Language Selection

என்னை தமது வதை முகாமுக்குள் இட்டுச் சென்றவர்கள், நிர்வாணமாக்கினர். எனது கண் கட்டப்பட்ட நிலை என்பது, தொடர்ந்து அடுத்து நான்கு நாட்களாக நீடித்தது. எந்த உடுப்புகளுமற்ற நிர்வாணமான நிலை என்பது பல நாட்களாக நீடித்த நிலையில், இறுதிக் காலத்தில் ஒரு கிழிந்து போன ரன்னிங் சோட்சைப் போராடிப் பெற்றேன். நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றபோது, அரை நிர்வாணமாகவே பல மைல் தூரம் கடந்து சென்றேன்.   

1987 இல் இந்த நிலை காணப்பட்டது என்றால், இதற்கு பிந்தைய காலம் மிக கொடூரமானவையாக இருந்தது. தற்கொலை பற்றி கேட்டவர்கள், அடுத்த கேள்வியாக என்னிடம் பிரபா மற்றும் வசந்தனைத் தெரியுமா என்று கேட்கப்பட்டது. நான் ஆம் என்று பதில் சொன்னேன். இதை அடுத்து நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, ஒருவர் முன் நிறுத்தப்பட்டேன். இந்த நபர் வசந்தன் (சிவகுமார்) ஆவார்.  வசந்தன் முன்கூட்டியே கைது செய்யப்பட்டதை 27.4.1987 அன்றே அறிந்தேன்.

இதை அறிந்து அவர்கள் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் வெருட்சியுடன் வரவேண்டாம் திரும்பிப் போங்கள் என்று கூறி பேச மறுத்தனர். வசந்தனின் கைதுக்கு முன்பு, அவருடன் மாணவர் அமைப்பில் இருந்த ஒருவர் கைது பற்றி அறிந்திருந்தேன்;;. அவர் குரு என்று அழைக்கப்பட்ட குருபரனாகும். அப்போது அதை, அவரின் இயக்கம் தொடர்பான கைதாகவே கருதினேன். அமைப்பின் மற்றைய உறுப்பினருக்கு அதுபற்றி அறிவித்த நான், வசந்தனின் உறவினர்களை சந்திக்க முனைந்தும் தோல்வி பெற்றேன். கைதுக்கான காரணத்தை தெரிந்து கொள்ள எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. புலிகள் பிரபா என்ற பெயரை சொல்லியவுடன், விடயத்தை யூகித்துக் கொண்டேன். என்னுடன் அங்கு இருந்த மற்றைய மத்திய குழு உறுப்பினர்தான் பிரபா. அவரை அதிகளவில் ஒருவருக்கும் தெரியாது. வசந்தனுடன் எமது இயக்கத்தில் இருந்து, நான் மற்றும் பிரபாவுமே தொடர்பு கொண்டிருந்தோம்;. பிரபாவின் இருப்பிடம் உண்மைப்பெயர் வசந்தனுக்கு தெரியாது. என் இருப்பிடம் மற்றும் சொந்த பெயரும் அவருக்கு தெரிந்திருந்தது.

வசந்தனுடன் வேறு சிலருடனும் 1984 முதலே நான் அரசியல் ரீதியாக தொடர்பு கொண்டிருந்தேன். வசந்தன் புளட்டின் மாணவர் அமைப்புக் கமிட்டியில் இருந்த காலத்தில், அந்தக் கமிட்டியையே முழுமையாக அரசியல் ரீதியாக வழிநடத்துமளவுக்கு நாம் செயற்பட்டோம். அந்த கமிட்டியின் முன்னணி உறுப்பினர்கள் பலர், அரசியல் ரீதியாக எம்முடன் ஒன்றுபட்டு நின்றனர். மாணவர் அமைப்புகளை இணைத்து பல போராட்டங்களை நடத்திய போது, அங்கு அரசியல் ரீதியாக முன்னேறிய பொதுவான அரசியல் கோசத்தை முன்வைக்க வைப்பதிலும் வெற்றி பெற்றோம். மாணவர் அமைப்புகளில் காணப்பட்ட பிற்போக்குச் சக்திகளை தனிமைப்படுத்தவும், மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு புலிகள் அல்லாத அனைத்து மாணவர் குழுக்களையும் ஒன்றிணைத்தோம்;. அடிக்கடி மூன்றுக்கு மேற்பட்ட மாணவர் குழுக்களின் சந்திப்புக்களை நாங்கள் தொடர்ச்சியாக நடத்தியதன் மூலம், பல மாணவர் அமைப்புகளை போராட்டத்தை குறித்து ஒரு அரசியல் கோசத்தின் கீழ் ஒருங்கமைத்து, அரசியல் ரீதியாக தலைமை தாங்கினோம். அவர்களை அவர்களின் அமைப்பில் வைத்தே, அரசியல் சக்திகளை வென்று எடுக்கும் பணியினைச் செய்தோம்.

