Language Selection

புதிய ஜனநாயகம் 2010

சாராய உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் விவசாயிகளின் வறுமையை ஒழிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு, கேழ்வரகு, காட்டுப் பருப்பு முதலானவை திடீர் மழைகளால் அழுகி விவசாயிகள் பாதிக்கப்படுவதால், சேதமடைந்த அந்த தானியங்களைக் கொள்முதல் செய்து, அதிலிருந்து சாராயம் தயாரிக்கப் போவதாவும், இத்திட்டத்தின் மூலம் வறுமையிலுள்ள சிறு விவசாயிகள் பெரிதும் பலனடைவார்கள் என்றும், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு பெருமையுடன் அறிவித்துள்ளது.

திடீர் மழையால் அழுகி வீணாகிப்போன தானியங்களிலிருந்துதான் சாராயம் தயாரிக்கிறோம் என்று மாநில அரசு கூறுவது மிகப் பெரிய மோசடி. தகவல் அறியும் சட்டப்படி கிடைத்த தகவலின்படி, அல்கோபிளஸ் என்ற சாராய ஆலை தரமான கேழ்வரகு தானியத்தை வியாபாரிகளிடமிருந்து ஒரு குவிண்டால் ரூ.810 முதல்1150 வரை கொள்முதல் செய்துள்ளது. அதாவது தரமான தானியங்கள்தான் சாராயத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, மாநில அரசு கூறுவதுபோல அழுகிய தானியங்கள் அல்ல. இச்சாராய ஆலை மட்டும், கடந்த டிசம்பர் 2009-ஆம் ஆண்டு வரை 44,000 டன் தானியங்களைக் கொள்முதல் செய்துள்ளது. இப்படிப் பல ஆலைகளும் தானியங்களைக் கொள்முதல் செய்தால், கிராமப்புற ஏழைகள் அடிப்படை உணவு தானியங்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலைதான் ஏற்படும். மேலும், இந்த சாராய ஆலைகள் தானியங்களை வியாபாரிகளிடமிருந்துதான் வாங்கப் போகின்றனவே தவிர, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப் போவதில்லை. எனவே, இது மழையை நம்பி தானியங்களைப் பயிரிடும் ஏழை விவசாயிகளுக்குப் பலனளிக்கப் போவதில்லை.


மகாராஷ்டிராவில் தற்போது அனுமதி பெற்றுள்ள 40 சாராய ஆலைகள் ஆண்டுக்கு 46 கோடி லிட்டர் வரை சாராயத்தை உற்பத்தி செய்யும். ஒரு லிட்டர் சாராயத்தை உற்பத்தி செய்ய 2.8 கிலோ தானியம் தேவை. இதன்படி பார்த்தால், இத்தகைய சாராய ஆலைகளுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 13 லட்சம் டன் தானியங்கள் தேவை. கடந்த 2006-07 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் அரிசி, கோதுமை, சோளம்,கம்பு, கேழ்வரகு முதலானவற்றின் மொத்த உற்பத்தி 101 லட்சம் டன்களாகும். இதில் 13 லட்சம் டன் தானியங்களை அதாவது, மொத்த உற்பத்தியில் 13 சதவீதத்தை சாராயத்துக்கு ஒதுக்க அரசு தீர்மானித்துள்ளது.


கிராமப்புற மக்களின் உணவில் பெரும் பங்கு வகிப்பவை இந்தத் தானியங்கள்தான். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால், சந்தையில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்படும். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அதாவது, பத்து பேருக்கு ஒருவர் பருப்பும் தானியங்களும் கிடைக்காமல் பட்டினியால் பரிதவிக்க நேரிடும். மகாராஷ்டிராவில் சத்துணவின்மையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோதாக்கி மாண்டுவரும் நிலையில், அரைகுறை புரதச் சத்துக்கான உணவு தானியங்களும் கிராமப்புற மக்களிடமிருந்து பறிக்கப்பட்டால், இளங்குழந்தைகளின் மரணங்கள் இன்னும் தீவிரமடையவே செய்யும்.


தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் எரிசாராயத்துக்கு ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் வீதம் மானியம் வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இத்தகைய மானியங்கள் மூலம் ஒவ்வொரு ஆலையும் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை ஆதாயமடைய முடியும். மைய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்-இன் மகன், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற துணைத் தலைவரான கோபிநாத் முண்டே-யின் மகள், முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மருமகன்கள், முன்னாள் சுகாதார அமைச்சர் விமல்தாய் முண்டாடா, தேசிய காங்கிரசுக் கட்சித் தலைவர் கோவிந்தராவ் அதிக், நவி மும்பையின் துணை மேயரான சுனில் சசிகாந்த் பிராஜ்தார் -இப்படி ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் உணவு தானிய சாராய ஆலைகள் மூலம் அரசின் மானியங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொழுக்கின்றனர்.

 
மாநில உயர்நீதி மன்றமோ, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதித்துறை தலையிட முடியாது என்று பொதுநல வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சோளம், கேழ்வரகு முதலான தானியங்கள் மகாராஷ்டிர மக்களின் அடிப்படை உணவு அல்ல என்றும், சாராய ஆலைக்கு இத்தானியங்கள் ஒதுக்கப்படுவதால் அம்மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என்றும் திமிராகத் தீர்ப்பளித்துள்ளது.


ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தின் அரிசி, கோதுமை மற்றும் இதர தானியங்களின் மொத்த உற்பத்தி 101 லட்சம் டன்கள். இதில் கேழ்வரகு மட்டும் ஏறத்தாழ 37 சதவீதமாகும். இந்த அத்தியாவசியமான உணவு தானியம்கூட இனி கிராமப்புற ஏழைகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இதுதவிர முந்திரி, ஜாமுன், சிக்கூ, காட்டு இலந்தை முதலானவற்றிலிருந்து சாராயம் தாயாரிக்கவும் அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. சாராயத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 4,000 கோடி வருவாய் கிடைப்பதால், அதை மேலும் தீவிரமாக்குவதில்தான் அது குறியாக உள்ளது. இதன் விளைவாக அம்மாநிலம் குடிகாரர்களின் மாநிலமாக மாறிப் போகும்.


உணவு தானியங்களிலிருந்து உயிர்ம எரிபொருள் மற்றும் சாராயம் தயாரிக்கும் பெருந்தொழில் கழகங்கள், உணவுத் தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் தோற்றுவித்து பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளைக் காலனியாக்கி வருகின்றன. அதன் வழியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கேடுகெட்ட மறுகாலனியக் கொள்கை மகாராஷ்டிரத்தோடு நின்று விடப்போவதில்லை. நாட்டின் இதர மாநிலங்களும் இக்கொள்கையைப் பின்பற்றி, கிராமப்புற மக்களை நிரந்தரமாகப் பட்டினியில் தள்ளும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

-குமார்.