06082023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மூளையெல்லாம், முஸ்லிம் காங்கிரஸ் மூளை போலகுமா?

மகிந்த ‘ஆசை’யில் வந்த அக்கறை மக்கள் அபிலாசையில் இல்லை!

மகிந்தாவிற்கு அண்மைக்காலமாக சில சின்னச் சின்னச் ஆசைகள்!. இப்போ அதை முஸ்லிம் காங்கிரஸ் தீர்த்து வைத்துள்ளது. கொஞ்ச நாளாக ரணிலும்–மகிந்தாவும் அடிக்கடி அவசரச—அவசரமாக சந்திப்பார்கள். கேட்டால் நிறை வேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவிக்காக என்பார்கள். கடைசிச் சந்திப்பில் மகிந்தா தன் உள்ளக்கிடக்கையை ( 3-வது தடவையும் ஜனாதிபதியாக தொடர) சொல்லியதில் ரணில்–மகிந்த காதல் முறிந்தே போயிற்று. இப்போ ஏற்பட்ட கக்கீம்–மகிந்தக் காதலில், மலர்ந்த தேன் நிலவில்–மகிந்தா தன் அரசியல் உச்சக்கட்ட ‘உச்சாடானத்தை’யே அடைந்து விட்டார். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தாவின் ‘சின்னவீடாகி’யுள்ளது!. அதற்கேற்ப அது தன் ‘அரசியல் விபச்சாரத்தை’ ஆரம்பித்தள்ளது. அதை ரவூப் கக்கீமே சொல்கின்றார்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தொடர்ந்தும் எதிரணி அரசியல் கட்சியாகவே செயற்படும் ‐ ரவூப் ஹக்கீம்‐

அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தொடர்ந்தும் எதிரணி அரசியல் கட்சியாகவே செயற்படும் என அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து அவர்இ ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் அதியுயர் பீடம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஹக்கீம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போதே ஹக்கீம், தமது கட்சியின் தீர்மானம் குறித்து, கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை சந்தித்து நடத்திய தெரியப்படுத்தியுள்ளார்.

இது எதைதான் காட்டுகின்றது. நான் வெளியில் இருந்து கொள்கின்றேன். உங்களுக்கு தேவைப்படும் (மூன்றில் இரண்டிற்கு) போது என்னை அழைத்தால், நான் உங்களின் அரசியல் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்து விடுகின்றேன் என்ற ‘சின்ன வீட்டு’ தத்துவம் அல்லவோ சொல்கின்றார். சொல்வதென்ன, முஸ்லிம் காஙகிரஸின் எதிர்காலச் செயலும் அது தானே!. இவர் கடந்த காலங்களில், தன் புதுக் காதலன் பற்றியும், அவரின் குடும்ப அரசியல் பற்றியும் என்ன என்னவோ எல்லாம் சொன்னார்.

“இந்த நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்” “இலங்கையின் அடுத்த பாராளுமன்றம் மிகவும் ஆபத்தானது” என்றார். அத்தோடு நிற்கவில்லை. அதற்கப்பாலும் சென்று…

“ஈழவாதிகள் அல்லாத நாடாளுமன்றம் ஒன்றை ஜனாதிபதி கேட்கின்றார். இப்போது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பூரண அமைதி ஏற்பட்டுள்ளது. எனவே அவரது மொழியில் கூறும் ஈழவாதிகள் இந்நாட்டு சிறுபான்மை இனங்களே.

ஜனாதிபதி வேண்டி நிற்பது தனிப் பெரும்பான்மை இனத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம் ஒன்றையேயாகும். இதற்கான திட்டத்தை வகுத்து சிறுபான்மையினரை முட்டி மோத விட்டுப் பிரித்தாளும் ஓர் ஆட்சியே இன்று நடைபெறுகிறது. இதற்காக வேண்டியே புதுப்புது அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு 116 அமைச்சர்களை வைத்து ஆட்சி நடத்தப்பட இருக்கிறது.

இதன் அடுத்த கட்ட அரங்கேற்றமே சிறுபான்மை இனங்களில் பிரதிநிதித்துவத்தை கூறுபோட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டு தொகுதி வாரிமுறை என்ற போர்வையில் வட கிழக்குக்கு வெளியேயுள்ள சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதாகும்.

