தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிரான மனிதவுரிமைச் சட்டங்கள் அனைத்தும், குப்பையில் போட வேண்டும். நீதி, சட்டம், ஒழுங்கு எவையும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு கிடையாது. இதை கடைப்பிடிக்கும்படி  யாரும் கோர முடியாது. அதை அரசுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. அதை நாம் அனுமதிப்பதில்லை. அதை மீறினால் கொல்லப்படுவார்கள். இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களாகிய நாங்கள் நடைமுறைப்படுத்தும், ஜனநாயகம் இதுதான். தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராக மனிதவுரிமை சட்டத்தை எம் நாட்டில் அமுல்படுத்திட முடியாது என்று ஆட்டம் போடும் பாசிட்டுகள், அதை உலக அரங்கில் எழுப்பியதுடன் அதை உலகம் தளுவியதாக அமுல்படுத்தக் கோருகின்றனர். மகிந்த ஐ.நாவில் ஆற்றிய உரையில் "போர்கள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சர்வதேசச் சட்டங்களில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக" கூறுகின்றார். சர்வதேச சட்டத்தில் இருக்கக் கூடிய மனிதவுரிமைகளை கூட, இல்லாதாக்க கோருகின்றார். மக்களைக் கொன்று குவித்து ஆட்டம் போட்ட எங்களைப் போன்ற  பாசிட்டுகளை, மனிதவுரிமைச் சட்டத்தின் முன் நிறுத்தக் கூடாது என்று சொல்லுகின்றனர். ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதத்தை" ஒழித்துக் கட்டியவர்கள். அதற்காக "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்."  

இந்தக் கூற்று கூட, ஒரு யுத்த சாட்சியம் தான். இதுவே கொலைகளுக்கு உடந்தையான, ஓத்துக் கொண்ட குற்றம். யுத்தத்தை நடத்தியவன், தங்களின் யுத்தக் குற்றங்களை பற்றிய ஒரு ஓப்புதல் வாக்கு மூலம்தான், இந்த சர்வதேச மனிதவுரிமை சட்டத்தை இல்லாதாக்கக் கோருகின்றனர்.

ஆம் நாங்கள் யுத்தக் குற்றங்கள் செய்தோம், ஆனால் இதை விசாரணை செய்ய முடியாது. இந்த சர்வதேச மனிதவுரிமைச் சட்டத்தை மாற்று என்கின்றனர். "பயங்கரவாதத்துக்கு" எதிரான போர் என்று கூறிக்கொண்டு, பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவுகின்றனர். மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை மறுத்து, அவர்களின் சட்டபூர்வமான சமூக இருப்பை அழிக்கின்ற போது, அரசுக்கு எதிரான பயங்கரவாதம் உருவாகின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் மூலம் தான், மக்களின் உரிமைகளும் பறிக்கப்படுகின்;றது. இதற்க வெளியில் அல்ல. மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள், மக்களின் உரிமைகளையும் அவர்களிள் நலனையும் முன்வைத்து அதற்காக செயல்படுவது கிடையாது. மாறாக அந்த மக்களுக்கு எதிரான சட்டங்கள், அவர்களின் உரிமைப் பறிப்புகள், வாழ்வியல் சிதைவுகளையும்  உருவாக்கி, அவர்கள் மேல் ஏவும் பயங்கரவாத ஆட்சிகள்தான் எதிர் பயங்கரவாதத்தை உருவாக்குகின்றது.    

இப்படி உருவாக்கும் எதிர் வன்முறை என்பது, அரசால் உருவாக்கப்பட்டது தான். இங்கு அரசுக்கு எதிரான வன்முறை என்பது இரண்டு வகைப்பட்டது.

1. முழு மக்களால் நடத்தப்படுவது.

2. மக்களில் இருந்து அன்னியமான குழுவினால் நடத்தப்படுவது. இது சொந்த மக்களுக்கு எதிராகவும், பயங்கரவாதத்தை ஏவுகின்றது. 

இப்படி அரசின் ஒடுக்குமுறையால், அதன் பயங்கரவாத ஆட்சி அமைப்பால் உருவாகின்றது எதிர் வன்முறை. இந்த எதிர் வன்முறையை ஒழிக்க, இது பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் கூட்டத்தை கொன்றொழிக்கும் ஒரு சர்வதேச சட்டத்தை அங்கீகரிக்கும்படியே மகிந்த ஐ.நாவில் கோரினார்.

