Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகளின் வதைமுகாமில் 80 நாட்கள் நான் இருக்க நேர்ந்தது. ஒருபுறம் அவர்களின் வதை, மறுபுறம் அவர்களுடன் போராட்டமும் தொடங்கியது. அவை எனது அடிப்படைத் தேவைகள் சார்ந்த போராட்டமாக தொடங்கியது. இவை விவாதம், கருத்துப் பரிமாற்றம் … என்று பல வடிவத்தில் தொடர்ந்தது. 

இதன் மூலம் வதைமுகாமின் இறுதிக்காலத்தில், மீண்டும் மீண்டும் கோரியதன் பெயரில் சில சலுகைகளைப் பெற்றேன். 5 அல்லது 10 நாட்களுக்கு ஒருதடவை, உடல் மேல் சிறிது தண்ணீரை ஊற்ற மூன்று நான்கு முறை அனுமதித்தனர். எனது தொடர்ச்சியான வற்புறுத்தல் மற்றும் கதைத்தல் மூலம் இடைக்கிடை பத்திரிகையைப் பெறவும் குளிக்கவும் முடிந்தது. இதன் பின்னணியில் குறிப்பான தெளிவான ஏதோ ஒரு நோக்கம், அவர்கள் முன் இருந்துள்ளது. இது பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.

என்னைக் குளிக்க அனுமதித்தவர்கள் ஒன்று முதல் மூன்று நிமிடத்துக்கு உள்ளாகவே இதை முடித்துவைத்தனர். அரைகுறையான குளிப்பு, ஊத்தையை அகற்றாமை மேலும் ஊத்தையை உள்வாங்கும் ஈரலிப்பையும் பசைத்தன்மையையும் உடல் மேல் உருவாக்கியது. மறுபுறத்தில் குளிப்பு இயற்கையான மகிழ்ச்சியைத் தந்தது. இது சுதந்திரமான இயற்கை சார்ந்த ரசிப்புத் தன்மையை, புத்துணர்வையும் தந்தது. மறுபுறத்தில் எனது தாடி, தலைமயிர் நகம் எல்லாம் வளர்ச்சி கண்டு, ஒரு பைத்தியக்காரனுக்குரிய தோற்றத்தில் மாறியிருந்தேன். இதை நான் உணர்ந்த போதும், இதைக் கண்ணாடியில் பார்க்கும் வசதி, அந்த வதைமுகாமில் கிடைக்கவில்லை. வதைமுகாமில் இருந்து தப்பிய பின்பு, அன்று இரவு ஆசை தீர ஊத்தை உரஞ்சி குளிக்க முன்பே, என்னை நான் பார்க்க முடிந்தது. விமலேஸ்வரன் கிணற்றில் இருந்து எனது விருப்பம் வரை, தண்ணீரை அள்ளி என் தலையில் ஊற்றினான்.

