மாத்தையா உறுமியபடி தொடர்ந்து தாக்கினான். புலிகள் விடை தேடிய பல தொடர் கேள்விகள் கேட்டனர். கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? என்றான். நானோ இதுபற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்றேன்.
இன்று குறிப்பான விபரங்கள் தவிர்த்து, இதைப் பற்றி
1. இந்த நடவடிக்கையை யார் செய்தது என்ற விபரம் என்.எல்.எவ்.ரி., பி.எல்.எவ்.ரி. இயக்கம் உடையும் வரை, வெளி உலகத்துக்கு தெரியாது. அமைப்பின் உள்ளும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, வேறு யாருக்கும் தெரியாது. இது அன்று இலங்கையில் நடந்த மிகப்பெரிய வங்கி கொள்ளையாகும். இப்படி கிடைத்த பணத்தைக் கொண்டு, அமைப்பில் திடீர் மாற்றத்தையோ அல்லது வேறு வித்தியாசங்களையோ அமைப்பு உள்ளும் வெளியிலும் பிரதிபலிக்கவில்லை. அன்று புளட் இதை தாம் செய்ததாக உரிமையும் கோரியிருந்தது. இந்த நடவடிக்கையில் நேரம் காணாது நாம் லோக்கரில் இருந்து எடுக்க முடியாது போனதை, அடுத்த நாள் வங்கி இராணுவ முகாமுக்கு எடுத்துச் சென்ற போது ஈ.பி.ஆர்.எல்.எப். அதைக் கொள்ளையடித்துச் சென்றது.
2. இந்தப் பணம் என்.எல்.எவ்.ரி., பி.எல்.எவ்.ரி. உடைவிலும், அதன் திசைவழியில் குறிப்பாக பங்காற்றியது.
3. இந்திய தலையீட்டால் போராட்டம் சீரழிந்து வீங்கி வெம்பிச் சென்றது. இதை மீற பணம் தான் தடையாக இருப்பதாக அமைப்பு கருதி வந்தது. பணம் கிடைத்தால், அமைப்பின் அரசியல் நெருக்கடிகளை அது தவிர்க்கும் என்ற கண்ணோட்டம், பண வருகையின் பின் தவறானதாக இருந்தது என்பது புலனாகியது. எதையும் பின்னர் மாற்ற முடியவில்லை.
4. புலிப்பாசிச நெருக்கடியின் போது மக்களைச் சார்ந்து நின்று தலைமறைவாகி போராடுவதற்கு பதில், பணத்தைக் கொண்டு அந்த சூழலுக்கு வெளியில் தலைமறைவாக இருக்கும் முறைக்கு இட்டுச்சென்றது. இந்தப் பணம் அன்று இல்லாதிருந்திருக்குமானால் வேறுவிதமான வழியில் அமைப்பு நகர்ந்திருக்கும்.
இப்படி இந்த பணம், பல தவறான முடிவுகளுக்கு காரணமாகியது.
பணமின்மைதான் அமைப்பின் அரசியல் நெருக்கடிகளுக்கு காரணம் என்று அமைப்பை வழிநடத்தியவர்கள் கூறினர். இருந்தபோதும், அதை பெறும் நடவடிக்கையில் தனிப்பட்ட தங்கள் குறுகிய இயல்புடன் தான் இதை அணுகினர். அதாவது அமைப்பின் முடிவை முன்னெடுப்பதில், எப்போதும் காலம் தாழ்த்தி வந்தனர். அமைப்பின் முன்நகர்வை அது பின்னுக்கு இழுத்துவந்தது. கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையிலும், இது அன்று நடந்தது.
கற்றன் நாசனல் வங்கி கொள்ளையை செய்வது பற்றிய இராணுவக் குழுவின் திட்டமும், அதையொட்டிய அனைத்து நடவடிக்கைளும் திகதியும் குறித்த நிலையில், இந்த நடவடிக்கை திடீரென தனிப்பட்ட நபரால் கைவிடப்பட்டது. தனிப்பட்ட ஒருவரின் சொந்தப் பயத்தின் காரணமாக இந்த நடவடிக்கை கடைசி நிமிடத்தில், ஒரு தலைப்பட்சமாக தாமே முடிவு எடுத்து நிறுத்;தினர். இதற்கு இராணுவக் குழுவின் ஒரு பகுதி (அவர் உள்ளடங்கி மற்றவர் மூலம்) இதை திடீரென நிறுத்தி விட்டனர்.
