Language Selection

ஐந்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் ஷேக் என்ற முசுலீம் ‘தீவிரவாதியின் ஆவி’, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை மீண்டும் துரத்தத் தொடங்கியிருக்கிறது. மிரட்டிப் பணம்பறிப்பது, ஆயுதங்களைக் கடத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்துவந்து உள்ளூர் தாதாவான சோராபுதின் ஷேக் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.  குஜராத் போலீசாரால் சோராபுதினோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ ‘காணாமல்’ போனார்.

 

சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் இம்மோதல் கொலை பற்றி  உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியதையடுத்து, அக்கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசுக்கு ஜனவரி 21, 2007 அன்று உத்தரவிட்டது. மோடி அரசு ஒரு கேடி அரசு எனத் தெரிந்திருந்த நிலையிலும், விசாரணை பொறுப்பை குஜராத் அரசிடமே உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பெருந்தன்மை நம்மை வியக்கத்தான் வைக்கிறது.

சோராபுதின் ஷேக்

 


மோடி அரசு தனக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது.  ஒருபுறம் தனது சி.ஐ.டி. பிரிவு போலீசாரைக் கொண்டு விசாரணை என்ற நாடகத்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் சாட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையையும் திறம்படச்    செய்தது.

உதாரணத்திற்குச் சொன்னால், இப்போலி மோதல் கொலையின் முக்கிய சாட்சியான சோராபுதினின் கூட்டாளி பிரஜாபதி கொல்லப்பட்டதைக் கூறலாம்.  தனது மனைவியோடு ஆந்திராவில் இருந்து மகாராஷ்டிராவிற்குச் சென்று கொண்டிருந்த சோராபுதினை குஜராத், இராசஸ்தான், ஆந்திர மாநிலப் போலீசார் கூட்டணி அமைத்துக் கொண்டு கடத்தியபொழுது, பிரஜாபதியும் அவர்களோடு பயணம் செய்து வந்தான். சோராபுதினையும் அவரது மனைவி கவுசர்பீயையும் குஜராத்திற்குக் கடத்திய குஜராத் போலீசார், பிரஜாபதியை இராசஸ்தான் போலீசாரிடம் ஒப்படைத்துச் சிறையில் அடைத்தனர்.

இப்போலி மோதல் கொலை விசாரணையைத் தலைமையேற்று நடத்திவந்த கீதா ஜோரி என்ற போலீசு அதிகாரி பிரஜாபதியை விசாரிப்பதற்கு அனுமதி கோரியவுடன், தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த டி.ஜி. வன்சாரா – சோராபுதினைச் சுட்டுக் கொன்ற போலீசு கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் – குஜராத் மாநில எல்லைப் பிரிவுக்குத் திடீரென மாற்றப்பட்டார்.  வன்சாரா இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டாவது வாரத்திலேயே பிரஜாபதி, டிசம்பர் 28, 2006 அன்று குஜராத் – இராசஸ்தான் எல்லையையொட்டிய நகர் ஒன்றில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுவொருபுறமிருக்க, “விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு தனக்கு குஜராத் அரசு நெருக்கடி தருவதாக” விசாரணை அதிகாரி கீதா ஜோரி உச்ச நீதிமன்றத்திடம் புகார் செய்தார்.  மோடி அரசோ இப்புகார் பற்றி அலட்டிக் கொள்ளாததோடு, தன் மீது புகார் கொடுத்த கீதா ஜோஹ்ரியை சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடித்தது.

இதன்பின், தங்களுக்குத் தலையாட்டுவார் என்ற எண்ணத்தில் ரஜ்னீஷ் ராய் என்ற அதிகாரியை சி.ஐ.டி. பிரிவின் துணைத் தலைவராக நியமித்தது, மோடி அரசு.  ஆனால் ரஜ்னீஷ் ராய், கீதா ஜோரி ஏற்கெனவே தயாரித்து அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் குஜராத்தைச் சேர்ந்த டி.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.  இதனையடுத்து ரஜ்னீஷ் ராயும் சி.ஐ.டி. பிரிவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.  இப்படி பிரஜாபதி என்ற சாட்சி கொல்லப்பட்டதையும், விசாரணை அதிகாரிகள் பந்தாடப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்ததேயொழிய, இப்போலி மோதல் கொலை பற்றிய விசாரணையை உடனடியாக குஜராத் அரசிடமிருந்து பறிக்கும் எந்த நடவடிக்கையினையும் அப்பொழுதே எடுக்கவில்லை.

