ஆயுதத்தை எடுக்க செல்ல முன், ஒரு சாரத்தை தந்தனர். சிறிது நேரத்தில் எனது கண் கட்டப்பட்டது. கை கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றினர். பின் காலைக் கட்டி, வாயைக் கட்டினர். என்னை வானின் பின்புறத் தரையில் படுக்கவிட்டனர். நான் படுத்த இடத்தில் பொலீத்தின் காணப்பட்டது. எனக்கு புதிய கேள்வியாக, ஏன் இந்த பொலீத்தின் என்ற சந்தேகம் எழுந்தது. நான் காட்டும் பொருளை எடுத்த பின்பு, என்னைச் சுட்டு உடலைக் கொண்டுவந்து புதைக்க இந்த பொலீத்தின் தேவைப்படுகின்றதோ என்று எண்ணினேன். எனது அசைவின் தொடு உணர்ச்சி மூலம், வானில் மண்வெட்டி மற்றும் பிக்கான் கூட இருப்பதை தெரிந்து கொண்டேன்.
சிறிது நேரத்தில் வான் வேகமாக ஓடத்தொடங்கியது. ஆரம்பத்தில் வான் இடைக்கிடை நின்று, தாம் புலிகள் என்று கூறிச் செல்வதைக் கேட்க முடிந்தது. முக்கிய சந்திகளில் இரவுக் காவலில் புலிகள் நிற்பது வழக்கம். ஆனால் அன்று மல்லாகத்துக்கு அப்பால் புலிகள் இரவுக் காவல் இருக்கவில்லை. இதை வான் இறுதியாக நின்ற இடத்தை வைத்து, ஊகித்துக் கொண்டேன். வான் அரை மணி நேரம் கழித்து, நான் குறிப்பிட்ட இடத்தில் வான் வந்து நின்றது. எனது கால் அவிழ்க்கப்பட்டது. கண் அவிழ்க்கப்பட்டது. அவர்களில் ஆறு பேர் இருந்தனர். சலீம் பொய்த் தலைமுடியை போட்டிருந்தான். அவரை இலகுவாக யாரும் அடையாளம் காண்பது இலகுவானது. அவரின் தலைமயிர் நரைத்த தன்மை கொண்டது. வானில் வந்தவர்கள் துருப்பிடித்த வாள், கத்தி, கோடாலி என வழக்கத்துக்கு மாறாக கொண்டு வந்தனர். அங்கு இருக்கும் வீட்டுக்காரரை புலிகள் அல்ல என்று திசை திருப்பவே, இதைக் கையாண்டனர். அவர்கள் அங்கிருந்தவர்களிடம் தாம் என்.எல்.எப்.ரி என்று கூறியபடியே, அவர்களை ஆயுதமுனையில் கட்டுப்படுத்தினர். அன்று எதிர்பாராத விதமாக அந்த வீட்டில் 25க்கு மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இராணுவம் காங்கேசன்துறையில் இருந்து வீசிய செல்லால் குடிபெயர்ந்த மக்கள், அந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தனர். இதனால் ஒரு ஊசலாட்டமான, கடத்தியது புலிகளல்ல என்ற அபிப்பிராயத்தை அவர்கள் மூலம் ஏற்படுத்த முடிந்தது.
யாழ் மக்கள் முன் புலிகள் நவீன ஆயுதங்கள் கொண்ட இயக்கம். காட்டுமிராண்டித்தனமான ஆயுதங்களை கொண்டு வந்ததன் மூலம், இந்த கடத்தலைச் செய்தது புலிகளல்ல என்ற வதந்;தியை உருவாக்க முடிந்தது. புலிகள் பளபளக்கும் நவீன ஆயுதத்தை, அதுவும் அதை மோகித்தே வைத்திருப்பவர்கள். இது யாழ் பூர்சுவாக் கண்ணோட்டமும் கூட. எனது கடத்தல் என்.எல்.எவ்.ரியின் இயக்கத்தின் உள் பிரச்சனை என்ற வதந்தியை நவீன ஆயுதமற்ற வாள், கத்தி, கோடாலி பாவித்ததன் மூலம் உருவாக்கினர். புலிப் பாசிச கொலைகாரர்கள், இந்த கடத்தலை செய்தது தாங்கள் அல்ல என்று அதன் மூலம் கூறி இதில் சிறிதளவில் வெற்றி பெற்றனர். அங்கு தங்கியிருந்தவர்கள் இந்த நிகழ்வின் பின், பலவிதமான அபிப்பிராயத்தை, தாம் கண்டது போன்று வதந்தியாக பரப்பினர். ஆனால் உண்மையில் நித்திரையில் இருந்த அனைவரையும், அவர்கள் எழும்ப முடியாதபடி தமது ஆயுத முனையில் வைத்திருந்தனர். இந்த வதந்திகளில் மோசமானது, கிண்டிய இடத்தில் இருந்து மூட்டை மூட்டையாக பணமும், நகையும் எடுக்கப்பட்டதாக கதை பரப்பப்பட்டது. இதன் உள்ளடகம் கற்றன் நாசனல் வங்கி கொள்ளையை வைத்து புனையப்பட்டது.
