08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) என்ற நான் சார்ந்த அமைப்பு பெயர் சூட்டப்பட்ட பின்னர், எம்மத்தியில் பல முரண்பாடுகள் உருவாகின்றன. சுந்தரம், உமா மகேஸ்வரன், கண்ணன், சந்ததியார் ஆகியோரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. அவர்களின் தன்னிச்சையான போக்குகள் பல உறுப்பினர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது. அழகன், நெப்போலியன் போன்றோர் ஏற்கனவே விலகியிருந்தனர்.

சாந்தன், நான், நாகராஜா, ரவி, குமணன் ஆகியோர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை முன்வைக்கும் நிலையில் காணப்பட்டோம்.

அச்சு ஊடகம் ஊடான கொள்கைப் பிரச்சாரமாகப் பத்திரிகை வெளியிட வேண்டும் என்றும் மக்கள் அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் பொதுவான முடிவுகளாக இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதே வேளை இராணுவத் தாக்குதல்களையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் யாராலும் நிராகரிக்கப்படவில்லை.

பின்னதாக உமா மகேஸ்வரன், சுந்தரம், கண்ணன் ஆகியோர் இராணுவத் தாக்குதல்கள் மத்திய குழுவின் முடிவின்றியும் மேற்கொள்ளப்படலாம் என்ற கருத்தையும் முன் வைக்க இது எமக்கு மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. எண்பதுகளில் களில் ஏற்பட்ட பிழவுகள் முரண்பாடுகள் என்பன அனைத்துப் போராளிகள் மத்தியிலும் வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் ஒரு உடனடியான எதிர்ப்பை யாரும் தெரிவிக்கவில்லை.

மக்கள் அமைப்புக்களை உருவாக்க எண்ணிய எமது நோக்கங்கள் திசை மாறுகின்றன. முதலாளித்துவ நிறுவன வடிவிலான அமைப்பை நோக்கிச் செல்லும் நிலையைப் பலரும் அவதானித்தோம். மக்களில் தங்கியிராத எமக்கு மத்தியில், உறுப்பினர்களைப் பராமரிக்கவும், இயக்கத்தை விரிவுபடுத்தவும் பணத்திற்கான தேவை அதிகரிக்கிறது. அவ்வேளையில் சுந்தரம் ஊடாக வட்டுக்கோட்டைத் தபால் நிலையத்தின் பணத்தைக் கொள்ளையிடுவதற்கான தகவல்கள் கிடைக்கின்றன.

வட்டுக்கோட்டை தபால் நிலையத்தைக் கொள்ளையிட உமாமகேஸ்வரன், சுந்தரம், ரவி ஆகியோர் செல்கின்றனர்.

புளட் இயக்கம் நிகழ்த்திய முதலாவது இராணுவ நடவடிக்கையாக அதனைக் கருதலாம்.

ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் வரையில் கொள்ளையிடப்படுகிறது. இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே மத்திய குழுவிற்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னதாக சுந்தரமும் உமா மகேஸ்வரனும் வவுனியா சென்ற வேளையில் ஒரு பொலீஸ் உத்தியோகத்தரைக் கொலைசெய்து அவரது துப்பாக்கியைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் மத்திய குழுவிற்குத் தெரிவிக்கப்படவில்லை. சில காலங்களின் பின்னரே இது குறித்து நாம் அறிந்து கொண்டோம்.

சுந்தரம் மற்றும் உமா மகேஸ்வரன் தலைமை வகித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் தவறான வழியில் மக்கள் தொடர்பற்ற அவர்களிலிருந்து அன்னியப்பட்ட ஆயுதப் போராட்டத்தையே முன்னெடுப்பதான தோற்றம் ஒன்று உருவாகிறது. நாம் எதற்காக பிரபாகரன் குழுவோடு முரண்பட்டோமோ அதே திசையில் நாமும் பயணிப்பதாக உணர்கிறோம்.

பொது வாக்கெடுப்புக்கள் நடந்த வேளைகளிலெல்லாம் அனைவரிலும் அதிகமாக வாக்குகளைப் பெற்றவரும் அனைவரது அபிமானத்தைப் பெற்றிருந்தவருமான சாந்தன் இயக்க வேலைகளிலிருந்து விலகிச்சென்றுவிடுகிறார். அவரைத் தொடர்ந்து குமணனும் ஒதுங்கிக்கொள்கிறார்.

சாந்தன் கொழும்பிற்குச் சென்று சொந்த வாழ்க்கையில் ஈடுபட, குமணன் தனது ஊருக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்.

இவர்கள் சென்றபின்னர், உமா மகேஸ்வரன், கண்ணன், சுந்தரம், சந்ததியார் போன்றோரிடம் தவறுகள் குறித்து நாகராஜா, ரவி, நான் ஆகியோர் விவாதிக்கிறோம்.