இப்படி சொந்த மக்களை படுகொலை செய்யும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு உண்டு என்ற கூறுகின்ற நவீன பாசிட்டாக மாறி ஐ.நாவில் உரையாற்றுகின்றார். ஏன் கிட்லர் கூட, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாசிட்டுதான். இப்படி உலகப் புகழ் பெற்ற பாசிட்டுகள், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான். அவர்களில் ஒருவராக மாறிய மகிந்த, ஐ.நாவிடம் மனிதவுரிமை கடைப்பிடிக்கப்படுவதை கைவிடக் கோருகின்றார். 2ம் உலக யுத்தத்தின் முடிவில் எந்த பாசிட்டுகளுக்கு எதிராக இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டதோ, அதே ஐ.நாவிடம் அதை நீக்கக் கோருகின்றார் மகிந்தா.

ஜனநாயகத்தின் சர்வாதிகார உள்ளடக்கத்தை பாசிட்டுகள் சரி அச்சொட்டாக வெளிப்படையாக வெளிப்படுத்தி நிற்கின்றனர். அது தங்களை தேர்வு செய்த மக்களின் உரிமையாக கூறுகின்ற வக்கிரத்தை, தமது நாட்டின் ஜனநாயகமாக காட்டி அதை உலகின் முன் பிரகடனம் செய்கின்றனர். 

மக்களை கொல்வது உள்நாட்டு விவகாரம், அதை "பயங்கரவாதம்" என்று கூறி, பல பத்தாயிரம் மக்களை கொன்ற கூட்டம் ஐ.நாவில் நின்று கொக்கரிக்கின்றது.

நாட்டில் அரசுக்கு எதிரான எதிர் வன்முறை ஏற்படுவதற்கான காரணத்தை, ஜனநாயக பூர்வமாக மக்கள் அரசாக நின்று சுயமாக தீர்க்கத் தவறுகின்ற சர்வாதிகாரம் தான், எதிர் வன்முறையின் அரசியல் ஊற்றுமூலம்;. மக்களை ஒடுக்கின்றவர்கள், அதனால் எழும் வன்முறையை ஒடுக்க, மக்களை கொன்று குவிக்கும் தங்கள் உரிமை பற்றி கூச்சல் போடுகின்றனர் நவீன பாசிட்டுகள்.

போர்க்குற்ற "சட்டங்கள் இரு நாடுகளுக்கிடையிலான போர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று கூறி", இதை சொந்த நாட்டு மக்களை தாம் கொல்வதற்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்கின்றனர். நாங்கள் எங்கள் மக்களை கொல்லும் உரிமை, எங்களுக்கு உண்டு என்கின்றனர். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள் என்கின்றனர். சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள் கேள்வி கேட்பதை, இல்லாதாக்க வேண்டும்; என்று ஐ.நாவிடம் கோருகின்றனர் பாசிட்டுகள். 

கடந்த வாரம் இலங்கையின் சட்டமா அதிபர் "சர்வதேச போர்ச் சட்டங்கள் பொருத்தமற்றவை என்றும், அவற்றில் அரசாங்கம் அல்லாத தரப்பினருக்கு எதிரான தாக்குதல் குறித்த நியமங்களில் மாற்றங்கள் தேவை என்றும் கூறியிருந்தார்". மக்களை கொன்றதற்கு எதிராக, இலங்கையில் எந்த சட்டத்தையும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பதே சட்டமா அதிபரின் இந்தக் கூற்று எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையில் எந்த நீதி விசாரணைக்கும் இடமில்லை என்பதை, இங்கு ஆணித்தரமாக முன்வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் முதல் சட்டத்தின் காவலர்கள் வரை, பாசிட்டுகளாக கொக்கரித்தபடி மக்களை கொன்று குவிப்பதை புதைக்க விரும்புகின்றனர். சர்வதேச மனிதவுரிமை சட்டத்தை கேலிசெய்து, அதற்கு எதிராகவும் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இலங்கையில் பாசிசம் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுகின்றது. இலங்கை மக்கள், சந்திக்கும் அதிபயங்கரமான, ஆனால் அதை இன்னமும் உணராத நிலையில் உள்ளனர். 

பி.இரயாகரன்
25.09.2010