நிலத்தடியில் நீர் இல்லாத பூமி. நினைத்த நேரத்தில் கண்ணாமூச்சி காட்டும் மின்சாரம். இவற்றுக்கிடையில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கருணாநிதி அறிவித்திருக்கும் சுதந்திர தினப் பரிசு – இலவச மின்சார மோட்டர் பம்புசெட்டுகள்!
குறிஞ்சி, மருதம், முல்லை, நெதல் என்ற திணைகள் மருவி அனைத்தும் பாலையையா மாறிக்கொண்டிருக்கும் தமிழகத்தில், தமிழ் மரபின் பெருமையை நினைவூட்டுவதற்காக எம்.எஸ்.சாமிநாதனின் பொறுப்பில் கருணாநிதி அமைக்கவிருக்கும் அருங்காட்சியகங்களுக்குப் பெயர் – ஐந்திணைப் பூங்காக்கள்! இருபது ஆண்டுகளில் தமிழகத்தின் பயிரிடும் பரப்பு 90 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 70 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்து கொண்டே வந்தபோதிலும், அதனினும் வேகமாகக் கிராமப்புற உழைப்பாளர்களின் எண்ணிக்கை வீழ்ந்து வருவதனால், விதைப்புக்கும் அறுப்புக்கும் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கும் எந்திரங்கள்! விவசாயத்தின் அழிவும், சூறைக்காற்றா சுழன்றடிக்கும் நகரமயமாக்கமும், தமிழகத்தின் கிராமத்து இளைஞர்களை வாரிக்கொண்டு வந்து நகர்ப்புறத்தில் குவித்துக் கொண்டிருக்க, உறுதியற்ற ஓலைக் குடிசைகளை அகற்றி விட்டு ஊரகப் பகுதிகளில் கருணாநிதி கட்டித்தரவிருக்கும் ‘உறுதியான’ கான்கிரீட் வீடுகள். மன்மோகன் சிங் அரசால் தொடுக்கப்படும் புதிய தாராளவாதக் கொள்கைகளின் தாக்குதலும், அதன் கூட்டணிக் கட்சியாகவும் கூட்டுப் பங்குக் கம்பெனியாகவும் விரிவடைந்து வரும் திருக்குவளை முன்னேற்றக் கம்பெனியின் சாம்ராச்சிய நலன்களும், “ஒரு ரூபாய் அரிசி-கலர் டிவி” யில் தொடங்கி, பிற ஆளும் வர்க்கக் கட்சிகளே அசந்து வாய்பிளக்கும் வண்ணம் மக்கள் மீது அடுக்கடுக்காக கருணாநிதி எது வரும் இலவச ஏவுகணைகளும், தமிழகம் முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா என்று புரிந்து கொள்ள முடியாத புதிரானதொரு சித்திரத்தைத் தோற்றுவிக்கின்றன. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சுக்குப் பாலிசிதாரர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் என்ற இரண்டு மாங்காகளை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘கல்’லின் பெயர் கலைஞர் காப்பீடு. உலக வங்கியின் ஆணைக்கு இணங்க நாளை இலவச மின்சாரத்தை ஒழித்துக் கட்டுவதற்காக இன்று ஏவப்படும் ஆயுதத்தின் பெயர் இலவச மின் மோட்டார். விவசாயிகள் நகர்ப்புறத்திலேயே குடியேறிவிடுவதைத் தடுக்க, அவர்களுடைய ஒரு காலை இழுத்து கிராமப்புறத்தில் உறுதியாகக் கட்டிப்போடுவதற்கு கான்கிரீட் வீடுகள். கான்கிரீட் வீடுகளை உருவாக்கப்போகும் கட்டுமானக் கம்பெனிகள், சிமென்டுக் கம்பெனிகள் யார்? மின்சார மோட்டார்களை வழங்கப்போகும் கம்பெனி எது? எடைக்கு எடை அரசு மானியத்தை வாங்கிக்கொண்டு, நோக்கியா, ஹூண்டா, செயின்ட் கோபென் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தளபதிகளுக்கும் கனிமொழிகளுக்கும் அழகிரிகளுக்கும் வழங்கியிருக்கும் பங்குப் பத்திரங்களின் எடை எவ்வளவு? இந்த உண்மைகளை யாரும் எக்காலத்திலும் அறிய இயலாது. கொள்ளையில் கூட்டுக் குடும்பமாகவும், பங்கு பிரிப்பதில் தனிக் கம்பெனிகளாகவும் பிரிந்தும் இயங்கும் திருக்குவளைக் கொள்ளைக் கூட்டத்தின் ஆதாயத்தையும், தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்கும் இலாபத்தையும், ‘இலவசத் திட்டங்கள்’ என்ற இனிப்பு மிட்டாகளுக்கு உள்ளே ஒளித்து வழங்குகின்ற