Language Selection

7ம் திகதி முதல் 10 திகதி வரை பல்வேறு தளத்தில் பல விடையங்களை பொதுவாக கேட்டார்கள். இடையில் விஐpதரன் தொடர்பாகவும், அப் போராட்டம் தொடர்பாகவும் கேட்டனர். அப்போது பல்கலைக்கழகம் எடுத்த படங்களை கொண்டு வந்து, அதை வைத்து விசாரித்தார்கள். இதை அவர்கள் பல்கலைகழக மாணவர் அமைப்புத் தலைவர் சோதிலிங்கத்தின் வீட்டில் இருந்து கைப்பற்றி இருந்தனர்.

இந்த படங்களின் பிரதி ஒன்றை, அன்று நான் எடுத்திருந்தேன். தற்போதைய என்னிடம் உள்ள படங்களில், அவையும் உள்ளடங்கியுள்ளது. (பகுதி 1 - பகுதி 2 ) இதை தனியாக பல தரப்பு விசாரணைகளையும் பின் விரிவாக பார்ப்போம். 7, 8, 9, 10 மாலை வரை சுமுகமான நிலமை இருந்தது. பல்வேறு கேள்விகள், அவற்றில் பல தரப்பு விடையங்களை கதைப்பது, அரசியல் ரீதியான கருத்துக்களை விவாதிப்பதுமாக இருந்தது.  என்னை இரண்டு வௌவேறு கோணத்தில் படம் எடுத்ததுடன், உணவு மற்றும் நீரும் தரப்பட்டது. இதற்கிடையிலான கேள்விகள். இவை அனைத்தும் அவர்களின் அடுத்த கட்ட விசாரணைக்கான வெளித் தொடர்புகளுடன் ஓட்டியிருந்ததைக் காட்டியது. நான் நிதானமாக, ஆனால் உறுதியாக பகுத்தாய்ந்து கருத்துக்களை முன்வைத்தேன். ஒரு அரசியல் பிரச்சாரத்தை செய்பவனாக, அதே நேரம் போராட்டத்தில் ஒரு இடதுசாரியின் உறுதியான நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டு அணுகினேன். அவர்கள் ஆச்சரியப்படும் வகையில், கேட்க வைப்பதில் வெற்றி பெற்றேன். ஆனால் அவர்களின் சந்தேகங்கள் மற்றும் அவர்களின் அரசியலின் குருட்டுத்தனமான விசாரணை வடிவங்களை, இதற்குள்ளும் தொடுத்து விட இடைவிடாது தீவிரமாக முயல்வதை அடிக்கடி அவதானித்தேன். அவற்றைப் பொதுவான கதைக்கும் வேகத்தில் பதிலளித்து, இயல்பாக கதைப்பதான ஒரு வழியைக் கையாண்டேன். தயக்கமின்றி பகுத்தாயவும், இயல்பில் பொது அரசியல் வழியில் கையாளவும் கற்றுக் கொண்டேன். எதிரியின் தீவிரமான கேள்வியை சர்வசாதாரணமாக கையாண்டு பதிலளித்த போது, அவர்களின் அடுத்த கேள்வியின்றி திக்குத்திசை தெரியாத ஒரு அப்பாவியாக அவர்கள் முன் நின்றேன்;. ஆனால் 10ம் திகதி புதிய தகவல்கள், என் மீதான புதிய வகையான கேள்விகளை அவர்களுக்கு ஏற்படுத்திய போது மூன்றாவது வதை ஆரமபித்தது.

மூன்றாவது வதையின் ஆரம்பம்

10ம் திகதி இரவு 8 மணியளவில் விசுவுடனும்; சலீமுடனும் பல்வேறு விடையங்கள் தொடர்பான, கேள்விகள் மேல் கதைத்துக் கொண்டிருந்தேன். திடீரென வந்த மாத்தையா எனது முகத்தில் ஓங்கி அடித்தான். என்னைப் பழையபடி தூக்கி உயர்த்திக் கட்ட கட்டளையிட்டான். எடுத்த எடுப்பில் பிரபா யார் என்று கேட்டான். அவன் எங்கே இருக்கின்றான் எனக் கேட்டான். நான் தெரியாது என்றேன். நீ மத்தியகுழு உறுப்பினர் தானே என்றான். இந்த கேள்வி எனக்கு சில விடையங்களை, புலிகள் தெரிந்து கொண்டு விட்டனர் என்பதை புரிந்து கொள்ள வைத்தது. பிரபா கைது செய்யப்பட்டு விட்டாரா? என்ற  கேள்வி எழுந்தது. எனக்கு அவனின் பொறுப்பற்ற தன்மையை எண்ணி கோபம் கொப்பழித்தது. நான் கைது செய்யப்பட்ட நிலையிலும், இன்னமும் தலைமறைவாகாது இருந்தானா? என்ற தொடர் கேள்வி என்னை வாட்டியது. அதுவும் சில நிமிடங்கள் தான்.