இந்த அரசியல் பணி எதையும் புலிகளிடம் அவர் கூறிவிடவில்லை. இது பற்றி புலிகளுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் இது தொடர்பாக கேள்வி அவர்களிடம் இருந்து எழுந்திருக்கவில்லை. என்னுடைய தொடர்பில் மற்றைய அனைத்தையும் அவர் முழுமையாக சொல்லியிருந்ததை, என் மீதான முழுமையான விசாரணையூடாக படிப்படியாக பின்னால் புரிந்து கொண்டேன். இவர் அனைத்தையும் சொல்லியதை படிப்படியாக கண்டறிய 15 நாட்கள் எனக்கு தேவைப்பட்டது. அதற்காகவே தொடர்ச்சியான சித்திரவதையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் அனைத்தையும் சொன்னதன் பின்பே, புலிகள் என்னைக் கடத்திச் சென்றனர். அவரின் முன் என்னை இழுத்துச் சென்ற பாசிச நாய்கள், "இவரா றயா" என்று கேட்டனர். அவர் "ஆம்" என்று பதிலளித்தார். இந்த நிலையில் என் கண் கட்டப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்ட நிலையில், கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தேன். இந்த இடத்தில் வசந்தன் மட்டும் தான், நான் தப்பும் வரை புலிகள் அல்லாத கண்கண்ட ஒரேயொரு சாட்சியாக இருந்தார்.

அதன் பின்பு என்னை ஒரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அதே நிலையில் எனது இரண்டு கை தோள் (கமக்கட்டு) ஊடாக கயிறு இடப்பட்டது. பின்பு காலின் நுனி விரலில்; நிற்க வைத்து மேலே உயர்த்தி கட்டடியதன் மூலம், அரையும் குறையுமாக தொங்கவிடப்பட்டேன். அதே நேரம் எனது கையை பின்புறமாக யன்னல் கம்பியுடன் சேர்த்துக் கட்டினர். இந்த நிலை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நீடித்தது. நான்கு நாட்களின் பின்பு ஒருநாள் கீழே விடப்பட்டு மீண்டும் நான்கு அல்லது மூன்று நாள் என்று நான்கு முறை தொடர்ச்சியாக தொங்கவிடப்பட்டேன். இப்படி என்னை தொங்கவிட்டவர்கள் ரப்பர் போன்ற பொருளால் தொடர்ச்சியாக உடம்பு எங்கும் அடித்தார்கள். எந்த கேள்வியுமின்றி, பல்வேறு பொருட்களால் தொடர்ச்சியாக இடைவெளியின்றி தாக்குதலை நடத்தினர். எதனால் யார் எவர் தாக்கினர் என்பதையும், இதன் விளைவுகளையும் என் கண்ணால் பார்க்க முடியவில்லை. இந்த தொடர்ச்சியான சித்திரவதைகளின் பின்பாக நான்காம் நாள் கண்ணை அவிழ்த்த போது, எனது நெஞ்சு முழுக்க இரத்த தளம்புகள் வரிவரியாக காணப்பட்டது. அதில் இருந்து இரத்தம் வழிந்தோடியது. இந்த தாக்குதலை அவர்கள் நடத்திய போது, நான் வலி தாங்காது கத்தினேன். அவையோ அந்த அறைக்குள், மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. இந்தக் கட்டிடம் மாடி அமைப்பு கொண்டதுடன், கட்டிடம் உறுதியான கொங்கிறிட்டால் ஆனது. கத்தக்கூடாது என்று சித்திரவதைக்கு எதிரான மனஉணர்வு இருந்தபோதும், கத்த மறுப்பது தாக்குதலை அதிகரிக்க வைக்கும் என்பதால், அதிகமாகவே வலியுள்ளதாக தொடர்ச்சியாக காட்டிக் கொண்டேன்.

