Language Selection

துடுப்பாட்டத்தில் தலை சிறந்த சுழல்ப்பந்து வீச்சாளன் முத்தையா முரளிதரன்,  2010 ஜீலை நடுப்பகுதியில் ஒய்வு பெற்றுக்கொண்டார். சர்வதேச ஊடகங்கள் கூட மிகுந்த முக்கியத்துவங்கொடுத்து, அது தொடர்பில் செய்திக் கண்ணோட்டங்களை வெளியிட்டடிருந்தன. அந்த வேளை இலங்கை வந்திருந்த இந்திய நண்பர் ஒருவர் கேட்டார், சிங்கள மக்கள் இத்தகைய சர்வதேச முக்கியத்துவத்துக்கு சமதையான மதிப்பினை அவருக்கு வழங்கியிருக்கின்றார்களா? என்பதாக.

 

முரளிதரன் ஓர் தமிழர் என்பதனால் புறக்கணிப்பிற்கு சாத்தியம் இருக்கிறது எனும் சந்தேகத்தில் இருந்து இந்தக் கேள்வி எழுந்துள்ளது. அதிசயப்படத்தக்க வகையில் சிங்கள ஊடகங்களும், சிங்கள மயப்பட்ட இலங்கையின் ஆங்கில ஊடகங்களும் முத்தையா முரளிதரனுக்கு அதியுன்னத மரியாதையை வழங்கியிருந்தன. மட்டுமன்றி, பல இடங்களில் அரசியல்வாதிகளுக்குப் போன்று விளம்பரத் தட்டிகள் கட்டப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

விளையாட்டுத் துறையிலும் பேரினவாதப்போக்கு!

விளையாட்டுத் துறையிலாவது சிங்களப் பேரினவாத உணர்வு அடக்கி வாசிக்கப்படுகின்றது எனக் கருத இதனை உதாரணமாய்க் கொள்ள முடியுமா? அதுதான் இல்லை. இலங்கை துடுப்பாட்ட அணியில், இரண்டொரு முஸ்லிம் வீரர்கள் இருக்கிறார்கள்., அந்த அடையாளத்தை இழந்து அவர்களை நீங்கள் முஸ்லிமாக காண வாய்ப்பே இல்லை. அவர்கள் தங்கள் பெயர்களை சிங்களத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.  அநேகமாய்ப் பேர்கெட்ட சிங்கள முஸ்லிமாக அவர்கள் வாழக்கூடும். அது அவர்களது தனிப்பட்ட முடிவு. அதனை விமர்சிக்கப்புகுவது அடிப்படை மனிதஉரிமை மீறல். விட்டுவிடுவோம்!

பொதுத் தளத்தில் எங்களுக்கு எழக்கூடிய கேள்வி, அவர்கள் ஏன் சிங்களப் பெயர்களுக்குள்  தஞ்சம் புக நேர்கின்றது என்பதுதான். எவரது நிர்ப்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. முஸலிம்கள் எனத் தெரிந்தும் திறமை காரணமாக அவர்கள் உள்வாங்கப்பட்டார்கள். அநேகமாய் தங்கள் விருப்பப் பிரகாரமே பெயர்மாற்றம் என அறியப்பட்டுள்ளது.

ஏன் இந்த அவதி? உள்வாங்கப்படுவது மட்டும் போதுமானதில்லையே! நீடித்து நிலைக்கவும், வெகுஜன ஆதரவை பெருக்கவும், களம் பல கண்ட பண பலம் ஈட்டவும் இந்த மாற்றம் அவசியமாகின்றது. சிங்கள மக்களிடம் ஊட்டப்பட்டிருக்கும் பேரினவாத மமதைப் போதை காரணமாயானது இந்த அவதி.

பரவாயில்லையே, முத்தையா முரளிதரன் பெயர்மாற்றம் கொள்ளாமல் அப்படி தானே இருந்தார். ‘அப்படியேதான்’ இருந்தார். அந்த விளையாட்டு அணிசார்ந்த தளம் எங்கும் அவர் ஓர் சிங்களவர் போலவே வாழ்ந்தார். சில வருடங்களின் முன் தமிழர்கள் அவருக்கான பாராட்டு விழாவில் கூட சிங்களத்தில் உரையாற்றினார் என முணமுணுக்கப்பட்டதுண்டு. வேறெப்படி இருக்க முடியும்.  இந்தப்படியாவது ஒரு தமிழர் இருக்கிறார் எனத் திருப்திப்படும் வகையில், அவர் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டால் போதுமென சமாதானம் கூறியவர்களையும் காணமுடிந்தது.

