என் மீதான தொடர்ச்சியான விசாரணையில், எனது தயக்கமற்ற பதில், முன் கூட்டியே அவர்களுக்கு விடைதெரிந்த கேள்விகள் முடிவுக்கு வந்தது. விடைதெரிய வேண்டிய கேள்விகள் பல. ஆனால் அதை மீள மீளக் கேட்டனர். கேட்கும் போது கண்மூடித்தனமாகத் தாக்கி அடித்தனர். ஏற்பட்டிந்த காயங்களை மீளவும் இரத்தம் வரும் வண்ணம் மீளமீள சிதைத்தனர்.
ஆனால் என்னிடம் கேட்ட இனந்தெரியாத கேள்விகள் மூலம், எனக்கு எதுவும் தெரியாது என்று என்மீது சந்தேகமற்ற நிலைமையை உருவாக்கியிருக்க வேண்டும். இருந்தபோதும் தொங்க விடப்பட்ட நிலையில் இருந்தேன். இது தொடர்ச்சியாக 14.5.87 வரை நீடித்தது. வழக்கம் போல் உணவு, நீர் தரப்படவில்லை. இரவில் நித்திரையை குழப்புவதற்கு தண்ணீரை தொடர்ந்து என் மேல் அடிக்கடி ஊற்றிக் கொண்டிருந்தனர். அதே நேரம் பொதுப்படையாக என்ன தெரியும் என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டனர். நான் எதுவும் தெரியாது என்றேன். சிறுநீர் நின்றபடியே தொடர்ச்சியாக போய்க் கொண்டிருந்தது.
இதேநேரம் வெளியில் நிலைமைகள் மாற்றம் கண்டது. இராணுவம் பல முனைகளில் முன்னேறும் நடவடிக்கைகளும், தாக்குதல்களும் அதிகரித்தது. அவர்களின் பொதுவான கேள்விகள் மூலமும் மற்றும் தொடர்ந்து கதைக்கும் போது இவற்றையும் அறிந்து கொள்ளமுடிந்தது. இதனால் 13, 14 திகதிகளில் வதையாளர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. நான் 14ம் திகதி இரவு எனது கட்டுக்களை படிப்படியாக இழுத்து அறுத்தெறிந்தேன். இரத்தம் ஒழுக ஒழுக, எலும்பு தெரிந்த நிலையில் சனல் கயிற்றை இழுத்தே அறுத்தேன். அறுத்தெறிந்த நான், ஈரலிப்பான சிறுநீர் தரையின் மேல் சுருண்டு படுத்தேன். நித்திரை என்னை அறியாமல் விழுங்கிவிட்டது. நான் அடுத்தநாள் கண் விழித்த பின்பும், அப்படியே படுத்துக் கிடந்தேன்;. மதியம் அளவில் வந்தவர்கள் எதுவும் பேசவில்லை. பார்ர்த்துவிட்டுச் சென்றார்கள். அநேகமாக நான் நித்திரையில் இருந்தபோது வந்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன். 15ம் திகதி மதியம் ஒரு குவளை தண்ணீரும், சாப்பாடும் தந்தார்கள்.
மீண்டும் மாலை என்னை தூக்கிக்கட்டினர். கட்டுகளை அறுத்ததை குற்றம் கூறித் தாறுமாறாகத் தாக்கினர். மாலை மாத்தையா வந்தார். கட்டுக்களை அறுத்ததைப் பற்றி எதுவும் பேசவில்லை. பொதுவாக பலதையும் கதைத்தார். என்னிடமும் பலதைக் கேட்டார். அதுபற்றிக் கதைத்தார். 16,17 யாரும் வரவில்லை. யாரும் எதுவும் பேசவில்லை. மாத்தையா, சலீம், விசு, மாஸ்ட்டர் அங்கு இருக்கவுமில்லை, வரவும் இல்லை. நான் 17ம் திகதி மாலை மீளவும் கயிற்றை அறுத்து விட்டேன். வந்தவர்கள் வாய்க்கு வந்தவாறு திட்டி உறுமினார்கள். பின் அமைதியாக இருந்தது. இரவு 8 மணிக்கு உணவும் நீரும் தந்தார்கள்.
17ம் திகதி இரவு 12 மணியளவில் ஆழ்ந்த எனது நித்திரையில் இருந்த போது, கால்களால் உதைத்து எழுப்பினார்கள். விசு, சலீம், மாஸ்ட்டர், சுரேஸ் நால்வரும் நின்றனர். என்னைக் கடத்திய முதல் நாளின் போது, அதில் சம்மந்தப்பட்ட நால்வரும் அங்கு நின்றனர். தம்முடன் SMG க்கான மகசினையும், ரிவோல்வரையும் எடுக்க வரும்படி கோரினர். அப்போது அவர்கள் ஒரு எச்சரிக்கையை விட்டனர். அங்கு வைத்து புலிகள் தான் கடத்தியது எனக் கூச்சல் இட்டால், அங்கு இருக்கும் பெண்கள் அனைவரும் சுடப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
15ம் திகதி மாத்தையா கதைக்கும் போது, என்னை புலிகள் கடத்தியதாகவும் எனது அம்மாவிடம் கூறியதாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் ஒப்புக் கொண்டதாகவும் கூறினர். இதுவெல்லாம் பொய் என்பது பின்னால் அம்பலமானது. அங்கு புலிகள் தான் என்னைக் கடத்தியதாக கத்தக் கூடாது என்ற எச்சரிக்கை, உரிமை கோராததை எனக்கு மீளவும் அம்பலமாக்கியது. நான் என் கடத்தலை உரிமை கோராதவரை, குறித்த ஆயுதம் இருக்கும் இடத்தை காட்டமுடியாது என்று மறுத்தேன்;. எனது கடத்தலை உரிமை கோரினால் மட்டும் காட்ட முடியும் என்றேன்;.