மாத்தையா அடுத்து மத்திய குழுவின் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் எங்கே என்றான்? இது எனது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. இணுவில் கிளை உறுப்பினர் பட்டியலைக் கூறினான்.  இதன் மூலம் தகவல் இணுவில் வழியாக வெளிவந்ததை ஊகித்துக் கொண்டேன். உடனடியாகவே எப்படி தகவல் வெளி வந்திருக்கும் என்பதையும் விரைவில் புரிந்துகொண்டேன். நான் அவரின் கூற்றை அப்படியே மீள அங்கீகரித்தேன். அதில் ஒரு சிலரை மட்டும் தெரியும் என்றேன்;. நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டேன். அதேபோல் அவர் குறிப்பிட்ட மத்தியகுழு உறுப்பினர்களை, உறுப்பினர்கள் என்று ஏற்றுக் கொண்டேன். அதேநேரம் அவர் அன்ரன் பற்றி சொன்னவற்றை மீண்டும் ஏற்றுக் கொண்டேன்.

அமைப்பு பற்றிய முழுத் தகவல்களை அவர்கள் அறிந்தது எப்படி? முன்பு எம்முடன் இருந்த உறுப்பினர் ஒருவர் அமைப்பு உடைவின் பின் பி.எல்.எவ்.ரியுடன் சென்றார். அவர்கள் அவருக்கு இந்தியாவில் வைத்து பயிற்சி வழங்கிய காலத்தில், முகாமில் அவருடன் பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில், ஆயுதம் ஒன்றுடன் தப்பிச் சென்று, புலிகளிடம் சரணடைந்தாக அறிந்திருந்தேன். அவனூடாகவே, அவனுக்கு தெரிந்த எல்லையில் தகவல் வெளியாகியதை ஊகித்த போது, பிரபா கைது செய்யப்பட்டு விட்டானா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கத்தான் செய்தது. வசந்தனுக்கும் பிரபாவை தெரியும். நேரடியான நன்கு பழக்கம் இல்லாவிட்டாலும், அறிமுகம் இருந்தது. இந்த இடத்தில் முந்திய விசாரணையில் பிரபாவின் பெயர் ஒரு முறை கேட்கப்பட்ட போதும், பின்னால் இதுபற்றி என்னிடம் எதுவும் கேட்கப்படவில்லை. வசந்தன் பிரபாவின் பெயருக்கு வெளியில் எதையும் சொல்லியிருக்கவில்லை. ஏனெனில் அப்போது பிரபாவைப் பற்றி அதிக தெரியாத நிலையில் வசந்தன் இருந்தான். சாதாரணமாக என்னுடன் சில வேளை சந்தித்ததற்கு அப்பால், அவரைப்பற்றி எதையும் பெரிதாக வசந்தன் அறிந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் நாளாந்தம் சந்திக்கும் பல பத்து அரசியல் ஆர்வமுள்ளவராக மட்டுமே, பிரபாவை என்னுடன் வைத்த வசந்தன் சந்தித்தான். வசந்தனுக்கு தற்செயலான நபராகவே பிரபா இருந்தான்;. முதல்நாள் விசாரணையில் பிரபா யார் என்று மட்டும்தான் கேட்டனர். பிரபாவும், நானும் மத்தியகுழு உறுப்பினர் என்பது வசந்தனுக்குத் தெரியாது. புலியிடம் சென்ற இணுவில் உறுப்பினருக்குத் தெரியும்.  