இந்த வங்கிக் கொள்ளையை நாம் தான் செய்தோம் என்று, யாருக்கும் தெரியாது. கொள்ளை நடந்த அன்று காலையே, நான் வழமை போல் தெல்லிப்பளைச் சந்தியில் இருந்தேன். புலிகள் உள்ளிட்டு, அதை பற்றி கதைத்தோம். இந்தக் கொள்ளையின் விபரம் என்.எல்.எப்.ரியின் உடைவின் பின்பே, முதன் முதலாக வெளியில் கசிந்தது. அது வரை ஊகங்களாக பலவிதமான வதந்திகளே எப்போதும் இருந்தது.
புலிகள் வழக்கத்தில் பாவிக்காத ஆயுதங்களுடன் வந்த அதே நேரம், சிறு ஆயுதங்களை இடுப்பில் வைத்திருந்தனர். ஒருவன் ஏ.கே-47 வைத்திருந்தான். அவர்கள் என்னை மீண்டும் எச்சரித்தனர். திமிறுதல், கத்துதல் போன்ற ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டால், உடனடியாக சுடப்படுவாய் என்றனர். அத்துடன் அந்த வீட்டில் உள்ள அனைவரும் சுடப்படுவார்கள் என்று மிரட்டினர். ஏ.கே-47 ஜ என் நெஞ்சில் வைத்தபடி ஒருவன் காவல் நிற்க, மற்றைய ஓநாய்கள் அந்த வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டனர். எந்தச் சத்தமும் இருக்கவில்லை. நாய்கள் ஊளையிட்டன. சிறிது நேரத்தில் அமைதி குடிகொண்டது. திரும்பி வந்த விசு, என் தலையில் கைத்துப்பாக்கியை வைத்தபடி, ஒரு கையில் கோடாலியுடன் என்னை இடம் காட்ட அழைத்துச் சென்றன். அவர்கள் கொண்டு வந்த மண்வெட்டியுடன், அங்கு மற்றவர் காத்திருந்தனர். என்னை இடத்தைக் காட்டும்படி கோரினர். நான் காட்டிய உடன் தோண்டப்பட்டது. என்னை மீண்டும் வானில் கொண்டு வந்து விட்டனர். நான் அந்த வீட்டில் யாரையும் காணமுடியவில்லை. என் கண் கட்டப்பட்ட நிலையில், காலை கட்டிய பின்பு சிறிது நேரத்தில் வான் ஒடத் தொடங்கியது. இது வந்த வழியாக அல்லாது பண்டத்தரிப்பு வழியாக செல்லத் தொடங்கியது. என்னைச் சுட, வெட்ட வெளிக்கு கொண்டு செல்வதாக எனது மனம் கூறியது. 5, 10 நிமிடங்களின் பின்பு இடையிடை நிறுத்தி தாங்கள் புலிகள் என்று கூறியபடி செல்வதை கேட்க முடிந்தது. இதில் இருந்த அந்த பாதையின் மிக அருகிய பிரதேசங்களின் இரவுக் காவலை புலிகள் அன்று அகற்றியிருந்தனர். அருகிய பிரதேச காவல் கடமை, இரவு நிகழ்ச்சியை சாதாரண புலிகளுக்கு அம்பலமாக்கி விடும் என்பதால் இந்த முன் ஏற்பாடு நடந்திருந்தது. இதுவே பின் மக்களுக்கு அம்பலப்படுத்திவிடும் என்பதால், புலிகளின் கோழைத்தனமான வக்கிரம் அம்பலமாகாது தடுக்கவே இந்த ஏற்பாடு இருந்துள்ளது.
