Language Selection

புதிய ஜனநாயகம் 2010

.............................................................................................
தீட்சிதர்களைப் பார்ப்பனர் என்று சொல்வதையே எதிர்க்கும்மார்க்சிஸ்டுகள்; சொல்லில் தவிர, செயலில் பார்ப்பன எதிர்ப்பைக் காட்டத் துணியாத கருணாநிதி-இருவருக்கும் இடையில் நடப்பது வெறும் நிழற்சண்டைதான்.
...............................................................................................

"தில்லைக் கோயிலின் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும்" என்று ஜூலை 14-ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியினர் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் வலது கம்யூனிஸ்டு கட்சி சிதம்பரத்தில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இது குறித்து அறிக்கை விட்டுவிட்டார். அடுத்து பா.ஜ.க வின் போராட்ட அறிவிப்பும் வெளிவரக்கூடும். அவ்வளவு ஏன், தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி தீட்சிதர்களும் போராடக்கூடும். சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து திமுகவும் காவிரிக்காக காங்கிரசும் போராடுவதில்லையா, அதுபோலத்தான்.


ஒரு நியாயமான கோரிக்கையைப் பலரும் ஆதரிக்கும்போது நாம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், சிதம்பரம் பிரச்சினை தமிழகத்தின் சர்வகட்சிப் பிரச்சினையாக மாறிவருவதால், காவிரிப் பிரச்சினையின் கதி இதற்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் பொருட்டு சில உண்மைகளை மீண்டும் மீண்டும் உரத்துக் கூறவேண்டியிருக்கிறது.


மார்க்சிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்திய மறுநாளே தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. முதல்வரின் அறிவுரையின்படி தீட்சிதர்கள் வசமிருந்த சிதம்பரம் நடராசர் கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இதற்கெதிராக தீட்சிதர்கள் போட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில் கட்டுமானங்கள் எதையும் இடிக்கக் கூடாதென்று 15.3.2010 அன்று உத்தரவிட்டிருப்பதாகவும், சுவரை அகற்றக்கோரும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் அரசு மேற்கொண்டுவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்துவதுதான் என்றும் கூறியது, அந்த செய்திக்குறிப்பு.


மறுநாள் காமராசர் பிறந்தநாள் விழாவில் பேசிய கருணாநிதி, "கேட்கக் கூடாததை வேண்டுமென்றே கேட்டு, ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே இப்போராட்டத்தின் நோக்கம்" என்று சாடியது மட்டுமின்றி, "நந்தனார் இருந்தாரா, இல்லையா என்பதை பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்" என்று கூறி தீட்சிதர்களுக்கு ஆதரவாகப் பெரியாரை இழுத்து வந்து ஆஜராக்கினார்.


‘கோபுரத்தை தாங்குவது நீயா நானா’ என்று இரு பொம்மைகள் அடித்துக் கொள்வதை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் குனிந்து அஸ்திவாரத்தைப் பார்ப்பதில்லை. தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு திடீரென்று களம் இறங்கியிருக்கும் மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதையை முதலில் பார்ப்போம். 2006-ஆம் ஆண்டில் சிதம்பரம் நகரில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் (HRPC) அமைக்கப்பட்ட கூட்டுப் போராட்டக் குழுவிலிருந்து வெளியேறினார், மார்க்சிஸ்டு கட்சியின் நகரச் செயலர் மூசா. ‘தீட்சிதப் பார்ப்பனர்கள்’ என்று கூறுவது பிராமணர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதுதான் அவர் தெரிவித்த காரணம். பிறப்பால் இசுலாமியராக இருந்தபோதிலும் மூசாவுக்கு கோயிலுக்குள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள் தீட்சிதர்கள்.


தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டியதும், கோயிலை அரசு மேற்கொள்ளும் உத்தரவை உயர் நீதிமன்றத்தில் பெற்றதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும்தான் என்பதையும், இப்போராட்டத்தில் துவக்கமுதல் துணநின்றவர்கள் முன்னாள் அமைச்சர் வீ.வீ.எஸ்., பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர் தான் என்பதையும் தமிழகம் அறியும்.