இந்த வதைமுகாமில் நேரத்தைக் கடத்த பொழுதுபோக்கை கண்டு பிடித்தேன். பகல் முழுக்க உடம்பில் உள்ள ஊத்தைகளை பெரிய நகத்தால் விரண்டி உருட்டுவதும், தலையில் பெரிதாக வளர்ச்சி கண்ட உருண்ட மொழிப் பேன் பிடிப்பதுமாகவே இருந்தது. என் மேல் படிந்து கிடந்த நாற்றம், அத்துடன் அறையின் அனைத்து ஊத்தையும் சேர்ந்து, மனிதனை அண்டிவாழும் சில உயிரினங்களுக்கு செழிப்பாக்கியது. பேன்களின் வளர்ச்சிக்குரிய ஒரு செழிப்பை என் தலை வழங்கியது. பேன் ஒவ்வொன்றையும் விறாண்டிப் பிடித்து நெரிக்கும் போது, இரத்தம் பீச்சியடிக்கும். அதைவிட அறை மூட்டைப் பூச்சியால் விளைந்து கிடந்தது. இது எனது இரத்தத்தை குடிப்பதில், அந்த ஒநாய்கள் போல் என்றும் தோல்வி பெறவில்லை. இந்த ஒட்டுண்ணிகளை பிடித்து நசிப்பதும், அந்த மணத்தை ஐPரணிப்பதும் கூட பொழுது போக்காக மாறியது. இதைவிட இந்த அறை, மனிதர்கள் அற்ற ஒரு நிலையில், சிலந்திகள் முதல் எண்ணற்ற உயிரினங்களின் விளைநிலமாக எனது வதை அறையை உருவாக்கியிருந்தது. அங்கு என்றுமே பல் விளக்க முடியாத நிலையில், எனது பல் சூத்தை பிடித்து அழிந்து போகும் வகையில் பூச்சிகள் தின்றிருந்ததை, நான் தப்பிய பின்பே அவற்றை அடையாளம் கண்டேன். பின்னால் பெரும்பாலான கொடுப்பு (கடைவாய்ப்) பற்களை அகற்ற நிர்ப்பந்திக்கப்பட்டேன். இந்தப் பைத்தியக்கார தோற்றத்தில் நான் தப்பி ஒடிய போதும், நடந்த போதும், என்னை ஒரு பைத்தியமாகவே வீதியில் சென்றோர் பலரும் கருதினர். தப்பிச் சென்ற ஒரு கட்டத்தில் இருபதுக்கு மேற்பட்ட புலிகள் ஊடாக விலத்திச் சென்றபோது, பைத்தியத் தோற்றம் எனக்கு சாதகமாக இருந்தது. எந்த உடுப்புமின்றி, ஒரு கிழிந்த ரன்னிங் காற்சட்டையுடன் சர்வசாதாரணமாக விரைவாக என்னால் போக முடிந்ததற்கு, இந்த வதை முகாம் உருவாக்கிய பைத்தியக்கார தோற்றம் எனக்கு கைகொடுத்தது. அத்துடன் அது தாழ்த்தப்பட்ட பிரதேசம் சார்ந்ததாக இருந்ததால், அதுவும் இயல்பாக கைகொடுத்தது. 

03.05.1987 அன்றும் மதிய உணவு தரப்படவில்லை. இரண்டு மணியளவில் மாத்தையா வந்து அறைக்குள் புகுந்தான். அங்கிருந்த மேசையில் தாவி ஏறிக் குந்திக் கொண்டான். கட்டையான அந்த உருவம், மலை போன்ற வக்கிர முகபாவம் கொண்ட தடித்த முகத்தில், எந்த மனிதநேயமும் இருக்கவில்லை. பாசிச வக்கிரமே பிரதிபலித்தது. தனது முதல் சித்திரவதையை நேரடியாகவே தொடங்கினான். மேசையில் இருந்தபடி என்னை தனது காலுக்கு முன்பாக முழங்காலில் இருக்கக் கோரினான். "உனக்குத் தெரிந்த எல்லா உண்மைகளையும் கூறு" எனக் கோரினான். "உனக்கு என்ன தெரியும்" என்றான். நான் வெறும் பிரச்சார உறுப்பினர் என்று கூறினேன். எனக்கு எதுவும் தெரியாது என்றேன். காலால் இருந்தபடி அடித்தார். நெஞ்சு முகம் எதுவும் அவனது கால்களில் தப்பவில்லை. பழைய காயங்கள் வலி கொண்டு வலித்தது. மேசையில் இருந்தபடி காலால் அடிப்பது வசதி குறைவாக இருந்திருக்க வேண்டும். இறங்கியவர் என்னை வேறு இடத்தில் மீண்டும் அது போல் இருக்கக் கோரினார். காலால் எட்டி எட்டி அடித்ததுடன் உதைத்தான். அந்;த மலைக் குன்றுக்கு தான் விரும்பிய இடத்தில் அடிக்க வசதி குறைவாகவே தொடர்ந்தும் இருந்திருக்க வேண்டும். பின்னர் கையால் தாக்கியவர், உண்மையை கூறக் கூறினான். ஒரு மணி நேரமாக முக்கி முனங்கி தாக்கியவர் முன், நான் எதுவும் தெரியாது என்றேன். அத்துடன் எதுவும் என்னிடம் இல்லை என்றேன்;. ஆனால் அவர்கள் எதையோ தெரிந்துள்ளனர் என்பதை புரிந்து கொண்டேன்;. ஆனால் என்ன என்பதை என்னால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. நான் தொடர்ந்தும் எதுவும் கொடுக்கவுமில்லை என்றேன். எதுவும் தெரியாது என்றேன். மாத்தையா தனது கை காலால் அடித்துக் களைத்த நிலையிலும், இப்படி அடிப்பது அவருக்கு வசதிக் குறைவை தொடர்ச்சியாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்;.

