Language Selection

தீபச்செல்வனுக்கு முற்போக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தது எது?

1.அவரின் பின் வெளிப்படாது இருந்த புலிசார்பு அரசியல் நிலைப்பாடா!? அல்லது

2.அவர் பொதுமக்களின் அவலங்கள் சார்ந்த, அவரின் கவிதை மொழியா!? அல்லது

3.புலிகள் பற்றிய அவரின் கவிதையில் மறைமுகமாக வெளிபட்ட எதிர்மiறான மெல்லிய ஒரு சில விமர்சனங்களா!?

இவை எல்லாம் தான், அவருக்கு வர்க்கம் கடந்த முற்போக்கு அரசியல் அடையாளத்தை கொடுக்க முனைந்தது. அவர் மக்கள் சார்ந்து முன்வைக்கும் அரசியல் என்னவென்ற எந்தக் கேள்வியுமின்றி, அவரை முன்னிறுத்தி அடையாளப்படுத்தி அரசியல் மக்கள் விரோதமானது. இது இனத்ததை முன்னிறுத்தி, இனவாத அரசியலாக சாரம்சத்தில் இருந்திருக்கின்றது. வேறு எதுவுமல்ல. பிரதான எதிரிக்கு எதிரான அடையாளத்தை, அரசியலற்ற எல்லைக்குள் தேசியத்தில் உள்ள வர்க்க அம்சத்தை புறந்தள்ளிய அனுகுகின்ற தளத்தில் தான் மக்கள் விரோத அரசியல் செழிக்கின்றது. இடதுசாரிய நடைமுறையும் விமர்சனமுமற்ற அரசியல் சூழல், வலதுசாரியத்தினை செழிப்பாகின்றது.    

இங்கு தீபச்செல்வனின் அரசியல், மக்கள்விரோத வலதுசாரியத்தைச் சார்ந்தது. அது கடந்தகால  புலி அரசியலை நியாயப்படுத்தும் அரசியல் அடிப்படையைக் கொண்டது. இதை  இன்று அவரே ஒத்துக் கொண்டுள்ளார். அவரின் மொழியில் "நானோ விடுதலைப் புலிகள் தொடர்பான எனது நிரந்தரமான விருப்பை வைத்துக்கொண்டு பேசுகிறேன்" என்கின்றார். புலிகள் செய்த அனைத்தையும் நியாயப்படுத்துகின்றார். இதுதான் தனது அரசியல் நிலை என்று சொல்வதை கண்ட அதிர்ச்சி தான், மூடிமறைத்த இந்த வலதுசாரிய அரசியல் போக்கை குறிப்பாக்கி ஆராய வைக்கின்றது.

பொதுமக்களின் அவலங்கள், யுத்த வடுக்கள் மேல் அவரின் மொழி, அவரின் கவிதை எதார்த்தத்தின் மேல் இயங்கியபோது, அதன் மேல் அவரின் அக்கறை எமது பொது அக்கறையுடன் பொருந்தியிருந்தது. இதனால் அவரை எம்மில் இருந்து நாம் வேறுபிரித்துப் பார்க்க முற்படவில்லை. இது வர்க்கம் சார்ந்தது என்பதையும், சுயநலம் கொண்டது என்பதையும், சொந்த இன மக்களை ஒடுக்கும் வலதுசாரிய அரசியல் என்பதையும், அரசியல் ரீதியாக பிரித்து பார்க்கவும், அதை விளக்கிக் காட்டவும் பொது அரசியல் தளத்தில்  அரசியல் ரீதியாக தவறிவிடுகின்றோம். இதைச் செய்ய தவறுகின்ற அதேநேரத்தில், வர்க்கமற்ற இன அரசியலுக்குள் வழிநடத்தி விடுகின்றது. இது அந்த மக்களின் பாலான உண்மையான அக்கறையான அரசியலை, அரசியல் ரீதியாக அழித்து விடுகின்றது.      

நாம் முன்பு ரதி தொடர்பாக வினவு தோழர்கள் உடன் நடத்திய விவாதமும், அதை தொடர்ந்து எமது அணுகுமுறையை வரட்டுவாதம் என்று சொல்லும் அளவுக்கு அந்த விவாதம் நீடித்தது.

