கொலைகார புலிப் பாசிசம் நிலவிய அன்று, எனது உரையை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து இருந்தன. இந்திய ஆக்கிரமிப்பு நிலவிய அன்று, எந்த மாற்றமும் நிகழவில்லை. மற்றொரு பாசிசம் வந்து குடியேறிய ஆரம்ப காலம். மிக விரைவிலேயே இந்த பத்திரிகைகளை தனக்கு சார்பாக இயங்கக் கோரி, அச்சிடும் இயந்திரங்களையே இந்திய ஆக்கிரமிப்பாளன் குண்டு வைத்து தகர்த்தான். இப்படி பத்திரிகைகள் உண்மைகளை வெளியிடும் "சுதந்திர" அமைப்பாக இருக்கவில்லை.
எனது மறுப்பு உரையை, புலிப் பாசிசம் விதைத்த அச்சத்தின் கெடுபிடியால் பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால் அன்று மாத்தையா மற்றும் எனது உரை ஒலிநாடாவில் (கசெட்டில்) பதிவாகியது. அந்த ஒலிநாடா (கசெட்) தற்போது என்னிடம் உள்ளது. இந்த ஒலிநாடாவில் (கசெட்டில்) இருந்து....
***
28.4.1987 அன்று உரிமை கோராத சதிகள் மூலம் கோழைத்தனமாக இரகசியமாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்ய முயன்ற நிலையில், 16.7.1987 அவர்களின் புனிதமான இரகசிய பாசிச வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றேன். 16.7.1987 முதல் 21.8.1987 வரை அவர்களின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பி, தலைமறைவாக வாழ்ந்தேன். இக்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த உயிர் ஆபத்துள்ள தீவிர முயற்சியால், 21.8.1987 பகிரங்கமாக பல்கலைக்கழக மாணவர்கள் முன் தோன்றி உரையாற்றினேன். இந்த உரைக்கு முன்பாக மாணவர் தலைவி ஒளவையும், மாத்தையாவும் உரையாற்றினார்.
நான் இதற்கு முன் இவ்வளவு நீண்ட நேரம் பகிரங்கமான உரை எதையும், இவ்வளவு மக்களின் முன் நிகழ்த்தி இருக்கவில்லை. கருத்தரங்குகளையும், சில போராட்ட வடிவம் சார்ந்த குறிப்பான கருத்துகளையும் பகிரங்கமாக பேசியிருக்கின்றேன். இந்த பகிரங்கமான எனது உரை நீண்ட இடை வெளிக்கூடாக ஒழுங்குபடுத்தப்படாத ஒரு கன்னிப் பேச்சு. அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், ஆயிரக்கணக்கான மக்கள் முன் பேசினேன். அன்று கைலாசபதி மண்டபத்தில் மாணவர்கள், மக்கள் என தன்னியல்பாக பலர் வந்ததுடன், மண்டபத்தில் இடமின்றி வெளியிலும் கூடியிருந்தார்கள். இயக்கங்கள் மற்றும் புலிகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் (உதாரணமாக பாசையூர் மக்களும்…), இந்த சம்பவத்தை பத்திரிகை வாயிலாக அறிந்து, கூட்டத்துக்கு வந்திருந்தனர். இந்த 45 நிமிடத்துக்கு மேற்பட்ட எனது உரை சீர்பட என்னால் முழுமையாக அம்பலப்படுத்த முடியாத அளவுக்கு அன்று பேச்சாற்றல் இருக்கவில்லை. மேடையில் என் பேச்சை சீர்படுத்தவும் முடியவில்லை. மாத்தையாவுக்கு உடனடியாக பதிலளித்து பேசிய போது, எந்தக் குறிப்பும் இருக்கவில்லை, முன் தயாரிப்பும் செய்திருக்கவில்லை. என் பேச்சு பல தொடர்களை இழந்த போதும், அரசியல் ரீதியாக தெளிவாக எனது கருத்தை வைக்கத் தவறவில்லை. இந்தப் பேச்சைக் காலம் கடந்து புரிந்து கொள்ள, அடைப்புக் குறிக்குள் சில விளக்கங்களை சுருக்கமாக இணைத்துள்ளேன்.
எனக்காக போராட உருவான புதிய அமைப்புக் குழுத் தலைவி ஒளவையின் உரை
"மாணவர்களுக்கு வணக்கம். இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் மாணவர்குழு சார்பில் நன்றிகள். எமது பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் றயாகரன் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக எங்களால் பொதுக்கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அதில் மாணவர் குழு ஒன்றை தெரிவு செய்தது மாணவர்கள் யாவரும் அறிந்த விடையம். அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் றயாகரன் விடயமாக தொடர்ச்சிகளை மாணவர் குழு மாணவர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கும், அதை உறுதிப்படுத்துவதற்கும் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள் சமூகம் தந்து இருக்கிறார். ஆரம்பத்தில் சில விடயங்களை மாணவர்களுக்கு குறிப்பிட வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. தயவு செய்து அனைத்து மாணவர்களும் அமைதியாக இருந்து, இந்தக் கூட்டத்தை நல்ல முறையில் நடப்பதற்கு வழி செய்யுங்கள். முதலாவது இந்த மாணவர் குழு தற்காலிகமானது. அது றயாகரனின் பிரச்சனை சம்மந்தமாக ஆராயப்படுவதற்கு மட்டும் தான், கடந்த 18ம் திகதி இந்தக் கைலாசபதி கலை அரங்கில் கூட்டப்பட்டிருந்தது. ஆனபடியினால் இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் நேரடியாகத் தலையிட்டு தீர்த்திருந்தோம். இன்னும் மேலதிகமாக கடந்த காலங்களில் நடந்த பிரச்சனைகள் சம்மந்தமாகவும், நாங்கள் அவர்களுடன் (புலிகளுடன்) கதைத்திருந்தோம். ஆனால் கடந்த காலங்களில் நடந்த பிரச்சனைகளில் நாங்கள் தலையிடுவதற்கு, எந்தவிதமான பொறுப்பையும் தற்காலிகமான குழுவுக்கு மாணவர்கள் வழங்கவில்லை. அத்துடன் அதனுடைய உணமையான ஆவணங்களோ, கடிதங்களோ எம்மிடம் இல்லை. ஆகவே றயாகரனின் பிரச்சனையை மட்டும் தான் கதைக்க கூடிய ஒரு சூழலை நாங்கள் பெற்றிருக்கின்றோம். அதாவது இந்த மாணவர் அமைப்புக் குழு பெற்று இருக்கின்றது. அந்த வகையில் மட்டும் தான் நாம் நியமிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் ஆராய்வதற்குச் சம்மந்தம் இருந்தால், அதையும் ஆராய்வதற்காக உங்களுக்கு வாக்களித்திருந்தோம். அந்த வகையில் றயாகரன் சம்மந்தமான விடயங்களை மாணவர்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்த கோருகின்றோம். அதை மாணவர்களுக்கு ஒழுங்காக தெளிவுபடுத்துமாறு விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்களை மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். நன்றி."
புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவின் உரை
"வணக்கம் இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த அமைப்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் எம்முடன் றயாகரனின் விவகாரம் சம்மந்தமாகக் கதைத்தார்கள். அவர்களுக்கு எமது நிலையை நாம் தெளிவுபடுத்தினோம். அது நேற்று உங்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக பத்திரிகை வாயிலாக அறிந்தோம். அதை நேரடியாக உங்கள் முன்னிலையில் வந்து சொல்ல வேணடும் என்று கேட்டனர். அதை நாங்களும் விரும்பினோம். இந்தச் சந்தர்ப்பம் தந்ததற்காக நன்றிகள். இந்த விடயத்துக்கு அப்பால் வெளியில் நாங்கள் ஏதாவது பேசுவதாகவிருந்தால் அல்லது எங்களுடன் கலந்து உரையாடுவதாக இருந்தால் நாங்கள் இரண்டு தினங்களில் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வோம். இப்போது றயாகரன் சம்மந்தமான விடயத்தை மட்டும் உங்களுடன் பேசுவோம்.