என்னை அப்படியே இருக்கும்படி கூறிவிட்டு வெளியேறினான். அரைமணி நேரம் கழித்து ஒரு சிறிய மேசையையும், ஒரு கதிரையையும் அங்கு இருந்தவர்கள் கொண்டு வந்து வைத்தனர். சிறிது நேரத்தில் மாத்தையா உள்ளே வந்தான். வரும்போது தும்புக்கட்டை தடி ஒன்றைக் கொண்டு வந்தான். முழங்காலில் இருந்தபடியே இரண்டு கையையும் மேசையில் விரித்து வைக்கக் கோரினான். தும்புக்கட்டை தடியால் ஒங்கி என் விரல்களில் அடிக்கத் தொடங்கினான். மணிக்கட்டின் கீழ் விரல்கள் மேல் ஒவ்வொரு அடியும் பளீர் பளீர் என்ற சத்தத்துடன் தடி கீழ் இறங்கியது. நாடி நரம்பெல்லாம் சுள்ளிட்டு வலித்தது. வலி தாங்காது அலறினேன். அடி மேலும் மேலும் அச்சொட்டாக வேகம் கொண்டது. விரலின் நுனியில் படும்போது, வலி சொல்லிமாளாது. நான் அலறிக் கொண்டிருந்தேன்;, ஒரு குறித்த கட்டத்துக்குப் பின் அடி மேலான அடியை, உணர்ச்சியற்ற வகையில் வலிக்கு மேல் வலியாக ஏற்றுக் கொள்ளும் இசைவாக்கத்தை உடலும் மனமும் அடைந்தது. எதிர் மனப்பாங்குடன் கூடிய ஓர்மமும், கோபமும் கொப்பழித்தது. எதையும் தாங்கும் மனப்பாங்கு பிரதிபலித்தது. எம்பி எம்பி முக்கி முனங்கி அடித்த மாத்தையா களைத்துப் போன நிலையில், மாத்தையா சுரேஸ் என்ற பாசிட்டான கைக்கூலியை அழைத்தான். அவர் வந்தவுடன் அவரிடம் தடியை கொடுத்து அடிக்கக் கோரினான். களைத்துப் போன மாத்தையா களைப்பாற கதிரையில் தொப்பென்று அமர்ந்து கொண்டான். களைத்துப் போனவன் களை தீர குளிர்பானம் ஒன்றை வரவழைத்துக்  குடித்தான்.

சுரேஸ் 18 வயது கொண்ட, பயிற்சி பெற்ற இளைஞன். அவன் அடிப்பதை ரசித்ததுடன், அதையே உற்சாகத்துடன் செய்தான். அவனுக்கு அடிப்பதில் அனுபவம் இருப்பதை, அடிக்கும் போதே குறி தவறாத அனுபவத்தை நிறுவினான். அடியின் வேகம் கடுமையானதாக இருந்தது. தொடர்ச்சியான அடிகளை அடித்த நிலையில், தடி சிதம்பி உடைந்தது. மாத்தையா புதிய தடி எடுத்துவர உத்தரவு இட்டார். அவன் எடுத்துவரச் சென்றான்;. இதன் மூலம் பல தடிகள் அங்கு அடிப்பதற்கு தயாராக இருப்பதை அது பறை சாற்றியது.