இதுபோன்று பல விசித்திரங்கள் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே ஆபத்தான நாடாளுமன்றத்தில் அவதானமாக நடந்துகொள்ளக் கூடியவர்களையே நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்” என்றார்.

என்னே தத்துவம்!. என்னே போதனைகள்!. உங்கள் ஊடலால் ஏற்படப்போகும் மூன்றில் இரண்டால், எனி மேல் தான் பல விசித்திரங்கள் நிகழவுள்ளன. அது தான் போகட்டும் உங்கள் தேன் நிலவின்போது, உங்கள் காதலனால், அவர் குடும்பத்தால் அடக்கியொடுக்கப்படும் தமிழ்–முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள்–அவர்களின் அபிலாசைகள் பற்றி ஏதாவது கதைத்தீர்களா? இல்லவே இல்லை! குறைந்தபட்சம் ‘தலையணை மந்திரமாவது’ சீ…அதுவும் இல்லை! கடந்த காலங்களில் தமிழ்–முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்த—ஓர் தார்மீகப் பொறுப்புள்ள கட்சியாக காட்டிக் கொண்ட நீங்கள், மூன்றில் இரண்டிற்கும், மூன்றாவது தடைவயாக வெற்றிவாகை சூடுவதற்கும் காட்டும் அக்கறை, தமிழ்-முஸலிம் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதில் காட்டவில்லையே?. இதனால் உங்களை மகிந்தாவின் ‘சின்னவீட்டு’ அரசியலாளர்கள் என்றழைப்பதில் என்ன தவறுண்டு?


**********************

அரசியல் அமைப்புச் சட்டம் – ஜனாதிபதி பொய்யை கூறும் நபர் ‐ அவர் எப்படியான குற்றங்களையும் மேற்கொள்ள முடியும்? சோமவன்ச எதிர்காலத்தில் நடக்க போவதை உணர்ந்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக உபகரணங்களை சேர்ப்பதற்காக அவசர அவசரமாக அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.வீ.பீயின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இந்த அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு நாள் மாத்திரமே விவாதிக்கப்படவுள்ளது. அரசியலமைப்புத் திருத்தங்கள் பெரியதா சிறியதா என எவரும் கருதுவதில்லை. அது நாட்டின் முக்கிய ஆவணமாகும்.

இதனால் அரசியலமைப்பில் ஒரு எழுத்தை மாற்றியக்க வேண்டும் என்றாலும் அது குறித்து நாட்டு மக்கள், புத்திஜீவிகள், அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனினும் அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து விவாதிக்கும் காலத்தை குறைப்பதற்கு தேவையான அனைத்து தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி வருகிறது.

இதன் மூலம் அரசியலமைப்புத் திருத்தங்களின் நோக்கம் தெளிவாகியுள்ளது. புதிய அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்க கால எல்லைகள் இல்லாமல் செய்யப்படும்.

17வது அரசியலமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படும். இந்த இரண்டு விடயங்கள் குறித்து ஆராயும் போதே, அதில் உள்ள ஆபத்தான நிலைமை புலப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக எம்மிடம் வாக்குறுதி வழங்கினார். எனினும் தற்போது, நான் எப்போது அந்த வாக்குறுதியை வழங்கினேன் எனக் கூறுகிறார். இப்படியான பொய்யை கூறும் நபர் எப்படியான குற்றங்களையும் மேற்கொள்ள முடியும்?.

புதிய அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது. சுதந்திரமான தேர்தலை நடத்த முடியாது போகும். சுதந்திரமான தேர்தலை நடத்தக் கூடிய சுயாதீன தேர்தல் ஆணைக்குழுஇ காவற்துறை ஆணைக்குழு, சுயாதீன அரச சேவை ஆணைக்குழு என்பன இல்லாதொழிக்கப்படும். இதனால் அரச ஊழியர்களை அரசியல்மயப்படுத்தப்படுவர். ஜனாதிபதியின் கீழ் அமைச்சரவை சுதந்திரமாக செயற்படுவதில்லை.