இருப்பினும் கடுகளவும் கூச்சமில்லாமல் இவை தங்களுடைய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சிதம்பரம் நகரில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டார்கள் மார்க்சிஸ்டுகள். அக்கட்சியின் வழக்குரைஞர் செந்தில்நாதன், தில்லைக்கோயில் வழக்குகள் பற்றி எழுதிய சிறுநூலில், வழக்கை நடத்திய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பெயரை ஒரு விவரம் என்ற அடிப்படை யில் கூடப் பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்தார்.


இப்போது தீண்டாமைச் சுவர் விவகாரத்தில் திடீரென்று தலை நுழைத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். அவர்களுக்கு உச்ச நீதிமன்றத் தடை பற்றித் தெரிந்திருக்க வாப்பில்லை. கோயிலை அரசு மேற்கொண்ட மறுகணமே தீட்சிதர்கள் அம்மாவின் காலில் விழுந்ததும், அம்மாவை சு.சாமி சந்தித்ததும், அவர்தான் இந்தத் தடையை வாங்கியவர் என்பதும் மார்க்சிஸ்டுகளுக்குத் தெரியுமா, தோழமைக் கட்சியாகிய தீட்சிதர்களை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்துவதற்கு அம்மாவிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்கிறார்களா என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. "சுவரை அரசு இடிக்காவிட்டால் நாங்கள் இடிப்போம்" என்று சிதம்பரத்தில் வீரவசனம் பேசியிருக்கிறார்கள் மார்க்சிஸ்டு தலைவர்கள். ‘புனிதமான’ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மீது மார்க்சிஸ்டுகள் கடப்பாரையை இறக்கும் காட்சியையும், தீட்சிதப் பார்ப்பனர்களின் திருவுள்ளத்தைப் புண்படுத்தும் காட்சியையும் தரிசிப்பதற்கு நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.


மார்க்சிஸ்டுகள் கதையை விடவும் மாணப்பெரியது கலைஞரின் வசனம். தில்லைக் கோயிலை அரசாங்கத்தின் பிடியில் கொண்டு வந்துவிட்டதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறார் முதல்வர். ‘இந்தா பிடி’ என்று தீட்சிதரின் குடுமியை அரசின் கையில் கொடுத்தது நீதிபதி பானுமதியின் தீர்ப்பு. ஆனால், அதனைப் பிடிக்கின்ற தைரியம் அரசுக்கு இல்லை. இந்தக் கணம் வரை கோயில் நகை, சோத்துக் கணக்கு முதல் கொத்துச் சாவி வரை எதையும் தீட்சிதர்கள் அரசிடம் ஒப்படைக்கவில்லை. அதைக் கேட்கின்ற தைரியமும் இந்த அரசுக்கு இல்லை. தீர்ப்பை அமலாக்க மறுக்கும் குற்றத்துக்காக தீட்சிதர்களை உள்ளே போட்டிருக்கலாம். கோயிலுக்கு வெளியே தூக்கியும் போட்டிருக்கலாம். கலைஞரின் அரசோ தீட்சிதர்களுக்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகூடப் போடவில்லை. கோயிலுக்குள் அறநிலையத் துறை அலுவலகம் திறந்துவிட்டது. ஆனால் வீட்டுச் சோந்தக்காரனைக் கண்டு நடுங்கும் குடித்தனக்காரனைப் போல அங்கே குடியிருக்கிறார், நிர்வாக அதிகாரி.


கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்த மறுகணமே, தீண்டாமைச் சுவரை இடிக்கவேண்டுமென்று கோரினோம். உச்ச நீதிமன்றம் தடை விதிக்கும் வரை அரசு அசைந்து கொடுக்கவில்லை. இப்போது தடை உத்தரவைக் காட்டி, ‘கேட்கக்கூடாததைக் கேட்கிறார்கள்’ என்கிறார், கருணாநிதி.


