07052022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

மகிந்தாவின் குடும்ப சர்வாதிகார பாசிச ஆட்சியை தொடர, முஸ்லீம் காங்கிரஸ் தூக்குக்காவடி எடுக்கின்றது

தேர்தல் "ஜனநாயகம்" எவ்வளவு கேலிக்குரியது என்பதை, இலங்கை சர்வாதிகார ஆட்சியாளர்கள் நிறுவி வருகின்றனர். மக்கள் வாக்களிப்பது என்பது, எவ்வளவு முட்டாள் தனம் என்பதையும், அரசியல்வாதிகளின் நடத்தைகள் எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த தொடர்ந்து தான்தான் அடுத்த ஆட்சியாளன் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துக் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுகின்றான். இங்கு மக்கள், மக்களின் வாக்கு என்பதெல்லாம் வெறும் தூசு. பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது விபச்சாரம் செய்யத்தான் லாயக்கு.

இங்கு மக்கள் முடிவெடுத்து அவர்கள் வாக்களித்துத் தான், ஆட்சியாளர்களை வெல்ல வைக்கின்றனர் என்பது ஜனநாயகத்தில் பொய்யும் புரட்டுமாகும். மகிந்த வெல்வார் என்பது முன் கூட்டியே முடிவெடுத்து, அதை திட்டமிட்டு வெல்ல வைக்கின்ற ஒரு சதி. தேர்தல், வாக்களிப்பது என்பது எல்லாம், ஊர் உலகத்தை ஏமாற்றி அதிகாரத்தைப் பெறும் மோசடியாகும்.

இந்தக் குடும்ப சர்வாதிகார ஆட்சியை தொடர்ந்தும் மகிந்தாவின் தலைமையில் நிறுவ, முஸ்லீம் காங்கிரஸ் தன் ஆதரவை அதற்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதை அது நியாயப்படுத்தும் போது, மக்கள் தெரிவு செய்தால் தானே வெல்ல முடியும் என்று ஜனநாயக விளக்கம் கொடுத்து, சர்வாதிகாரத்துக்கு ஜனநாயக முகமூடி போடுகின்றனர். கேலிக்குரிய அரசியல்.

மக்கள் தெரிவு செய்யும் ஆட்சியாளர் இரண்டு முறைதான் ஆட்சியில் அமர முடியும் என்று கால நிர்ணயம் செய்தது ஏன்?  தேர்ந்தெடுக்கும் ஜனநாயகம் என்பது, சர்வாதிகாரத்தின் எடுப்பான வடிவம் என்பதால் தான். மூடிமறைத்த சர்வாதிகாரத்தின் பால், மக்கள் அதிருப்தியுறாது இருக்க ஜனநாயகத்துக்கு கால நிர்ணயம் செய்தனர். 5 வருடம், இரண்டு ஆட்சிக் காலம் என்று, இது பல விதம். சர்வாதிகாரிகளும், பாசிட்டுகளும் இதை விரும்புவதில்லை. இதை தமக்கு ஏற்ப வளைத்துப் போடுகின்றனர்.

இன்று இலங்கையில் இது அவசியமில்லை என்பது, இலங்கையை ஆளும் குடும்ப சர்வாதிகாரக் கும்பலின் நிலையாகும். இதற்கு முண்டு கொடுக்கும் முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் தான் தெரிவு செய்ய வேண்டும் என்று கூறி தூக்குக் காவடி எடுக்கின்றது.

சர்வாதிகாரர்கள் தங்களை தாங்கள் தெரிவு செய்பவர்கள். மக்களை தமக்குதான் வாக்கு போடவேண்டும் என்பதே, விபச்சாரம் செய்யும் ஜனநாயகத்தின் அரசியல் உள்ளடக்கமாகும்.

முஸ்லீம் காங்கிரஸ் தன் கட்சி உறுப்பினர்களைக் கூட தக்கவைக்க முடியாது உள்ளது. மகிந்தா தலைமையிலான குடும்ப சர்வாதிகாரக் கும்பல் நடத்தும் குதிரைப் பேரத்தில், அது விலை போகின்றது. இதை முறியடித்து விட, குடும்ப சர்வாதிகாரத்தை நாட்டில் தொடர்ந்து நிலைநாட்ட போவதாக கூறி சோரம் போகின்றது. மகிந்தா சர்வாதிகாரத்துக்கு, வாக்களித்த மக்களை மொய்யாக்கி மகிந்தாவின் காலுக்குகேற்ற செங்கம்பளமாக்குகின்றனர்.

கொள்கை கோட்பாடற்ற கட்சிகள், மக்களை ஏய்த்து விடுகின்றன. பணம், அதிகாரம், சர்வாதிகாரத்தின் முன், அவர்கள் விலை பேசப்படுகின்றனர். இனம், சாதி, பணம், அதிகாரம், மதம் மூலம் மக்கள் பிரிக்கப்பட்டு, அவர்களை மந்தைக் கூட்டமாக மாற்றி தமக்கு வாக்கு போட வைத்து, அதன் மூலம் தங்கள் குதிரைப் பேரங்களை நடத்துகின்றனர்.

நாட்டின் வளங்களை தின்றும், விற்றும் வரும் கூட்டம், இதைச் செய்ய தங்கள் அதிகாரத்தை சர்வாதிகாரமாக்கி அதைத் தொடர முனைகின்றனர். இதற்கு தங்கள் சர்வதேச கூட்டாளி நாடுகளில் நிலவும், சர்வாதிகார ஜனநாயகத்தை போல் தானும் பாசிச ஆட்டம் போடுகின்றது.   

இன்றைய உலக ஒழுங்கில் நாடுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளையும், தங்கள் செல்வாக்கு மண்டலங்களையும் தக்க வைக்க, ஜனநாயக சர்வாதிகார ஆட்சிகளுக்கு பதில் சர்வாதிகார ஜனநாயகங்களை நிறுவி வருகின்றனர். முன்பு ஜனநாயகம் மீது இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளை எல்லாம் புடுங்கி, உரிமைகள் அற்ற சர்வாதிகார ஜனநாயகத்தை நிறுவி வருகின்றனர்.

இந்த எல்லைக்குள் தான் உலக ஒழுங்குகள் உள்ளது. தங்கள் செல்வாக்கு மண்டலங்களை தக்க வைக்கவும், அதை புதிதாக நிறுவும் வடிங்கள் அனைத்தும் சர்வாதிகார ஜனநாயக வடிவங்களைப் பெற்று நிற்கின்றது. ஜனநாயக சர்வாதிகார கூறுகளை அழித்து வருகின்றது.  

பேரினவாத சர்வாதிகார பாசிட்டுகளோ, இதை தங்கள் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து முன்னேறுகின்றனர். உலக மூலதனக் கெடுபிடியில் மோத, மக்கள் துன்பங்கள் பெருகுகின்றது. சமூக நெருக்கடிகள் என்றுமில்லாத அளவில் முரண்பாடுகளை கூர்மையாகி வருகின்றது. இது இலங்கைக்கு விதிவிலக்கல்ல. மக்கள் யுத்தம் இன்றி, சர்வாதிகாரங்களை ஜனநாயக தேர்தல் மூலம் ஒழிக்க முடியாது. இந்த எல்லையில் தான், மக்கள் யுத்தம் தொடங்கவுள்ளது. இது புலிகளின் யுத்தத்தை வென்ற, இலங்கை பாசிச குடும்ப ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். 

பி.இரயாகரன்
28.08.2010
                 

 


பி.இரயாகரன் - சமர்