10ம் திகதி மீண்டும் தொடங்கிய அடி உதை விசாரணையுடன் கூடிய கட்டித்தொங்கவிடல், 14ம் திகதி வரை நீடித்தது. இந்தக் காலத்தில் பிரபா யார்? எங்கே இருக்கின்றான்? மற்றைய மத்தியகுழு உறுப்பினர்கள் எங்கே? மத்தியகுழுவின் பொறுப்புகள் யார்? யார்? இராணுவ மையக்குழு உறுப்பினர் யார்? புலியில் இருந்து விலகி எம்முடன் இயங்கிய தமிழ்மாறன் என்ற ராகவன் மற்றும், ஐயர் எங்கே? போன்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டே விசாரணை தொடர்ந்தது. நான் தொடர்ந்து தெரியாது என்றேன். நிர்வாணமாக இருந்த என்மேல் அடி உதை மற்றும் வீங்கிக் கிடந்த கை மேல் தாக்குவது, கை காலில் உருவாகிய காயங்களை மீள பிய்ப்பது, நெஞ்சில் இருந்த புண்ணை மீண்டும் நகத்தால் வார்ந்து சித்திரவதை செய்வது என்று பல வக்கிரங்களைத் தொடர்ந்தனர். கையிலும் காலிலும் உள்ள காயங்கள் மீளமீள சிதைக்கப்பட்டதன் மூலம், அக் காயம் சார்ந்த அடையாளங்கள் சில இன்று வரை என் உடலில் தழும்பாக மாறி நீடிக்கின்றது. சித்திரவதை ஊடாக கேள்விகள் மேல் கேள்விகளைக் கேட்டனர். நான் மத்தியகுழுவில் பிரச்சாரத்தை செய்வதுதான் என் பொறுப்பு என்றேன். எனக்கு எதுவும் தெரியாது என்றேன்;. அதனால் தான் நான் பகிரங்கமாக இருப்பதாக கூறினேன். என்னை அவர்கள் வந்தே சந்திப்பதற்கு அப்பால், நான் அவர்களை சென்று சந்திப்பது இல்லை என்றேன். நீ பிரச்சாரத்துக்கு பொறுப்பு என்றால், எங்கே உங்கள் பத்திரிகை, நோட்டீஸ் அடிக்கப்படுகின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இப்படி  பல்துறை சார்ந்த கேள்விகளை கேட்டுத் தாக்கினர். நான் அமைப்பின் இரகசியமான எதுவும் எனக்குத் தெரியாது என்றேன். ஏனெனில் பகிரங்கமான ஒரு உறுப்பினராக நான் இருப்பதால், எனக்கு அதை தெரியப்படுத்த மாட்டார்கள் என்றேன்;.

இந்நிலையில் இந்த விசாரணையில் மாத்தையா திடீரென வேறு ஒரு வழியை கையாளத் தொடங்கினான். இந்த வகையில் மாத்தையா, ஒரு நரிக்குணம் உள்ள ஒருவன் என்பதை துல்லியமாக வெளிப்படுத்தினான். புலிகளின் தலைவன் பிரபாகரன் ஒரு முரடனுக்குரிய வழியில் சதிகளை துணை கொண்டு, அடித்து உடைத்து பழிதீர்த்தே தன் தலைமையை நிறுவியவன். ஆனால் மாத்தையா இதில் சிலவற்றை அடிப்படையாக கொண்டு காட்டுமிராண்டித்தனமாக பயன்படுத்திய அதேநேரம், அரசியல் ரீதியாக தனது சமூக அறிவால் இதை சாதிக்க முனைந்து தோற்றுப் போனவன் தான். பிரபா மாத்தையா மோதலில் சரிசமமாக மோதியிருப்பின், பிரபாகரன் தோற்பது அதன் விதியாகும். ஆனால் ஆரம்பம் முதலே தன்னை தலைவனாக வலிந்து காட்டியே வழிபாட்டுக்குரிய தலைவனாக முன்னிறுத்தப்பட்டவன்.  அவன் பீதியால் சொந்த அணிகள் முன் கூட தோன்றாதவன். இப்படி மக்கள் முன் தோன்றாதவனை  கடவுளாக்கியதன் மூலம், தன் பற்றிய ஒரு மாயையை விதைத்து தலைவனாகியவன். மாத்தையா சொந்த அணிகள் முன் நடமாடி, அவர்களின் மேல் தன் அறிவாலும் தன் தலைமையை நிலை நாட்டியவன். ஆனால் பரிதாபத்துக்குரிய வகையில், அவன் கொண்டிருந்த அரசியல் சதி வழிகளில் இயங்கி அழிவது அவன் விதியாகவிருந்தது.

