கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!) நடைபெற்றது.
இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான்.
இழப்பீடு மசோதவில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திருத்தம் தேசிய நலனுக்கு எதிரானது என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தாகாரத். அதாவது மசோதா தேசியநலனுக்கு உகந்தது அதன் திருத்தம் மட்டும் எதிரானது என்பதுதான் அவர் கூறியதன் முழுப்பொருள். இழப்பீட்டுத் தொகை 500 கோடியிலிருந்து 1500 கோடியாக உயர்த்தப்பட்டதை எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டதைப் போலவும், இம்மசோதா சுயமாக இந்திய அரசினால் தயாரிக்கப்பட்டதைப் போலவும் காட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இது இந்திய அரசின் விருப்பத்தினாலோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளாலோ உருப்பெறவில்லை.
கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அமெரிக்கமுதலீடும், தொழில்நுட்பமும் யுரேனியமும் இந்தியாவில் குவியத் தொடங்கிவிடும் என இவர்கள் கூறிவந்தது எதுவும் நடக்கவில்லை. அமெரிக்க முதலாளிகள் தொழில்நுட்பத்தையும் இயந்திரங்களையும் தருவதற்கு முன்னர் அணுவிபத்து நேரிட்டால் தாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதை ஏற்று அமெரிக்க முதலாளிகளைக் காப்பதற்குத்தான் இந்த இழப்பீடு மசோதா தயாரிக்கப்பட்டதேயன்றி பாதிக்கப்படும் இந்திய மக்களுக்கு இழப்பீடு உறுதி செய்யப்படவேண்டும் என்பதற்காக அல்ல. அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக முதலில் மதிப்பிடப்பட்ட 500 கோடி என்பது போபால் இழப்பீட்டுத் தொகையைவிட குறைவு. போபால் இழப்பீடு எந்த அளவில் இருந்தது என்பதை தனியாக இங்கு விளக்க வேண்டியதில்லை. இப்போது உயர்த்தப்பட்ட மதிப்பு போபாலை விட கொஞ்சம் அதிகம். இதில் கவனிக்க வேண்டிய விசயம் போபாலில் நடந்தது அணு விபத்தல்ல. போபாலை விட பல மடங்கு வீரியம் மிக்க பல தலைமுறையை பாதிக்கக்கூடிய அணுவிபத்திற்கு இழப்பீடாக மதிப்பிடப்பட்ட தொகை பாதிக்கப்படும் இந்திய மக்களை நினைத்து மதிப்பிடப்பட்டதா? அமெரிக்க முதலாளிகளை நினைத்து மதிப்பிடப்பட்டதா?
தொழில்நுட்பத்தையோ, இயந்திரங்களையோ தருபவர்கள் இழப்பீட்டிலிருந்து விலக்களிக்கப்படுவார்கள். அவர்களிடமிருந்து இழப்பீடு பெறவேண்டுமென்றால் அணுவிபத்தை ஏற்படுத்தவேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை நிரூபித்தாகவேண்டும். (இதைத்தான் தேசியநலனுக்கு எதிரானது என்கிறார் பிருந்தாகாரத்) காலவதியான, வழக்கொழிந்த தொழில் நுட்பத்தைத்தான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யவிருக்கிறார்கள் என்பது தெளிவிக்கப்பட்ட பிறகும் இது போன்றதொரு நிபந்தனையை வைப்பது என்பது அவர்களைக் காப்பதுதான் இம்மசோதாவை கொண்டு வருவதற்கான இந்திய அரசின் நோக்கம் என்பதை அறிவிக்கிறது.
அண்மையில் போபால் விசவாயுக் கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டும் என அமைச்சரவை முடிவெடுத்தது. அமெரிக்க துணை அமைச்சரொருவர் இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால் கடன் தருவதில் பிரச்சனை ஏற்படும் என இந்திய அரசை மிரட்டியது அண்மையில் அம்பலமானது. இது தொழில் நுட்பம் வழங்கும் நிறுவனங்களையும் இழப்பீட்டுக்கு பொறுப்பாக்கினாலும் அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்படும் என்பதற்கான அச்சாரமாக அமைந்துவிட்டது.