றயாகரன் ஓர் பல்கலைக்கழக மாணவன் என்ற நிலையிலையோ அல்லது பல்கலைக்கழக போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பதினாலோ எம்மால் கைது செய்யப்படவில்லை. இதில் உங்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியது, றயாகரனின் கடிதத்தில் கடத்தப்பட்டது என்ற ஒரு வார்த்தை பாவிக்கப்பட்டிருந்தது. அப்படியான செயல் அல்ல அது. நாங்கள் அவரை கைது செய்தோம். நாங்கள் தமிழீழப் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்ற வகையிலும், நீண்ட காலமாக இப்போரில் வளர்ச்சி பெற்றவர்கள் என்ற வகையிலும் இங்கு நடக்கும் (இங்கு என்று குறிப்பிடுவது தமிழீழப் பிரதேசத்தில்) நடக்கும் சட்டவிரோத, சமூகவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் கடமையும் எமக்குள்ளது. இந்த நிலையில் 18ம் திகதி 4ம் மாதம் ஒரு சமூகவிரோதி எம்மால் கைது செய்யப்பட்டார். அவர் பணத்துடன் ஆயுதம் வாங்குவதற்கு அலைந்து திரியும் போது, அவரை விசாரித்ததன் மூலம் அவரிடம் இருந்து பல தகவல்கள் பெற்றுக்கொண்டோம். இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக றயாகரனை கைது செய்யும் நிலை ஏற்பட்டது. றயாகரனிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கியும் 154 ரவைகளும் எம்மால் கைப்பற்றப்பட்டன. ஆயுதப் பரிமாற்றம் அதாவது சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையில் றயாகரன் 6வது நபர். அதாவது உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம். ஒரு சமூக விரோதியில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ச்சி பெற்று, 18ம் திகதி அந்த சமூக விரோதி கைது செய்யப்பட்ட பின் 28ம் திகதி 4ம் மாதம் 1987ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கிடையில் இன்னும் நால்வர் கைது செய்யப்பட்டு, அதில் சிலர் சமூக விரோதியாகக் காணப்பட்டார்கள். அந்தச் சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றத்தின் கடைசிப் பக்கம் தான் றயாகரன். இவர் ஒரு இயக்கத்தின் நீண்டகால உறுப்பினரும், தற்போது அவ்வியக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமாவர். இவரை விசாரணை செய்தோம். ஆனால் அழித்தொழிக்கும் நோக்கம் எமக்கு எப்போதும் இருக்கவில்லை. எனவே றயாகரன் பல்கலைக்கழக மாணவர்களுக்கூடாக கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, இவரின் உயிருக்கோ அல்லது இவரின் கல்விக்கோ எதுவித அச்சுறுத்தலாகவும் இருக்கமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். வணக்கம்."
மீண்டும் ஒளவையின் உரை
"நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசும் போது ஒருசிறு தவறு விட்டுவிட்டேன். றயாகரனிடமிருந்து 80000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது என்றும் நான் அறிவித்து விட்டேன். அது நாங்கள் கதைக்கும் பொழுது அந்தக் கதையை பூரணமாக புரிந்து கொள்ளாத தன்மையில் சொன்னனான். ஆனபடியால் என்னனென்ன கைப்பற்றியது என்பதை பிரதித் தலைவர் விளங்கப்படுத்தினார். நான் சொன்னது பிழை. இக்கூட்டத்தில் றயாகரன் வந்திருப்பதாகவும் அவர் பேச விரும்புவதாகவும் இங்கு கூறியிருக்கின்றார். அதை மாணவர்கள் அனுமதித்தால் றயாகரனை இந்த கூட்டத்தில் வந்து கருத்துகள் ஏதும் சொல்லவிருந்தால் மாணவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் கூறலாம்."
சிறிது இடைவேளையின் பின் மீண்டும் ஒளவை
"பிரதித் தலைவர்; அவர்கள் கூறுகின்றார். தாங்கள் றயாகரனுக்கான உறுதி மொழியைத் தந்துவிட்டோம். நாங்கள் இத்துடன் இக்கூட்டத்தை விட்டு போக வேண்டியிருக்கின்றது. றயாகரன் பேச விருப்பமானதை நீங்கள் உங்களுடன் வைத்திருக்க கோருகின்றார். அவர்களின் பொறுப்பில் இருந்து போக போகின்றார்களாம். உறுதிப்பாடு தந்து விட்டதால் தாம் வெளியேறப் போவதாக கூறுகின்றனர். மாணவர் குழு அவர்களை உறுதிப்பாடு செய்வதற்கு அழைத்திருந்தது. அவர்கள் உறுதி கொடுத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் போகப் போகின்றார்கள். றயாகரனிடம் மாணவர்கள் கதைப்போம். கூட்டம் இன்னும் முடியவில்லை. மாணவர்கள் அமைதியாக இருங்கள். கதைக்க விரும்பியிருந்தால் மாணவர்கள் அனுமதியிருந்தால் றயாகரன் மேடைக்கு வந்து தனது கருத்துக்களை பேசலாம்."
பேச அழைக்கும் வகையில், பலத்த ஆரவாரத்துடன் நீண்ட கரவொலி எழுகின்றது
றயாகரனின் (எனது) உரை
அமைப்புக் குழுவுக்கும் மற்றும் இங்கு குழுமியிருக்கும் பல்கலைகழக மாணவர்களுக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்.