இவர்தான் அன்று இயக்கத்தினை அரசியல் ரீதியாக வழிகாட்டியவர். இரரணுவக்குழுவின் முக்கிய மையக்குழு உறுப்பினர். என்.எல்.எவ்.ரி.க்குள் இருந்த கம்யூனிசக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர். இந்த நடவடிக்கையை நிறுத்தும் முடிவை, தன்னம் தனியாக எடுத்தார். இராணுவக் குழுவை கூட்டவுமில்லை.
இந்த நடவடிக்கை முதலில் யாழ் பஸ்நிலையத்தின் முன்பாக, அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் பணத்தை கொள்ளை அடிப்பதாக இருந்தது. காலை 9 - 10 மணியளவில், 15 முதல் 20 பேர் கொண்ட குழு இதில் ஈடுபட இருந்தது. இதை திடீரென தன்னம் தனியாக நிறுத்தியவர், இந்தத் தகவலை ஒரு குறிப்பாக வடமராட்சியில் இருந்து அனுப்பியிருந்தார்.
ஒரு தலைப்பட்சமான கைவிடல் தொடர்பாக அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு, அமைப்பில் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியது. அவரின் சொந்தப் பயம் மற்றும் இயல்பு காரணமாக, அமைப்பு பல தளத்தில் இப்படி முடங்கியது. தன் இயல்பை மூடிமறைக்க, அவர் அரசியல் காரணங்களை வைப்பவராக மாறினார். இதில் இருந்து நேர் எதிராக வேறுபட்டவர்தான் விசு.
என்.எல்.எவ்.ரி., பி.எல்.எவ்.ரி. உடைவிற்கு காரணமாக இருந்த அரசியலை இவர் அமைப்புக்குள் வைத்தபோது, அதை வெளிப்படையாக வைத்து விவாதிக்காமல் படிப்படியாக உட்புகுத்தினார். இந்த சரியான அரசியலை வெளிப்படையாக வைத்து விவாதிக்காமைதான், பிளவுக்கான அரசியல் அடிப்படையை உருவாக்கியது. பொதுவான விவாதம் மூலம் இதை வைத்திருந்தால், பிந்தைய பிளவுக்கான அரசியல் அடிப்படை இல்லாமல் போயிருக்கும். இது முரண்பட்ட அரசியல் பிளவாக மாறியது. இந்த அரசியலை அமைப்புக்குள் புகுத்திய போதும், புகுத்திய பின்பும் இரு வௌ;வேறு அரசியல் தளத்தில், இதில் முன்னின்ற இரண்டு தனிப்பட்ட நபர்களின் தனியியல்புக்கு ஏற்ப ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்துவிடுகின்றனர்.
கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையை நிறுத்திய வடிவம் கூட, அமைப்பின் ஜனநாயக மரபை மீறிய வகையில் நடந்தது. அவர் வேறு ஒருவர் மூலமாக, மற்றைய இராணுவ குழு உறுப்பினருக்கு தெரிவித்த ஒரு தலைப்பட்சமான முடிவாக இருந்தது. இதை எதிர்த்து ஒரு விவாதமாகியது. அவர் இல்லாத மற்றைய இராணுவ மையக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து மத்தியகுழுவின் சில உறுப்பினர்கள், முதலில் எடுத்த முடிவில் பின்வாங்காமல் முன்னெடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த வகையில் அவரும், அவர்கள் இன்றியும் இதை நடத்தவும், நடத்தும் வடிவம் வேறுவிதமாகவும் மாற்றப்பட்டது. குறைந்த எண்ணிக்கை கொண்ட நபர்கள் மூலம் (10 -15 பேர்), அவர்கள் இன்றிய புதியவர்களை பயன்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவர் ஒரு தலைப்பட்சமாக இந்த நடவடிக்கையை நிறுத்தியது பற்றிய விவாதத்துக்கு அவராக முன் வராதவரை, அவருக்கு புதிய நடவடிக்கை பற்றி தெரிவிக்கும் முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக இச் சம்பவம் நடந்து முடிந்த பின்னர், பத்திரிகை மூலம் அவர்கள் தெரிந்து கொண்டனர். ஆனால் நாங்கள் தான் செய்தோம் என்று சொல்லும் அளவுக்கு, அவருக்கு தெரியாது.
