10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சுயநிர்ணயம் என்பது அரசியல் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்துவதற்கான மூடுமந்திரக் கோசமல்ல

வலதுசாரியம் மக்களைச் சுரண்டவும், மக்கள் மேலான சமூக ஒடுக்குமுறைகளை  பாதுகாக்கவும், இனங்களை ஒடுக்கி அவர்களுக்கு இடையில் முரண்பாட்டை முன்தள்ளுகின்றது. எழும் போராட்டத்தை திசைதிருப்ப, சுயநிர்ணயத்தை தமக்கு ஏற்ப திரித்துப் பயன்படுத்துகின்றனர். இது

1. வலதுசாரி சிறுபான்மை தமிழ் குறுந்தேசியம்,  பிரிவினையை விடுதலை என்கின்றது.

2. வலதுசாரி பெரும்பான்மை சிங்கள பெருந்தேசியம், ஒடுக்கும் ஐக்கியத்தை தேசியம் என்கின்றது.

இவர்கள் இதைத்தான் சுயநிர்ணயம் என்கின்றனர். 

இப்படியிருக்க இலங்கையில் இடதுசாரிய அரசியல் அடிப்படைகள் ஒருபுறம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையிலும், மறுபக்கம் அரசியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது. வர்க்க அரசியலும், வர்க்கப் போராட்டமும் பொது அரசியல் தளத்தில் கைவிடப்பட்டுள்ளது. மாறாக இடதுசாரியம் வலதுசாரிய இவ்விரு அடிப்படைக்குள்ளும், முற்போக்கைக் காட்டி அதை முன்னெடுக்கும் போக்கே இன்று இடதுசாரியமாகின்றது.  

இன்று வலதல்லாத இடதுசாரிய அரசியல் என்பது, வலதுசாரியத்தின் வாலாக நீடித்தலே ஒரு அரசியல் போக்காக வளர்ச்சியுறுகின்றது. இந்த வகையில் சுயநிர்ணயத்தை திரிக்கின்றனர். இந்த வகையில் நாம் இரண்டு இடதுசாரிய உதாரணங்களை எடுப்போம். 

1. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியைச் சேர்ந்த தம்பையா, தினகரன் பத்திரிகையில் சுயநிர்ணயம் பற்றி கூறியதைப் பார்ப்போம். ".. ஐக்கியப்பட்ட இலங்கை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஐக்கியப்பட்ட நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்ய முடியும். சுயநிர்ணய உரிமை என்பதை பிரிவினை என அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது" என்கின்றார். மார்க்சிய லெனியத்தை தம் கட்சியின் பெயருடன் ஒட்டியுள்ள இக் கட்சி, சுயநிர்ணயத்தை இப்படிக் கூறுவது அவர்களின் மொத்த அரசியலையும் கேள்விக்கிடமின்றி அம்பலமாக்குகின்றது. 

2. அண்மையில் புதியதிசைகள் குழுவுடன் நான் உள்ளிட்ட எமது தோழர்கள் நடத்திய  ஒரு கலந்துரையாடலின் போது வெளிபட்டது. சுயநிர்ணயம் என்பது, பிரிவினையை அடிப்படையாக கொண்டது என்றனர். அதற்கு பேரினவாதத்தின் நீண்ட தொடர்ச்சியான அதன் ஒடுக்குமுறையை காட்டி அதை துணைக்கழைத்தனர். எமது சுயநிர்ணய நிலைப்பாடு, ஐக்கியத்தை முன்வைப்பதாக கூறினர். இதைத்தான் ம.க.இ.கவும் முன்வைப்;பதாக வேறு கூறினர்.

எமது நிலைப்பாடு இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குறிப்பாக புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சி மேல் சொன்னது போல் அல்ல.       

இவர்கள் சுயநிர்ணயத்தை தங்கள் இருப்புசார் வர்க்க நிலையில் நின்று திரிக்கின்றனர். அதை சந்தர்ப்பவாத வலதுசாரிய நிலைக்கு ஏற்பப் புரட்டுகின்றனர். இங்கு அவர்களின் அரசியல் நிலையைத்தான் நான் குறிப்பிடுகின்றேன்.

ம.க.இ.க., முதல் யாராக இருந்தாலும், சுயநிர்ணயம் பற்றிய நிலைப்பாடு உலகம் தளுவியது. அதை யாரும் திரிக்க முடியாது. இடதுசாரி பேசும் பலர் சுயநிர்ணயத்ததை ஏற்றுக்கொண்டபடி தான், பிரிவினை, ஐக்கியம் என்று புரட்டுகின்றனர்.      

சுயநிர்ணயம் என்பது பிரிவினையையோ, ஐக்கியத்தையோ கோரி முன்வைப்பதில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை அது கோருகின்றது. அதற்காக மட்டும்தான், சுயநிர்ணயத்தை மார்க்சியம் முன்வைக்கின்றது. வேறு அரசியல் நோக்கம் எதுவும் மார்க்சியத்துக்கு கிடையாது. தெளிவாக இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான, ஒடுக்கும் ஐக்கியத்தைக் கோரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தைக் கோருகின்றது. 