‘தமிழில் பாடி வழிபடவேண்டும்’ என்ற கோரிக்கை கேட்கக் கூடிய கோரிக்கைதானே! கலைஞர் ஆட்சி செய்த 2000-ஆண்டில் திருவாசகம் பாடிய குற்றத்துக்காகத்தானே ஆறுமுகசாமியை அடித்து வீசினார்கள் தீட்சிதர்கள். இச்செய்தியை பார்ப்பனப் பத்திரிகையான கல்கி அன்று பிரசுரித்த பின்னரும், ‘சூத்திர’ தி.மு.க. அரசு செய்தது என்ன?


அதன்பின் இக்கோரிக்கைக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சிதம்பரத்தில் நடத்திய பொதுக்கூட்டங்களும், தமிழ் பாடச் செய்ன்று கைதான நிகழ்வுகளும் எத்தனை? தமிழுக்கு ஆதரவாக உள்ளூர் தி.மு.க.வினர் ஒருவர்கூட குரல் எழுப்பியதில்லை என்பதே உண்மை. தமிழ் பாடும் போராட்டத்தின் வெற்றியைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறக்க விரும்பிய கல்வெட்டில் அம்மாவட்டத்தின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் பெயர் இல்லை என்ற காரணத்துக்காக, அக்கல்வெட்டையே இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்தனர் கழகக் கண்மணிகள் என்பதும் உண்மை.


தமிழ் பாடுவதற்கான அரசாணையாக இருக்கட்டும், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக இருக்கட்டும்; இரண்டிலுமே தி.மு.க. அரசின் வலது கையைப் பிடித்து இழுத்து, கட்டை விரலில் மை தடவி, உத்தரவில் கைநாட்டுப் போட வைத்தது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். மக்கள் மன்றத்தில் அதற்கான அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கியவை ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும். இதுதான் உண்மை. ‘கட்டைவிரல் கழக அரசுக்குச் சோந்தம்’ என்கிறார் கலைஞர். அந்த உண்மையை நாம் மறுக்க முடியுமா என்ன? எனினும், இத்தனை ஆண்டுகளில் தி.மு.க. அரசு தீட்சிதர்களுக்கு எதிராகத் தனது சுண்டுவிரலைக்கூட உயர்த்தியதில்லை என்பதற்கான ஆதாரங்களை நாம் அடுக்கமுடியும்.


1997-இல் தி.மு.க. அரசு கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தபோது, அவரது அலுவலகத்தையே நொறுக்கினார்கள் தீட்சிதர்கள். நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரை ‘உண்மையல்ல’ என்று தூக்கி வீசியது சிதம்பரம் போலீசு. "ஐயோ பாவம் வருமானமில்லாத தீட்சிதர்கள்" என்று சட்டமன்றத்தில் கண்ணீர் வடித்தார் காங்கிரசு எம்.எல்.ஏ அழகிரி. அடுத்த சில நாட்களில் தீட்சிதர்கள் போர்த்திய சால்வைக்குள் அடைக்கலமானார் கலைஞர்.


நகைக்களவு உள்ளிட்ட பல குற்றங்களை தீட்சிதர்கள் இழைத்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் கூறியது அறநிலையத் துறை. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு போட்டு உள்ளே தள்ளுமாறு தனது தீர்ப்பில் (1997) குறிப்பிட்டார், உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலயா. உள்ளே தள்ளுவது இருக்கட்டும். தி.மு.க. அரசு தீட்சிதர்கள் மீது பெயருக்கு ஒரு திருட்டு கேஸ் கூடப் போடவில்லை.


கோயிலுக்குள் கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மர்ம மரணங்கள், பாலியல் வன்முறைகள், களவுகள் ஆகியவை குறித்த ஆதாரங்களைக் கொடுத்தும் சிதம்பரம் போலீசு வழக்குப் பதிவு செய்ய மறுத்ததால், சி.பி.ஐ. விசாரணை கேட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறது. இதனை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது தி.மு.க. அரசு. தி.மு.க. அரசின் வலது கை ஆறுமுகசாமிக்கு சன்மானம் கொடுத்து விளம்பரம் தேடுகிறது. இடது கையோ கள்ளத்தனமாக தீட்சிதர்களை அரவணைக்கிறது.