இதன் மூலம் சித்திரவதையின் உச்சத்தை அவர்கள் அடைந்துவிட்டதாக, எதிரிக்கு திருப்தியை ஏற்படுத்தி அவனை அடிக்கடி திசைதிருப்ப முடிந்தது. எதிரியின் கோழைத்தனமான தாக்குதலை எதிர்கொள்ளும் போது, அவன் சித்திரவதையில் திருப்தி அடைந்துள்ளதாக அவனை நம்ப வைத்து ஏமாற்றுவதும் ஒரு வெற்றிதான். மக்கள் விரோத நோக்கத்தில் சித்திரவதையின் அதி உச்சத்தை, என் மூலமாக அடைந்ததாக எதிரிக்கு காட்ட வேண்டியது அவசியம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்;. நிலைமையை புத்திசாலித்தனமாக அறியும் வரையும், அறிந்த பின்பும் கூட இந்த நடிப்பு அவசியமானதாகவும் நிபந்தனையாகவும் இருந்தது. மக்களின் உழைப்பில் இருந்தும் அன்னியமான லும்பன் மாபியா வாழ்வில் இருந்தும் உருவான கொலைகார பாசிசக் கும்பல், அதையே தொழிலாக கொண்டவர்களாக இருந்தனர். தமது தாக்குதலை ரசித்து அதன் அனுபவத்தில் கையாளும் போது, அதில் அவன் வெற்றி பெற்றதாக காட்டுவதன் மூலம், கொலைகார மூர்க்கத்தையும் நோக்கத்தையும் ஏமாற்ற முடியும். இதன் மூலம் எதிரியின் நோக்கத்தை, நிலைமையை அனுசரித்து அதைத் தகர்க்கமுடியும்;. என் மீதான தனியான தனிமையான சித்திரவதையின் போது, சமுதாயத்தையும் எதிரியையும் புரிந்து கொண்டு எதிரியின் நோக்கத்தை வதை முகாமிலும் தகர்க்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்து கொண்டேன். எதிரி எதை தெரிந்து வைத்திருக்கின்றான் என்பதை கண்டறிவதும், அவ்வளவே எனக்கும் தெரியும் என்று காட்டுவதன் மூலம், எதிரியின் அறிவின் எல்லையில் அவனை ஏமாற்றுவதாகும். அவனை வதைமுகாமில், வெற்றி கொள்ளும் ஒரு வழிமுறையாகும். எதிரி புதிதாக எதையும் என்னிடம் இருந்து தெரிந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்பது, எதிரிக்கு பிரயோசனமற்ற வகையில் அவனை இலகுவாக திசை திருப்பவும், குழப்பத்தில் ஆழ்த்தவும் முடியும். எதிரி என்னை யார் என்று ஏதோ ஒரு வகையில் தெரிந்து விடுகின்ற நிலையில், அமைப்பை முழுமையாக அழிக்க அவன் சித்திரவதையூடாக கோழைத்தனமாக மரணத்தை தரத் தயாராகின்ற போது, மரணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் போராட்டத்தில் உறுதிமிக்க வீரமான எதிர் போராட்டத்தை நடத்தவேண்டும். இதன் மூலம் எதிரிக்கு உறுதியான எதிர்ப்பை காட்டுவதன் மூலம், உயர்வான சித்திரவதையின் முடிவற்ற தோல்வியால் அவனை சோர்வடைய வைத்து, நாம் வென்றாக வேண்டும்;. இந்த இரு நிலைமையையும் நாள் தோறும் பகுப்பாய்வு செய்து கையாண்டதன் ஊடாக, எதிரியை மதிப்பிட்டு கையாண்டதன் மூலம், என்னால் எதிரியை அவனின் வதைமுகாமில் வைத்தே தோல்வியடைய வைத்து வெற்றி பெற முடிந்தது. இதனால் எதிரியால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. எதிரி என்னை புரிந்து கொள்ள முடியாத குழப்பத்துக்குள் இட்டுச் சென்றேன். என்னை பற்றிய முடிவை அடிக்கடி மாற்ற வைத்தேன்;. என் மீதான சித்திரவதை உயர்வும் தணிவுமாக, சீரற்ற வகையில் அடிக்கடி மாற்றும் வண்ணம் எதிரியை குழப்பி திசை திருப்ப முடிந்தது.

தொடரும்
பி.இரயாகரன்

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)