அவர்கள் புலிகளுக்கு நிபந்தனையா விதிக்கின்றாய் என்று கேட்டுத் தாக்கினார்கள். இடத்தைக் காட்டு எனக் கூறி நான்கு பேரும் சுற்றிச் சுழன்றபடி கைகளாலும் கால்களாலும் தாக்கினர். எனது மண்டையை சுவருடன் பலம் கொண்ட வகையில் பலதரம் மோதினார்கள். இப்படி வதைத்தவர்கள் விரைவிலேயே களைத்துப் போனார்கள். பின் இவர்கள் மண்டை முதல் கால் ஈறாக, பொலிசார் பாவிக்கும் கொட்டான் தடியால், (பற்றன் பொல்லு) 200க்கு மேற்பட்ட தாக்குதலை சுற்றி நின்று, மாறி மாறி நால்வரும் தாக்கினர். நான் கீழே விழுந்த போதும், தாக்குதல் தொடர்ந்தது. தொடர்ச்சியாக ஒரு மணி நேர தாக்குதலை நடத்தியவர்கள் களைத்துப் போனார்கள்;. இறுதியாக விசு எனது வாய்க்குள் தனது கைத்துப்பாக்கியை செருகி சுடுவேன் என்று மிரட்டினான்;. நான் சுடடா நாயே என்று கத்தினேன். அப்படியே கைத்துப்பாக்கியை வெளியில் எடுத்தவர்கள், ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று விட்டார்கள்.
நான் தனியாக நிலத்தில் கீழே விழுந்து கிடந்தேன்; உடலெங்கும் விண்னென்று வலித்தது. பழைய காயங்கள் சுள்ளிட்டு வலித்தது. நான் நடந்த நிகழ்ச்சிகள், அவர்களின் வார்த்தைகள், நடத்திய தாக்குதலையும் மீளவும் சிந்தித்து பார்த்தேன். இதில் அவர்கள் வீட்டை உழுதே எடுப்போம் என்று மிரட்டியது என்னை அச்சத்துக்குள்ளாக்கியது. அங்கு வேறு பொருட்கள் புதைக்கப்பட்டு இருந்தது. அதைவிட அங்கு வேறு சில பொருட்களும் இருந்தன. இதை எடுக்க நேரடியாக உரிமை கோரி எடுக்கும் போது அல்லது ஏதோ ஒருவிதத்தில் எடுக்க முயலும் போது மேலும் நெருக்கடிக்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டேன். அத்துடன் முன் கூட்டியே வரை படம் மூலம் இடத்தை வரைந்து எடுத்து இருந்தனர். இது ஆபத்தானது. நான் நானாகவே, உடனடியாகவே கதவைத் தட்டி எடுக்கப் போவோம் என்று கூறினேன். ஆச்சரியத்துடன் மேலும் கீழும் பார்த்தவர்கள், இரண்டாவது முறையாக எனது நிர்வாணத்தை மறைக்க ஒரு சாரத்தைத் (லுங்கியைத்) தந்தனர். எனது நீண்ட நிர்வாண வாழ்க்கை அந்தக் கணம் முதல், இடையில் தற்காலிகமாக நீங்கியது. முதலாவது முறையாக முகாம் மாற்றிய போது தற்காலிகமாக தந்தனர். இரண்டாம் முறையாக தந்த சாரம், ஒருமுறை வயிற்றாலை அடித்து(வயிற்றுப் போக்கு) சாரத்தை அது நனைத்தது. நானாகவே இந்த சாரத்தைக் கழற்றி வைத்து விட்டு, நிர்வாணமாகவே இருந்தேன். அவர்கள் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. மணம் அறை முழுவதும் குமட்டியதால், கழற்றி வைத்த சாரம் மூலம், மலத்தை அள்ளினேன். அதை பின்னால் எறிவதற்கு கொடுத்தேன்.
பின் நிர்வாணமாக நீடித்த எனது வதைமுகாம் வாழ்க்கையை, ஒரு நாள் கதைக்க வந்த மாத்தையாவிடம் உடுப்பு தரும்படி கோரினேன். என்னை சமாளிக்கும் ஒரு சலுகையாக, கிழிந்த ரனிங் சோட்ஸ் ஒன்றை தந்தார். இந்த ரன்னிங் சோட்ஸ்சுடன் தான் இறுதியில் தப்பினேன். வழமையாக கைதிகள் தப்பியோடுவதை தடுக்க, நிர்வாணமாகவே வைத்திருப்பது புலிகளின் பாசிச வதைமுகாம் நடைமுறை கூட. இதே அடிப்படைக் கோட்பாட்டைத் தான், புலிகள் பின்னால் தமது அமைப்பிற்கு கட்டாயப்படுத்தி கடத்திச் சென்ற பயிற்சி வழங்கிய உறுப்பினர்களுக்கு கையாண்டனர். தப்பியோடுவதை தடுக்க அவர்களை நிர்வாணமாக்கி பயிற்சி வழங்கியதுடன், நிர்வாணமாகவே தங்க வைக்கின்றனர். இங்கு ஆண் பெண் வேறுபாடு இந்த விடையத்தில் கிடையாது.
தொடரும்
பி.இரயாகரன்
31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31) 28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28) 27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27) 26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26) 25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25) 24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24) 21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21) 20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20) 19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19) 18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18) 17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17) 16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16) 15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15) 14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14) 13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13) 12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12) 11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11) 10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10) 09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09) 08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08) 07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07) 06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06) 05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05) 04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04) 03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03) 02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02) 01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)