இதனிடையே கீதா ஜோஹ்ரிக்கும் குஜராத் அரசிற்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டு, அவர் மீண்டும் சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட்டு, சோராபுதின் வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.  குஜராத் அரசின் வனத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது கணவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கிடப்பில் போடுவது என்ற உடன்பாட்டின் அடிப்படையில்  கீதா ஜோஹ்ரி, “சோராபுதின் கொலையில் அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பில்லை; போலீசார் பதவி உயர்வு மற்றும் பண வெகுமதிக்கு ஆசைப்பட்டு இக்கொலையைச் செய்ததாக” அறிக்கை தயாரித்து உச்ச நீதிமன்றத்திடம் அளித்தார்.

அப்பொழுதே, சோராபுதினின் சகோதரர் ருபாபுதின் விசாரணை என்ற பெயரில் நடந்திருக்கும் இந்த மோசடிகளைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவிலேயே சோராபுதின் மற்றும் கவுசர் பீ கொலைகளுக்கும், குஜராத் அரசின் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இருக்கும் தொடர்புகளையும் குறிப்பிட்டிருந்தார்.  குஜராத் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஓட்டைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையைத் தொடராமல் நிறுத்தி வைக்குமாறு அக்.1, 2008-இல் உத்தரவிட்டது.  அதன் பின் 15 மாதங்கள் கழித்து, ஜனவரி 2010-இல்தான்  இவ்வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் மாற்றும் உத்தரவை அளித்தது.

இப்போலி மோதல் கொலை தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் மறுவிசாரணையில் மேலும் பல உண்மைகள் அம்பலமாகி வருகின்றன.  குறிப்பாக, ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் கல்லை வெட்டியெடுக்கும் சுரங்க அதிபர்களின் தூண்டுதலினாலேயே, குஜராத் மற்றும் இராசஸ்தானைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளும் பா.ஜ.க. அமைச்சர்களான அமித்ஷா (குஜராத்) மற்றும் குலாப் சாந்த் கடாரியா (ராஜஸ்தான்) ஆகியோரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, மார்பிள் கல் முதலாளிகளிடமிருந்து 10 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, சோராபுதினையும் அவரது மனைவி கவுசர் பீயையும் குஜராத்திற்குக் கடத்திவந்து, சோராபுதினைப் போலி மோதல் மூலமும், அவரது மனைவியை விஷ ஊசி போட்டும் தீர்த்துக் கட்டினர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

***

குஜராத் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலேயே சோராபுதின் போலி மோதலில் கொல்லப்பட்டார் என்பது அம்பலமான பிறகும், குஜராத் அரசே உச்ச நீதிமன்றத்தில் சோராபுதினின் மனைவி கவுசர் பீ குஜராத் போலீசாரால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட பிறகும் நரேந்திர மோடி, “தனது அரசையும் குஜராத்தியர்களையும் களங்கப்படுத்துவதற்காக காங்கிரசு செய்யும் சதி இது” எனப் பிரச்சாரம் நடத்தி வருகிறார். “போலி மோதல் கொலைகள் நடக்காத மாநிலங்களே இல்லாதபொழுது, குஜராத் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பித் தனது பிரச்சாரத்தை நியாயப்படுத்தி வருகிறார், மோடி.

