.................................................................................................
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைச் சந்தைச் சூதாட்டம் தீர்மானிப்பதற்கு இருந்து வந்த பெயரளவிலான தடையும் நீக்கப்பட்டு விட்டது.
....................................................................................................

காங்கிரசு கூட்டணி ஆட்சி கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்றாம் முறையாக பெட்ரோல்-டீசலின் விலையை உயர்த்தியிருக்கிறது. அதே சமயம், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விலையேற்றத்தை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொண்டுவிட முடியாது.

‘‘பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதில் அரசு குறுக்கிடக் கூடாது; அதனைச் சந்தைதான் தீர்மானிக்க வேண்டும்" என்ற தாராளமயக் கொள்கைப்படி இவ்விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கையை, காங்கிரசு கூட்டணி ஆட்சி 2010-இல் நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கிறது. இதன்படி, பெட்ரோலுக்கு வழங்கப்பட்டு வந்த ‘மானியத்தை’ முற்றிலுமாக நிறுத்திவிடுவதோடு, இனி அதனின் விலை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சர்வதேசச் சந்தை நிலவரத்துக்கு ஏற்பத் தீர்மானிக்கப்படும் என்றும்; டீசலுக்கு வழங்கப்பட்டு வரும் "மானியத்தையும்" வெகுவிரைவில் நிறுத்தப் போவதாகவும் காங்கிரசு கூட்டணி ஆட்சி அறிவித்திருக்கிறது. இதோடு திருப்தியடையாத தாராளமயத் தீவிரவாதிகளோ, சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் வழங்கப்படும் ‘மானியத்தையும்’ அடியோடு உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூப்பாடு போட்டு வருகிறார்கள்.


மன்மோகன் சிங் கும்பல் இவ்விலை உயர்வை நியாயப்படுத்தச் சொல்லிவரும் காரணங்கள் - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துக் கொண்டே போவது; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோல்-டீசல்-மண்ணெண்ணெய்-சமையல் எரிவாயுவை விற்பதால் சந்தித்து வரும் நட்டம்; அரசு, பெட்ரோலியப் பொருட்களுக்கு அளித்து வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தால் சந்தித்து வரும் பற்றாக்குறை - யாவும் உலுத்துப் போன பொய்கள். எனினும், இந்தப் பொய்களை, பொருளாதாரப் புள்ளிவிவரங்களைத் திரித்துப் புரட்டுவதன் மூலம் உண்மையைப் போல விற்று, படித்தவர்களைக் கூட ஏமாற்றிவருகிறது, மன்மோகன் சிங் அரசு.


கச்சா எண்ணெய் விலையேற்றம், முதல் மோசடி:


சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை தேவைக்கும் (demanad) வரத்துக்கும் (supply) இடையேயான பொருளாதார விதி எதுவும் தீர்மானிக்கவில்லை. மாறாக, கச்சா எண்ணெய் சந்தையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, சிட்டி குரூப், ஜே.பி. மார்கன் செஸ் ஆகிய நான்கு அமெரிக்க முதலீட்டு வங்கிகள் நடத்தும் சூதாட்டம்தான் தீர்மானிக்கின்றன. தாராளமயம், இச்சூதாட்டத்திற்குச் சந்தை விதி என்ற பெயரைச் சூட்டிப் புனிதப்படுத்திவிடுகிறது.


மே 2009 நிலவரத்தின்படி, சர்வதேச சந்தையில் ரூ.21.43 என்றிருந்த ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை, தற்பொழுது ரூ.22.13 ஆக அதிகரித்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கடந்த ஓராண்டிற்குள் ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை பெறும் 70 காசுகள்தான் அதிகரித்திருக்கும் பொழுது, காங்கிரசு கூட்டணி ஆட்சி கடந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை ரூ.6.44; ஒரு லிட்டர் டீசலின் விலையை ரூ.4.55; ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலையை ரூ.3/-; ஒரு உருளை சமையல் எரிவாயுவின் விலையை ரூ.35/- என்ற கணக்கில் அதிகரித்திருக்கிறது. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்க ஆகும் செலவைச் சேர்த்தால்கூட, இந்த விலையேற்றத்தைப் பகற்கொள்ளை என அடித்துக் கூறலாம்.


பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, வரிவிதிப்புக்கு முன்பாக ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை (இலாபத்தையும் சேர்த்து) ரூ.23.44-தான். அன்றைய சர்வதேச நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.30.20-க்கு இலாபத்தோடு விற்க முடியும். ஆனால், இந்தியாவில் ஆறு மாதத்திற்கு முன்பே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஐம்பது ரூபாயைத் தொட்டு விட்டது. இதிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் இந்தியாவில் சர்வதேச சந்தை விலையை விடக் குறைவாகவும், நட்டத்திலும் விற்கப்பட்டு வருவதாகக் கூறப்படுவது முழுப் பொய் எனப் புரிந்து கொள்ள முடியும்.


எண்ணெய் நிறுவனங்களின் நட்டம், இரண்டாவது மோசடி:


இந்தியா தனக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெயில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்தாலும், கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரித்துப் பெறப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இல்லை. இப்பெட்ரோலியப் பொருட்கள் உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாகவே பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைப் பொருத்தவரை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய நான்கு பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து விற்றால் என்ன விலைக்கு விற்க முடியுமோ அந்த விலைக்கு விற்று இலாபத்தை அள்ள முடியவில்லை என்பதைத்தான் நட்டம் நட்டமென அரற்றிக் கொண்டு திரிகின்றன.


உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளை, இறக்குமதி செய்யப்படும் பொருளாகக் காட்டி விற்பனை செய்ய வேண்டும் என்பது பேராசை பிடித்த ஏமாற்றுப் பேர்வழியின் மனோநிலை; உள்நாட்டில் உற்பத்தியான பொருளை, சர்வதேச விலைக்கு விற்க முடியாததை, இலாபம் குறைவதாகக் காட்டலாமே தவிர, அதனை நட்டம் நட்டமென ஊதிப் பெருக்குவதைப் பொருளாதார மோசடி என்றுதான் கூற முடியும்.


தனியார்மயம்-தாராளமயத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் அமெரிக்காவிலேயே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலைரூ.32.76 விற்கப்படும் பொழுது, இந்தியாவில் பெட்ரோல் ரூ.52.13க்கு (பழைய விலை) விற்கப்பட்டது. அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.34.12-க்கு விற்கப்படும் பொழுது, இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ.38.05 (பழைய விலை) விற்கப்பட்டது. உண்மை இப்படியிருக்கும் பொழுது, இந்தியாவில் பெட்ரோலும், டீசலும் குறைவான விலைக்கு விற்கப்படுவதாக நடத்தப்படும் பிரச்சாரம், கோயபல்சைக்கூடத் தனது கல்லறையில் நெளியச் செய்துவிடும்.


பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பெட்ரோலியப் பொருட்களை சர்வதேசச் சந்தை விலைக்குக் ‘குறைவாக’ விற்றாலும் கூட, 2009-10 ஆம் ஆண்டில் 10,998 கோடி ரூபாயை இலாபமாக ஈட்டியுள்ளது; மைய அரசுக்கு இலாப ஈவுத்தொகையாக ஏறத்தாழ 3,000 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமும்; பாரத் பெட்ரோலியக் கழகமும் சேர்ந்து ஏப்.2009 தொடங்கி டிச-2009-க்குள் அடைந்துள்ள இலாபம் 1,378 கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டும் இப்படி பல ஆயிரம் கோடி ரூபாய்களை இலாபமாக ஈட்டும் இந்த நிறுவனங்களை, சர்வதேச விலைக்குப் பெட்ரோலியப் பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோருவதன் பொருள், இந்திய மக்களைப் பகற்கொள்ளையடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தவிர வேறென்ன?


அரசின் மானியம், மூன்றாவது மோசடி:


பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகள் மூலம் மைய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் கிடைத்துவரும் வருமானத்தையும்; மைய அரசு பெட்ரோலியப் பொருட்களுக்குத் தருவதாகக் கூறும் மானியத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், இம்மோசடியைப் பாமரன் கூட எளிதாகப் புரிந்து கொண்டுவிடலாம்.


பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் விற்பனை வரி, சுங்கவரி, உற்பத்தி வரி மற்றும் பிற வரிகளின் மூலம் 2006-07 ஆம் ஆண்டில் மைய மற்றும் மாநில அரசுகளுக்குக் கிடைத்த வருமானம் 1,37,103 கோடி ரூபாய்; அதே ஆண்டில் மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் மைய அரசு வழங்கிய மானியம் 2,524 கோடி ரூபாய்தான். அதே ஆண்டில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவை சர்வதேசச் சந்தை விலைக்குக் ‘குறைவாக’ விற்றதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடைந்ததாகக் கூறப்படும் ‘நட்டம்’ 49,387 கோடி ரூபாய்.


இந்த "நட்டத்தையும்" அரசு அளித்துள்ள மானியத்தையும் கூட்டி (51,911 கோடி ரூபாய்), பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மைய-மாநில அரசுகளுக்குக் கிடைத்த வரி வருமானத்திலிருந்து கழித்தால், ஆளும் கும்பலுக்குக் கிடைத்த நிகர வருமானம் 85,192 கோடி ரூபாய். இந்த நிகர வருமானம் 2007-08 ஆம் ஆண்டில் 68,002 கோடி; 2008-09 ஆம் ஆண்டில் 39,283 கோடி ரூபாய்.


பொதுத்துறை நிறுவனங்கள் அடைந்து வருவதாகக் கூறப்படும் கற்பனையான நட்டத்தை சேர்க்காவிட்டால், இந்த முன்று ஆண்டுகளில் மைய அரசுக்கு மட்டும் கிடைத்துள்ள மொத்த நிகர வரி வருமானம 2,30,593 கோடி ரூபாய். விலையேற்றத்திற்குப் பிறகு, இந்த ஆண்டில் மட்டும் (2010-11) மைய-மாநில அரசுகளுக்குக் கிடைக்கக்கூடிய வரி வருமானம் 1,20,000 கோடி ரூபாய்.


பெட்ரோலியப் பொருட்கள் நவீன சமூகப் பொருளாதார வாழ்க்கையின் என்ஜினாக இருப்பதால், அத்துறையை மைய-மாநில அரசுகள் பொன்முட்டையிடும் வாத்தாகக் கருதுகின்றன. அதனாலேயே, இப்பொருட்களின் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகளைச் சிறிதளவு கூடக் குறைத்துக்கொள்ள மறுக்கின்றன.


‘‘பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்தால், மாநில அரசின் நிதி நிலை மிகவும் பாதிக்கும்" எனக் கூறும் தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகளைகளை வாரி வழங்கும் பொழுது, அரசின் நிதிநிலை பற்றிக் கவலை கொள்வதில்லை.

இவ்விலையேற்றத்தால், பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்படும் ‘மானியத்தில்’ 22,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என மைய அரசு கணக்குக் காட்டியிருக்கிறது. பொதுமக்களின் நலனுக்காக ஒரு 22,000 கோடி ரூபாயை விட்டுக் கொடுக்க மறுக்கும் மைய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி கட்டும் கனவான்களுக்கு வாரிவழங்கியுள்ள மானியம் 26,000 கோடி ரூபாய்; சுங்கவரி மற்றும் கலால்வரி விலக்குகளின் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளித்துள்ள மானியம் 4,19,786 கோடி ரூபாய். அவர்களுக்கு மானியம் அளித்தால் "வளர்ச்சியாம்" பொதுமக்களுக்கு ‘மானியம்’ அளித்தால் பற்றாக்குறையாம். இம்முரண்பாட்டைப் பொருளாதார நிபுணத்துவம் என்பதா? இல்லை, பித்தலாட்டம் என்பதா?


‘‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைத் தீர்மானிப்பதில் இனி அரசு தலையிடாது" என மைய அரசு அறிவித்த மறுநிமிடமே, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நாடெங்கும் 5,000 பெட்ரோல் பங்குகளைத் திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இன்று பெட்ரோல் பங்குகளைத் திறக்க ஆர்வம் காட்டும் இதே அம்பானிதான், இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோல்-டீசல் விலைகளைத் தீர்மானிப்பதில் அரசு தலையீடு செய்வதைக் கண்டித்து, அப்பொழுது தான் நடத்திவந்த 750 பெட்ரோல் பங்குகளை இழுத்து மூடினார். எனவே, தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலையேற்றத்தில், அரசின் கொள்ளை மட்டுமல்ல, அம்பானி, எஸ்ஸார் போன்ற தனியார் முதலாளிகளின் கொள்ளையும் அடங்கியிருக்கிறது.


- செல்வம்