Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் தேசியக் கூட்டமைப்பச் சேர்ந்த வவுனியா நகர சபைத் தலைவரினால் துப்புரவுத் தொழிலாளர்கள் “வெளியே போங்கடா சக்கிலிய நாயளே” என இழிவு படுத்தப் பட்டுள்ளனர். இது ஒரு சாதி வெறி பிடித்த மனிதனால் சொல்லப் பட்ட வார்த்தைகள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் தமது உரிமைகளிற்காக குரல் கொடுத்த போது அதை அடக்குவதற்காக சாதியைச் சொல்லி இழிவு படுத்தும் அதிகார வெறி கொண்ட ஒரு மனிதனின் குரல்.

சாதியை உயிரியல் அடிப்படையில் பார்த்தால் சாதிப் பெருமை பேசுபவர்களின் மூடத் தனமும் சிறுபிள்ளைத் தனமும் இலகுவாக விளங்கும். ஒரு பெண் கழுதை ஆண் கழுதையுடன் புணர்ந்து குட்டி போடுகிறது. இரு காகங்கள் புணர்ந்து உறவு கொண்டு ஒரு காகக்குஞ்சு பிறக்கிறது. மிருகங்களும் பறவைகளும் செய்கின்ற இனப்பெருக்கத்தைத் தான் இவர்களும் செய்கிறார்கள். இவர்களின் விந்திலே மட்டும் எப்படி உயர்சாதி எனும் அணு கூடுதலாகப் பாய்கிறது?

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் முன்னோடிகளிற்கும் இவை போன்ற செயல்கள் புதியவை அல்ல. சண்முகதாசனின் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியினாலும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையாலும் அறுபதுகளில் முன்னெடுக்கப் பட்ட சாதி எதிர்ப்பு போராட்டங்களின் போது தமிழரசு, தமிழ் கொங்கிரஸ் கட்சிகள் யாழ் வேளாள பெரும்பான்மையை ஆதரித்தனர். அடங்காத் தமிழன் என அவர்களால் பட்டம் சூடிக் கொண்ட சுந்தரலிங்கம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலிற்குள் உட்பிரவேசிக்க முயன்ற தாழ்த்தப் பட்ட சாதியினரை தடுப்பதற்காக கோயில் குருக்களான துரைசாமி என்பவருடன் சேர்ந்து நின்றார்.

சிங்களப் பெருந்தேசிய வாதத்தினாலும் உலகமய பொருளாதாரக் கொள்ளைகளினாலும் நசுக்கப் படும் தமிழ் மக்கள், அவற்றிற்கெதிராகப் போராடுவதுடன் தமக்கிடையேயான உள்முரண்பாடுகளான பெண்ணடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, பிரதேசவாதம் என்பவற்றிற்கெதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். 

தமிழர் தளபதி என்றழைக்கப் பட்ட அமிர்தலிங்கம், தனது வட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட சங்கானையில் நடைபெற்ற சாதியொழிப்பு போராட்டங்களைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசுகையில், இது சங்கானைப் போராட்டம் அல்ல சங்காய் (Shanghai) போராட்டம் என்று சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சியை கிண்டலடித்து தமது உயர்சாதி ஆதரவை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார்.

சாதி எதிர்ப்பு போராட்டங்களின் விளைவாக 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது உடுப்பிட்டி தொகுதிக்கு ராசலிங்கத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஆக்கினார்கள். யாழ் மாவட்டத்தின் பதினொரு தொகுதிகளில் ஒரேயொரு தொகுதிக்கு ஒரு தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்தவரை வேட்பாளர் ஆக்கியதைக் கூட பொறுக்க முடியாமல் “பனை ஏறும் பள்ளனிற்கு பாராளுமன்றம் எதற்கு” என சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டன.

இருமரபும் துய்ய வந்த யாழ்சைவ வேளாளர்கள் என சாதிப் பெருமை பேசுபவர்களை இவர்களது சமயமான சைவசமயம் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வருண வரிசையில் கடைசி வருணமான சூத்திரர்களாகவே ஒதுக்கி வைத்திருக்கிறது. ஏனைய பிற்படுத்தப் பட்ட சாதிகளுடன் தம்மையும் ஒரே மட்டத்தில் வைத்திருப்பதை பொறுக்க முடியாமல் தான் யாழ்சைவவேளாள ஞானகுருவான நல்லூர் கந்தப்பிள்ளை ஆறுமுகம் சற்சூத்திரர் என்ற புதுப்பிரிவை உருவாக்கி வேளாளரை மற்ற சூத்திர சாதியினருக்கு மேலாக வைக்க முயற்சி செய்தார்.