மோடியின் இந்த வாதம், அரைகுறையான உண்மைகளைக் கூறித் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் பாசிஸ்டுகளின் உத்தியாகும். முதலாவதாக, மோடியின் குஜராத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பல மோதல் கொலைகள் நடந்திருந்தாலும், வெறும் இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் நடைபெறும் போலி மோதல் கொலைகள் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுவதற்கு மேல், அக்கொலைகளுக்கு அரசியல் நியாயம் கற்பிக்கப்படுவதில்லை.  ஆனால், குஜராத்திலோ ஒவ்வொரு போலி மோதல் கொலையும், நாட்டைப் பாதுகாக்கும் முசுலீம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டு, அதன் மூலம் மோடியை நாட்டையே காக்க வந்த இரட்சகனாகக் காட்டும்  இந்து மதவெறிப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.   இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு, மற்ற மாநிலங்களில் நடைபெறுவதைப் போலத்தான் குஜராத்திலும் போலி மோதல் கொலைகள் நடத்தப்படுவதாக மோடி கதையளப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.

மோடியை ஆதரிக்கும் சாக்கில், போலி மோதல் கொலைகள் மூலம்தான் இசுலாமிய பயங்கரவாதிகளையும் கிரிமினல் மாஃபியா கும்பல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்று இந்து மதவெறி பாசிஸ்டுகளில் ஊதுகுழலான துக்ளக் “சோ” வாதிடுகிறார்.  “சோ”வும் அவரை ஆதரிக்கும் கும்பலும் போலி மோதல் கொலைகள் தேசநலன்/பாதுகாப்பிற்காகவே நடத்தப்படுவதாக நியாயப்படுத்த முயன்றாலும்,  அவற்றின் பின்னணியில் வெவ்வேறு காரணங்கள் உள்ளன என்பது ஏற்கெனவே பல வழக்குகளில் அம்பலமாகியிருக்கிறது.

உதாரணத்திற்கு, குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ‘தீவிரவாதி’ சோராபுதின் வழக்கையே எடுத்துக் கொள்வோம். சோராபுதின் மார்பிள் சுரங்க முதலாளிகளின் நலனுக்காகத்தான் சுட்டுக் கொல்லப்பட்டாரேயொழிய, தேச நலனுக்காக அல்ல என்பது இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.  இந்த உண்மையான நோக்கம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, உள்ளூர் தாதாவான சோராபுதினை முசுலீம் தீவிரவாதியாகவும், நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு சோராபுதின் குஜராத்திற்குள் நுழைந்ததாகவும் கதை பின்னப்பட்டது.

அது மட்டுமல்ல, ஆயுதக் கடத்தல் பேர்வழி, தாவூத் இப்ராகிமின் கூட்டாளி என்றெல்லாம் இந்து மதவெறிக் கும்பலால் அன்று குற்றம் சுமத்தப்பட்ட சோராபுதினுக்கும் மோடிக்கு நெருக்கமான குஜராத் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா மற்றும் போலீசு துணை கமிசனர் அபய் சுடாசாமா ஆகியோருக்கும் இடையே தொழில் உறவு (சுரங்க அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பது) இருந்து வந்திருப்பது இன்று அம்பலமாகியிருக்கிறது. சோராபுதினைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம் இக்கும்பல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைத் தட்டியிருக்கிறது.  ஒன்று, சுரங்க அதிபர்கள் அள்ளிக் கொடுத்த‘‘சுபாரி” பணம்; மற்றொன்று, தங்களது இரகசியத்தைத் தெரிந்த கூட்டாளி ஒழிந்தான் என்ற நிம்மதி.

அமித் ஷா கும்பலின் நிம்மதியை சோராபுதினின் தம்பி ருபாபுதின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கெடுத்துவிட்டது.  அது மட்டுமல்ல, இக்கும்பலின் இரகசியங்களையெல்லாம் அறிந்த என். கே. அமின் என்ற போலீசு அதிகாரி “அப்ரூவர்” ஆக மாற சி.பி.ஐ.-யிடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.  இதனால், மோடி கும்பல் இந்த அதிகாரி நடத்திய பழைய போலி மோதல் கொலை வழக்கை விசாரணைக்காகத் தூசு தட்டி எடுத்திருக்கிறது. போலீசு அதிகாரிகளின் பதவி உயர்வுக்குப் பயன்படும் போலி மோதல் கொலைகள், அவர்களைப் பழி வாங்கவும் பயன்படுத்தப்படும் எனக் காட்டியிருக்கிறார், மோடி.