என்னை அறையில் கொண்டு சென்று விட்டவர்கள், எதுவும் பேசவில்லை. இதன் பின்பு என் மீதான விசாரணைகள் எதுவும் நடக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் நேரடியாக இருந்தன. மே 18 ம் திகதி நடந்த ஒப்பரேசன் லிபேரேசன் தாக்குதலுக்கு முன்பாக, திட்டமிட்டு நடத்திய பலமுனை இராணுவத் தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து நடந்த ஒப்பரசேன் லிபரேசன் தாக்குதலும் சித்திரவதையின் கோரத்தை தடுத்தன. இவற்றைத் தொடர்ந்த இந்திய தலையீட்டுக்கு முன்பாக வான்வழி உணவை பலாத்காரமாக போட்ட நிகழ்வுகள், வெளியில் அவர்களின் கவனத்தை குவிக்க நேரம் போதாமையாக இருந்திருக்கலாம்;. மாத்தையா, சலிம், மாஸ்ட்டர், விசு முன்பு போல் அங்கு வருவதில்லை. எப்போதாவது வருபவர்கள் சில விடையத்தை கதைத்த பின்பு வெளியேறிவிடுவார்கள். இதைவிட அன்ரனை பிடிக்க முயன்று இருக்கலாம். அதற்காக என் மீதான விசாரணையை ஒத்திப் போட்டிருக்கலாம். பிற்பட்ட இரு மாதம் விசாரணையற்ற பொதுவான சிறையாகவே இருந்தது.
இந்த இடத்தில் இதுவே புதிய சித்திரவதையாகியது. உரிமை கோராத நிகழ்வும், தனிமையான சிறையும், மிருகம் போல் நேரத்துக்கு எதிர்பார்க்கும் உணவும், புதிய வதையாகியது. சிந்தனை உள்ளவரை, தனிமை வதையாகியது. நிலத்தில் ஊர்ந்தபடி, மூட்டைப் பூச்சியையும் பேனையும் தேடி காலத்தை போக்க வேண்டியிருந்தது. அவற்றை உயிருடன் சேகரிப்பது, விளையாடுவது என்று காலத்தை கடந்து சென்ற விடுவது சிரமமானதாக இருந்தது. இளமைக் காலத்தை மீள நினைவுக்கு உள்ளாக்குவது, உற்றார் உறவினர்கள் என்ன செய்வார்கள் என யோசிப்பது, என்னுடன் ஒன்றாக இருந்து போராடியவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யோசிப்பது என, வாழ்க்கையே மறு பரிசீலனைக்குள்ளாக்குவதன் மூலம் நேரத்தைக் கடத்த முடியவில்லை. கைதுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே எனது காதலை பரஸ்பரம் தெரியப்படுத்தி, இருவரும் சந்தித்து கதைத்த உணர்வுகளாலும் கூட எனது நேரத்தை போக்க முடியவில்லை. கடத்தல் தொடங்கியது முதல் கேட்ட கேள்விகள், நான் சொன்ன பதில்கள் அனைத்தையும் மறுபடியும் மீளவும் என் சுய விசாரணைக்குள்ளாக்கினேன். தரும் உணவை, முதன் முதலாக நீண்ட நேரம் சுவைத்து உண்ண முயன்றேன். ஆனால் என்னால் இந்த சிறையில் நேரத்தை, எனது சுதந்திர உணர்வையும் தீர்த்து விட முடியவில்லை. முன்பு நீண்ட நேரம் அலைந்து திரிந்து மக்களுக்குள் இயங்கிய சுதந்திர உணர்வுகள், சிறையில் பாரிய சித்திரவதையாக மாறி இருந்தது. புதிய கருத்துகளை உள்வாங்கியபடி மக்களிடம் கற்று அதை அவர்களிடம் மீள விவாதிக்கும் போது, அதை புரட்சிகரமான உணர்வுள்ள விடையமாக உயிரோட்டமாக மாற்றும் போது இருந்த சுதந்திர வேட்கை, தனிமைச் சிறையில் சித்திரவதை செய்தது. எத்தனை நாள் தான் சித்திரவதையும் இன்றி, மனித மொழிகள் இன்றி சுவருடன் விவாதிக்க முடியும்? எத்தனை நாள் மூன்றடிக்குள் நீண்ட நேரம் இரவு பகல் தெரியாது நடக்கமுடியும். இதை விட மனிதர்கள் நேரடியாக சித்திரவதை செய்வது எவ்வளவு கோரமாக இருந்த போதும், மேலானதாக இருந்தது. அது எப்போதும் உயிரோட்டமாக இருந்தது. மனித உணர்வு கொண்டதாக இருந்தது.
இப்படி சிறை வாழ்வு உள்ளடங்கிய கேள்விகள் அடங்கிய குறிப்பை தப்பியவுடன் எழுதியிருந்தேன். அங்கு என்ன நடந்தது, என்ன என்ன கேட்டனர், எப்படித் தப்பினேன் போன்ற விபரங்களை அந்தக் குறிப்புகள் மூலம் இனிப் பார்ப்போம்.
தொடரும்
பி.இரயாகரன்
35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)
31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31) 28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28) 27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27) 26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26) 25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25) 24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24) 21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21) 20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20) 19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19) 18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18) 17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17) 16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16) 15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15) 14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14) 13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13) 12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12) 11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11) 10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10) 09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09) 08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08) 07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07) 06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06) 05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05) 04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04) 03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03) 02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02) 01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)