Language Selection

மா.நீனா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இடது அரசியல் சக்திகள் என அறியப்பட்ட நாவலன், அசோக் மற்றும் ஜரோப்பிய தமிழ் இணையதளமான இனியொரு ஆசிரியர் குழுவை சேர்ந்தவர்கள் குகநாதனை கடத்திய சம்பவத்தில்  ஈடுபட்டனரா, எவ்வளவு பணம் பெற்றுகொண்டனர், கடத்தலின் பின்னணி என்ன, மார்க்சிச இயக்கம், மற்றும் புலிகள் அமைப்புகளுக்கும், இக் கடத்தல் நடவடிக்கைக்கும் சம்பந்தமென்ன போன்ற விடயங்கள் இணையதளங்களில் சூடுபறக்க விவாதிக்கப்படுகிறது.

மேற்கண்ட கடத்தல் சம்பந்தமான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட இரு பகுதியினராலும், அதாவது நாவலன் குழுவினரும், குகநாதன் குடும்பமும் தமது தரப்பு நியாயங்களை உள்ளடக்கிய பதில்களை வழங்கிய வண்ணமுள்ளனர். இரு தரப்பும் அறிவு, பொருளாதாரம், அரசியல் வலைப்பின்னல் போன்ற அனைத்து விடயங்களிலும் வலுவான பின்னணியை கொண்டவர்கள்.

நாவலன் குழுவினர், பல இணையத்தளங்கள், வானொலி போன்ற தொடர்புசாதனங்களையும், இந்திய இடதுசாரி கட்சிகளின் தொடர்புடன் நேபாள கம்யூனிஸ்டுக்களுடன் அரசியல் ஒப்பந்தம் செய்யுமளவிற்கு அரசியல் பின்புலம் கொண்டவர்கள். மேலும் போலிஸ் கமிஷனரின் உதவியுடன் குகநாதனை கடத்தினோம் என்று பகிரங்கமாக கூறும் தமிழ் நாட்டு அதிகார மையங்களின் செல்லப்பிள்ளைகளான அருள்- சகோதரர்களுடன் நெருங்கிய உறவை பேணுபவர்கள்.

குகநாதனோ, மகிந்த-பாசிச அரசின் முதல்தர அடிவருடிகளில் ஒருவர். அது மட்டுமல்லாமல் இக்கடத்தல் நிகழ்வை பாவித்து, புலிகள் தான் தன்னை கடத்தினார்கள் என்ற பிரமையை இலங்கை அரசியல் சமுகத்தில் உருவாக்கி தனது நலன்களுக்காக மக்களையும் தேசத்தையும் காட்டிக் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மூடுமந்திரமாக இருபகுதியினராலும் மறைக்கப்பட முயற்சிக்கப்பட்ட இக்கடத்தல் நடவடிக்கை, தமிழரங்கத்தினால் அம்பலத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இவ் அம்பலப்பபடுத்தலால் அதிர்ச்சியில் உறைந்து போன இடதுசாரிகள் எனவும், புத்திசீவிகள் எனவும் தம்மை சமுகத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முயலும் பிரகஸ்பதிகள் சிலர் தமிழ்அரங்கத்தின் மீதும், அதன் எழுத்தாளர்களில் முன்னவருமான ரயாகரன் மீதும், எவ்வளவு கீழ்த்தரமாக தமது காழ்ப்புணர்வை  கொட்டிப் பழிதீர்க்க முடியுமோ, அந்த அளவுக்கு மூன்றாம்தரமான வார்த்தைகளாலும், உளவியல் நிலைகுன்றியவராக முத்திரைகுத்தியும், எழுதியும் வருகின்றனர்.

மேலும் நாவலனும் அவர் கூட்டாளிகளும் கடத்தலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறும்  தமிழ்அரங்கத்தினைக் கேட்கின்றனர். இவர்கள் "அப்பன் குதிருக்குள் இல்லை" என்றது போல அருள்-சகோதரர்களின் பதில் மூலமும், நாவலனின் பதில் மூலமும் அவர்களாகவே ஒத்துக்கொள்ளும் விடயங்களை கூட ஆதாரமாகக் கொள்ள மறுக்கின்றனர். ரயாகரனாலும், தமிழ் அரங்கத்தாலும் அம்பலமான இவ் விடயத்தை நாவலன் மீதான தனிமனித தாக்குதல் என வர்ணிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் தமிழ்அரங்கம் ஊடக தர்மத்தை மீறியதாகவும் கதையளக்கின்றனர்.