அமைச்சரவையில் உள்ளவர்கள் வெறும் பொம்மைகள். ஜனாதிபதிக்கு தேவையானவற்றை அவர்கள் மேற்கொள்கின்றனர் எனவும் சோமவன்ஸ அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

இங்கு சிறிதுங்க ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரத்தை நீடித்துக் கொள்வதற்கு அதேநேரம் அரசியலமைப்பில் 18 ஆவது தடவையாகவும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அவரது மஹிந்த சிந்தனையில் எங்கும் குறிப்பிடப் படவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது நாட்டு மக்களிடம் பொய்காரராகியுள்ளார். அவரால் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் மிகவும் பயங்கரமானவை. இவற்றால் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பே தவிர எந்த நன்மையும் கிடையாது. நாட்டுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்துகின்றதான இந்த யோசனைகள் பாராளுமமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற தினமான 8 ஆம் திகதியை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு நாம் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் அன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள சகலரும் இதில் கலந்து நாட்டு மக்களின் எதிர்ப்பினையும் வெளிக்காட்ட முன்வருவோம் என்றார்.

இங்கு கருத்து தெவித்த இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கூறுகையில்,

ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த 18 ஆவது திருத்த யோசனைகளின் மூலம் மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் எதுவும் இல்லை. இதில் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.

அதுமட்டுமல்லாது வடக்கு கிழக்கு மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் இன்னும் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குமான அதீத பலத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த யோசனைகள் அமைந்துள்ளன என்றார்.

***********************

அமைச்சர்கள் மக்களின் சேவகர்கள் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

அமைச்சர்கள் மக்களின் சேவகர்கள் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், ஆளுனர்கள், அராங்க அதிபர்கள், மாகாணத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களை அரசர்களாகவோ அல்லது அரசிகளாகவோ கருதக் கூடாது எனவும், அவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் தியவடன நிலைமைகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார், அரசாங்க அதிகாரிகள் நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஹாரை மற்றும் தேவாலயங்களின் சொத்துக்கள் உரிய முறையில் பேணப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தகையே! தங்களின் அன்பு—கருணை—ஜீவகாருண்ணியம், அதனிலும் மேலான மக்கள் சேவகம் பற்றிய உபந்நியாசங்களைக் கேட்க புல்லரிக்கின்றது. இதனால் தான் உந்தப் பென்னாம் பெரியவர்கள் எல்லாம் உங்களின் பாசறை நோக்கிப் படையெடுக்கின்றனரோ? பல்லாண்டு பல்லாண்டு தங்களின் மனுதர்ம ஆட்சி தொடர உங்கள் தொங்கு தசையாகின்றனரோ?

 
*****

இலங்கையர்களாக இருக்கத் தமிழை விட்டுக்கொடோம், தமிழர்களாக இருக்க இலங்கையை விட்டுக்கொடோம். அதுவே தமது கட்சியின் இலட்சியம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட் சியமாகக் கருதுகி றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம்.
கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் நேற்றுச் சாட்சியமளித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
அவரது நீண்ட சாட்சியத்தின் சில பகுதிகள் வருமாறு:

இந்த நாட்டின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்கள் உறுதியான கரங்களை நீட்டி அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களும் பொதுவான சமூக பொருளாதா ரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமை கள் செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும், இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம் அழைப்பு விடுகின்றோம்.
மௌன இடைவெளி நீக்கப்படவேண்டும்.

கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரி கின்றது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாபூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதே போலவே சாதா ரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயை புணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்பட வேயில்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமல் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத இலங் கைய ஏற்படுத்தலாம்.

நாங்கள் முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து எமது இனக்குழும அடையா ளத்தையும் இணைத்து போற்றிக் கொள் வோம். தமிழரைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதையே எமது இலட்சியமாகக் கருதுகின்றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டு விட இலங்கைத் தமிழர்களான நாம் ஒப்புக்கொள்ளவேமாட் டோம். இது உறுதி.
ஆரம்பகால ஆட்சியாளர்களாலும், சில சுயநல தமிழ்த் தலைவர்களாலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப் பட்ட இன, மத முரண்பாடு என்ற சூழ்ச்சி களுக்குள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சிக்குண்டு கிடந்த பழைய வரலாறுகளை நாம் மறப்போம்.

இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ்மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் என்பது சிங்கள சகோதர மக்களுக்கோ அன்றி முஸ் லிம் சகோதர மக்களுக்கோ விரோதமான விடயம் அல்ல என்ற உண்மை சகல தரப் பாலும் உணரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

ஜனநாயக நீரோட்டமே! மிக மிக அருமையான சாட்சியம். சகலதரப்பாலும் உணரப்படவேண்டும் என்பதும் உண்மையே! தாங்கள் எத்தனை தடைவ உந்த ‘உணரப்படுதலை’ சிங்கள மக்கள் மத்தியில் சொல்லியிருப்பீர்கள். முதலில் இதை உங்கள் குடும்ப ஆட்சியினருக்கு உணரச்செய்தாலே, உங்கள் சாட்சியத்தின் பயன்பாடு பெரும் வெற்றியளிக்கும்!

 
*******************

வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் –சிவசக்தி ஆனந்தன்

 வடபகுதியில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் மீள்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் கீழ்வரும் பிரச்சினைகளைத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

1. மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு வசதிகள் தொடர்பாக

தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மீள்குடியேறிய மக்களின் குடியிருப்புக்களை மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக நிரந்தர வீடுகளை அமைத்து அல்லது கொட்டைகைகளைப் பலமாக்கிக் கட்டித்தர ஆவன செய்யவும்.

2. நன்னீர் மீன்பிடிப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக் மைந்துள்ள மாளிகை, சேமமடு முதலான குளங்களில் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று மீன்பிடியில் ஈடுபடுவோர் குளத்தில் வளர்ந்து வரும் சிறிய மற்றும் பெரிய மீன்களை மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி பெருமளவில் அள்ளிச் செல்கின்றனர். அத்துடன் அங்கு மீள்குடியோர் சிறியளவில் தமது உணவுத்தேவைகளுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இங்கு கடமையில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர் மீள்குடியேறியோர் மீது மேற்கொள்ளும் இத்தகைய தடையை நீக்கவும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஏதுவான நடவடிக்கையினை மேற்கொள்ளவும்.

3. வானகங்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப்பத்திர நடைமுறையை தளர்த்துங்கள்

அத்தியாவசியப் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குக்கூட விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பமைச்சு அனுமதிப்பத்திர முறையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியோர் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

அரிசி, சோடா மற்றும் சவர்க்காரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உட்பட தொலைத்தொடர்பு சேவை மற்றும் அரச, அரசார்பற்ற தனியார் வாகனங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்நுழைவு அனுமதிப் பத்திரங்களைப் பாதுகாப்பமைச்சில் பெறவேண்டிய நடைமுறையினை இரத்துச் செய்து பாதிக்கப்பட்ட மீள்குடியேறியோர் மற்றும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்திடுக.

4. துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் (Shot Gun License) வழங்குதல்

மேட்டு நில காணிகள் மற்றும் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மீள்குடியோர் யானை, பன்றி போன்ற காட்டு மிருகங்களால் பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டு உயிர் ஆபத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.


மீள் குடியேற்ற மக்களின் வாழ்வு கொடுமை நிறைந்தது!. அம்மக்கள் வாழ்வு சட்டியில் இருந்து அடுப்பிற்குளள் விழுந்த நிலையாகவே உள்ளது. அவர்கள் பூமியின் வாழ்வாதாரங்களை பிற மாவட்டத்தவரும், படையினரும் பகிர்ந்துகொள்கின்றனர். அரச அனுமதிப் பத்திர சீரழிவுகளால், அதனூடே ஏற்படும் சீரற்ற போக்குவரத்துத் தடைகளால், அம்மக்கள் காலாவதியான தரமற்ற உணவுப் பொருட்களையே உட்கொள்கின்றார்கள். இம்மக்களின் மீள்ப் புனர்வாழ்வு எப்போ—யாரால் ஏற்படப்போகின்றது? எல்லாம் ஏட்டுச்சுரைக்காய் போலுள்ளது.

*****************

இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் திகதியிடப்பட்ட மரணச் சான்றிதழ்கள்! வன்னியில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் மரணச் சான்றிதழ்கள் அவர்கள் மரணமான திகதிக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னாலுள்ள திகதியில் பதியப்படுகின்றது.

