தமிழீழ கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், தமிழ் மக்களது உரிமைகளுக்கான போராட்டமும், இன்று முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இது ஏன் ஏவ்வாறு நடந்தது என்பது பற்றிய பல கட்டுரைகள் ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தோல்வியுற்ற போராட்ட வரலாற்றை மீளாய்வு செய்வது அவசியமற்றது என்ற கருத்துப் போக்கும் இன்று உள்ளது. இதை யார் ஏன் எதற்காக முன் வைக்கின்றார்கள்?; இவர்களின் அரசியல் பின்னணி தான் என்ன?

 
தமிழீழ கோரிக்கையை முன் வைத்தது உழைக்கும் மக்களல்ல. மாறாக தமிழ் குட்டி முதலாளிகளும், அவர்களின் பிரதிநிதிகளும் தான். இதை பரதிபலித்த அரசியல் கட்சியான கூட்டணியுமே. இவர்களின் நலனுக்கு பாதகமாக சிங்களத் தேசியவாதிகள் செயற்பட்டதன் விளைவாக, தமது நலனையும் தாம் கொண்ட இருப்புக்களையும் பாதுகாக்கும் பொருட்டு முன்வைக்கப்பட்ட கோசமே தமிழீழக் கோரிக்கை. இதன் அடிப்படையில் தமது நலன்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழ் குட்டி முதலாளிகளால் உருவாக்கப்பட்டதே ஆயுதம் தாக்கிய போராட்டக் குழுக்கள். இங்கு ஒரு சில இடதுசாரிக் குழுக்கள் இருந்த போதும், அவைகளும் தமது நிலைப்பாட்டில் தவறான முடிவுகளையே கால ஒட்டத்தில் எடுத்திருந்தன. இவ்வாறாக மக்களை சாராத தலைமைகளாலும் குழுக்களாலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது, ஏகாதபத்தியங்களின் கரங்களிலும் இந்தியாபிரந்திய நலனுக்குள்  சிக்குண்டு இறுதியில் சின்னா பின்னமாகி, இன்று ஒன்றுமற்ற வெறுமையாகி விட்டது. நாம் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீளாய்வு செய்யாது மீண்டும் அதே வடிவிலான போராட்டத்தை கட்டி அமைக்க முற்படுவது என்பது, இன்னும் ஒரு இன அழிப்பிற்கு வழிவகுக்கும். எனவே கடந்த கால போராட்டத்தின் தோல்வியினை மீளாய்வு செய்வது மிகவும் அவசியமாகின்றது.

இதனடிப்படையில் கடந்த காலங்களில் இந்தப் போரட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொரு அமைப்பினதும் தனிமனிதர்களினதும் போராட்ட வரலாற்றினையும் அனுபவங்களையும் தனிநபர்களின் வரலாற்றுப் பாத்திரங்களையும் பொது மக்களின் முன்னால் வைக்கப்பட வேணடும். அதனூடாக ஒவ்வொரு அமைப்புகளின் தவறுகளையும் மக்கள் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் ஒரு புரட்சிகர சக்தி தமிழ் முஸ்லீம் சிங்கள உழைக்கும் மக்கள் சார்பாக ஒரு போராட்டத்தை முன்னேடுக்கும் பட்சத்தில், அவர்களிற்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த  தவறுகள் நிட்சயமாக முன்பாடமாக அமையும்.

இதனை விடுத்து பழைய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையில்லை. அநாவசியமான செற்பாடு. நேரத்தை வீண்விரையம் செய்யும் செயற்பாடு. மக்களைக் குழுப்பும் செயற்பாடு. உண்மைக்கு புறம்பான செயற்பாடு. இது போன்ற அவதுறுகளை செய்வதனுடாக கடந்த கால துரோக அரசியலை மறைத்தும், தாமோ அல்லது தாம் சார்ந்த இயக்கங்களோ விட்ட தவறுகளை மறைத்தும், அரசியலின் பெயரால் தாம் செய்த படுகொலைகளை மறைத்தும், மீண்டும் உத்தம புத்திரர்களாக தம்மை அடையாளம் காட்டி அதற்கு மார்க்கியத்தை முலாமாகப் ப+சிவிட முனைகினர்.  மீண்டும் அதே தவறைச் செய்யத் துடிப்பவர்களே, எமது கடந்த கால மக்கள் விரோத அரசியலை மீளாய்வு செய்வதனை மறுப்பவர்கள் ஆவர்.

