எமது மக்கள் அழிவில் மூழ்கியது
எவ்வாறு உருவாகி
இவ்வாறு நந்திக்கடலில் முடிவாகியதெனவும்
அதை எவ்வாறாய் இவ்வாறில்லாமல்
மாற்றல் முடித்திருக்குமெனவும் உபதேசித்தபடியே
அநாகரீகதர்மபாலவின் ஆராச்சியில்
வித்துவான்கள்
வெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்….
புலத்துப்பினாமியள்
மகிந்தரின் மகிமைக்கு ஓசானாப் பாடியபடியே
வசூலுக்கும் தயாராகி விட்டார்கள்
ஆயுதம் அனுப்பின கேபி அண்ண
நம்பிக்கைதான் வாழ்க்கையென்றும்
என்னை யாரெண்டு தெரியுமோ என்கிறார்…..
இனியொரு
எழுதலை கவிழ்க்கும்
சிறுமைச் சீவியம் தொடர்கதையாய்
சுழல் நாற்காலிக்குள் குறுக்க
கொடுக்கிழுத்து நிற்கிறது
முள்ளிவாய்க்கால் தவறுகள் பற்றியதாய்
முற்போக்காளர்களின்
ஆய்வுகள் குவிந்தவண்ணமேயுள்ளது
காழ்ப்பும் கடிபடலுமாய்
ஓரடிதன்னும்
அசைவுக்கான அறிகுறிகள் தென்படுவதாயில்லை
மக்கள் நலன்பேசும் பேர் ஆசான்களின்
இம்சை தாங்கமுடியா இளையவர்கள்
அழிவின் பின்னரும்
புலி பறவாயில்லையென முணுமுணுக்கிறார்கள்
செயலிறங்கும் தடயங்களை முடக்குவதில்
ராஜபக்ச கொல்லைக்குள் இருந்தேதான்
அறிவாளிகளின் எழுதுகோல்கள்
எறிகணைகளாய் வெடிப்பதற்குச் சமனாகிறது
ஆசிய அதிசயம்
அழிவில் நிகழ்த்தி கோரத்தில் கோலோச்சியவர்கள்
கொட்டமடிக்கவே வழிவிடுகிறார்கள்…….
இன்னமும்
நொந்து கிடக்கும் மக்களின் முதுகில்
அகதி முகாம்களிலும்
மீள்குடியேற்ற வெற்றுக்குடில்களிலும்
இன அழிப்பின் மேலாகவும்
எகிறிமிதித்தபடியே
எலிவாகன இழிவாடலில் காலம் கரைகிறது…..
தலைவரை மிஞ்சிய கேபியிடமும்
தலைக்கனம் மேவிய மேதாவிகளிடமும்
தமிழினம் சிக்கித் தவிக்கிறது…