வன்னியில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற கடந்த ஆண்டு 5ம் மாதப் பகுதியில் அதிகளவான தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனினும் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்கள் 3ம் மாதம் புலிகளின் கட்டுப்பாடு இருந்தகாலத்தில் நடைபெற்றதாக பதியப்படுகின்றன.

இது போன்ற சம்பவம் கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள ஒருவருக்கு நடைபெற்றுள்ளது. இவருடைய கணவர் உட்பட ஜவர் கடந்த ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி செல்வீச்சில் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் மரணச்சான்றிதழ் 3ம் மாதத்தில் கொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.

இது குறித்துக் கேட்டபோது தமக்கு அப்படித்தான் பதியும் படி மேலிடம் கூறியுள்ளதாக மரண விசாரணை அதிகாரியும் கிராமசேவகரும் கூறியுள்ளனர்.

இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களின் தொகையை குறைத்துக்காட்டும் நோக்கிலும், சர்வதேசத்தினால் முன்வைக்கப்படும் போர்க்குற்றங்களிலும் இருந்து தப்பிக்கவுமே இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக மக்கள் பலரும் கூறுகின்றனர்.

நல்லவேளை இவர்கள் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும், இளைஞர்–யுவதிகளை வயோதிபர்களாகவும் பதிவு செய்யவில்லை! இருந்தாலும் தயவுசெய்து சரிபாருங்கள்.!


*************************

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? தமிழகத்தில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வோர் மீது (உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்) கடுமையான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அடியாட்கள் ஆட்டோவில் உருட்டுக் கட்டைகளுடன் வந்து தாக்கும் சம்பவங்கள் ஜெயலலிதா ஆட்சியில் மட்டுமல்ல, திமுக ஆட்சியிலும் அரங்கேறும் என்பதை தமிழக மக்களுக்கு பறைசாற்றும் வகையில் பழ. கருப்பையா மீதான தாக்குதல் அரங்கேறியுள்ளது!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து கடுமையான விமர்சனங்களை ஜெயா டி.வி. பேட்டியில் பழ. கருப்பையா வெளிப்படுத்தியதை தொடர்ந்து தான் இந்தத் தாக்குதல்!. அதேபோன்று, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய முயன்ற பலரும் பல விதங்களில் மிரட்டப்பட்டனர். பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்.

ஈழ படு கொலைகளைக் கண்டித்து மாநாடு தொடர்பான மாற்றுக் கருத்துக்களுடன் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தோர், மொபைலில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியோர் என பலரும் பல விதங்களில் அரசின் அதிகார வர்க்கத்தால் பாதிப்புக்குள்ளாயினர்.

முதல்வர் கலைஞர் அரசின் செயல்பாடு குறித்து பத்திரிகை ஒன்றில் விமர்சனம் செய்து கட்டுரை எழுதிய காரணத்தால் தமிழருவி மணியன் குடியிருந்த அரசு குடியிருப்பு வீட்டை காலி செய்யச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்.

மதுரையில் கல்குவாரிகளில் நடைபெறும் ஊழல்களை சட்ட விரோதக் காரியங்களை பத்திரிகை செய்தியாக வெளியிட்ட காரணத்தால் தினபூமி நாளிதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு மிரட்டலுக்குள்ளானார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் கலைஞர் பங்கேற்ற நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் வகையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்திலேயே முதல்வர் கலைஞர், நீதிபதிகள் கண் முன்னாலேயே கடுமையாகத் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடும் நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயத்திற்குள்ளாயினர்.

தமிழகத்தில் ‘கேபிள் டிவி’ மூலம் மாதாமாதம் பல ஆயிரம் கோடியை குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன. அந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசால் கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் துவங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் அதன் இயக்குனராக இருந்தார். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கேபிள் டிவி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற காரணத்தால் அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு பல சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

‘சவுக்கு’ என்ற இணைய தளத்தில் தமிழகத்தின் பிரபலமான சிலரின் தவறான நடவடிக்கைகள் குறித்தும், அரசின் பாரபட்சம் குறித்தும் விமர்சனம் செய்து கட்டுரை எழுதியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இப்படி தொடர்ச்சியாக அரங்கேறும் சம்பவங்கள் ‘கருத்துரிமை’ குறித்த கேள்வியை தமிழக சிந்தனையாளர்களிடம் எழுப்பியுள்ளது.

அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் அரங்கேற்றப்படுகிறது. தமிழக அரசு குறித்து எந்த விமர்சனமும் எவரும் செய்ய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் விமர்சனம் செய்வோர் குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். தொலை பேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. ‘ம்’ என்றாலே சிறைவாசம்! என்ற நிலை தொடர்ந்தால், திமுக ஆட்சி தொடர தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.


*******************

தமிழகத்திலும் மாவோயிஸ்ட் வன்முறையைத் தூண்ட முயற்சி: கருணாநிதி சில மாநிலங்களில் உள்ளதைப்போல தமிழகத்திலும் மாவோயிஸ்ட் தாக்குதல்இ வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட திட்டமிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் தங்களின் மாவோயிஸ்ட் புலுடா புஸ்வாணமாக, இப்போ அடுத்தொரு புலுடாவோ? உங்கள் முற்போக்குக் கூட்டணியில் உள்ள மம்தா அம்மாவின் தோழர்களே மாவோயிஸட்டுக்கள். இதை பிரணாப் முகர்ஜியே ஒப்புக்கொண்டுள்ளார். அப்போ அம்மாவின் சொல்லை மீறி தமிழகத் தாக்குதலோ? நீங்கள் வேடிக்கை அரசியலாளர் அல்லவா! தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல புலுடா வேடிக்கைகள் காட்டுவீர்கள்!


******************

இஸ்ரேலிய சிறைகளில் வதைக்கப்படும் சிறுவர்கள் நஸ்ரத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் இளஞ் சிறார்களுக்கெதிராக ஷின் பெட் எனப்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கடும் வன்முறைகளைப் பிரயோகித்து வருவதாக சிறுவர் பாதுகாப்புக்கான சர்வதேச அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களும், அவர்களில் சிறு தவறிழைத்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களும் கூட மிகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் மேற்படி அமைப்பு கருத்துரைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை (18.08.2010) மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை ஜூலை 2 ஆம் திகதி மேற்குக்கரைப் பிரதேசத்திலுள்ள யிட்ஸார் யூதக் குடியேற்றத்திற்கருகில் தீ மூட்டினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் உஸைர் நகரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைக் கைதுசெய்துள்ளது என்றும், இச் சிறுவர்கள் மூன்று வாரகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெட்டாஹ் டெக்வாவிலுள்ள ஷின் பெட் தலைமையகத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க:

15, 16 வயதுடைய இச் சிறுவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புப் படையினரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூன்று வாரகாலம் ஜன்னல்களோ போதிய காற்றோட்டமோ அற்ற மிகக் குறுகலான இருட்டறைகளில் அவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தச் சிறுவர்களுக்குப் போதிய உணவு வழங்கப்படாததோடு, ஒருநாளைக்கு அரைமணிநேரம் மட்டுமே அறையை விட்டு வெளியேற அனுமதியளிக்கப்பட்டிருந்தது. சிறைப்படுத்தப்பட்டிருந்த மூன்று வாரங்களில் ஒரே ஒருதரம் தமது உறவினர்களைச் சந்திக்க அனுமதி கிடைத்தபோதிலும், நேருக்கு நேர் பேசிக்கொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வாரகாலத்தின் பின்னர் சம்பவ தினத்தன்று மேற்படி சிறுவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்தில் இருந்துள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவந்ததில் மேலதிக விசாரணைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். நிரபராதிகளான இரண்டு சிறுவர்கள் இவ்விதம் நியாயமற்ற முறையில் தண்டனைக்குள்ளாக்கப்பட்டமை குறித்து மேற்படி அமைப்பு தன்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல நியாயத்துக்குப் புறம்பாக பலஸ்தீனை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற குலைநடுக்கத்தினால் கைக்குழந்தை, சிறுவர், தொண்டுகிழவர் என்று யாரைக்கண்டாலும் குற்றவாளிகளாக, சந்தேக நபர்களாகப் புலப்படுகின்றனர். இந்நிலையில் பள்ளிசெல்லும் வயதிலுள்ள ஏராளமான சிறுவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது- தகவல் freepalastine


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்