இதனால் ரதி தொடர்பான விவாதத்தை நிறுத்தினோம். ஆனால் ரதியின் தொடர் கருத்துகளை அவதானித்தோம். சொந்த இன மக்களுக்கு எதிரான (புலி) வலதுசாரியம் எம் போராட்டத்தை சிதைத்ததைப் பற்றி, எதையும் தன் தொடரில் அவர் பேசவில்லை. தன் சுய அனுபவமாக தமிழன் பற்றிய வலதுசாரிய வர்க்க அரசியல் முன்வைத்தவர், அவர்களால் தமிழினம் அழியவில்லை என்பதை சொல்லிச் சென்றார். அது பேரினவாதத்தால் மட்டும்தான் என்று சொல்லிச் சென்றார்.  உலகின் பல ஒடுக்குமுறைகள் பற்றி, தனிமனித அவலத்தின்  எல்லைகளைக் கடந்து பேசிய அவரின் தொடர், சொந்த இன வலதுசாரியத்தைப் பற்றி பேசவில்லை. புலிகளின் பிண மற்றும் இன அரசியலை சார்ந்து நின்று பேசியது. இதில் இருந்து சாதாரண பொதுமக்களின் அனுபவம் வேறுபட்டது. பொதுமக்களின் அவலம், வலதுசாரிய புலிகளாலும் ஏற்பட்டது. பேரினவாத கொடூமைகளை ஊக்குவித்து அதை அரசியலாக்கியவர்கள். 10000 மேற்பட்டவர்களை கொன்ற புலிகள் பற்றிய பேசாத தமிழ்மக்கள் யார்? இதைச் சுற்றிய தனிமனித அனுபவம் தான் என்ன? இப்படி எம்மை சுற்றி நிகழ்ந்ததைப் பற்றிய எந்த விமர்சனமற்ற பார்வை புலிகளுடையது. அதுதான் புலிகளின் குரல்;. மனித அவலம் பற்றி இரண்டு பொதுவான பார்வை உண்டு. இவ்விரண்டையும் வேறுபடுத்தி பார்க்கும் அரசியல் தான், இடதுசாரிய அரசியலாக உள்ளது. 
 
பொது அவலம், தனிமனித அவலம் சார்ந்த வலதுசாரிய கருத்தோட்டம், சமூகத்துக்கு தலைமைதாங்கிய வலதுசரிய புலி அரசியலை நியாயப்படுத்தி பிரதிபலிக்கின்றது. அரசியல் ரீதியாக இதை மறுக்க வேண்டியுள்ளது. பொது அவலம், தனிமனித அவலத்தை வர்க்கம் கடந்து வலதுசாரிய பொது உலக கண்ணோட்டத்தில் சொல்லி அணுகுவதன் மூலம், அந்த அரசியலை பாதுகாத்தலே பொது அரசியலாகின்றது.

இதை பிரித்து பார்த்த எம் அணுகுமுறைதான், இங்கு சர்ச்சைக்குள்ளானது. இன்று இடதுசாரியம் பேசும் பலரின் கடந்தகாலம் பற்றி கேள்விக்குள்ளாக்குவதும், அவர்களின் மூடிமறைத்த சந்தர்ப்பவாத சாக்கடையில் மூழ்கி எழ மறுப்பது கூட, பலருக்கு வரட்டுத்தனமாக அல்லது குறுங்குழுவாதமாக இருக்கலாம். இதுபோல் தீபச்செல்வன் பற்றிய எமது விமர்சனம் பார்க்கப்படலாம்! எமது அணுகுமுறை மாறான வழியில், அதாவது வர்க்கமற்ற இன அணுகுமுறை மற்றும் சந்தர்ப்பவாத இடதுசாரிய கூட்டு மூலம் புரட்சிகரமான நடைமுறை உருவாக்கப்பட்டால் தான், எம் அணுகுமுறை குறுங்குழு தன்மை கொண்ட வரட்டுவாதமாக நிறுவப்படும்.

இந்த நிலையில் தீபச்செல்வனின் வலதுசாரி மக்கள் விரோத அரசியலை, இடதுசாரிய மக்கள் சார்பு நிலையில் நின்று நுணுகிப் பார்க்க வேண்டிய நிலை அவசியமாகின்றது.  அனைத்து செயல் மற்றும் கருத்துத் தளத்திலும், இப்படி அணுக வேண்டிய அரசியல் நிலை ஏற்படுகின்றது. இதை நாம் மட்டும் தொடர்ந்து இன்று செய்கின்றோம். இந்த விமர்சனம் தீபச்செல்வன் வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை கைவிட்டு, இடதுசாரிய மக்கள் சார்பு நிலையை எடுக்க கோருகின்றது. இது தீபச்செல்வன் போன்ற அனைவருக்கும் பொருந்தும்.