இதற்கிடையில் மாத்தையா மூஞ்சையில் அடித்து என்ன கொடுத்தாய் என்று மீண்டும் கேட்டான். நான் எதுவுமில்லை என்றேன். அதற்கிடையில் அவன் மீண்டும் ஒரு தும்புக்கட்டை தடியுடன் திரும்பி வந்தான். மீண்டும் அடிக்கத் தொடங்கினான். நான் வலியினால் அலறிக் கொண்டிருந்தேன். இந்த ஓநாய்களுக்கு எதிராக ஓர்மம் மிக்க எதிர்ப்பை, கத்துவதை நிறுத்தி வெளிக்காட்ட எண்ணினேன். ஆனால் அது சித்திரவதையை வரைமுறையின்றி கூட்டும் என்பதால், வலியை இயல்பில் இயற்கையின் போக்கில் வெளிப்படுத்தினேன். சுரேஸ் அடித்து களைத்த நிலையில், தட்டுத்தடுமாறி அடித்த அடியொன்று சமாந்தரமாக பத்து விரல் மேல் விழத் தவறி ஒருவிரல் மேல் விழுந்ததால், அந்தத் தடி இரண்டாக உடைந்தது. ஆனால் எனது விரல் சுள்ளிட்டது. இந்தளவில் 200க்கு மேற்பட்ட அடிகளை எனது மணிக்கட்டுக்கு கீழான பத்து விரல்களும் எதிர் கொண்டு எதிர்வினையாற்றின. எனது கை கொழுக்கட்டை போல் வீங்கிக் கிடந்தது. அத்துடன் அவனை போகச் சொன்ன மாத்தையா, என் முகம் நெஞ்சில் காலால் எட்டி அடித்தான். என்ன கொடுத்தாய், உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான். நான் எதுவும் தெரியாது என்றேன். அப்படியே முழங்காலில் இருக்கும்படி கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான். சிறிதுநேரத்தில் மூவர் வந்தனர். எனது கையை பின்புறமாக சணல் கயிறு கொண்டு இறுக்கியதுடன், அதையே வரிந்து கட்டியவர்கள், நுனிவிரல் நிலத்தில் பட மீண்டும் உயர்த்தி கட்டிவிட்டுச் சென்றனர். இது இரவு பகலாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நீடித்தன. எனது கை வீங்கத் தொடங்கவும், கயிறு அதை விட மறுக்கவும், வீங்கி இறுகியது. இது இயற்கையான சித்திரவதையை தொடர்ச்சியாக தந்து கொண்டிருந்தது.