கலையில், கலைஞர் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார். டாக்டர் புரட்சித்தலைவி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி ‘டாக்டர்கள்’ செய்வதறியாமல் திகைக்கிறார்கள். தங்களுடைய முன்னேற்றம் மற்றும் தரகு முதலாளிகளின் முன்னேற்றத்தின் விளைபொருளாக தமிழகமும் முன்னேறித்தான் ஆகவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருதுவதால், “தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக ஆக்காமல் ஓயமாட்டேன்” என்று சூசகமாகச் சபதம் செய்கிறார். மொத்த மாநில உற்பத்தியில் (GSDP) தொழில்துறையின் பங்கு மிக அதிகமாக இருக்கும் மாநிலமான மகாராட்டிரத்துக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்திருப்பதாகவும், தொழில்துறை வேலைவாய்ப்பின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை எட்டியிருப்பதாகவும், சிறப்புச் சலுகைகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகம் ஈர்த்திருக்கும் அந்நிய முதலீடு ரூ.60,000 கோடி என்றும், ஆக்ஸ்போர்டு அனலடிக்காவின் ஆவின்படி அந்நிய முதலீட்டாளர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம்தான் என்றும், பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் (எகனாமிக் டைம்ஸ், மார்ச், 10, 2010). இந்தியத் தரகுமுதலாளிகள் சங்கமான எஃப்.ஐ.சி.சி.ஐ. வெளியிட்டிருக்கும் ‘சாதகமான தமிழகம்’ (Advantage Tamilnadu) என்ற நூலை வெளியிட்டு தளபதி ஆற்றிய உரை இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன், அமைய இருப்பனவற்றையும் சேர்த்து, மொத்தம் 139 சி.பொ.மண்டலங்களுக்கான பணிகளைத் தீவிரமாக முடுக்கி விட்டிருக்கிறது தி.மு.க அரசு. இவற்றுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும் பணி தமிழக அரசுக்குச் சொந்தமான சிப்காட், டிட்கோ ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்நிறுவனங்கள் இதுவரை சுமார் 25,000 ஹெக்டேர் நிலத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கியிருக்கின்றன. விவசாய விளைபொருளை அரசாங்கம் கொள்முதல் செய்வதைத்தான் உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள் தடை செய்திருக்கின்றன என்பதால், விளைநிலத்தையே கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் அரசு முழுமூச்சாக இறங்கியிருக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமின்றி, நீர்வளமிக்க பகுதிளை பண்டைக்காலத்தில் அக்கிரகாரங்களும் சர்வமானியங்களும் பிரம்மதேயங்களும் ஆக்கிரமித்ததைப் போல, இன்று ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகளை அடுக்கு மாடி அபார்ட்மென்டுகளும், பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே உரிய மதில்சூழ் குடியிருப்புகளும் (Gated Communities) ஆக்கிரமித்து வருகின்றன. விளைநிலங்களை ஆக்கிரமித்து முடிவின்றி விரிந்து கொண்டே செல்லும் நகரங்கள், நட்சத்திர கேளிக்கை விடுதிகள், கட்டுமானத் தொழிலின் பேப்பசிக்குத் தீனி போடுவதற்காகப் பெருகிவரும் செங்கல் சூளைகள், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் சீரான இடைவெளியில் விளைநிலங்களை வளைத்துப் போட்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகள் – என தமிழகத்தின் விளைநிலங்கள் வெகுவேகமாக விழுங்கப்படுகின்றன. 2001-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி நகரமயமாக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருந்தது. அன்றைய கணக்கின்படியே தமிழ்நாட்டின் மக்கட்தொகையில் 44.04% நகரமயாகியிருந்தது. இன்று அது 50 விழுக்காட்டையும் விஞ்சியிருக்கும் என்பதில் ஐயமில்லை. போராட்டமோ இரைச்சலோ இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமான சில எதிர்ப்புகளுடன், விவசாயத்திலிருந்து நெட்டித் தள்ளப்பட்டு, விதி விட்ட வழி என்று நகர்ப்புறங்களை நோக்கி மவுனமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, பிற மாநிலங்களில் தோன்றியதைப் போன்ற தன்னெழுச்சியான எதிர்ப்பை தமிழக விவசாயிகளிடம் நாம் காணமுடியவில்லை. இந்த எதிர்ப்பின்மைக்குக் காரணம், தொழில்மயம் எனும் முன்னேற்றப் பாதையில் செலுத்தப்படுகிறோம் என்று விவசாயிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையல்ல; விவசாயம் இனி நமக்கு சோறு போடாது என்ற அவநம்பிக்கை. எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி வார இதழில் (பிப்ரவரி, 6, 2010) எம்.விஜயபாஸ்கர் எழுதியுள்ள ஒரு ஆய்க்கட்டுரை, தமிழகத்தில் நாம் காணும் இந்நிகழ்ச்சிப்போக்கின் பின்புலத்தை ஆராவதுடன், அவசியமான பல தரவுகளையும் வழங்குகிறது. நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் விவசாயத்தின் அழிவு என்ற நிகழ்ச்சிப்போக்கில் தமிழகம் பிடித்திருக்கும் முதலிடம், தற்போது நிகழ்ந்துவரும் நகரமயமாக்கத்திற்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. 1993-94-இல் தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தியில் (எகுஈக) விவசாய வருவாயின் பங்கு 24.82%. 2005-ஆம் ஆண்டில் இது 13.3% என வீழ்ந்தது. இந்திய மாநிலங்களிலேயே மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு ஆகக் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளம். தமிழகம் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. புவியியல் அமைப்பிலும் பயிரிடும் பரப்பிலும் தமிழகத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத கேரளத்துடன் கடைசி இடத்திற்குத் தமிழகம் போட்டி போடுகிறது. 2002-03 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் சராசரியாக ஒரு உழவனின் குடும்பம் விவசாயத்தில் முதலீடு செய்த தொகை ஆண்டொன்றுக்கு ரூ. 8597. விளைபொருளை விற்று எடுத்த தொகை ரூ. 7908. அந்த விவசாயியின் குடும்பம் ஒரு ஆண்டு முழுவதும் தன் நிலத்தில் சிந்திய வியர்வைக்கும் உழைப்புக்குமான ஊதியம் இதில் கணக்கிடப்படவில்லை. அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர். இந்தப் புள்ளி விவரத்தின்படி ஒரு விவசாயக் குடும்பம், ஊதியமே இல்லாமல் ஒரு ஆண்டு காலம் உழைத்திருப்பதுடன், கையிலிருந்து சுமார் 700 ரூபாயையும் விவசாயத்தில் தொலைத்திருக்கிறது. நட்டமடைந்த இந்தத் தொகையை அவர்கள் ஈட்டியது எப்படி? ஒரு ஆண்டுகாலம் அந்தக் குடும்பம் உண்டு, உயிர்வாழ்ந்தது எப்படி? சராசரியாக ஒரு இந்திய உழவனின் குடும்பம் ஈட்டுகின்ற ஆண்டு வருவாயில் 45% விவசாயத்திலிருந்து பெறப்படுகிறது என்கிறது அனைத்திந்தியக் கணக்கீடு. ஆனால் தமிழகத்திலோ ஒரு உழவன் தனது ஆண்டு வருமானத்தில் 30 விழுக்காட்டை மட்டுமே விவசாயத்திலிருந்து பெறுகிறான். விவசாயம் சாராத பிற தொழில்களில் ஈடுபட்டுத்தான் ஒரு தமிழக விவசாயி தனது ஆண்டு வருமானத்தின் 70 விழுக்காட்டை ஈட்டி வருகிறான். கடன்பட்ட விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் இடத்தில் ஆந்திரம் இருக்கிறது. தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் 75% கிராமப்புறக் குடும்பங்கள் கடன் வலையில் சிக்கியிருக்கின்றன. புதிய தாராளவாதக் கொள்கை விவசாயத்தின் மீது தொடுக்கும் தாக்குதல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பொதுவானதாக இருந்தாலும், தமிழக