Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகள் தாம் தெரிந்து கொண்ட மார்க்சியத்தை, தங்கள் எதிர்ப்புரட்சிக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கினர். மாத்தையா தொடர்ச்சியான கேள்விகளை, ஜனநாயக மத்தியத்துவத்தை அரசியல் ரீதியாக எடுத்துக்காட்டி தரவுகளைக் கோரினான். நான் அதீத ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு வேகமாக சந்தேகப்படாத வகையில் பதிலளித்தேன். கற்பனைப் பெயர்களைக் கொண்டும், அவர்கள் நன்கு அறிந்த அவர்கள் தேடுகின்ற நபர்களைக் கொண்டும் பதிலளித்தேன். இதன் மூலம் எனக்குத் தெரியாது என அனைத்தையும் மறுத்தேன்;. நான் பகிரங்கமாக, மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர் என்றேன். அப்படித்தான் அன்று மக்கள் மத்தியில் மிகப் பகிரங்கமாக வேலைசெய்தேன். புலிகள் அறிய விரும்பிய, கைப்பற்ற விரும்பிய பணம், இராணுவ உபகரணங்கள் என் பொறுப்பில், என் கண்காணிப்;பில் தான் இருந்தது. நான் இராணுவக் குழு உள்ளிட்ட தளத்தின் நிதி மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு கூட பொறுப்பாக இருந்தேன். 

இதை மறுத்தபடி எனது பதில் வேகமாகவும், இயல்பாகவும் இருந்தது. நான் கதைத்த வடிவம் அவர்களுக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும்;. முன்பு பல்துறை சார்ந்து அவர்களுடன் விவாதித்த அதே பாணியில், சித்திரவதையூடான கேள்விகளையும் எதிர்கொண்டு பதிலளித்தேன். இதனால் கேள்விகள் அற்ற ஒரு நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தினேன். திரும்ப திரும்ப கேட்பதை தவிர, வேறு வழியிருக்கவில்லை. இதனால் புதிய தகவல்களை வெளியில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

அவர்கள் இந்த இடத்தில் புதிய பிரச்சனையாக, நிதி மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு  பொறுப்பு அன்ரன் என்று நம்பினர். இதை அவர்கள் இணுவில் கிளையூடாக கண்டுபிடித்த நிலையிலும், அன்ரன் கைது செய்யப்பட்டால் நிலைமை மாறிவிடும் என்ற அச்சம் எழுந்தது. அன்ரன் தற்போது எமது இயக்கத்தில் இருக்காவிட்டாலும், அவர் பி.எல்.எவ்.ரி யில் இந்த பொறுப்பில் இருந்திருப்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர் என்பது என்னால் ஊகிக்க முடிந்தது. புலிகள் அதை எம் இயக்கத்துக்கு பொருத்தினர். 1984 க்கு முன்பு எமது இயக்கத்தில், அவரே அப் பொறுப்பை வகித்தவர். தற்போது தளத்தில் பணம் மற்றும் ஆயுதங்களுக்கு நானே பொறுப்பாக இருந்த நிலையில், ஏற்படும் புதிய நிலமையை கவனத்தில் எடுத்து சிந்திக்க முடிந்தது. இதை எப்படி எதிர் கொள்வது என்பதை எண்ணி, அதற்கு தயார் செய்தேன். அவர் கைது செய்யப்படாத நிலையில் தான், நான் அவர்களின் சிறையில் இருந்து தப்பியிருந்தேன்;. ஆனால் அவரை உரிமை கோராது கடத்த நடந்த முயற்;சிகள் பற்றி, பின்னால் அறியமுடிந்தது. இருந்தபோதும் எனது கைது காலத்தில், அவர் பகிரங்கமாகவே திரிந்தார். இது என்.எல்.எப்.ரி அமைப்பின் இரகசிய வேலைமுறை மற்றும் தலைமறைவுக்கு தயாரின்மை போன்றவற்றையே எடுத்துக் காட்டுகின்றது. பூர்சுவா வாழ்வியலை கொண்டிருந்த தன்மையையும், நகர்ப்புற அரசியல் தன்மையையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளது. இது போன்ற தொடர்ச்சியான பல அழித்தொழிப்புகளின் போது, இவை தௌ;ளத் தெளிவாக பலமுறை வெளிப்பட்டது. 

