Language Selection

புதிய ஜனநாயகம் 2010

பல தலைமுறைகளாக ஊழலிலே ஊறித்திளைத்த காங்கிரஸ் கொள்ளைக் கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து கீழ்த்தரமாகப் பொறுக்கித் தின்றிருப்பது இப்போது சந்தி சிரிக்கிறது.

 

சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக ஆட்சியாளர்கள் கூறிவந்தார்கள். அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர்  3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்தவிருக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி  ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது.

பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகள் அதனிடமிருந்து ‘சுதந்திரம்’ பெற்ற பின்னரும், எஜமான விசுவாசத்துடன் அமைத்துள்ள கூட்டமைப்புதான் காமன்வெல்த் என்பதாகும். காலனிய அடிமைத்தனத்தின் மிச்சசொச்சமாக விளங்கும் காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான  பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ்  நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர். பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.

நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லை. அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.

நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர்.

“டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.  குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றில்  ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?

இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக  ரூ.50 கோடி  வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.  ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன.

இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த தனியாக ஒரு நகரத்தை உருவாக்காமல், தெற்கு டெல்லியை  ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இதற்காக தெற்கு டெல்லியில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் சேரிவாழ் மக்களை, நகரை அழகுபடுத்துவது என்ற பெயரில் விரட்டியடித்துள்ளனர். இதன் மூலம் டெல்லி பெருநகரத் திட்டத்தை தெற்கு டெல்லிவரை விரிவுபடுத்தி மேட்டுக்குடியினர் ஆதாயமடைந்துள்ளனர். விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசியத் தொடங்கிவிட்டன.

இலஞ்ச ஒழிப்புத்துறை, இதுவரை நடத்திய விசாரணை மூலம் 16 திட்ட ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளது.  இது மட்டுமின்றி, கணக்கு தணிக்கை அதிகாரியின்  இடைக்கால அறிக்கையும் ஊழல் மோசடிகள் நடந்துள்ளதை நிலைநாட்டியுள்ளது. இருப்பினும், ஊழல் வெளியாகி இத்தனை நாட்களாகியும் சுரேஷ் கல்மாடி இன்னும் பதவியில் நீடிக்கிறார். ஊழல்-செய்தவர்களுக்கு ‘கடும்’ தண்டனை கொடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் சவடால் மட்டும் அடிக்கிறார். இவை ஒருபுறமிருக்க, போட்டியில் விளையாட்டு வீரர்களைச் சேர்த்துக் கொள்ள இலஞ்சம் வாங்குவது, வீராங்கனைகளுக்கு பாலியல் நிர்ப்பந்தங்கள் கொடுப்பது என பல வழிகளிலும் அதிகார வர்க்க ஊழலும் மோசடியும் அட்டூழியங்களும் நடக்கின்றன.

கும்பி கூழுக்கு அழும்போது கொண்டைக்குப் பூ வைத்த கதையாக, நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு வேளைச் சோறின்றி வாடும் போது ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இதுபோன்ற ஆடம்பர விழாக்கள் நடத்துவதென்பதே மிகவும் வக்கிரமானது. இந்த விழாவின் பெயரில் அதிகாரிகள் பொறுக்கித் தின்பதற்கு டெல்லிவாழ் ஏழை உழைக்கும் மக்களும், பல மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் தமது வாழ்வைப் பறிகொடுத்துள்ளதுதான், இதை விட வக்கிரமானது. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியை அழகுபடுத்துகிறேன்  என்று கூறிக் களமிறங்கிய முதலமைச்சர் ஷீலா தீட்சித், டெல்லியிலுள்ள  60,000 பிச்சைக்காரர்களை விரட்டியடித்தார். சேரிகளை இடித்துத் தரை மட்டமாக்கி இலட்சக்கணக்கான ஏழை மக்களை வீடற்ற அனாதைகளாக, கடுங்குளிரில் அல்லாடவிட்டார். இனி, டெல்லியில் திருடர்களும் ஊழல் பேர்வழிகளுமான முதலாளிகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் இருக்கலாம். ஆனால் பிச்சைக்காரர்களும் ஏழைகளும் இருக்க முடியாது என்றாகிவிட்டது.

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமெடுத்து ஊழல் செய்தவர்கள், இன்னொரு பக்கம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அற்ப கூலிக்கு வரவழைத்து, கொத்தடிமைகளாகக் கசக்கி பிழிந்து வேலை வாங்கியுள்ளனர். சந்தை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் கூடக் கொடுக்காமல் பிளாஸ்டிக் தார்பாயிலும் தகரக் கொட்டைகளிலும் மொத்தமாக அடைத்ததால், தொற்று நோ தாக்கி இதுவரை நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாத நிலையில் ஏற்பட்ட விபத்துகளிலும்,  தரக்குறைவான பொருட்களால் கட்டப்பட்ட பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க நாதியின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற விபத்துகளின் காரணமாக மெட்ரோ ரயில் திட்டப் பணியில் மட்டும் 90-க்கும் மேலான தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டில் கரைபுரண்டோடும் ஊழலைப் பற்றிப் பேசினாலே, விளையாட்டுப் போட்டியால் இந்தியாவின் பெருமிதம் உயரும்போது, “ஊழலைப் பற்றிப் பேசி தேசத்தின் கவுரவத்தைக் குலைக்காதீர்கள்” என்று  ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாகத் ‘தேசபக்தி’ கூச்சல் போடுகின்றனர். காங்கிரசு முன்னாள் அமைச்சரான மணிசங்கர் அயர் இந்த ஊழல்களைப் பற்றி வாய்திறந்தவுடனேயே, இதை காங்கிரசும் பா.ஜ.க.வும் ஊடகங்களும் கண்டிக்கின்றன. மேட்டுக்குடி இந்தியாவின் பிரச்சினை என்று வரும்போது இங்கே கட்சி வேறுபாடுகள் கூட மறைந்து போகின்றன. பொதுவில் காமன்வெல்த், ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஊழலும் முறைகேடுகளும் நடப்பது சகஜம்தான் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். நல்லபடியாக போட்டி நடக்கட்டும், ஊழலை பிறகு விசாரித்து முடிவு செய்வோம் என ஊழலுடன் ஒத்துப்போக வைக்கும் கண்ணோட்டம்தான் ஆளும் வர்க்கங்களாலும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டு வருகிறது.

‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும்,  குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா?

_______________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010

_____________________________