விவசாயியைக் கடனில் அமிழ்த்துவதில் தண்ணீர் முக்கியப் பாத்திரமாற்றுகிறது. தமிழகத்தின் தற்போதைய மொத்தப் பாசனப்பரப்பில் 44% கிணற்றுப் பாசனத்தை நம்பியே இருக்கிறது. பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து 1970 முதல் நாடெங்கும் பரவிய ‘பம்புசெட் புரட்சி’யிலும், அனைத்திந்திய அளவில் ஆந்திரத்துக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தில் தமிழகமே இருக்கிறது. பாசனப் பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பணிகளிலிருந்து அரசு விலகிக் கொண்டதன் விளைவாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவது விவசாயியின் சொந்தப் பொறுப்பாக மாற்றப்பட்டுவிட்டதனால் தமிழகத்தில் தற்போது இயங்கும் விவசாய பம்புசெட்டுகள் 19 இலட்சம். இவற்றில் 15 இலட்சம் பம்புசெட்டுகள் சிறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை (தினமணி, 17.8.2010). ஏற்கெனவே வற்றிவரும் நிலத்தடி நீரை, நகரமயமாக்கம் மற்றும் தொழில்மயமாக்கம் தோற்றுவித்துள்ள வகைதொகையற்ற நிலத்தடி நீர்க் கொள்ளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதால், பல இடங்களில் 1000 அடிக்கும் கீழே சென்று கொண்டிருக்கும் கிணறுகள் விவசாயிகளைக் கடன் குழியில் தள்ளுவதில் பெரும் பாத்திரம் ஆற்றியிருக்கின்றன. அனைத்திந்தியப் புள்ளிவிவரப்படி 1991-இல் விவசாயக் கடன்களில் 75% வங்கிகளின் மூலம் பெறப்பட்டவையாக இருந்தன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கிகள் விவசாயிகளைப் புறக்கணித்து வருவதால், கந்துவட்டிக்காரர்களின் பிடி அதிகரித்திருக்கிறது. விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய உள்ளீடு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்த போதிலும், விவசாய விளைபொருட்களின் விலையை அதற்கேற்ப உயர்த்த அரசு மறுப்பதும், தானியக் கொள்முதலிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொண்டு வருவதும் விவசாயிகள் மீதான கடன் சுமையை அதிகரிப்பதில் பெரும் பாத்திரமாற்றியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்த தானிய விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே அரசு கொள்முதல் செய்வதால், விவசாயிகளின் மீது கந்துவட்டி, கமிசன் மண்டிக்காரர்களின் பிடி மேலும் இறுகியிருக்கிறது. நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் முதலாளித்துவச் சந்தையின் சூதாட்டத்தில், “இந்த முறை விலை கிடைக்கும், அடுத்த முறை விலை கிடைக்கும்” என்று நம்பிச் சூதாடி மென்மேலும் கடன் வலையில் சிக்கிய தமிழக விவசாயிகள், இந்தச் சூதாட்டத்திலிருந்து விலகுவதற்கே திரௌபதையைப் பணயம் வைக்கிறார்கள். கடனிலிருந்து தப்ப நிலத்தை விற்கிறார்கள். நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் ஆந்திரமும் தமிழகமுமே முன்னணியில் இருக்கின்றன. 2003-04 கணக்கீட்டின்படி இந்திய அளவில் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் கிராமப்புற மக்கள் தொகையில் 31%. தமிழகத்திலோ நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 55.43%. விவசாயத்தின் அழிவு, நிலமற்ற கூலி விவசாயிகளை மட்டுமின்றி, சிறு விவசாயிகளையும் கூட நகர்ப்புறங்களை நோக்கி விரட்டுகிறது. 