இரவில் அடிக்கடி குளிர்நீரை என்மேல் ஊற்றிவிட்டுச் செல்வார்கள்;. தலையில் இருந்து வழியும் தண்ணீரை நக்கி குடிக்க முனைவேன். நீர் என் மேல் ஊற்ற வருவதைக் கண்டால் வாய்க்குள் விழும்படி வாயைத் திறந்து நாக்கை நீட்டி தண்ணீர் பருக முயற்சிப்பேன். தலை மயிரில் இருந்து வழியும் தண்ணீரை வீணாக்காமல் நாவில் எடுத்துவிட முயல்வேன். ஒரு சில துளி தண்ணீர் நாக்கில் படும்போது குளிர்மையாகவும், உயிர் மீண்டதும் போன்ற இயற்கை உணர்வைப் பெறுவேன். வெளியில் சித்திரை வைகாசி மாதங்கள் ஏற்படுத்தும் வெம்மை வியர்வையாகி ஊத்தையுடன் இணைந்து ஒருவித எரிவை ஏற்படுத்தியது. காலையில் நேரடியாகவே சூரிய ஒளி யன்னலில் பட்டு தெறிப்பதால் வெக்கை தண்ணீரை கோரியது. இரவில் நித்திரையை குழப்ப ஊற்றும் நீர் அறையை ஈரலிப்பாக வைத்திருந்த போதும், தண்ணீர் விடாய் நாவைப் புடுங்கும். நுனிவிரல் விறைப்பு கண்டு மரத்துப் போன நிலையில், எனது உடம்பு பாரத்தால் தொங்குவது போன்ற உணர்வுடன் மூளை நரம்பைக் குத்தி இழுப்பது போன்ற வலியை உணர்ந்தேன். மூளை இந்தப் பெருவிரல் ஊன்றுதலை கைவிட்ட நிலைக்குத் தள்ள, பாரம் தோலில் ஏறியது போன்ற உணர்வு ஏற்பட்டது. பகலில் என்னையறியாமல் களைப்புற்று கண்ணை மூடினால், குளிர்நீரை திடீரென என்மேல் அடித்து ஊற்றிக்  குழப்புவார்கள். நான் தூக்கி உயர்த்திக் கட்டப்பட்டிருந்த நிலையில், கதவு பூட்டப்படுவதில்லை. அடிக்கடி என்னை எட்டிப் பார்த்து தேவையான வதைகளை செய்வர். அடுத்தநாள் மலம் கழிக்க, சிறுநீர் கழிக்க அனுமதிக்கவில்லை. சிறுநீர் இயல்பாக வந்தவுடன், அப்படியே இருந்து விடுவதை வழக்கமாகக் கொண்டேன். அந்த இயற்கை வதையை தேவையில்லாமல் அடக்கி தாங்கிக் கொள்ளவே நான் விரும்பவில்லை. சிறுநீர் தண்ணீருடன் கலந்த அதே நேரம், சிறுநீர் வெக்கையுடன் கூடிய நாற்றமும் இணைந்து வெடுக்கு வாடையடித்தது.

நாலாம் திகதி பகல் விசுவும் சலீமும் இடைக்கிடை வந்து, வீங்கிக் கிடந்த கையில் பின்புறத்தை நோக்கி குத்தித் தாக்கினர். பற்றன் பொல்லால் அடித்தனர். பழைய காயங்களை விராண்டி, இரத்தம் வரும்வரை  வதைப்பர். கை விரல்கள் வீங்கி வெடித்து விடுவது போன்று, பொம்மிக் கிடந்ததை என் உள்ளுணர்வு ஏற்படுத்தியது. ஆனால் என் கண்ணால், அந்த துர்ப்பாக்கியத்தை பார்க்க முடியவில்லை. கட்டப்பட்ட கயிறு இறுகி இரத்த ஒட்டத்தை தடுப்பது போன்ற உணர்வும், மணிக்கட்டின் கீழ் கை தனியாக கழன்று விட்டதாக எண்ணத் தோன்றியது. வலி விண்ணென்று சுள்ளிட்டபடி இருந்தது. வீக்கம் மேல் புதிதாக ரசித்து அடிக்கின்ற போது, முந்திய வலியை விட அதிகமாக வலித்தது. அடிக்கும் போது மூளையில் ஊசியால் குத்துவது போன்ற சில்லிட்ட உணர்வு ஏற்பட்டது. அடுத்தநாள் வந்த மாத்தையா என்னை அவிழ்த்தார். ஒரு கதிரை எடுப்பித்து, அதில் இருத்திய பின்பு, எனக்கு குளிர்பானம் தருவித்து குடிக்க தந்தார். பின்பு அவர் முதல்நாள் அடித்தவற்றுக்கு நோ(வலி) மருந்து போட்டு தேய்த்தார். பின்பு உண்மையை கூறக் கூறினார். நான் எதுவும் இல்லை என்றேன். அவன் என்னை தாறுமாறாக தாக்கிய பின்பு, எனது கையை நிலத்தில் வைத்தவன், தன் காலால் ஏறி அரைத்தான். கொழுக்கட்டையாகி வீங்கிக் கிடந்த கையில் ஏற்பட்ட வலியால், கட்டிடமே நடுங்குமளவுக்கு அலறினேன். பின்பு என்ன கொடுத்தாய் என்று கேட்ட போது, எதுவும் இல்லை என்றேன். அவன் திரும்பிச் சென்ற பின்பு, வெளியில் இருந்து வந்தவர்கள், மறுபடியும் உயர்த்திக் கட்டினர். ஆனால் அவர்கள் இந்த வலியின் மேல் வலியை ஏற்படுத்தியபடி, அடிக்கடி தொடர்ச்சியாக கேள்விகளை மாறிமாறி கேட்ட வண்ணம் இருந்தனர். இதை அந்த முகாமில் இருந்த வேறு கீழ்மட்ட உறுப்பினர்கள் நால்வர் மாறிமாறி எனக்கு ஓய்வின்றி தொடர்ந்தனர். இங்கு அவர்களின் கேள்விகள், குறித்த சில விடையங்கள் மீதாக மாறியிருந்ததை குறிப்பாக அவதானித்தேன். அவர்களின் முரண்பாடான அணுகுமுறையில் என்ன கொடுத்தாய் என்ற பொதுக் கேள்வியை விட்டு, இது கொடுத்தாயா?, அது கொடுத்தாயா? என்று பொருட்களை குறித்து கேட்க தொடங்கினர். இதில் இருந்து என்னால் புதிய அணுகுமுறையை கையாள முடிந்தது. அவர்கள் எதைக் கேட்;கின்றார்களோ, அதை கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்ளத் தொடங்கினேன்.