1990 களின் பின்பே அன்ரனை புலிகள் கைது செய்தனர். அவர் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் ஒரு விரிவுரையாளராவார். இவர் இளமையும் துடிப்புமுள்ளவர். பிராமணர் (பார்ப்பன) சாதியைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்தை எதிர்த்துப் போராடியதுடன், சாதி கடந்த திருமணத்தைச் செய்தார். தனது மரணம் வரையும், அவர்களின் சித்திரவதை முகாமில் வீரமாக போராடியதை அறிய முடிகின்றது. அவர் எதையும் சொல்ல மறுத்தார். அவர் திருமணம் செய்த சில நாளிலேயே, அவரை தமது வதைமுகாமுக்கு இழுத்துச் சென்றனர் பாசிசப் புலிகள். அவரின் புது மனைவியை வைத்துக் கூட, அவரின் எதிர்ப்பை சரணடைய வைக்க புலிகள் முயன்றதாக அறிய முடிந்தது. அவர் அதை எதிர்கொண்டு எதிர்த்து நின்றார். அவருக்கு தெரிந்த தொழில் நுட்ப அறிவை, புலிகளுக்கு பயிற்சியாக அளிக்க கோரியபோது மறுத்தாகவும் அறியமுடிகின்றது. அவரின் வீரமிக்க, பல சித்திரவதைகளைக் கடந்த போராட்டம், எமது இருண்ட வரலாற்றினுள் காணப்படுகின்றது. புலிகள் அவரை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்தே படுகொலை செய்துவிட்டதாக அறியமுடிகின்றது.

என்.எல்.எப்.ரியின் மத்தியகுழு யார் யார் என்ற விபரம், எப்படி புலிகளுக்கு தெரிய வந்தது? என்.எல்.எவ்.ரி மற்றும் பி.எல்.எவ்.ரி உடைவின் போது விசு, இரகசிய அமைப்பு முறையை அப்பட்டமாகவே தனது குறுகிய அரசியலுக்காக மீறிய சம்பவத்தால் இது ஏற்பட்டது. இதன் காரணமாக பின்னால் பலர் கொல்லப்பட காரணமாகியது. 1985 இல் அமைப்பு இரண்டாக உடைய முன்பு, மத்தியகுழு உறுப்பினர்கள் யார் என்பது அமைப்புக்கு தெரியாது. மத்தியகுழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இயங்கும் போது, அதற்கு மேல் வேறு பொறுப்பானவர்கள் இருப்பதாகவே பொதுவாக அனைவரும் கருதினர். இது இயல்பாக மற்றைய இயக்கங்களின் தலைமை தனித்து ஒதுங்கி, தம்மை மேல்நோக்கி நிலைநிறுத்தும் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுவதாகும். யார் உங்கள் தலைவர் என்ற கேள்வி மக்களிடம் எழுப்பப்படும் போது, இது அமைப்பின் உறுப்பினருக்கும் தெரியாத விடையமாக இருந்தது. 1985 இல் அமைப்பில் உடைவுக்கு முன்பாக விசு தன்னிச்சையாக அமைப்பை மீறி, ஒரு விண்ணப்பத்தில் அமைப்பு உறுப்பினர்களைத் தேடி கையெழுத்து வேட்டையை ஆரம்பித்து வைத்தார். உண்மையில் விசுவுக்கு கூட அமைப்பைத் தெரியாது. இதன் போது இந்தியாவில் இருந்து விசுவால் அனுப்பப்பட்ட உறுப்பினர்கள், அவர்களின் சொந்தப் பிரதேசம் கடந்து அமைப்பின் இரகசிய அமைப்பு முறையைக் கடந்து அதை செயல்படுத்த முனைந்தனர். அவர் இந்தியாவில் நீண்டகாலம் தங்கி இருந்ததால், அமைப்பின் இரகசிய கிளைகள், உறுப்பினர்கள் எவற்றையும் நேரடியாக அவர் தெரிந்திருக்கவில்லை.