சுயநிர்ணயம் என்பது ஒடுக்கும் பெரும்பான்மையின் ஐக்கியத்துக்கும், ஒடுக்குமுறையை எதிர்க்கும் சிறுபான்மையின் பிளவுவாதத்துக்கும் எதிரானது. பெரும்பான்மை ஐக்கியத்தை முன்வைத்து சிறுபான்மையை ஒடுக்கும் போது, பெரும்பான்மை மக்களையும் ஓடுக்கியபடிதான் அதைச் செய்கின்றது. சிறுபான்மை பிரிவினையை முன்வைத்து பெரும்பான்மையின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் போது, சிறுபான்மை மக்களை ஒடுக்கியபடிதான் போராடுவதாக கூறுகின்றது. இப்படி தம் இன மக்களை ஒடுக்க, ஐக்கியத்தையும், பிரிவினையையும் முன்வைக்கின்றனர்.

இதை அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்க்கின்றனர். அவர்கள் தான் இனவொடுக்குமுறைக்கு எதிராக, சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றனர். பிரிவினை, ஐக்கியம் என்ற கூறிக் கொண்டு, தம்மை ஒடுக்கியபடி மற்றைய இன மக்களை ஒடுக்குவதை மறுத்து சுயநிர்ணயத்தை முன்னிறுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட இரண்டு இன மக்கள் மத்தியிலான ஐக்கியம் மூலம், இரண்டு இன ஒடுக்கும் வர்க்கத்தையும் எதிர்த்துப் போராட சுயநிர்ணயம் கோருகின்றது. இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட இரண்டு இன மக்களின் ஐக்கியத்தை குழிபறிக்க, இரண்டு முனைகளில் சுயநிர்ணயம் மறுக்கப்படுகின்றது.

1. ஒடுக்கும் ஐக்கியம் என்ற பிளவுவாதம்.

2. ஒடுக்குமுறைக்கு எதிரான பிரிவினை என்ற பிளவுவாதம்.

இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களை பிளக்கின்றது. ஐக்கியத்தை குழிபறிக்கின்றது. இதற்கு எதிரான போராட்டத்தை தான் சுயநிர்ணயம் முன்வைக்கின்றது. இதை பிரிவினை, ஐக்கியம் என்று, குறுகிய எல்லையில் சமூகத்தை பிளக்கும் ஆளும் சுரண்டு வர்க்கங்கள் மறுக்கின்றது.

இங்கு ஒடுக்கும் ஐக்கியம் கூட பிளவுவாதத்தை அடிப்படையாக கொண்டது. அதுதான் பிரிவினைக்கான பிளவுவாதத்தை விதைக்கின்றது. மக்களை வர்க்கம் கடந்து பிளக்கும் கோட்பாடு, எங்கும் எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தின் கோட்பாடாகும்.

1. அது ஒடுக்குகின்றது.

2. ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதாக காட்டுகின்றது.

ஆனால் எப்போதும் மக்களை பிளந்து வைத்திருக்கின்றது.

சுயநிர்ணயம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ஆன்மா. தம் மீதான அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிரான அரசியல் உள்ளடக்கத்தை அது அடிப்படையாக கொண்டது. மற்றைய இன மக்களை தனக்கு எதிராக நிறுத்துவதை இது மறுக்கின்றது. மற்றைய இன மக்களுடன் ஐக்கியத்தை அது கோருகின்றது. பிரிவினையையோ, ஐக்கியத்தின் பெயரிலான பிளவையோ அது கோருவது கிடையாது. ஆளும் வர்க்கம் ஒடுக்கும் ஐக்கியத்தையும், ஆளும் வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினையையும் அது எதிர்க்கின்றது. மக்களை பிளப்பதையும், பிளந்து காட்டுவதையும் சுயநிர்ணயம் எதிர்க்கின்றது.

இதுதான் சுயநிர்ணயம். இந்த வகையில் அரசியல் கடமைகள், கோரிக்கைகள் என அனைத்தும், ஆளும் வர்க்கத்தின் நோக்கில் இருந்து முற்றிலும் எதிர்மறையானது. மாறாக முரணற்ற ஜனநாயக கோரிக்கையை மட்டும் ஆதரிக்கின்றது. அதாவது முரணற்ற ஜனநாயக கோரிக்கை என்பது, எந்த மக்களையும் ஒடுக்காத மக்கள் சார்ந்த கோரிக்கையைத்தான் ஆதரிக்கின்றது. மக்களை இனம் மதம் சாதி பால் என்று பிளக்கும் அனைத்தையும் எதிர்க்கின்றது. வர்க்க ரீதியாக மக்களை ஒன்றிணையக் கோருகின்றது. இதுதான் சுயநிர்ணயம்.

பி.இரயாகரன்
17.08.2010


பி.இரயாகரன் - சமர்