அன்னிய இயக்கும் நிறுவனங்களுடன் இணைந்து அணு ஆலையை இயக்கவிருப்பது இந்திய அரசு நிறுவனங்கள்தான் என அரசு அறிவித்திருக்கிறது. இதில் சாத்தியமற்ற நிபந்தையை வைத்து அன்னிய இயக்கும் நிறுவனங்களை இழப்பீட்டிலிருந்து விடுவித்து விட்டால் இந்திய ஆலையை இயக்கும் இந்திய அரசு நிறுவனங்களின் மீதுதான் இழப்பீட்டின் முழுப்பொறுப்பும் வருகிறது. அதன்படி இந்திய அரசு இழப்பீடு வழங்கும் என்றால் அது இந்திய மக்களிடமிருந்து பெற்ற வரிப்பணம்தான். அதாவது பாதிக்கப்படப் போகும் மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுத்து பாதிக்கப்பட்ட பின் அவர்களிடம் கொடுப்பதை இழப்பீடு என எப்படிக் குறிப்பிட முடியும்? இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் மக்களின் பணத்தை காலம் கடந்த தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்க தனியார் நிறுவனங்களிடம் அள்ளிக் கொடுத்துவிட்டு அதனால் ஏற்படும் விபத்துக்கான இழப்பீட்டையும் அந்த மக்களின் தலையிலேயே சுமத்துவது என்பதற்குப் பெயர்தான் இழப்பீடு மசோதா.
மின் உற்பத்திதான் இதன் முக்கிய இலக்கு என்று கூறப்பட்டாலும் அணு ஆயுத உற்பத்திக்குத்தான் இவை பயன்படப் போகின்றன. இராணுவப் பயன்பாடு, ஆக்கப் பயன்பாடு என்று அணு உலைகளைப் பிரித்து கண்காணிக்கும் விதி இருக்கிறது என்று விளக்கம் கூறினாலும் ஆக்கப் பயன்ப்பாடு எனக் கூறப்படும் அணு உலைகளில் என்ன நடக்கிறது என்பதை அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணுவிசை நீர்மூழ்கிக்கப்பலை விசாகப்பட்டினத்தில் பிரதமர் தொடங்கிவைத்தார். அந்நிகழ்வில் அறிவியலாளர்கள் இக்கப்பலுக்குத் தேவையான அணுசக்தியை கல்பாக்கம் அணுஉலையில் இரகசியமாக தயாரித்ததாக கூறினார்கள். கல்பாக்கம் அணு உலையானது முழுக்க முழுக்க மின்சாரப் பயன்ப்பாட்டுக்கானது என அறிவிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இராணுவப்பயன்பாடு, ஆக்கப்பயன்பாடு என பிரித்துக் கூறினாலும் இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கிறது என்று கூறப்படுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் தயாரிக்கப்படும் மின்சாரம் பயன்படப் போவது யாருக்கு? மின் உற்பத்தியில் பற்றாக்குறை எனக் கூறிக்கொண்டு மக்களையும் குறுந்தொழில்களையும் மின்வெட்டில் மூழ்கடித்துவிட்டு பன்னாட்டு, தரகு பெரு முதலாளிகளின் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக இந்தியாவின் வளங்களை கொள்ளையிடுவதற்காக வரவிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டுக்காகத்தான், அந்த நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்திற்காகத்தான் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பயன்படும் என்பதில் ஐயம் என்ன இருக்கப் போகிறது?
இப்போது இழப்பீடு மசோதாவுக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் என குதிக்கும் இந்த ஊடகங்களும் ஓட்டுக்கட்சிகளும், இதன் மூலமான அணு ஆற்றல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு தகவல் கூட தெரிவிக்கப்படாமல் ஒப்பமிடப்பட்டது என்பதை மறந்து விட்டார்கள். காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சியானாலும் தங்கள் எஜமானர்களான அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளின் கண்ணசைவுக்கு ஒப்பவே செயல்படுவார்கள் என்பதற்கு, செயல்படுத்துவதற்கு ஒன்றுபட்டு நிற்பார்கள் என்பதற்கு இந்த மசோதா இன்னும் ஒரு சாட்சியாக நிற்கிறது. மக்கள் இவர்களை புரிந்துகொள்வதும், புறக்கணிப்பதும் இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது.
இந்திய அணுசக்தி திட்டம் குறித்த முழுமையான புரிதலுக்கு
கட்டுரையை அவசியம் படியுங்கள் முதலாளிகளின் லாபத்திற்கு முன் மக்களின் உயிர் தூசு: பயங்கரவாதிகளின் சட்டம்
http://senkodi.wordpress.com/2010/08/30/nuclear-liability-bill/