இது பொதுவாக அனைத்து மத்தியகுழு உறுப்பினருக்கும் பொருந்தும். மேல் இருந்து கீழாகவும், கீழ் இருந்து மேலாகவும் அமைப்பை முழுமையாக யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை. அறிக்கைகள் மூலம் மட்டுமே, அனைத்தையும் அறியமுடிந்தது. இந்நிலையில் விசு தன்னுடன் இந்தியாவில் தங்கியிருந்த உறுப்பினர்கள் மற்றும் ஒரு சிலரைக் கொண்டு கையெழுத்து வேட்டையில் ஈடுபட்ட போது, அமைப்பு இதைக் கடுமையாக விமர்சித்து தடைசெய்தது. அவர்கள் இதை மீறி செயல்பட்டனர். ஆனால் அமைப்பு தொடர்ச்சியாக அமைப்பின் முரண்பாட்டை பேசி, விவாதித்து அதைத் தீர்க்க அழைப்பு விடுத்தது. தன்னிச்சையாக இயங்கியபடி, சந்ததியார் கொலையை கண்டித்து அடித்து கொண்டு வந்த பிரசுரத்தை ஒட்டுவதையும் தடை செய்தது. அனைத்து தன்னிச்சையான நடவடிக்கையை கைவிட ஒப்புக்கொண்ட பின்பே, சந்ததியார் கொலையை தமிழ் மண்ணில் முதன் முதலில் சுவரொட்டி மூலம் தமிழ் மக்களுக்கு அறிவித்தோம். விசு நாடு திரும்பிய பின்பு நடந்த பேச்சுவார்த்தை, உடன்பாடற்ற வகையில் நீடித்தது. உடனடியாக இராணுவ தாக்குதல், கிராமப்புற வேலைகளை கைவிடுதல், நகர்ப்புற வேலைகளை மட்டும் மையப்படுத்துவது, முதலில் மனோரஞ்சனையும் (இவர் 1990 கள் தொடக்கம்; அரச எடுபிடி) தொடர்ந்து றஞ்சித்தையும் மத்தியகுழுவில் இணைக்க வேண்டும் என்றும் கோரினார்.

மனோறஞ்சன் இந்தியாவில் வைத்தே, நேரடியாக அமைப்பில் இணைந்து கொண்டவர். எந்த மக்கள் போராட்டத்திலும் பரிச்சயமற்றவர், பரீட்சிக்கப்படாதவர். அவரின் கடந்தகால பின்னணி எதுவும் தெரியாது இருந்தது. அமைப்பு உடைந்து சிதைந்த பின், இலங்கை அரசின் கைக்கூலியாக, அவர்களின் பத்திரிகைளில் புலி எதிர்ப்பு பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபடுபவர். அரசு ஊதுகுழலான லேக்கவுஸ் பத்திரிகையின் வெளியீட்டுப் பிரிவு ஒன்றுக்கு பிரதான ஆசிரியரானார். இட்டுக்கட்டிய அரசின் பொய்ச் செய்திகளை வெளியிடுவதிலும், புலியெதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஈடுபட்ட இவர், சரிநிகர் பத்திரிகையை முடக்கியவரின் முதன்iமாகனவா.  பின் கனடா சென்றார். இன்றோ மகிந்தாவின் பாசிசத்துக்கு எடுபிடியானார். எமது அமைப்பில் இருந்து எந்த உறுப்பினரும், இப்படியான மக்கள் விரோத அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இவர் ஒருவர் தான் இதைச் செய்தார். இவரைத் தவிர அமைப்பின் ஆதரவாளராக இருந்த பாலசூரியன் மட்டும் தான், நெதர்லாந்தில் இந்தப்படி மகிந்தாவுக்கு எடுபிடி வேலை செய்தார்.

மறுபக்கத்தில் புலி அமைப்பிற்கு எமது அமைப்பின் ஆதரவாளராக இருந்த ரவி மட்டும் தான் எடுபிடியானார். வேறு எந்த உறுப்பினரும், வேறு யாரும் அமைப்பின் அரசியலுக்கும் அந்த மக்கள் அரசியலுக்கும் எதிரியுடன் சேர்ந்து துரோகம் செய்யவில்லை. ஆனால் அரசியலைக் கைவிட்டவர்கள், மார்க்சியமல்லாத அரசியலை முன்வைத்து சீரழிந்தவர்கள் என்று, மக்கள் அரசியல் அனைவரிடமும் காணாமல் போனது.

அமைப்பு விசுவின் அமைப்பு முறைக்கு எதிரான, அமைப்பை சிதைக்கும் நடைமுறையை எதிர் கொண்டது. விசு தன் கோரிக்கையில் இயக்கங்களில் இருந்து பிரிவோரைக் கொண்டு, ஆயுதம் ஏந்திய இராணுவக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைiயும் முன்வைத்தார். அமைப்பு இதனுடன் முரண்பட்டது. இதுபற்றி ஆழமாக விவாதிக்க இது இடமல்ல. விசுவுடன் மத்தியகுழுவைச் சேர்ந்த அன்ரன் மட்டும், ஒன்றாக இணைந்து நின்றார். மற்றைய ஏழு மத்தியகுழு உறுப்பினரும் இதை எதிர்த்து நின்றனர். இதில் சில உள் முரண்பாடுகள் இருந்த போதும், இரு தரப்பிலும் இருந்து சில சரி பிழைகளை உள்வாங்கவும் விலக்கவும் உடன்பாடும் இருந்தது. அமைப்பு உடைந்த பின்பு உடைவின் முரண்பாட்டில் ஏற்ற சரி பிழைகளை, இரு பகுதியுமே தனது அரசியல் வழியில் கையாளவில்லை. இதுவே பின்பு என்.எல்.எப்.ரியின் அடிப்படை முரண்பாடாக மீண்டும் எழுந்தது.