அதே நேரம் நான் ஒப்புக் கொண்டதை அடிக்கடி மீளவும் சொல்வது ஒரு வடிவமாகியது. இது 6ம் திகதி; இரவு வரை நீடித்தது. கடைசியாக ஐந்துக்கு மேற்பட்ட ஆயுத புத்தகங்கள் கொடுத்தை அடிப்படையாகக் கொண்டே, கேள்வி கேட்டு (அது மட்டும் தான் வசந்தனிடம் கொடுத்தது சொல்லாதது எஞ்சியிருந்தது) அன்று மாலையும் சித்திரவதை நடந்தது. அடிக்கடி அனைத்தையும் கூற, அதை எழுதும் வழக்கம் கொண்ட அவர்கள், அன்று நான் வசந்தனிடம் கொடுத்த ஆயுதப் புத்தகத்தின் மேல் பேப்பர் வைத்து, சுரேஸ் குறிப்பு எடுப்பதை அவதானித்தேன். அந்த இடத்தில் நான் அந்த ஆயுதப் புத்தகத்தை கொடுத்ததையும் திடீரென ஒப்புக் கொண்டேன். அத்துடன் வசந்தன் ஊடாக வாங்கிய எஸ்.எம்.ஐp ஆயுதத்துக்கான மகஸ்சின் என்னிடம் உள்ளதையும் ஒப்புக் கொண்டேன். இதன் மூலம் இயல்பாக நான் அனைத்தையும் சொல்லிவிட்டதாக ஒரு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினேன். அத்துடன் நான் இவற்றை ஞாபகக்குறைவால்தான் முன்பே சொல்லவில்லை என்ற உணர்வை, அவர்களுக்கு வழங்கினேன். வசந்தன் என்னுடைய தொடர்பில் இருந்த அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் உட்பட, நான் அவரிடம் கொடுத்த பொருட்களைப் பற்றியும் கூறிவிட்டான். அத்துடன் அவைகளை புலிகள் கைப்பற்றியிருந்தனர். இதில் சிலவற்றை அவர்கள் எனக்கு காட்டினர். முழுமையாக அவர்கள் அனைத்தையும் எடுத்துவிட்டதை நான் உணர்ந்து கொண்டேன்;.