செல்வமும், செல்வாக்கும் ஈட்டும் இடத்துக்கான நெருக்கடி மட்டுமல்ல இது., பொதுப் புத்தித் தளத்தின் ஓர் வெளிப்பாடுமாகும்!

இது சிங்களதேசம். சிங்களம் பெரு விருட்சமெனில், ஏனைய சிறுபான்மை இனங்கள் அதன் மேற் படர்ந்து இடந் தேட வேண்டிய படர்கொடிகள் மட்டுமே என்பது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆரின் கூற்று. சிங்களவர்களே இந்நாட்டின் பூர்வீகக் குடிகள், ஏனைய சிறுபான்மை இனங்கள் வந்தேறு குடிகள் என்றவகையில் அடக்கி வாசிக்கவேண்டும் என்றார். முன்னாள் இராணுவத் தளபதி. (பதவியில் இருந்தபொழுது) பின்னர் அவர் ஜனாதிபதியாவதற்கு ஆசைப்பட்டு போட்டியில் குதித்தபொழுது, ‘வந்தேறு குடிகள்’ பெரும்பான்மையாய் அவருக்கே வாக்குப் போட்டார்கள் என்பது வேறு அரசியல் நெருக்கடிகளின் பெறுபேறு.

இத்தகைய பொதுப்புத்தி உருவாக்கத்தில் ஏனைய இனத்தனி ஆளுமைகள் சிங்கள முகமுடியை அணிவது தவிர்க்கவியலாததாயுள்ளது எனத்தெரிகின்றது. சிங்கள மக்களுக்குள் உள்ள ஜனநாயகப் பண்பைத் தட்டியெழுப்பிச் சகோதர இனங்களை சம உணர்வுடன் மதிக்கப் பழக்கும் பண்பை ஊட்ட ஏற்றதான ஆளுமை வீச்சு  இலங்கையில் எவ்வடிவிலும் தோன்றவில்லை என்பது காலத்துயர்.

சிங்கள மக்கள் மத்தியிலான அனைத்துக் கட்சிகளுமே இந்தப் பொதுப்புத்தியை மென்மேலும் ஊட்டி வளர்ப்பனவாயே உள்ளன. இயல்பில் மிகுந்த ஜனநாயகப் பண்புமிக்க சிங்கள மக்களிடம் இந்தப்போக்கை மாற்ற ஏற்ற இயக்கம் முன்னெடுக்கப்படின், சாதக விளைவை ஏற்படுத்திவிட முடியும். எவரும் முயலவில்லை. தம்மை மார்க்சியராக கூறும் ஜே.வி.பி. கூட சிங்களப் பேரினவாத உணர்வோடு செயலாற்றுகின்றது. இதற்கும் மத்தியில் மற்றவர்கள் இப்பெரும்பணியை செய்ய பெரும்பாடு படவேண்டும்.

இன்று ஜே.வி.பி. தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தாமதமின்றி தீர்வு காண் என முழங்குகின்றதே என ஒரு தோற்றம். உண்டு. என்ன தீர்வு? மீளக் குடியமர்வும், புனர்வாழ்வும், கல்வி வேலையில் ஏற்ற இடமளிப்பு என்பதான இரண்டாம் மூன்றாம் பட்ச விவகாரங்கள்தாம். அதை மீறி  13-வது திருத்தம், வட-கிழக்கு இணைப்பு என்றால் கெம்பியெழுந்து சுவர்களில் கிறுக்கத் தொடங்கிவிடுவார்கள். ‘பிரிவினையை விதைக்காதே’!

வட-கிழக்கில் சிங்கள மக்கள் வாழத் தடையோ?

தேசிய இனங்களுக்கான சுயநிர்ணயத்தைப் பிரிவினையாகவே அவர்கள் பார்க்கின்றார்கள். அடிப்படை உரிமையை மறுத்து அண்டிப்பிழைக்கும் கூட்டமாக வாழவகை சொல்லும் தீர்வுதான் அவர்களிடமுள்ளது. தமிழர்-முஸ்லிம் மக்கள் சிங்களப் பகுதியெங்கும் இருப்பதுபோல வட-கிழக்கில் சிங்களவர்களை வாழவிட வேண்டுமாம், அதுதான் தேசிய ஜக்கியமாம்.

எவர் மறுத்தார்? தெற்கில் பலதொழில்கள் நிமித்தம் தமிழர்-முஸ்லிம்கள் தாமே முயன்று வாழ்தல் போல, சிங்கள மக்கள் வட-கிழக்கில் வாழ்ந்திருக்கின்றார்களே?

