09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நாம் பாடம் கற்றோமா?

தமிழ்மக்கள் மீதான இராணுவ யுத்தம் முடிந்து விட்டாலும், தொடரும் இனவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது. இன்னும் சிலரும் இதற்கு எதிராக, தமிழ் மக்கள் போராட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.

போராட வேண்டும், ஆனால் யார் எதற்காக எப்படி போராட வேண்டும் என்று, ஏன் எதற்காக  குரல் எழுப்புகின்றனர் என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதன் பொருட்டு பழைய இயக்கங்களில் இருந்து நமது அனுபவங்களையும், அவர்கள் மக்கள் சக்தி என்று கூறி எவ்வாறு மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்தனர் என்றும் ஆராயாது, அதனடிப்படையில் மீண்டும் மக்கள் நலன் பேசுபவர்களை நாம் வேற்றுமைப்படுத்தி பார்க்க வேண்டிய அவசியம் எம்முன்னுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இன்று உண்மையான விடுதலையையும், பாட்டாளி மக்களின் நலன்களையும் கருத்தில் எடுப்பவர்கள் நடைமுறை என்ன என்பதை இங்கு ஆராய முற்படுகின்றேன். இது ஒரு விவாதப் பொருளாகக் கூட அமையலாம்.

மக்கள் சார்பு சக்திகள் என்பவர்கள் யார்? இவர்களை நாம் எவ்வாறு இனம் காண்பது? என்ற இரண்டு கேள்விகளையும் எடுத்துக் கொள்வோமாயின், இது மிகவும் குழப்பகரமானதாகவும் விடுகதை போன்ற விடையமாகவுமே காணப்படுகின்றது. ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் இவர்களை இனம் காண்பது மிகவும் எளிது.

இதற்கு இன்றைய சமகாலத்தில் நடந்த ஒரு சம்பவம் நல்ல உதாரணம். நாவலன் நடத்திய கட்டைப்பஞ்சாயத்து தொடர்பான கட்டுரை தமிழரங்கத்தில் வெளியாகிய பின், அது தொடர்பாக இனியொருவும் தேசம்நெற்றும் தமது கருத்துக்களை இணையத்தளங்களில் வெளியிட்டன. இதில் தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் நேரடியாக குகநாதனிடம் தொடர்பு கொண்டு, அவரின் செவ்வியை தனது தளத்தில் பிரசுரித்ததன் மூலம், நாவலனின் பொட்டுக்கட்டு மேலும் அம்பலமாகியது. இவை இணையத்தை தவறாது பார்ப்பவர்கள் அறிந்ததே. இவ்வாறு இருக்கையில், இந்த கடத்தல் நாடகம் தொடர்பாக நாவலன் அங்கம் வகிக்கும் அமைப்பான புதிய திசைகள் என்ன கருத்தை கொண்டிருக்கின்றனர் என்று தமிழரங்கத்தால் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்;கு எந்த பதிலும் இல்லாமல், தங்கள் கண்ணை மூடியபடி புதிய திசைகள் இயங்குகின்றது.

இழந்த பணத்தை எப்படித்தான் வாங்குவது என்ற தர்க்கம் தான், இங்கு புதிய திசைகள் இதை நியாயப்படுத்தும் அரசியலாகின்றது இதன் மூலம் இந்த சம்பவத்தை நியாயப்படுத்துகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகின்றது. தேசம்நெற்றில் இது போன்றதொரு பின்னூட்டம் வெளியாகியது.

இவ்வாறுதான் உண்மையில் இவர்கள் கருதுவார்களாயின், ஆட்கடத்தல் கட்டைப்பஞ்சாயத்து போன்ற இந்த முதலாளித்துவ சமூக விரோதச் செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று அர்த்தமாகும். மாறாக இந்த ஆட்கடத்தல், கட்டைப்பஞ்சாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்களாயின், இவர்கள் இதன் மீதான தமது சமூகப் பார்வையை மக்கள் முன் கொண்டு வருபவர்களாக இருப்பார்கள். சமூக அக்கறை கொண்டவர்களை இவ்வாறு தான் இனம் காணமுடியும். சமூகத்தில் காணப்படும் சமூக முறைகேடுகளைக் கண்டிப்பவர்களாக நிச்சயம் இருத்தல் வேண்டும். மாறாக அவற்றிற்கு கருத்துக் கூறாது உலக அரங்கில் நடக்கும் சில விடையங்களுக்கு உதாரணமாக 18 வது திருத்தச்சட்டம், காஷ்மீர் பிரச்சனை, நேபாள போராட்டம் போன்றவற்றை பற்றி மட்டும் கருத்து கூறுபவர்கள் வெறும் சந்தர்ப்பவாதிகளே. இவர்கள் தம் நலனைப் பாதுகாக்கவும், தாம் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று மக்களுக்கு காட்டவும் வெறுமனே முயற்சிப்பவர்களே. இயக்கங்கள் பலஸ்தீன விடுதலையும் மார்க்சியமும் பேசிய அளவுக்கு அவற்றுக்கு விரோதமான தலைமைகளைளே கொண்டிருந்தார்கள் என்பது கடந்தகால வரலாறு.