சோபாசக்தி எடுத்த பேட்டியின் பின், தீபச்செல்வனின் வலதுசாரிய கவிதைகளை நாம்  மீளப் படிக்க வேண்டிய நிலையேற்பட்டது. அவரின் எதார்த்தம் சார்ந்த, கவிதையின் சாரப்பொருள் என்ன?

அவர் தன்னைச் சுற்றிய ஒரு எதார்த்தத்தின் மேல், கவிதைகளைப் பக்கச் சார்புடன் முன்வைக்கின்றார். அவரின் மொழியில் சொன்னால் "நானோ விடுதலைப் புலிகள் தொடர்பான எனது நிரந்தரமான விருப்பை வைத்துக்கொண்டு பேசுகிறேன்" ஆம் அது புலியை சார்ந்து நின்றும், தன் குடும்பம் மற்றும் நண்பர்களைச் சார்ந்த உணர்ச்சி என்ற குறுகிய வட்டத்தில் நின்று வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவரின் அரசிலை வெளிபடுத்தும் சில உதாரணங்களை பாருங்கள்.

1."விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டு அரசையும் அரசின் படுகொலைகளையும் அரசின் யுத்தத்தையும் ஆதரித்தார்கள். இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் எனபதை நான் வளர்ந்த பிறகுதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப் புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன"

2."இப்பொழுது புலிகள் உண்மையில் தோற்றார்களா என்பதை மறுபடியும் யோசித்துப் பார்த்தால், நான் நினைக்கிறேன் புலிகள் தோற்கவில்லை."

3."விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நான் மறுக்கிறேன். கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு மக்கள் இராணுவத்தினரிடம் சரணடையத் தொடங்கிவிட்டார்கள்."

4."சம்பவங்கள் தலைமைக்குத் தெரியாமல் நடந்திருக்கின்றன. போராளிகளுக்கும் போராட்டத்திற்கும் களங்கம் ஏற்படும் விதமாகக் குறித்த காரியங்கங்களில் ஈடுபட்டவர்கள் இன்று இராணுவத்தினருடன் நிற்கிறார்கள்."

5."போராட்டத்தில் இணைந்தவர்களில் சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை வைத்து ஈழப் போராட்டத்தைத் தவறாக மதிப்பிட முடியாது."


இப்படித்தான் புலிகள் கருத்துகள் கூறி வந்தனர். அதையே இன்று தீபச்செல்வன் மீளவும் கூறுகின்றார். இதே கருத்தை அடிப்படையாக கொண்டுதான், தீபச்செல்வன் கவிதைகள் அரசியல் வரம்பை போட்டிருந்தன.  இதுதான் ஒட்டு மொத்தமான அவரின் அரசியல் தெரிவு. வலதுசாரிய இனம் சார்ந்த புலி நிலைப்பாட்டையும், தன் உணர்வு சார்ந்த வலதுசாரிய தனிமனித சுயநலத்தையும் அடிப்படையாகக் கொண்டவை இந்தக் கவிதைகள். மக்கள் அரசியலை முன்னிறுத்தியதல்ல, அவரின் கவிதைகள். புலிகள் மீதான மெல்லிய மறைமுகமான தன் உணர்வு சார்ந்த எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும், புலிகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் சார்ந்தவை. தீபச்செல்வனின் பொது அரசியல் சார்ந்தல்ல. தீபச்செல்வனின் பொது அரசியல், பொது மக்கள் சார்ந்தல்ல.

புலிகள் இருந்தவரை புலியைச் சார்ந்து நின்று புலியாகவே அது வெளிப்பட்டது. புலிகள் இல்லாத அரசியல் தளத்தில் வலதுசாரிய கண்ணோட்டத்தில், பொது அவலம் மீது ஒருபக்கமாக வெளிப்படுகின்றது. அதை அவரின் பேட்டி துல்லியமாக வெளிப்படுத்துகின்றது. அவர் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட வலதுசாரியம், சமூக நலனை முதன்மைபடுத்தியதல்ல. அடுத்த தொடரில் அவரின் கவிதைகள் சிலவற்றை எடுப்போம்.  
                  
தொடரும்

பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)