நீ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டியா என்று புலிகள் கேட்ட போது, அதை நான் மறுத்தேன். அதேபோல் மற்றைய இராணுவ நடவடிக்கைகளையும் மறுத்தேன்;.
கொள்ளை அடிப்பது சரியா பிழையா என்ற விவாதத்துக்கு, இன்று பதில் அளிப்பது சிறந்தது எனக் கருதுகின்றேன். கொள்ளை அடிப்பது தொடர்பாக, அன்று பரந்த அளவில் அனைத்து இயக்கங்களினதும் ஒரு கோட்பாடாகவே அது இருந்தது. பிரபாகரனும் முன் நின்று செய்த தெல்லிப்பழை கூட்டுறவுச் சங்கக்கடை கொள்ளை, நீர்வேலி வங்கிக் கொள்ளை, தின்னைவேலி வங்கிக் கொள்ளை, குரும்பசிட்டி நகைக்கடை கொள்ளை என்று நூற்றுக் கணக்கான கொள்ளைகள் நடந்தன. இதைச் செய்வதே இயக்கங்களின் கோட்பாடாகியது. இவற்றை நாம் அரசியல் ரீதியாக விமர்சித்தோம். இந்த நிலையில் எமது இயக்கம் கொள்ளை அடிப்பது அவசியமற்றதாகவே கருதி வந்தோம். மக்களை சார்ந்து நின்று, அவர்களைச் சார்ந்து போராடுவதே சரி என்பது, எமது அமைப்பின் அடிப்படையான அரசியல் நிலைப்பாடாக இருந்தது. இந்த வகையில் 1982 களில் அமைப்பின் நிதி நெருக்கடியை போக்க 1, 2 ரூபாவாக, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தபடி பணத்தைத் திரட்டினோம். மக்களை சார்ந்து அவர்களின் போராட்டத்தை நடத்துவதை முதன்மைப்படுத்தினோம். இதை நாம் 1983 இனக் கலவரம் வரை, தொடர்ச்சியான ஒரு அரசியல் நடைமுறை ரீதியான எமது அரசியல் போராட்டமாக கையாண்டு வந்தோம். பல பத்தாயிரம் வீடுகளின் கதவை தட்டி அவர்களுடன் உரையாடி, சிறிய தொகையைப் பெற்றோம்.
இந்த அரசியல் நிலைப்பாட்டை 83 கலவரமும், அதற்கு பிந்திய நிகழ்ச்சிகளும் தலை கீழாக்கியது. இந்தியா எமது போராட்டத்தில் நேரடியாக தலையிட்டு, இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கத் தொடங்கியது முதல், எமது நிலைப்பாட்டில் சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தோம். இதில் தமிழீழக் கோசமும் அடங்கும். ஆனால் அவை நாம் முன்வைத்த நோக்கத்தை ஈடு செய்யவில்லை. மொத்தத்தில் அது தவறாக இருந்ததைக் காண்கின்றோம். அமைப்பில் இருந்த கட்சி, தமிழீழக்கட்சி அல்ல. இது சரியாக இருந்தது. இந்த வகையில்தான் கொள்ளையும் கூட. வீங்கி வெம்பிய அரசியல் அலையில், எமது இந்த மாற்றங்கள் எதையும் அரசியல் ரீதியாக சாதிக்க அனுமதிக்கவில்லை. அரசியல் ரீதியான பலவீனத்தைத்தான் இவை உருவாக்கியது.