வரலாற்றை திரும்பிப் பார்க்கத் தேவையில்லை என்று கருதுபவர்கள் கடந்த கால வரலாற்றை மறுத்து தமக்கு சாதகமான புதிய வரலாறை படைக்கத் துடிப்பவர்களே. இதை இவர்கள் “முற்போக்கு” என்ற பெயரில் செய்கின்றார்கள். ஆனால் இதை முன்பு புலிகளும், அரசும் செய்யும் போது, வராலற்றை புலிகள் புதைக்கின்றனர் என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள் தான் இவர்கள். அப்போது அவர்களுக்கு நேரம் வீண் விரையமாகவில்லை. ஏனெனில் தம்மை மேதாவிகள் என்றும் முற்போக்கானவர்கள் என்றும் அடையாளம் காட்ட, அவைகள் தேவைப்பட்டன. ஆனால் அதை மற்றவர்கள் செய்யும் போது தமது முற்போக்கு முகமூடியும் பொய்மையான மேதாவித்தனமும் தகர்ந்து தமது நிலை ஈடாட்டம் காணும் போது, இதை மறுக்கின்றனர். இது இயல்பானது தான். இருப்பினும் சமூகத்தின் முன்னேறிய பகுதியினராக தம்மை அடையாளம் காட்டி இதை மறுப்பது தான் இங்கு கண்டிக்கப்படவும் அப்பலப்படுத்தப்படவும் வேண்டியதாக உள்ளது.

மக்களைக் குழப்பும் செயற்பாடு, உண்மைக்கு புறம்பான செயற்பாடு என ஓலம் இடுபவர்கள், எது மக்களைக் குழப்பும் செயற்பாடு என்பதை பார்க்கத் தவறுகின்றார்கள். நாம் மக்களைக் குழப்பும் செயற்பாட்டைத் தான் செய்கின்றோம். ஆம் பழைய பஞ்சாங்கங்களையும், பழைய வரலாறுகளையும் தனிமனிதனின் வரலாற்றுப் பாத்திரங்களையும் மீண்டும் கவணத்தில் எடுத்து அதை மீளாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், பழைய விடையங்களில் இருந்து புதியவற்றை வந்தடைய மீண்டும் குழப்புகின்றோம். ஆனால் இவைகள் உண்மைக்கு புறம்பான செயற்பாடுகள் என்பது தான், இங்கு தவறான அவதுறுப் பிரச்சாரம் ஆகும்.

எது உண்மைக்கு புறம்பானது என்பதை எந்த வகையிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்ட முடியாதவர்கள்;, தம்மை திரைக்குப் பின்னால் மறைத்தபடி இது உண்மை இல்லை பொய் என்று பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை இல்லை என்றால் எது உண்மையோ, அதை முன் வையுங்கள். நாம் கூறுவது தவறாக இருந்தால் சுயவிமர்சனத்துடன் நாம் திருந்தவும் அல்லது எம்மை அப்பலப்படுத்தவும் உங்களுக்கு வாய்ப்பு உண்டு அல்லவா? நாம் கடந்த கால மக்கள் விரோத அரசியலை தொகுத்து அதை எழுத்துருவில் பதிவில் ஏற்றுகின்றோம்.

முன்னைய போராட்டத்தில் எதோ ஒரு விதத்தில் அன்று சம்பந்தப்பட்ட நாம் ஒவ்வோருவரும் தவறிழைத்து தான் உள்ளோம். இது தெரிந்தோ அல்லது தெரியாமலே நிகழ்ந்ததாகும். தாம்; செய்த தவற்றினை தாம் தான் செய்தது என்று கூறக் கூட வக்கற்றவர்கள், எவ்வாறு மற்றவர்களை பார்த்து நீ அதைச் செய்தாய் இதைச் செய்தாய் என்று கூறுவார்கள். இதை மறுக்க முயல்பவர்களே இந்தப் பிரச்சாரப் பீரங்கிகள்.

இன்று ஐயரின் வரலாற்றுப் பதிப்பும், றயாகரனால் எழுதப்படும் பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பான பார்வை, புலிகளின் வதைமுகாமில் நான்  மற்றும் சிவா சின்னப் பொடியால் எழுதப்பட்ட காந்தி தேசத்தின் மறுபக்கம், ....... போன்ற பல கட்டுரைகள் தம்மை மையப்படுத்தியே எழுதப்பட்டன- எழுதப்படுகின்றன. இங்கு இவர்கள் தம்மை தம்பட்டம் அடிக்கவி;ல்லை. மாறாக தமது பார்வையில் கடந்த கால மக்கள் விரோத அரசியலை முன் வைக்கின்றனர். இதை செய்யாது, இவற்றினை எழுதுவதினை கை விடக்கோரும் நபர்களோ அன்றி குழுக்களோ, உண்மையில் மக்கள் நலன் கொண்டவர்களா? இ;ல்லை மாறாக தன்னலன் கொண்ட பெருச்சாலிகள்.