2008 -இல் அரசாணைப்படி தமிழ் பாடச் சென்ற ஆறுமுகசாமியை மட்டுமின்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே தீட்சிதர்கள் தாக்கியதை தொலைக்காட்சியில் நாடே பார்த்தது. அந்தத் தீட்சிதர்கள் தனிச்சமையல் செய்து சாப்பிட சிறையில் அடுப்பும் அரிசியும் கொடுத்து அவர்களுடைய பார்ப்பனப் புனிதத்தை பேணியது சிறை நிர்வாகம்.


பல கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை தீட்சிதர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு திருட்டுத்தனமாக விற்றிருப்பதற்கான ஆவணங்களை தேடிப்பிடித்து புகார் கொடுத்தும், தி.மு.க. அரசு தீட்சிதர்கள் மீது வழக்கு போடவில்லை. அதற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான், வேறு வழியில்லாமல் ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. இப்படி தீட்சிதர்களுக்கு எதிராகத் தனது சுண்டுவிரலைக்கூட அசைக்காத தி.மு.க. அரசு, கோயிலைக் கைப்பற்றி சாதனை படைத்துவிட்டதாகக் கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறது.


இப்போது தீட்சிதர்களே எதிர்பார்த்திராத கோணத்தில் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் கலைஞர். "பெரியபுராணம் கற்பனை, நந்தன் கதையே கட்டுக்கதை" என்று பகுத்தறிவு விளக்கம் சோல்லி, தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்கு பெரியாரைத் துணைக்கு அழைக்கிறார்.


பெரியபுராணத்தில் சிவபெருமான் எப்போதுமே அந்தணன் வடிவில் வருவதும், குயவனும், வேடனும், சலவைத்தொழிலாளியுமான நாயன்மார்கள் அந்தணர்களுக்குப் பாதசேவை செய்வதும் கற்பனைகள் அல்ல, நிகழ்காலத்திலும் தொடரும் உண்மைகள். தீண்டாமை இன்றும் உண்மை. அந்த அளவில் நந்தன் கதையும் உண்மை. தீண்டாமைச் சுவரும் உண்மை.


பழங்கதை கிடக்கட்டும். புதுக்கதைக்கே வருவோம். 1880- களில் "தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரே, நந்தனாரின் ஆள் உயரச்சிலை இருந்ததாகவும், அங்கே அமர்ந்துதான் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் கீர்த்தனை எழுதினார்" என்றும் உ.வே.சா. பதிவு செய்திருக்கிறார். 1935-இல் அந்தச் சிலையை அங்கே பார்த்திருப்பதாகவும், பின்னர் 1943 இல் அதனைக் காணவில்லை என்றும் முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரான பேராசிரியர் கொண்டல் சு.மகாதேவனும் எழுதியிருக்கிறார்.


இது அயரே கூறியிருக்கும் உண்மை என்பதால் கலைஞர் தைரியமாகப் பேசலாம். ராமர் பாலத்தையோ தீண்டாமைச் சுவரையோ இடிப்பது ‘சாமி’ குத்தம் ஆகிவிடும் என்று அவர் அஞ்சக்கூடும். அழிவு வேலை என்று தயங்கவும் கூடும். சிலை வைப்பதென்பது ‘ஆக்கபூர்வமான’ வேலை மட்டுமின்றி,ண கலைஞரின் மனதுக்கிசைந்த கலையும் அல்லவா? உளியின் ஓசையை அவர் உள்ளே எழுப்பட்டும். வெளியே, தீண்டாமைச் சுவரின் மீது கடப்பாரையின் இசையை நாம் எழுப்புவோம்.


-தொரட்டி