இங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா வந்து பேசிவிட்டு சென்றார். ஒரு விசாரணை செய்தவர்கள், விசாரணையில் என்ன செய்தவர்கள் எதைச் செய்தவர்கள் என்பதை சொல்வதை விட, தாம் இதற்காகத்தான் கைது செய்தோம் என்று சொல்லிவிட்டு எழுந்தமானமாக சென்றுவிட்டார்கள். முதல் கைது? செய்வதற்கு தாங்கள் யார்?; நான் யார்? என்று எல்லாம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருக்கின்றன. அடுத்து சமூகவிரோதிகளோடு தொடர்பு என்று சொல்லிச் செல்வதனால், நானும் சமூக விரோதியென்று அடைப்படையில் திரும்பச் சொல்லி விட்டுத்தான் செல்லுகின்றார்கள். ஒன்றை மட்டும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் நான் ஆறாவது நபர் என்று கூறிவிட்டு செல்லுகின்றார். ஆனால் நான் ஒரு சமூக விரோதியா? அல்லது நான் ஒரு போராளியாக இருந்தேனா? என்பதை மிகத் தெளிவாக தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அடுத்து பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்களுக்கும் இதற்காகவும் கைதுசெய்யவில்லை என்கிறார். அதாவது பல்கலைக்கழக பிரச்சனை சம்மந்தமாக கைது செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்கள். எனக்கு இயக்கம் சார்ந்த பிரச்சனை இருந்தது என்பது உண்மை. மறுபங்குக்கு பல்கலைக்கழகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றியும் பல்வேறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டது என்பதும் உண்மை. அதைப் பற்றிய விபரங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் உண்மை. இந்த வகையில் நான் ஒரு இயக்கத்திலிருந்தது, பல்கலைக்கழகப் போராட்டம் மற்றும் அங்கு நடந்த பல்வேறுபட்ட விடயங்களை இங்கு சுட்டிக்காட்டலாம் என்று தான் விரும்புகின்றேன்.
கடந்தகாலங்களில் இப்பல்கலைக் கழகத்தில், இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயத்தை நான் திரும்ப சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல்கலைக்கழகத்தின் போராட்டம் அல்லது பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சனை என்று பார்க்கின்ற போது பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்தகாலத்தில் அணுகியிருந்தார்கள் அல்லது பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். அதே போன்று நானும் இந்தப் பல்கலைக்கழக மாணவன் என்ற ரீதியில், மாணவருக்கு எதிரான நடிவடிக்கைகளை எதிர்த்து நான் போராடினேன். நான் இயக்கத்தில் இருக்கலாம். இதே பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் கூட, இங்கு பல்கலைக்கழக மாணவர்களுக்குள் வேலை செய்கின்றார்கள் போராடுகின்றார்கள். மாணவருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். நான் ஒரு இயக்கமாக வெளியில் இருந்தாலும் கூட, இங்கும் நான் எனது கருத்துககளை வைக்கிறேன். போராடுகின்ற உரிமை எனக்கு இருக்கின்றது. அவர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை எனக்கும் இருக்கின்றது என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
(பலத்த கரவொலி எழுகின்றது.)
கடந்தகாலத்தில் நாம் தமிழீழத்துக்காகப் போராடிய காலகட்டங்களில் இப் பல்கலைக்கழகம் ஆரம்பம் முதலே, வெகுஜனப் போராட்டம் என்பதை முதன் முதலில் பல்கலைக்கழகம் தான் வெளிப்படையாக முன்னெடுத்தது. தமிழீழத்தை ஆதரித்து பகிரங்கமாக போராடியது இப்பல்கலைக்கழகம் தான். அந்த வகையில் இப் பல்கலைக்கழகம் ஓர் பாரம்பரியத்தை முன்னெடுக்கின்ற வகையில், முனெடுக்கின்ற நிலையில், இப் பல்கலைக்கழகத்தில் நான் வந்த காலகட்டத்தில், பத்திரிகைச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஸ்ரீலங்கா அரசினால் மறுக்கப்பட்டிருந்து. இந்நிலையில் விடுதலைப் போராட்டத்துக்கு இப் பல்கலைக்கழகம் முழுமையான ஆதரவையும் முழுமையான பங்களிப்பையும் செலுத்திக் கொண்டிருந்தது. 