இவை ஒருபுறமிருக்க கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாது, அதை தனிப்பட்ட தாக்குதல் என்ற பதத்தில் குறுக்கி, மக்களை ஏமாற்ற முனைபவர்கள் பலர் இன்று உள்ளனர். இவர்கள் தனிப்பட்ட தாக்குதல் என்றால், என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் இந்த சழூகத்தின் முன்னால் வைக்கும் கருத்தோ அல்லது சமூக அக்கறை கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒருவர், இச்சமூகத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் நடக்கும்; எந்த நடவடிக்கையையும் விமர்சிப்பது அல்லது மக்கள் முன் கொண்டு வருவது தனிப்பட்ட தாக்குதல் என்று கூறுவது வேடிக்கையான ஒரு விடையமே.

தனிப்பட்ட தாக்குதல் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட தாக்குதல் என்றால், ஒரு தனி மனிதன் என்ன செய்கின்றான், அவனது குடும்ப நிலை என்ன, அவன் குடும்பத்தில் செய்யும் செயற்பாடுகள் தான் என்ன என்பதை பற்றி கூறுதலே. ஆனால் இதை சமூக அக்கறை கொண்டவர்கள் மீது முன் வைக்கப்பட வேண்டி அவசியம் உள்ளது. சமூகத்தை மாற்றி அமைப்பதாகக் கூறி தமது சுய வாழ்கையில் பல தில்லு முல்லுக்களை செய்துபடி, மக்கள் முன் சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக எனக் கூறியபடி தாம் மக்களை ஏமாற்றுவதற்காகவும் எடுத்துக் கொள்ளும் முயற்சியை, மற்றவர்கள் கண்டிறிந்து வெளிக் கொண்டுவந்தால் அது தனிமனித தாக்குதல் என்று கூறி தப்பமுயல்கின்றனர் இந்தப் பச்சோந்திகள்.

தற்போது இதற்கும் மேலாக ஒருபடி சென்று சட்ட நடைமுறை எடுக்கப்போவதாக மிரட்டல். கருத்தை கருத்தாலோ அல்லது தம் கருத்தினை மக்களுக்கு போலியாக சொல்லி, தன் நலனில் நின்று செயற்படும் கூட்டம் எப்போதும் ஏதாவது ஒரு வழிமுறையை நாடி நிற்பது என்று புதிதான விடையம் அல்ல. சட்ட ரீதியாக அணுகுவது என முடிவெடுத்தால் அதை இணையத்தில் எழுதி பூச்சாண்டி  காட்டத் தேவையில்லை. முதலாளித்துவ சட்டம் என்பது முதலாளித்துவ வாதிகளுக்கு என்றும் கைகொடுக்கும் தானே. இது ஒன்றும் புதிதல்லவே. எந்த புரட்சிகர சக்தியை இந்த முதலாளித்துவ சட்டம் விட்டு வைத்திருக்கின்றது! தாம் புரட்சியாளர்கள் என்று செல்லி முதலாளித்துவ சட்டத்தை நாடுபவர்களின் புரட்சி முகம் இது தான் என்பதை, இலகுவில் கண்டறிந்து கொள்ளலாம்.

தான் செய்ததையும், சொல்வதையும் மறுக்கும்; புரட்சியாளர்கள் இன்று எமது சமூகத்தில் பலர் உண்டு. அவர்களை இனங்கண்டு அப்பலப்படுத்துவதும் இன்றைய ஒரு அரசியல் வேலை முறைதான். பல சட்ட விரோதமான செயல்களையும், சமூக விரோதச் செயல்களையும் செய்பவர்கள், தம்மை புரட்சியாளர்கள் என்று கூறி வலம்வரும் போது அவர்களை அம்பலப்படுத்தாமல் விட முடியுமா? இது எவராயினும் அம்பலப்படுத்துவது அவசியமாகின்றது. ஓரு மக்கள் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கோ சமூக சிந்தனையாளர்களுக்கோ இரண்டு வகையான வாழ்கை இல்லை. அவனது கருத்துகளில் இருந்துதான், அவனது தனிபட்ட வாழ்கையும் அமைய வேண்டும். இதை மறுப்பவர்களும், இதை தனிநபர் தாக்குதல் என்பவர்களும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்வார்கள். யார் இவர்கள்? மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பவர்களே.

கம்யூனிசத்த தத்துவம் என்பது பாடப்புத்தகத்திற்கானது அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இதில் தனிப்பட்ட வாழ்வு வேறு அரசியல் வாழ்வு வேறு என இரண்டு பக்கங்கள் இருக்க முடியாது. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டிற்கு ஒரே ஒரு வாழ்வு தாணுண்டு அது மக்கள் நலனை உயர்த்தி பிடித்து முன்மாதிhயாக வாழுதலே.

சீலன்
09.09.2010