இந்தியாவை ஆரம்பம் முதலே எமது எதிரியாக பிரச்சாரம் செய்த நாம், இந்திய தலையீட்டை எதிர்கொள்ள எமது தற்காப்பை முதன்மைப்படுத்திய அரசியல் வழிமுறையைக் நடைமுறைப்படுத்தக் கோரியது. இயக்கங்கள் வீங்கத் தொடங்கிய நிலையில், ஏற்பட்ட பண்பியல் மாற்றத்தை, வேகமாக நாமும் கடக்க எண்ணினோம்.
ஆயுதப் பயிற்சி என்ற அடிப்படையில், அதை சாதிக்க அரசு பணத்தை கொள்ளையிட அமைப்பு அனுமதி அளித்தது. கணிசமான ஒரு தொகையை பெறுவதற்கு அப்பால், தொடர்ச்சியாக இதைச் செய்வதில்லை என்ற முடிவையும் 1983 இல் அமைப்பு மாநாடு முடிவு எடுத்தது. பயிற்சி வழங்கவும், புதிய நிலைமைகளை எதிர்கொள்ளவும் இந்தியாவை நோக்கி சிலர் நகர்த்தப்பட்டனர். ஆயுதம் வாங்குவதற்கு முன்முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் எம்மைச் சுற்றி கடன் பெருக்கெடுத்தது. முன்பே ஆயுதம் பெறுவது சார்ந்து 1979 முதலே, ஆப்கான் வரை விசு சென்று வந்தவர். இதனால் ஏற்பட்ட கடன், அமைப்பை பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடியில் இறுக்கியது. மக்களிடம் செல்ல முடியாதபடி அவர்களிடமிருந்த பொதுவான ஆயுதக் கவர்ச்சி அலை, எம்மை அவர்களிடம் இருந்து அன்னியப்படுத்தியது. சமுதாயத்தில் ஆயுதக் கவர்ச்சி, இராணுவம் மீதான தாக்குதல் என்ற எல்லையில் எம்மை அவர்கள் சிறுமைப்படுத்திய போது, இது சார்ந்த மக்கள் கேள்விகளால் தனிமைப்படுத்தப்பட்ட போக்கால் பணத்தை சேகரிப்பது தடைப்பட்டது. கொள்ளை அவசியம் என்ற உணர்வும், அமைப்பின் பொதுக் கருத்தாக இருந்தது. இதில் இருந்தே கற்றன் நசனல் வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. கற்றன் நசனல் முன்பாக வேறு ஒரு சில கொள்ளையும் அடிக்கப்பட்டது. கற்றன் நசனல் வங்கி நடவடிக்கையின் பின் கொள்ளை அடிப்பது முற்றாக நிறுத்தப்பட்டது. இந்த வங்கியில் கிடைத்த அனைத்துக்கும், கணக்கு வழக்கு இறுதிவரை பேணப்பட்டது. இதில் ஒரு பகுதியைத்தான், தீப்பொறி ஊடாக புலிகள் மீளக் கொள்ளையடித்தனர். ஒரு பகுதியை இந்திய அரசும் எம்மிடம் இருந்து பறித்தது.