1990-களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றுவரை விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ந்து வரும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான். ஐந்தாண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமப்புற ஆண் உழைப்பாளர்களில் 40% பேர் விவசாயம் அல்லாத தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளம். தேசிய அளவில் தமிழ்நாடு அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும் பரவலான அளவில் நகரங்களையும் சிறு நகரங்களையும் பெற்றிருக்கிறது தமிழகம். ஒரு சதுர கி.மீ க்கு 0.68 கி.மீ நீள சாலை என்பது இந்திய சராசரியாக இருக்கும் நிலையில், தமிழகத்திலோ இது 1.6 கி.மீ ஆக இருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் இந்தச் சாலைகள், விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. தனது மறைமுகச் சுரண்டலால் நிலவளத்தைப் பறித்துக் கொண்ட முதலாளி வர்க்கம், விற்பதற்கு உழைப்பைத் தவிர வேறு ஏதுமற்றவர்களாகப் பரிதவிக்கும் இந்த மனிதவளத்தை, சாலைகள் எனும் கால்வாய்கள் வழியே நகர்ப்புறத்தை நோக்கிப் பாச்சுகிறது. ‘சாதகமான தமிழகம்’ என்ற இந்தியத் தரகு முதலாளிகளின் கணிப்பில் தவறில்லை. தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் பாதகமாக இருந்தால் மட்டுமே ஒரு கொள்கை முதலாளி வர்க்கத்துக்குச் சாதகமாக அமையமுடியும் என்ற உண்மையை மறைத்து, எல்லா வர்க்கங்களுக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதனைப் புரிந்து கொள்ளாமல் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது. (தொடரும்) _______________________________________________ -மருதையன், புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010 _______________________________________________
மருமகனின் பெருமைக்கு அடித்தளம் அமைத்தவர் மாமன் மாறன்தான் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. வாஜ்பாயி அரசில் அவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தபோதே இதற்கான வழியை வகுத்து விட்டார். 2005-இல் மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, 2003-ஆம் ஆண்டிலேயே சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான கொள்கையை வகுத்த மாநிலம் தமிழகம். சென்னைக்கு அருகில் உள்ள மகிந்திரா உலக நகரம்தான் இந்தியாவில் இயங்கத் தொடங்கிய முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்.
***
நீர்வளமும் இரு போகம் அல்லது முப்போக விளைச்சலும், வேலைவாய்ப்புக்கு விவசாயம் தவிர வேறு தொழிலற்ற சார்பு நிலையும் கொண்ட சிங்கூர், நந்திகிராமம் போன்ற பகுதிகளின் சிறு- நடுத்தர விவசாயிகளும், முதலாளித்துவச் சந்தையின் சூறையாடலுக்கு நேரடியாக ஆட்படாமல், காடுகளையும் தற்சார்பு விவசாயத்தையும் இன்னமும் சார்ந்திருக்கும் சட்டீஸ்கர், ஜார்கண்ட் பழங்குடி மக்களும் தமது நிலத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். புதிய தாராளவாதக் கொள்கையினால் ஊனும் உதிரமும் உறிஞ்சி எடுக்கப்பட்ட விதர்பாவின் பருத்தி விவசாயிகளோ வெளியேறும் வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பாசன வசதி இன்றி, நிலத்தடி நீரின்றி, பம்பு சேட்டுக்கு மின்சாரமின்றி, அரசுக் கொள்முதல் இன்றி, விளைவித்த பொருளுக்கு விலையும் இன்றி விவசாயத்தில் நிற்கவும் முடியாமல் காலை எடுக்கவும் முடியாமல் கடந்த 20 ஆண்டுகளாகவே தவித்துக் கொண்டிருந்த தமிழக விவசாயிகள், மெல்ல மெல்ல விவசாயத்திலிருந்து வெளியேறி வருகிறார்கள்.
தமிழக விவசாயிகளை கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு, சல்வாஜூடும் போன்ற ஆயுதம் தரித்த கூலிப்படைகள் தேவைப்படவில்லை. 1990-களின் துவக்கம் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமைதி வழியில் அதனை சாதித்திருக்கின்றன.