குஜராத்தில் நடந்த மற்றொரு போலி மோதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த  இர்ஷத் ஜஹன், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதியா, இல்லை அப்பாவி கல்லூரி மாணவியா என்பது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை.  எனினும், இந்து மதவெறிக் கும்பல், “அவர் முசுலீம் தீவிரவாதிதான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டது நியாயம்தான்’’ என்று மூர்க்கமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறது.  இது மட்டுமின்றி, சோராபுதின், இர்ஷத் ஜஹன் கொலைகளைக் காட்டி, பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் இசுலாமிய பயங்கரவாதத்தால் மோடியின் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருப்பதாகவும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மோடியும், பா.ஜ.க.வும் சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்குகளை மத்தியப் புலனாய்வுத் துறையும், உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதைக் காட்டி, “முசுலீம் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வரும் மோடியைக் கொலைகாரனாகக் காட்டும் நோக்கத்தோடு, காங்கிரசும் அதன் உளவு நிறுவனங்களும் கதைகட்டி விடுவதாகவும், நாட்டின் மிகப் பெரிய அபாயமான இசுலாமிய பயங்கரவாதத்தோடு காங்கிரசு ஓட்டுக்காகச் சமரசம் செய்து கொள்வதாகவும்” குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஆனால், உண்மையில் சோராபுதின் போலி மோதல் கொலைக்கு எதிராக காங்கிரசு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. மேலும், அணுஉலை விபத்து கடப்பாடு மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க., காங்கிரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதற்கு ஈடாக, சோராபுதின் கொலை வழக்கில் மோடியை மாட்டி விடுவதில்லை என காங்கிரசு உறுதியளித்திருப்பதாக முலயம் சிங்கும் லல்லுவும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இர்ஷத் ஜஹன் போலி மோதல் கொலை வழக்கிலோ காங்கிரசு இளைய பங்காளியாகவே செயல்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான இர்ஷத் ஜஹன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி; அவர் மோடியைக் கொல்லும் நோக்கத்துடம் குஜராத்துக்கு வருவதாக குஜராத் அரசின் புலனாய்வுப் பிரிவிடம் போட்டுக் கொடுத்ததே காங்கிரசு அரசுதான்.  இப்போலி மோதல் கொலை வழக்கு அம்பலமாகி விசாரணைக்கு வந்த பின்னால், காங்கிரசு அரசு  தான் அப்படிச் சொல்லவில்லை என்று பல்டி அடித்துவிட்டது என்பதுதான் உண்மை.

இந்தப் போலி மோதல் கொலைகள் குறித்து இவ்வளவு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், பா.ஜ.க.வும் மோடியும் கொஞ்சம்கூட அசராமல், சோராபுதின் மற்றும் இர்ஷத் ஜஹன் குறித்து பொய் மூட்டைகளையே உண்மையைப் போல கட்டமைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வர முடிகிறதென்றால், அதற்குக் காரணம் போலி மோதல் கொலைகள் குறித்தும், இசுலாமிய     பயங்கரவாதம் குறித்தும் பெரும்பாலானவர்கள் இந்து மதவெறி பாசிச கும்பலின் கருத்துக்களையே கொண்டுள்ளனர் என்பதுதான்.

குறிப்பாக, மேல்தட்டு வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் போலி மோதல்கள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தையும், கிரிமினல்களையும் ஒழித்துக்கட்ட முடியும் என்ற கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளன.  இந்தக் கருத்துதான் ஒவ்வொரு போலி மோதல் கொலைக்கும் சமூக அங்கீகாரத்தை வழங்கி விடுகிறது.

போலி மோதல் கொலை வழக்குகளில் நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்றால், அதனை நடத்திய போலீசாரையும், அப்போலீசாரைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகளையும் நீதிமன்றங்களையும் எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது;  பொதுமக்கள் மத்தியில் ‘மோதல்’ கொலைகள் பற்றி உருவாகியிருக்கும் இந்த பாசிச கருத்தையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும்.

_______________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_______________________________________