இன்று ஒட்டுமொத்த நிகழ்வை ஆராயும் போது, எமது முடிவு முற்றாக தவறானதாகவே இருந்ததை காணமுடிகின்றது. கொள்கை ரீதியாக கொள்ளை அடிப்பதை குறித்து இதை நான் கூறவில்லை. கொள்ளை அடிப்பது ஒரு மக்கள் இயக்கத்துக்கு, கோட்பாட்டு ரீதியாக அவசியமானது. ஆனால் நாம் அன்றைய நிலைமைக்கு பின்னால் வால் பிடித்து இழுபட்டுச் சென்றதன் மூலம், ஆயுதம் பயிற்சி என்ற எல்லைக்குள் அமைப்பை மூழ்கடித்து பாசிசத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அதை அழிய வைத்தோம். தமிழ் மக்கள் மேல் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை புலிகள் நிறுவுவதற்கு துணை போயுள்ளோம். நாம் மற்றைய இயக்கங்கள் வீங்கி வெம்பும் என்ற முடிவைத் தெளிவாக எடுத்தோமே ஒழிய, அது வெடித்துச் சிதறும் என்பதை அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு எமது நடைமுறை வேலையை நகர்த்தவில்லை. ஆயுதங்கள் மற்றும் இராணுவ பயிற்சிகள் பெற்ற நபர்களை, வெம்ப வைக்கும் போராட்ட வடிவமே தாராளமாக அள்ளித் தரும் என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்படவில்லை. நாம் அரசியல் ரீதியாக அமைப்பை உருவாக்கத் தவறினோம். இதனால் அமைப்பு உடைந்தது. மக்களுக்குள் ஆழமாக ஊடுருவுவதைச் செய்ய மறுத்தோம். தேசியத்தின் முற்போக்கு பிற்போக்குக்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டை, ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் பிரித்து அதில் அரசியல் மயமாகுவதை மறுத்தோம்;. நாம் மற்றைய இயக்கங்கள் மாதிரி, அவர்களின் பின்னே ஒடிக்கொண்டிருந்தோம். அவர்கள் பின்னால் ஓடிய நாங்கள், அதில் சிலவற்றை விமர்சித்தபடி சிலவற்றில் அவர்களைப் போல் பின்பற்றினோம். அரசியல் ரீதியாக செய்யத் தவறிய பணி, எம்மால் இன்றுவரை சுயபலத்தை சார்ந்த அடிப்படைக்கான அரசியல் கூறுகளைக் கூட உருவாக்க முடியாமல் போயுள்ளது. இயக்கத்தில் இருந்த ஒரு நபர் கூட, சரியான அரசியல் பாதைக்கு எமக்கு சமாந்தரமாக அல்லது இணைந்து தனது கைகளை உயர்த்த முடியவில்லை என்பதே எதார்த்தம்.
அன்று கோட்பாட்டு ரீதியாக எடுத்த முடிவை அடிப்படையாக கொண்டு வங்கியை கொள்ளை அடித்த நாம், அதனுடன் அந்த நடவடிக்கையை நிறுத்தினோம்;. இது மற்றைய இயக்கங்களில் இருந்து தெளிவாகவும் கொள்கை ரீதியாகவும் வேறுபட்டது. அத்துடன் இந்த நடவடிக்கை பற்றி எதுவும், நீண்ட காலமாக யாருக்கும் தெரியாது. எமது இயக்கத்தின் உடைவு தான் இதை வெளியில் தெரிய வைத்தது. உண்மையில் எம்மண்ணில் கொள்கை கோட்பாடற்ற ஒரு கொள்ளை நோயாக இருந்தது. கொள்ளை அடிப்பது இயக்கத்தின் ஒரு பணியாக இருந்தது. இந்த வகையில் இயக்கங்கள் கடைகள், வீடுகள் என்று எங்கும் கொள்ளையடித்தனர். புலிகள் குரும்பசிட்டி வன்னியசிங்கம் நகைக் கடைக் கொள்ளை முதல் பல ஆயிரம் கொள்ளைகளை நடத்தினர். இதை பிளாட், ரெலொ, ஈரோஸ் என்று பல இயக்கங்கள் அன்றாடம் வரைமுறையின்றி செய்தனர். தனிநபர்களை கடத்திச் சென்று பணயம் வைத்து பணத்தைக் கறந்தனர். புலிகள் தங்கள் இறுதிக்காலம் வரை தனி நபர்களைக் கடத்திச் சென்று பணத்தைக் கறப்பது தொடர்ந்தது. புலிகள் ஆட்களை கடத்தி பணத்தை பறிப்பது என்பது, ஆயிரக்கணக்கில் என்றளவுக்கு அது வளர்ச்சி பெற்றது.
தொடரும்
பி.இரயாகரன்
31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31) 28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28) 27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27) 26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26) 25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25) 24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24) 21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21) 20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20) 19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19) 18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18) 17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17) 16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16) 15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15) 14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14) 13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13) 12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12) 11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11) 10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10) 09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09) 08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08) 07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07) 06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06) 05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05) 04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04) 03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03) 02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02) 01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)