‘இல்லை’ என்ற பிரச்சாரம் இன்று சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் தேசவழமைச் சட்டம் சிங்களவர் அங்கே சொத்து வாங்கத் தடையாக உள்ளதாம். அவ்வாறெனில் எண்பதுகளின் முன் சிங்களவர்களுக்கு அசையும்-அசையாச் சொத்துக்கள் எப்படி இருக்கக முடிந்தது? அரசாங்கத் தரப்பில் தேசவழமைச் சட்டத்தை இவ்வகையில் முன்னிறுத்துகின்ற போதே, திட்டமிட்ட குடியேற்றம் வடக்கில் நிகழ்த்தப்படவுள்ளதாய் அறியப்படுவதை பேட்டியில் கேட்கின்றபோது ஜனாதிபதி சொல்கின்றார், பிரபாகரனால் விரட்டப்பட்ட சிங்கள மக்கள் தாம் அங்கே மீளக் குடியமர்த்தப்படவுள்ளார்கள் என்பதாக.

பல்தொழில் சார்ந்து சிங்கள மக்கள் தாமாக யாழ்ப்பாணத்தில் குடியமரத் தடையாக தேசவழமைச் சட்டம் இல்லை. அது உண்மையில் சாதியப் பிரச்சினை சார்ந்த சட்டம். ஆளும் சாதியினர் குடியிருப்புக்களில் உள்ள ஒருவர் தனது சொத்தை ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தன்னிச்சையாக விற்றுவிட முடியாது. அயலவர் ஒப்புதல் அவசியம். அவர்களும் தமது சாதி மேட்டுக்குடிமைக்குப் பங்கம் வராவகையில் அனுமதிக்க வேண்டும். ஒடுக்கப்பட்டோர் பெறுவதை அனுமதிக்காத சாதிமான்கள் பலர், சிங்களவர் அயலில் வாழ அனுமதித்திருக்கின்றார்கள். சாதிமான் இராமநாதனை சிங்களத் தாழ்சாதியினருக்கு எதிராக போட்டியில் நிறுத்தித் தேரில்  வைத்து ஊர்லவமாகத் தம் கரங்களால் இழுத்த மேட்டிமைச் சாதி சிங்களவரா எனப் பார்த்தால் போதும். பல சந்தர்ப்பங்களில் அதுவும் தேவைப்படாது டானியல் படைப்புக்களில் காட்டப்பட்டதைப்போல (கடலுக்கு தீட்டு ஏது).

பல சந்தர்ப்பங்களில் தெற்கில் தமிழர்கள் குடியிருப்பு நிலங்களை வாங்கும்போது பத்து இருபது மடங்கு விலைகளில் வாங்கியிருக்கின்றார்கள். உரிய விலைக்கு வட-கிழக்கில் சிங்களவர் வாங்குவதையே விரும்பாமல் சிங்களப் பேரினவாத சக்திகள் திட்டமிட்ட குடியேற்றத்தை செய்வதுதான் பிரசிசினையே தவிர இயல்பாக மக்கள் கலந்து வாழ்வதில் தடைகள் ஏதுமில்லை.

பேரினவாத ஒடுக்குமுறை இல்லையெனில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் மக்கள் எவ்வளவு அந்நியோன்யமாக வாழமுடியும்? இதற்கு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் எல்லோரும் வள வாழ்வு வாழ முடிவது சிறந்த உதாரணந்தான். சிங்கள மக்கள் இவ்வாறு வரவேற்று வாழ அனுமதித்தல் போல, தமிழ்-முஸ்லிம்-மக்களும் வரவேற்கத்தக்கவர்களாயே உள்ளார்கள்.  தடையாக இருப்பது பேரினவாத சக்திகளும் அவற்றுக்கான அரசுகளுமே.

உண்மையில் தமிழ்-முஸ்லிம் மக்களைவிட, சிங்கள மக்களிடம் ஏனைய இளங்களுடன் பரஸ்பர நல்லுறவு கொள்ளும் பண்பு அதிகம் என்பதை ஏற்றாக வேண்டும். அத்தகைய ஜனநாயக வாழ்வுமுறைக்கு உகந்த மக்களிடம் ஏனைய இனங்களோடு சம உரிமையுடன் வாழ இணக்கம் கொள்ள உதவும் வேலைப் பாணிக்கு எவ்வகையில் உதவப் போகின்றோம்.?

1.“இனியொரு விதி செய்வோம்” - 01

2.“இனியொரு விதி செய்வோம்” – 2