உமா மகேஸ்வரனைப் பொறுத்தவரை இடதுசாரி அரசியலில் எந்த ஆர்வமும் கொண்டவராக இருந்ததில்லை. ஒய்வுகிடைக்கும் நேரங்களில், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நூல்களைப் படிக்கும் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலின் வன்முறைத் தொடர்ச்சியாகவே காணப்பட்டார். சுந்தரத்திற்கு ஆரம்ப காலங்களில் சில இடதுசாரிகளின் தொடர்புகளூடாக சில விடயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அதற்கு மேல் முற்போக்கு அரசியலை நோக்கிய எந்த நகர்வையும் அவர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தூய இராணுவ வழிமுறையை உமாமகேஸ்வரன் கண்ணன் ஆகியோரோடு இணைந்து முன்னிலைப்படுத்தினார்.

கண்ணன் மற்றும் சந்ததியார் போன்றோர் கூட மக்களமைப்புக்கள் குறித்தோ அவற்றின் முக்கியத்துவம் குறித்தோ எந்த பிரக்ஞையும் அற்றவர்களாகவே காணப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளோடு நீண்ட விவாதங்கள் போராட்டங்களூடாக நாம் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய உமாமகேஸ்வரன், சுந்தரம் குழுவினர் அதற்கான எந்த அடிப்படை நகர்வுகளையும் ஊக்குவிக்கவில்லை.

ஆக, நான், நாகராஜா, ரவி ஆகியோர் எமது செயற்பாடுகளைக் கைவிடுவதாகத் தீர்மானிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். நாம் புளட் அமைப்புடன் செயற்பாடுகளை இடைநிறுத்துவதை உமா மகேஸ்வரன் குழுவினரும் மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்த்திருந்தனர்.

இப்போது ஒரு புறத்தில் பிரபாகரன் சார்ந்த குழுவினரும் மறுபுறத்தில் சுந்தரம், உமாமகேஸ்வரன் சார்ந்த குழுவினரும் இடையில் நாமும் என்று நிலை உருவாகிவிட்டது. இதையெல்லாம் தவிர நாங்கள் தேடப்படுகின்ற போராளிகள்.
நானும் நாகராஜாவும் சிறுப்பிட்டிப் பகுதியில் தலைமறைவாக வாழ்கிறோம். அங்கிருந்து எதாவது என்றாவது ஒரு நாள் மாற்றங்களோடு எம்மையும் இணைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தோம். உமா மகேஸ்வரன், சுந்தரம், கண்ணன், சந்ததியார் போன்ற அனைவரோடும் எமக்கு முற்றாகவே தொடர்புகள் அற்றுப் போயிருந்தன.

இதேவேளை பிரபாகரனோடு அவரது முன்னைய குழுவில் செயற்பாடற்றிருந்த பலரும் இணைந்து கொள்கின்றனர்.

மனோ 83 களின் ஆரம்பத்தில் ரெலோ அமைப்புடன் இணைந்து கொண்டதாக அறிந்திருந்தேன்.

7ம் திகதி ஜனவரி மாதம் 1981 ஆம் ஆண்டு குரும்பசிட்டி என்ற புறநகர்ப் பகுதியில் நகை அடகுபிடிக்கும் கடையொன்ற இயக்கத் தேவைகளுக்காக பிரபாகரன், குட்டிமணி ஆகியோர் கொள்ளயிடுகின்றனர்.

நீர்வேலி வங்கியில் பெருந்தொகையான பணத்தைக்கொள்ளையிடுவதற்கான முன் தயாரிப்புகளில் ஈடுபடுவதற்காகவே இந்தக் கொள்ளை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அந்தக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய பொதுமக்களில் இருவரான ஐயாத்துரை குலேந்திரன் என்போர் ஆயுதம்தரித்த போராளிகளால் கொலைசெய்யப்பட்டனர். தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தக் கொலைகளை மேற்கொண்டதாகக் பின்னதாக அவர்கள் கூறினர்.

“தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக” என்ற தலையங்கத்தில் மக்களைக் கொன்று போட்ட முதலாவது வெளிப்படையான தாக்குதல் இது தான். இந்தத் தாக்குதலின் பின்னணியிலிருந்த அரசியல் முள்ளிவாய்க்கால் வரை மக்களை அழைத்து வந்திருக்கிறது.

அங்கும் போராளிகளைக் காப்பாற்றுவதற்காக மக்கள் பலியெடுக்கப்படிருக்கிறார்கள்.

இதே காலப்பகுதியில் செயல் வீரனாகத் தன்னை ஆட்கொண்டதாகப் பிரபாகரன் கூறிக்கொள்ளும் செட்டியைப் பிரபாகரனும், குட்டிமணியும் இணைந்து சுட்டுக்கொலை செய்கின்றனர்.