இதையே தான் நாவலனும் தனது  பின்னோட்டத்தில் எழுதுகிறார் "  ஒரு கட்சியின் உள்ளமைப்பில் முன்வைக்க வேண்டிய தனிநபர் சார்ந்த விமர்சனங்களை பொது மேடையில் முன்வைக்கப்படும் போது குறைந்தபட்ச நாகரீகமாவது அவதூறுக்காரரர்களிடம் இருப்பதில்லை. ஒரு விடயத்திற்குப் பதில் சொன்னால் இன்னொன்றைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்."
இவ் விடயத்தில் ரயாகரனும், தமிழ்அரங்கமும் எல்லாவித தர்மங்களுக்கும், அதாவது மார்க்சிச வாழ்வியலுக்கான தர்ம விதிகளானாலென்ன, முதலாளித்துவ ஜனநாயக, பூர்சுவா தர்மவிதிகளானாலென்ன அவை அனைத்திற்கும் ஏற்ற விதத்திலேயே நடந்து கொண்டுள்ளனர்.
 
இக்கடத்தல் விடயமானது ஒன்றும் நாவலனினதோ, அல்லது அசோக்கினதோ தனிப்பட்ட உள்வீட்டு பிரச்சனையோ அல்லது அவர்களது தனிப்பட்ட உடல் நலம் சார்ந்ததோ அல்ல. அரசியல் சார்ந்து ஊடகத்தொழில் செய்யும் இலங்கைத் தமிழன் ஒருவன், இந்தியப் போலிசின் உதவியுடன், கடத்தப்பட்டுள்ளார். போலிசின் உதவியுடன் இது நடந்திருந்தாலும், இது ஒரு வகை கட்டைப்பஞ்சாயத்து ஆகும். மேலும் இதில் ஈடுபட்ட நபர்கள், கடத்தப்பட்டவர் அனைவரும் ஊடக உலகத்தை சேர்ந்தவர்கள். சமுதாயம் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கிறது, என்ன நடக்கிறது, யார் யார் சமுகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என சமுகத்தின் வெட்டுமுகத்தை  வெளிப்படையாக காட்டுவதே ஊடகங்களின் தலையாய கடமை. ஆதிக்க சக்திகள், அதிகார மையங்கள் அதிகாரத்தை தவறாக பாவிக்கும்போது, அதை அம்பலப்படுத்துதன் மூலம்  ஜனநாயகத்தின் அடிப்படையை பாதுகாப்பதனாலேயே, ஊடகங்களை முதலாளித்துவ ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். இதன் அடிப்படையில் சமூகத்தின் சீரழிவுகள், தனிமனிதர்களால் அல்லது குழுசார்ந்த இலாபத்திற்காக நடாத்தப்படும் போது அதை வெளிக்கொண்டு வருவது ஊடகங்களின் கடமை. ஆகவே குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு வெளியில் மாபியாத் தனமாக, ஊடகம் சார்ந்தோரால் நடாத்தப்பட்ட இந்தக் கடத்தல் எப்படி நாவலனினதும், அசோக்கினதும் தனிப்பட்ட விடயமாகும்?

சில வேளைகளில் நான் மேல் கூறிய ஊடகங்களின் சமூகப் பொறுப்பு சம்பந்தமான வரையறை மேற்கத்தைய ஊடகங்களுக்கு மட்டுமே பொருந்துமென நாவலனின் பாதுகாவலர்கள் நினைக்கிறார்கள் போலும்.

நாவலனின் முன்னாள் நண்பர் தேசம் ஜெயபாலன் கூறுவது போல், நாவலன் குழுவினர் இக்கடத்தல் விவகாரம் தெரிந்தவுடன், தமக்கு எதுவும் நேரடியான பங்கு ஏதும் இல்லாவிடில்,  கடத்தப்பட்ட குகநாதனின் உயிருக்கு பங்கம் ஏற்படாத நிலையில் கடத்தலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.   அது மட்டுமல்லாமல் தமது இனியொரு குழுவில் உள்ள அருள் எழிலனை ஆசிரியர் குழுவிலிருந்தும் வெளியேற்றி இருக்க வேண்டும். இதை நாவலன் குழுவினர் செய்திருந்தால் பிரச்சனை இந்த மட்டும் வந்திருக்க முடியாது. இதைச் செய்யாமல் எல்லாத் தவறுக்கும் காரணம் ரயாகரனும் தமிழரங்கமுமே என இப்போது அவதூறு பரப்புவது எந்தவித தர்மத்துக்கும் ஒவ்வாத விடயம். மேலும் ரயாகரனும் தமிழ் அரங்கமுமே இவ் விடயத்தில் ஊடக தர்மத்தை நிலை நாட்டியுள்ளனர்.
 