இவ்வாறு சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் மீது, வெளிப்படையாக சமூகம் சார்ந்து தமது கருத்தினை முன்வைப்பவர்களை நாம் குறைந்தபட்சம் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று கருத முடியும். இருந்தபோதும் இவர்கள் உண்மையில் மக்கள் சக்திகளா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு, எந்த மக்கள் தத்துவத்தை தமது தத்துவமாகக் கொண்டு அதன்பால் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் அமைக்கும் பட்சத்தில், அவர்களை மக்கள் சக்தியாக நாம் இனம் காண முடியும். அவ்வாறு இனம் கண்டாலும் அவர்கள் தமது நிலைமாறும் போது, மக்கள் மீதுள்ள அக்கறை நலன் போன்றவற்றை கைவிடும் சாத்தியப்பாடும் உண்டு. இதற்கு உதாரணமாக தமிழீழப் போராட் சக்திகளை முன்மாதிரியாகப் பார்க்கலாம்.

ஆரம்ப காலத்தில் அதாவது 70 களில் தமிழ் மக்களின் நியாயங்களுக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காவும் போராடப் புறப்பட்ட பலர், பிற்காலத்தில் எதற்காக போராடப் புறப்பட்டார்களோ அதை மறந்து அதற்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அது மடடுமல்லாது உணர்ச்சி வேகத்தில் புறப்பட்ட எமது இளைஞர்களையும் யுவதிகளையும் தமது நலன்களுக்காக பாவித்து அழித்தொழித்தனர். இவ்வாறாக கசப்பான வரலாற்றைக் கொண்ட நிலையில், எமது மக்களுக்கு மிஞ்சியது எல்லாம் ஏமாற்றங்களே. எனவே எவராயினும் மக்கள் நலனைப்பற்றி பேசுபவர்களாக இருந்தாலும், அவர்களிடம் உண்மையும் நேர்மையும் இருக்கின்றனதா என்றும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இதற்காக இன்று மக்கள் நலன் சார்ந்தவர்கள், மக்களின் பக்கம் நின்று ஒரு யுத்தம் நடத்தவேண்டிய காலகட்டமிது. இந்த யுத்தம் இணையவலைகள் தொடர்பான யுத்தமே. இணைய தளங்களுக்கு மலிவான இந்தக் காலத்தில், இணையங்களின் பாதிப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேளையில், தாம் மக்கள் சக்திகள் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற முற்படுபவர்களை இனம் கண்டு மக்கள் முன் அம்பலப்படுத்தல் அவசியமாகின்றது. புரட்சி என்றும், விடுதலை என்றும், மக்கள் நலன் என்றும் தமது இணையங்களுடாக கதையளக்கும் இந்த இணையவாதிகள், உண்மையில் மக்கள் நலன் கொண்டவர்களா என்பதை அம்பலத்தில் கொண்டு வரவேண்டும்.

புலிகளின் அழிவிற்கு பின் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படை நோக்கம், வேலைத்திட்டம் என்பவற்றை ஒரு சில அமைப்புகளைத் தவிர வேறு எந்த அமைப்பும் இதுவரை முன்வைக்கவில்லை. இவ்வாறு சந்தர்ப்பவாதப் போக்குக் கொண்ட அமைப்புகள், தமது வேலைத் திட்டங்களை வெளியில் முன்வைக்காது தமக்குள்ளேயே வைத்து குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றனர். இவர்களோ தமது பிரச்சார வேலைகளை இணையத்தளங்களின் ஊடாக முன் தள்ளுகின்றனர். ஆனால் அவ்விணையத் தளங்களோ வெறுமனே பொதுவான அழிவிலான சமூக முரண்பாடுகளை எடுத்து அதைவைத்து காவியம் படைக்கின்றனர்.

சமூக முரண்பாடுகளையும் சமூக விரோதச் செயல்களையும் கண்டு கொள்ளாது, சமூகம் பற்றி இவர்கள் கதை அளக்கின்றனர். சமூக முரண்பாடு பற்றிய பார்வை இவர்களிடம் வக்கிரத்தனமாகவே காணப்படுகின்றது. இந்த வக்கிர மார்க்சிய முற்போக்குவாதிகள் தம்மை பற்றி எவரும் கதைக்கக் கூடாது என்றும், தாம் செய்வதெல்லாம் சரி என்றும் சொல்லியபடி மக்களை ஏமாற்றப் புறப்படுகின்றனர். அவர்களின் இச் செயலை மறுத்து, இவர்களை அம்பலப்படுத்தினால் உடனே தனிநபர் தாக்குதல் என்றும், என்கவுண்டர்கள் என்றும் கதை கட்டி தமது புரட்சிகர வாழ்வை தொடர முற்படுகின்றனர். இவர்கள் செய்யும் எந்த வேலைகளையும் மற்றவர்கள் கண்டு கொள்ளாது, இவர்களை  துதிபாடினால் அவர்களையும் புரட்சியாளர்களாக பிரச்சாரம் செய்து பிழைப்பை நடத்துவார்கள்.

இதுவா புரட்சி! இதுவா மக்கள் நலன் என்று அவர்களை அம்பலப்படுத்தி அவர்களின் முகத்திரையை கிழிப்பதும் இன்று மிகவும் முக்கியமான வேலைகளில் ஒன்று. இவ்வாறு செய்யாவிடின் உண்மையான புரட்சிகர மக்கள் சக்திகள் யார் என்பதை இனங்காண முடியாது போய்விடும். இதற்காக தமிழரங்கம் தொடர்ந்து பாடுபடும்.

சீலன்
21.09.2010

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்