குரும்பசிட்டி கொள்ளை நிகழ்ந்து மூன்று மாதங்களில் 25.03.1981 அன்று நீர்வேலி வங்கிக் கொள்ளை திட்டமிட்டு நடத்தப்படுகிறது. குட்டிமணி தலைமைதாங்கிய இந்தத் தாக்குதலில் பிரபாகரனும் பங்கெடுத்திருந்தார். 7.9 மில்லியன் ரூபாய். பணத்தை அவர்கள் கொள்ளையிட்ட போது முழு இலங்கையுமே ஒருகணம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பலர் “பெடியள்” வென்றதாகப் பேசிக்கொண்டார்கள்.

நீர்வேலி வங்கிக் கொள்ளை உட்பட அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நாம் தலைமறைவாக வாழ்ந்த இடத்திற்கு மிக அருகாமையிலேயே கைவிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் பாதுகாப்புப் படைகளின் தேடுதல்களிலிருந்து தப்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவை அனைத்தும் எம்மீதான எதிர்ப்புணர்வில் திடமிட்டு மேற்கொள்ளப்பட்டதா, இல்லை தற்செயல் நிகழ்வுகளா என்பது குறித்து தெளிவற்றிருந்தாலும், இலங்கையில் இனிமேல் வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேற வேண்டிய நிலைலிருந்தோம்.

மக்கள் திரளமைப்புக்களிலிருந்து ஆயுதப்போராட்டத்தைக் கட்டமைக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த ஒரே காரணத்திற்காக நாம் அனுபவித்த துயரங்கள் பல. இவை அனைத்தும் தமிழினத்தின் சாபக்கேடோ என துயரில் துவண்டதுண்டு.

நாம் இலங்கையிலிருந்து தலைமறைவாக எங்காவது செல்ல வேண்டுமானால் தமிழ் நாடு ஒரு இலகுவான வழி மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட. நாம் இந்தியா செல்வதென முடிவெடுத்த பின்னர் அழகனைத் தொடர்புகொள்கிறோம். சண்டிலிப்பாய் பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்த ரவியையும் தொடர்புகொள்கிறோம். அவரும் எம்மோடு இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்ததும், நாம் தமிழ் நாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம்.

அழகன் ஊடாக அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பணத்திலிருந்து தலைமறைவாகவே மூவரும் மன்னார் செல்கிறோம்.

மன்னாரிலிருந்து அழகன் ஒழுங்கு செய்த விசைப்படகில் ராமேஸ்வரம் செல்கிறோம்.

முன்னைய காலங்களில் பல தடவைகள் தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறேன். இந்தத் தடவை எதையோ இழந்தது போன்று உணர்கிறேன். நம்பிக்கையோடு படகில் ஏறிய நாட்கள் போன்று இருந்ததில்லை. எனது தோழர்கள், இலங்கை அரசின் அடக்குமுறை,நான் நேசித்த மக்கள், நான் தேர்ந்தெடுத்த போராட்ட வழிமுறை, நானும் இணைந்து வளர்த்தெடுத்த போராட்டம் அனைத்தையுமே மன்னார் கரையோரத்தில் விட்டுச் செல்வதான உணர்வு ஏற்படுகிறது.

என்னோடிணைந்த தோழர்கள் மட்டுமல்ல இன்னும் சமூகத்தின் சிந்தனை முறையோடு போராடித் துவண்டுபோகும் ஆயிரமாயிரம் தோழர்கள் மண்ணோடு மண்ணாக மரணித்துப் போயிருக்கிறார்கள். ஆயினும் நான் சார்ந்த காலகட்டம் போராட்டத்தின் திசை வழியும் அணி சேர்க்கையும் தெளிவாகத் தெரிந்த வரலாற்றுப் பகுதி. இனியொருவில் வெளியான எனது தொடரின் ஊடாக அக்காலகட்டத்தின் போராட்ட அரசியல் அசைவியக்கத்தை வெளிக்கொண்டுவர முயற்சித்துள்ளேன். நூலுருவில் வெளியாகும் போது அதனை மேலும் செழுமைப்படுத்த முயற்சிக்கிறேன்.

முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் என்னோடிணைந்த பகுதிகள் இத்தோடு நிறைவடைவகிறது.
 

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்  

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

 

10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து

 

11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

 

12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

  

13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

  

14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

 

15.உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

 

16.கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16)

 

17.நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 17)

 

18.புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

 

 19.இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்


20.புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்20) : ஐயர்

 

21.தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

 

 22.மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)

  

23.புளொட்(PLOTE) இயக்கத்தின் உருவாக்கம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 23)

 

24.ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24)

http://inioru.com/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்