்கு மகஇகவுக்கு நன்றி.     

மற்றும் சில குறிப்புகள்

1."குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து"

என்பது தவறானது. போலீசுடன் கூட்டு சேர்ந்து குகநாதன் என்பவரை கடத்தினர். இது தான் சரியானது.

2."தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன், குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது"

என்பதில் "மீள்பிரசுரம் செய்தது" என்பது தவறானது. தேசம் நெற்றில் அவை "மீள்பிரசுரம்" செய்யப்படவில்லை.  

3."இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி.."

என்று நாம் கூறவில்லை. "குகநாதனின் தரப்பில் நியாயம்" எழில் தரப்பு நியாயம் பற்றி, எமக்கு எதுவும் தெரியாது. இதைக் கையாண்ட வழி முறைபற்றியும், அதில் மார்க்சியம் பேசியவர்கள் பங்குபற்றிய விதம் பற்றிதான் நாம் பேசியிருக்கின்றோம்.

4."தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர், “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை."

அவசியமில்லை. சம்பவம் உண்மை. அவர்களே அதை ஏதோ ஒரு வகையில் ஓத்துக்கொள்கின்றனர். அதை அரசியல் ரீதியாக எப்படி பார்த்தல் என்பதில் வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக விளக்கலாம்.

5."புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை."

உங்களிடம் நான் கூறியதாக கூறியதை, எப்படி உங்களிடம் நாவலன் கூறமுடியும்;. "அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை." என்று கூறுவது எதனால்! சரி இது பொய், அவதூறு என்றால், எமக்கு கூறிய புதியதிசை தோழர்களுடன் கதையுங்கள். அவர்கள் ஏற்பாடு செய்யாவிட்டால் நாம் ஏற்பாடு செய்து தருகின்றோம்.

6."ஆவணங்கள், சாட்சியங்கள், சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு, அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம்."

அவர்களின் வாயில் இருந்து வந்ததுதான், அவர்களின் வாக்குமூலம். ஆனால் அதை வைத்து பார்க்க முடியாது என்பதும், "வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக" இருக்கின்றது என்பது முரண்பாடானது. "சமூக செயல்பாடு, நடைமுறை" யிலிருந்து நாம் சொல்லவில்லை என்று மறுதளத்தில் அர்த்தமாகின்றது. அதாவது "சமூக செயல்பாடு, நடைமுறை" நீங்கள் அணுகும் விதத்தில் எம்மிடமில்லை, அவர்களிடம் உண்டு என்பதை அடிப்படையாக கொண்டு இது எழுகின்றது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும். 

7."இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர்."

வேடிக்கையான தர்க்கம்.  குகநாதனை நம்பவில்லை. நடந்ததை நம்புகின்றோம். 

8."அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும், கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்."

என்ற கூறும் நீங்கள், இந்த பின்னோட்டத்தை வைத்து இதில் தலையிடுவது தான் ஆச்சரியம். உண்மையை கண்டறிய, பின்னோட்டத்தை நிற்பாட்டிப் போட்டு விவாதியுங்கள்.  

9."இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும், ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம்."

அதை வரவேற்கின்றோம். அதை நடைமுறை சாத்தியமான வழியில் முனையுங்கள். அவர்களின் வாக்குமூலம் இணையத்தில் உள்ளது. அவர்களிடம் வீடியோவும் உள்ளது. நாவலனிடம் திருட்டாக எடுத்த ஓடியோக்கள் உள்ளது.  

10."எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம்."

"கருச்சிதைவை" செய்யும் எல்லா சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் இதன் மூலம் பாதுகாக்க முனையும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். சரியான அரசியலும், உண்மையும், நேர்மையும் "காறி உமிழ்ந்து கொள்ளும்" செயலால் அழிந்ததாக அரசியல் வரலாறில்லை. இப்படி பாதிக்கப்பட்டவர்கள், தங்களை உண்மையை நேர்மையை தங்கள் அரசியல் ரீதியாக நிலை நிறுத்தி போராட வேண்டியது அவர்களின் கடமை. அதையும் நாம் வாழ்த்துகின்றோம்.

பி.இரயாகரன்
04.10.2010