உழைக்கும் மக்களிடையே புராண குப்பைகளையும் புளுகுகளையும் காட்டி சாதிப் பெருமை பேசி மற்றைய உழைக்கும் மக்களிடம் இருந்து பிரிக்கும் முயற்சிகளை மதவாதிகளும் மேட்டுக்குடிகளும் திட்டமிட்டுச் செய்கிறார்கள். பள்ளத்தில் (வயலில்) வேலை செய்வதனால் பள்ளர் என அழைக்கப் பட்டவர்களை தேவேந்திரகுல வேளாளர் என சிலர் அழைக்கிறார்கள். தமிழ் குடிகளிற்கும் தேவேந்திரனிற்கும் எங்கிருந்து தொடர்பு வந்தது? கடற்கரையிலே வசித்து தொழில் செய்பவர்களை கரையார் என்றழைத்தனர். இவர்களை குருகுலத்தவர்கள் என மேல்நிலையாக்கம் செய்கின்றனர்.

இலங்கையின் தமிழ் கிறிஸ்தவர்களிற்கு இடையிலும் சாதிவெறி ஆழ வேரூன்றியுள்ளது. இயேசு சொன்னதாகச் சொல்லப் படும் ‘உன்னைப் போல் உன் அயலவனையும் நேசி’ என்ற வரிகள் வெறும் வசனமாகவே இவர்களது வாழ்முறையில் உள்ளது. முப்பது வருடங்களிற்கு முன்பு வரை தமிழ் கத்தோலிக்கர்களுக்குள் வேளாளர்களே திருத்தந்தையாக வரமுடியும். இன்றைய நிலைகள் சரிவரத் தெரியவில்லை. ஆனால் பிசப் (Bishop) போன்ற உயர் பதவிகளிற்கு இன்றளவும் வேளாளர்களே வரமுடியும்.

தமிழ் புரட்டஸ்தாந்து (Protestant) கிறிஸ்தவப் பிரிவிலுள்ள அமெரிக்கப் பிரிவான தென்னிந்திய திருச்சபை, ஆங்கிலேய அரச மதப் பிரிவான அங்கிலிக்கன் சபை போன்ற பிரிவுகளில் வேளாளர் மட்டுமே பாதிரியராக வரமுடியும். இங்கிலாந்தின் உழைக்கும் மக்களின் பிரிவான மெதடிஸ்ற் சபையிலே மட்டுமே மற்றைய தமிழ் சாதியினரால் பாதிரிமாராக வரமுடிந்தது. தென்னிந்தியத் திருச்சபை, அங்கிலிக்கன் சபை குடும்பங்களில் பிறந்த வேளாளர் அல்லாத சாதியினர் பாதிரியராக வருவதற்கு மெதடிஸ்ற் சபைக்கு மாற வேண்டி இருந்தமை முப்பது வருடங்களிற்கு முன்பு இலங்கையின் தமிழ் கிறிஸ்தவ யதார்த்தமாக இருந்தது.

இலங்கை, இந்தியச் சமுதாயங்களின் மிகக் கொடிய கேடான சாதியமைப்பு பிராமணர்களை மேலாகவும் துப்புரவுத் தொழிலாளர்களை கீழ்மட்டத்திலும் வைத்திருக்கிறது. சமுதாயத்தின் ஒவ்வொரு வேலைப் பிரிவினரையும் சாதிப் படிமுறையில் மேல், கீழ் என வைத்திருப்பதன் மூலம் அவர்களை ஒன்றுபடாமல் செய்து அவர்களின் உழைப்பினை மலிவாகச் சுரண்டுகிறது. சிங்களப் பெருந்தேசிய வாதத்தினாலும் உலகமய பொருளாதாரக் கொள்ளைகளினாலும் நசுக்கப் படும் தமிழ் மக்கள், அவற்றிற்கெதிராகப் போராடுவதுடன் தமக்கிடையேயான உள்முரண்பாடுகளான பெண்ணடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, பிரதேசவாதம் என்பவற்றிற்கெதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலமே சந்தர்ப்ப வாத, வலதுசாரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபைத் தலைவர் போன்ற சமூக விரோதிகளை, சாதி வெறியர்களை விரட்டி அடிக்க முடியும்.

http://kuralweb.com/20100921Caste.aspx