அவன் என் மீதான விசாரணையில் புதிய அணுகுமுறையாக, அரசியல் விவாதமாக விடையத்தை கொண்டு வந்தான். புலிகளின் மத்தியகுழு பற்றிக் கதைத்தான். எங்களை நீங்கள் ஜனநாயக மத்தியத்துவமற்ற அமைப்பாக வருணிப்பதாக கூறினான். அது உண்மையும் கூட என்றான்;. ஆனால் ஜனநாயக மத்தியத்துவமற்ற மத்தியகுழு உறுப்பினருக்கு, அமைப்பின் பலம், பலவீனம், ஆயுதம், பணம் என்று அனைத்தும் தெரியும் என்றான். ஜனநாயக மத்தியத்துவமற்ற எமது அமைப்பின் பொதுநிலை இது என்றான். நீங்கள் இதைவிட முன்னேறிய உயர்ந்த ஜனநாயக மத்தியத்துவத்தை கடைப்பிடிக்கின்றீர்கள் என்றான்;. நீங்கள் புலிகளில் இருந்து இந்த அடிப்படையில் வேறுபடுகின்றீர்கள் தானே என்றான். ஆம் என்றேன். ஆகவே உங்கள் மத்தியகுழுவுக்கு எங்களை விட அதிக ஜனநாயகம் உள்ளதால், அமைப்பின் பணம், ஆயுதம், இராணுவக் குழு, மற்றும் மற்றைய குழுக்கள் பற்றி அனைத்தும் தெரிந்திருக்கும் என்றான். ஆகவே அனைத்தையும் சொல் என்றான். இது ஒரு தர்க்கரீதியான வாதமாகவும், அரசியல்ரீதியான வடிவமாகவும் விசாரணை மாறியது. விடையத்தை நான் கையாண்ட வடிவத்தில் இருந்து, அவர்களின் பாசிசத்தை நிலைநாட்டும் கேள்வி அரசியல் வடிவமாக பரிணமித்தது.

நான் இதை தயக்கமின்றி அரசியல் ரீதியாக சரளமாக கதைக்கும் பொதுவான தன்மையில், இந்த கேள்வியை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டியிருந்தது. இது மட்டும் தான் நான் சொல்வதை நம்பவைக்கும். இதைப் பற்றி யோசிக்கும் அவகாசத்தை பெறும் வகையில், வெளியில் பொதுவான நிலைமையை அரசியல் ரீதியாக விளக்கியபடி, பதிலை வழங்க தொடங்கினேன்.

நான் மத்தியகுழு என்ற அடிப்படையில் பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபட்டவன். அத்துடன் நான் பகிரங்க உறுப்பினர். நிதி மற்றும் ஆயுதங்கள், ஆயுதக் குழுக்கள் பற்றி நான் தெரிந்து கொள்வது என்பது, அதீத ஜனநாயகமாகும். அப்படி எமது அமைப்பு இருப்பதில்லை. இந்த வகையில் இராணுவத்துறை சார்ந்து, மத்தியகுழு மூவரை நியமித்தது. அவர்களே மிகுதி நபர்களை தெரிவு செய்பவர். அது பற்றி மத்தியகுழுவுக்கு தெரியாது. அந்த மூவர் யார் என்றார். நான் கற்பனையில் உருவாக்கிய இருவர் பெயரையும் கூறி, மற்றவர் பெயர் தெரியாது என்றேன். ஆனால் அவர்கள் பற்றி எதுவும் தெரியாது என்றேன். இந்தப் பதில் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. உண்மையில் மத்தியகுழுவுக்கு வரையறுத்த அளவில் இவை தெரிந்திருந்தது. நிதி மற்றும் இராணுவ ஆயுதங்களுக்கு மத்தியகுழுவில் யார் பொறுப்பு என அனைத்தும் மத்தியகுழுவுக்கு தெரிந்திருந்தது. நானே அந்தக் காலத்தில் அப் பொறுப்புகளை வகித்தேன். அதேநேரம் அந்நேரத்தில் இருந்த இராணுவ குழுவுக்கும் (இது பயிற்சியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.) நானே பொறுப்பாக இருந்தேன். என்.எல்.எப்.ரி இயக்கத்தின் 1984 முதல் நிதி மற்றும் இராணுவ உபகரணத்துக்கு பொறுப்பாக இருந்தேன். பி.எல்.எவ்.ரி.யின் உடைவின் பின்பு இராணுவ பயிற்;சிக்கும் நான் பொறுப்பாக இருந்தேன். இவற்றுக்கு யார் பொறுப்பு என்பதை என்னிடமே கேட்டனர். நான் தெரியாது என்றேன்.

அடுத்து கற்றன் நா~னல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டியா என்று கேட்ட போது நான் இல்லை என்றேன்.

தொடரும்
பி.இரயாகரன்

 31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)

 

30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)

  

29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)

 

 

 

28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)

 

 

27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

 

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

 

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)