அன்று விசு தீவிரமாக முரண்பட்ட நிலையில், அமைப்பில் இருந்து பிரிந்து செல்ல முனைப்புக் கொண்டார். விசு முன் கூட்டியே சிலரை, வேறு இயக்கத்தில் இருந்து தன் பக்கத்தில் கொண்டு வந்திருந்தார். இது உடைவைத் தவிர, வேறு ஒன்றுபட்ட அரசியல் மார்க்கத்தை அவருக்கு வழிகாட்டவில்லை. உடைவை மனதில் அடிப்படையாக கொண்டபடி, ஒற்றுமையை வெளிப்படையாக வைத்தபடி, அமைப்பின் உட்கட்சி ஜனநாயகத்தை தனக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கினார். அமைப்பை தெரிந்து கொள்ளவும், அவர்களைச் சந்தித்து தனது கருத்தை முன்வைத்து வென்று எடுக்க, அவர்களை சந்திக்க வேண்டும் என்று மத்தியகுழுவில் கோரினார். அதுவும் ஒவ்வொரு கிளை கிளையாக மத்தியகுழு முழுவதும், ஒன்றாக தனியாகவும் சந்திக்க வேண்டும் என்றார். இதை மறுத்த மத்தியகுழு சுற்று அறிக்கைகள் மூலம் விவாதிக்க கோரியது. இதை மறுத்த விசு, தான் தன்னிச்சையாக சந்திக்க போவதாக அறிவித்தார். இந்த நிலையில் மத்தியகுழுவில் இருந்த ஒரு சிலர், நடுநிலை தன்மை கொண்ட அரசியல் கண்ணோட்டத்தில் உடைவை தவிர்க்கவும், மத்தியகுழு ஒன்றாக சந்திப்பதை ஆதரித்தனர். ஐக்கியத்தை மையமாக வைத்தும் பலத்த எதிர்ப்புடன், ஒரு இரகசிய அமைப்பு முறைக்கு முரணாக சந்திக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. விசு உடைவுக்குத்தான் இதை பயன்படுத்தினார். ஒரு உறுப்பினரைக் கூட, இதன் மூலம் அவர் வென்றெடுக்க முடியவில்லை. 

அமைப்பின் மத்தியகுழு ஒன்பது உறுப்பினரும் ஒவ்வொரு கிளை கிளையாக சென்று சந்திக்க தொடங்கியது. முதன் முதலாக நீங்களா மத்தியகுழு என்ற ஆச்சரியம் கூட, உறுப்பினருக்கு ஏற்பட்டது. இந்த சந்திப்பின் போது இடையில் பாதுகாப்பு கருதி இதை கைவிடக் கோரியபோது, விசு மறுத்தார். மத்தியகுழு அமைப்புக்கு முதன் முதலாக அம்பலமானது இப்படித்தான். அன்ரனின் ஊரான இணுவிலில் இருந்து விசுவுடன் சென்ற ஒருவன் புலியிடம் சென்று சரணடைந்ததால், அவன் மத்தியகுழுவை மொத்தமாகவே காட்டிக் கொடுத்தான்;. அதுபோல் அன்ரனின் முந்திய, பிந்தைய பொறுப்பையும் அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவனின் சொந்த தம்பி அகிலன் இயக்கத்தில் இருந்தவன். இந்தியாவில் விசுவின் நம்பிக்கைக்குரிய ஒருவன். இந்தியாவில் பகிரங்க பொறுப்புகளை கையாண்டவன். விசுவூடாக அகிலன் இவைகளை தெரிந்து கொண்டதன் மூலமே, இந்த தகவல்களை அகிலனின் அண்ணன் தெரிந்து கொண்டான். அதை புலிக்கு பின்னால் தெரிவித்தான். இரகசிய அமைப்பு முறைக்கு மாறாக மத்தியகுழுவின் பகிரங்கமான நிகழ்ச்சி, என்னை மட்டுமல்ல அவர்களையே அது வேட்டையாடியது. ஒரு இரகசிய அமைப்பு எதைச் செய்யக் கூடாதோ அதை செய்தால், அது அமைப்பையே அழிக்கும் என்பதை எமது வரலாறு மீள ஒருமுறை எதிர்மறையில் நிறுவியது.

தொடரும்
பி.இரயாகரன்

34.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)

32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)

 

31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)

  

30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)

  

29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)

 

 

28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)

 

 

 

27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

 

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

 

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)