அடுத்து ஊடக தர்மம் கதைக்கும் இவர்களுக்கு, நாவலன் வெளியிட்டுள்ள குகநாதனின் மனைவியுடனான தொலைபேசி சம்பாசனை, ஊடக தர்மத்தை சேற்றில் போட்டு மிதிக்கும் செயலாகப்படவில்லையா? ஜரோப்பிய நாடுகளின் சட்டத்தின்படி நாவலன் செய்தது தவறல்ல.  அதாவது ஒருவர் மற்றொருவருடன் உரையாடும் போது அதை பதிவு செய்ய முழு உரிமையும் உண்டு. ஆனால் அதை ஊடகத்தில் தனது எதிராளியின் குரலுடன் வெளியிட பதிந்தவர் எதிராளியின் அனுமதி பெற வேண்டும். இதற்கப்பால் சர்வதேச ஊடகதர்ம விதிகளின்படி இப்படியான பதிவுகள் சமூகரீதியான அழிவுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுப்பதற்காக, கடைசி ஆயுதமாக பாவிக்கப்பட வேண்டும் என்பதே முறைமையாகும். ஆனால்  நாவலன் குழுவினர் அப்பெண்ணுடனான  உரையாடலை வெளியிட்டுள்ளது எந்த சமுதாய அழிவை தடுத்து நிறுத்துவதற்காக?  மேலும் அப் பெண்மணி இச்சம்பவத்தில் மூன்றாவது நபர். அவர் செய்த ஒரே தவறு உலக மகா பொருளாதார-கிரிமினல் குகநாதனை கணவராக ஏற்றுக் கொண்டது தான். மேலும் அவர் நாவலன், அசோக் குழுவிடம் உதவி கேட்டிருந்தால் அது பற்றி வேறுவிதமாக நாவலன் வெளிப்படுத்தியிருக்க வேண்டுமே ஒழிய, அரை நித்திரையில் இருப்பவருடனான உரையாடல் மூலமல்ல.

மேலும் அப்பெண்ணை ஆணாதிக்கத்தனத்தில் நின்று நாவலன் ".....குகநாதனின் மனைவியிடம் இரண்டு தடவைகள் உரையாடினேன். அந்த உரையாடல்களை தவிர்க்க முடியாமல் பதிவுசெய்துள்ளேன். அப்பாவியான அந்தப் பெண்ணின் வாக்குமூலம் இங்கே பதிவிடப்படுகிறது...."  என தனது பதிவில் எழுதுகிறார். ஒருவரை அப்பாவி என விளிப்பது எனக்கு தெரிந்த தமிழின்படி ஒன்றும் தெரியாத வஞ்சகமற்ற, மனிதம் அல்லது அறிவு வளர்ச்சி குறைந்த மனிதம். இன்றைய நவீன உலகில் இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்பது பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்த நாவலனுக்கு தெரியாதா?

சரி, அப்படித்தான் அவர் அப்பாவியாக இருந்தால் ஒரு "அப்பாவி" உடனான உரையாடலை வெளியிடுவதும், ரயாகரனுக்கு எதிரான சாட்சியாக உபயோகிப்பதுவும் எந்த வகையில் நியாயம்???? இங்கு ரயாவை பொய்யன் ஆக்குவதற்கும், பழிவாங்குவதற்குமான முயற்சியில் நாவலன் குழுவின் சிந்தனைத் திறன் மழுங்கி விட்டதா ?

பாலியல்தொழில் செய்யும் பெண்களின் தனிமனித உரிமை அடிப்படையில் அவர்களை தொழிலாளர்களாக கருத வேண்டுமெனக் கோரும் பெண்ணியவாதிகளுக்கு ஏன் நாவலன் குழுவினரின் இந்த அசிங்கமான நடவடிக்கை, அப் பெண்ணின் தனிமனித உரிமை மீதான அத்துமீறலாகப்படவில்லை?   
 
தனிமனித நலன்களை அல்லது ஒரு குழுவின் நலனை பூர்த்தி செய்ய, சமுதாயத்தின் பெயரால், சமூகமாற்றத்தின் பெயரால், மார்க்சியத்தின் பெயரால் ஒருவர் அல்லது ஒரு குழு தமது செயல்பாடுகளை முன்னெடுக்கும்போது அதை தடுத்து நிறுத்தி மக்கள் அரங்கில் அம்பலப்படுத்துவது ஒரு இடதுசாரியின் முக்கியமான கடமை. அதை தான் ரயாவும், தமிழ் அரங்கமும் செய்துள்ளனர்.  அதன் அடிப்படையில் தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் ரயாவையோ, தமிழ் அரங்கத்தையோ எதுவும் செய்து விடப்போவதில்லை. ஆகவே, நாவலனும் குழுவினரும் பகிரங்க சுயவிமர்சனத்தை முன் வைத்துவிட்டு அரசியலில் ஈடுபடுவதே எதிர்கால தமிழ் இடதுசாரி அரசியல் வளர்ச்சிக்கு நல்லதாகும்.  

 

மா.நீனா