குறிப்பு எடுத்தவர் குதூகலமாக திரும்பிச் சென்றார். சிறிது நேரத்தில் கை அவிழ்க்கப்பட்டு நிலத்தில் விடப்பட்டேன். சிறிது நேரத்தில் வசந்தன் கண்கட்டப்பட்ட நிலையில் என் முன் கொண்டு வரப்பட்டார். அவர் என்னிடம் இருந்து பெற்ற பொருட்கள் அனைத்தையும் மீள ஒப்புவித்தார். அத்துடன் அவருடன் இணைந்து வேலை செய்த நடவடிக்கைகளையும், ஒப்புக் கொண்டார். மீண்டும் அவரை அழைத்துச் சென்றவர்கள், என்னை தனியாக விட்டுச் சென்றனர். இரவு உணவு எனக்கு கொண்டு வந்தார்கள். தண்ணீர் ஒரு குவளை தந்தார்கள். எனது கைகள் தூக்கி இயங்க முடியாதபடி வெம்பி வீங்கிக் கிடந்தது. தண்ணீரை ஒரு மாதிரி குடித்த நான், உணவை உண்ண முடியவில்லை. கைவிரல்களை அசைக்க முடியவில்லை. அன்றைய இரவு உணவை அவர்கள் மீண்டும் எடுத்துச் சென்றனர். நான் ஈரத் தரையில் வேகமாக சரிந்தவுடன் என்னையறியாமலே நித்திரையானேன்.

மூன்றாம் திகதி என்னை உயர்த்திக் கட்டியவர்கள் ஆறாம் திகதி வரை என்னை சிறுநீர் கழிக்க அனுமதிக்கவில்லை. குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் (விதிவிலக்காக என் மேல் போலியான அன்பு காட்டி விலைக்கு வாங்க முயன்ற மாத்தையா தந்த குளிர்பானத்தை தவிர) தரவில்லை. ஆறாம்; திகதி மலம் வருவதாக கூறியதால், மலம் கழிக்க அழைத்துச் சென்றனர். மலத்தை இருந்த என்னால், மலத்தைக் கழுவ முடியவில்லை. கை அதற்கு இசைவாக்கமற்று இருந்தது. தண்ணீர் விடாயை தீர்க்க, புதிதாக ஒரு வழியை கண்டுபிடித்தேன். காவலுக்கு நிற்பவர் சில வேளைகளில் மற்றவர்களுடன் விளையாட்டாக பேசிச் சொறியும் போது அல்லது விலகும் போது சடாரென மலம் கழுவும் தண்ணீரில் முகத்தை வைத்து, தண்ணீரை உறிஞ்சிக் கொள்வேன். இதை நான் தொடர்ச்சியாக அந்த வதைமுகாமில் வழக்கமாக்கியதுடன், வாய் வைத்து உறுஞ்சுவது அல்ல கைவைத்து அள்ளிக் குடிப்பது என்ற பொது வடிவத்தை எப்போதும் கையாண்டேன். பிற்பட்ட காலத்தில் அவர்கள் ஏ.கே-47 யுடன் பார்த்து நிற்க, தண்ணீரில் கைவைத்து சும்மா அலசுவது அல்லது ஏதாவது செய்வது போல் பாசாங்கு செய்தபடி மலத்தைக் கழிக்க தொடங்கிய நான், ஒட்டகம் போல் தண்ணீரை இழுத்துக் கொள்ளும் வழக்கத்தை எப்போதும் செய்தேன்;. இது போன்றே பிற்பட்ட காலத்தில் ஒரு இரு தடவை குளிக்க அனுமதித்த போது, குளிக்கும் தண்ணீரை வயிறு வீங்கும் வரை குடிப்பதையும் வழக்கமாக்கினேன். குளிப்பதற்காக அல்ல தண்ணீர் குடிப்பதற்காக குளிப்பை கோரத் தொடங்கினேன்.

தொடரும்
பி.இரயாகரன்

29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)

 

28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)

 

 

27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

 

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

 

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)