யுத்தத்தின் பின்னான பேரினவாதம், மக்களை பிளக்கும் இனவரசியலை தொடர்ந்து முன்தள்ளுகின்றது. தமிழ் குறுந்தேசியமோ, தொடர்ந்து தங்கள் இனவாதம் மூலம் இந்த இனப்பிளவை மேலும் ஆழமாக்குகின்றது. இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்வைத்து, இடதுசாரியம் செயற்படவில்லை. மாறாக சந்தர்ப்பவாதமாகவே வலதுசாரியத்துடன் கூட்டமைத்து, தானும் இனவாதத்தை முன்தள்ளுகின்றது.
தமிழ்மக்கள் தமிழீழம் மூலம்தான் தீர்வு காணமுடியும் என்ற வலதுசாரியமே, தொடர்ந்து தீவிரமான தமிழ் அரசியலாக உள்ளது. இது இன்று வலதுகளின் அரசியல் கோரிக்கை மட்டுமல்ல, இடதுகளின் அரசியல் கோரிக்கையாகவும் கூட உள்ளது. தமிழ் மக்கள் என்ற இனவடையாள அரசியல், வர்க்கத்தைக் கடந்து தொடர்ந்து ஆட்டம் போடுகின்றது. புலிகள் முதல் கூட்டமைப்பு வரை இதைத்தான் முன்வைத்தார்கள் என்றால், இதுதான் இடதுசாரியமாக இன்று மாறியுள்ளது. இனவொடுக்குமுறைக்கு எதிராக, வர்க்கம் கடந்த ஒரு அரசியல் நடைமுறையாக இது உள்ளது.
சிங்களப் பேரினவாதம் கையாளும் ஓடுக்குமுறையும், அது ஏற்படுத்தும் மனித அவலங்களும், இன்று தொடர் அரசியல் நடைமுறையாக உள்ளது. இந்த மனித அவலத்தை, வர்க்கம் கடந்து இனம் என்ற அடையாளம் மூலம் அணுகுகின்றனர். இப்படி வலது இடது கடந்த அரசியலே, இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
இனம் தான் எங்கள் அடையாளம், வர்க்கங்களல்ல. இப்படி முன்னிறுத்தும் இடதுசாரியம் தான், புலியின் பின்பான பொது அரசியலாகின்றது. இதன் மூலம் தான் தமிழ் மக்களை வெல்ல முடியும் என்பதே, மூடிமறைத்த இடதுசாரியத்தின் அரசியல் யுத்ததந்திரம் என்கின்றனர். மக்களை இடதுசாரி அரசியலை முன்வைப்பதன் மூலம் அணிதிரட்ட முடியாது, மாறாக வலதுசாரியத்துடன் சென்று மக்களை இடதுசாரியத்துக்கு வென்றெடுத்தல் என்பதே, இன்றைய இடதுசாரியம் என்ற சந்தர்ப்பவாதம் அரங்கேறுகின்றது. இன்று இடதுசாரியம் பேசும் அனைவரும், இதைத்தான் தங்கள் சந்தர்ப்பவாதம் மூலம் அரங்கேற்றுகின்றனர். புலிகள் முதல் கூட்டமைப்பு வரை, கூடிக் கூத்தாடும் இடது சந்தர்ப்பவாத அரசியல் தான், தமிழ்மக்கள் பெயரில் இடதுசாரியமாக அரங்கேறுகின்றது.
இன்று நிலவும் அரசியல் போக்குகள் மீது, அதன் நடத்தைகள் மீது, விமர்சனமற்ற சந்தர்ப்பவாதங்கள் மூலம் தான், எதையும் வலது இடது கடந்து கூடிக் கூத்தாட முடிகின்றது.
கடந்து போன எம் மக்களின் அவலங்கள், எதிரியால் மட்டும் ஏற்பட்டதல்ல. மாறாக எதிரியை எதிரியாகவே கூறிக்கொண்டவர்களின் அரசியல் நடத்தையால் தான் எம்மினம் அழிந்தது. இதன் மூலம் பாரிய துயரங்களை மக்கள் சந்தித்தனர். இந்த உண்மையை மறுதலிப்பதன் மூலம் தான், வலதுகளும் இடதுகளும் மீண்டும் மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து செய்ய முடிகின்றது. இதைப்பற்றிய விமர்சனம், சுயவிமர்சனமற்ற புது அரசியல் வே~ங்கள், அதன் இனவாதமும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது.
மக்களுக்கு முன் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க முடியாத எந்த அரசியலும், மக்களை ஏமாற்றி அவர்களை படுகுழியில் தள்ளிவிடுகின்றது. இதுதான் எமது கடந்த வரலாறு. சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் தமிழ் மக்களின் அவலத்தின் பெயரில் அவர்களை ஏய்த்து, தங்கள் குறுகிய பிழைப்புவாத அரசியலை தொடருகின்றனர். இதுபற்றி போதிய அரசியல் விழிப்புணர்வற்ற எம்மக்களின் எதிர்காலம் என்பது, தொடர்ந்து இருண்டே காணப்படுகின்றது.
பி.இரயாகரன்
21.08.2010