84ம் ஆண்டுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓர் கோட்டையாகவே இப் பல்கலைக்கழகம் விளங்கியது. அதற்குப் பிற்பட்ட காலங்களில் இப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அணுகுமுறைகள், மாணவர் மீதான தாக்குதல்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக திரும்பிய போது, இங்கு நாம் அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய ஒரு சூழ்நிலை எழுந்தது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் ஸ்ரீலங்கா அரசினால் பறிக்கப்பட்டிருந்த பத்திரிகைச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் தமிழீழத்தில் புலிகளினால் பறிக்கப்பட்டது. அதாவது 85ம் ஆண்டு ரெலோ அழிப்புக்கு பிற்பாடு முற்றுமுழுதாக தமிழ் ஈழத்தில் இருந்த கருத்துச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் முற்றாகவே அழிக்கப்பட்டது. ஒரு மாணவன் அல்லது ஒரு சமூகத்தில் உள்ள மனிதன் எந்தவொரு கருத்தையும் பகிரங்கமாகக் கூற முடியாத ஒரு நிலைமை உருவானது. இதைத் தமிழீழத்துக்காகப் போராடுகின்றோம், தமிழீழத்தில் உள்ள மக்களுடைய சுதந்திரக்காக போராடுகின்றோம் என்று கூறிக்கொணடு, இந்த மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட நிலைமை நடந்தது. இன்று எனது கருத்துகள் முன்வைத்து இங்கு பேசுவதற்கான கருத்துச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் அங்கீகரிகப்பட்டிருக்கும் ஒரு நிலையில், அதாவது இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புதிய சூழலால் (இந்திய ஆக்கிரமிப்பாளனின் வருகை) ஒரு விதத்தில் ஓருவிதமான கருத்துச் சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது என்ற நிலையில், நான் இங்கு பேசக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தப் பத்திரிகைச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது அடுத்த பிரச்சனைதான்.
அடுத்து, கடந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, ஆசிரியர் சங்கம் வலிந்து பல்வேறு விதங்களில் அதில் தலையிட்டது அல்லது பங்கு பற்றியது. ஆசிரியர் சங்கத்தை பொறுத்த மட்டில் கடந்தகாலத்தில் பல்கலைக்கழப் போராட்டங்கள் ஒரு பக்கத்திற்கு எதிராகப் போகின்ற போது, அந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கும் முறையில் தான் தொடர்ச்சியாக நடந்து வந்தார்கள். கடந்த காலத்தில் விஜிதரன் போராட்டம் எழுந்த போதும், விஜிதரன் போராட்டத்தின் இரண்டாம் மூன்றாம் நாளே அந்தக் கமிட்டியில் இருந்த நபர்களை, தனிப்பட்ட ரீதியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூப்பிட்டு வைத்து உளவியல் ரீதியாகவும், அல்லது தனிப்பட்ட ரீதியில் அவர்களுக்கு ஒரு நிர்ப்பந்தம் கொடுத்து போராட்டத்தை மழுங்கடிக்கும் முறையில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் வளர்ச்சியில் அமைப்புக் குழுவை சேர்ந்தவர்களுடன் சமரசம் என்றும் கூறிக்கொண்டும், அமைப்புக் குழுவைச் சேர்ந்த முழுப்பேரோடும் நாம் கதைக்க வேண்டும் என்று கூறி நிர்ப்பந்தித்தனர். அதாவது இன்று தமிழ் ஈழவிடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசாங்கம் நிர்ப்பந்தித்துத் தான் தீர்வை ஏற்படுத்தியதாக கூறிக்கொள்கிறார்கள். அதைவிட மோசமான ஒரு நிர்ப்பந்தத்தை இந்தப் பல்கலைக்கழக ஆசிரியர் குழு, அமைப்புக்குழு மேல் செலுத்தியது. காரணம் அமைப்புக் குழுவின் முழுப்பேரையும் கூட்டத்திற்கு கூப்பிட்டு வைத்து காலை தொடக்கம் மாலை வரை கதைப்பதன் ஊடாக, பல்கலைக்கழகத்தின் மற்றைய போராட்டங்களை அதாவது பத்திரிகைக்குக் கூட அறிக்கை எழுத முடியாத நிலைமையை ஏற்படுத்தி போராட்டத்தைச் திசை திருப்பும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபட்டார்கள். அதாவது ஒருவன் கொல்லப்படுகின்ற நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிற நிலையில் அல்லது தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலைமையில் ஆசிரியர் சங்கம், தாங்கள் நடு நிலைமைவாதிகள் என்று கூறிக்கொண்டனர். அதற்கெதிராகப் போராடுகின்ற போது அல்லது துடிக்கின்ற போது அவனுடைய கால்களையும் கைகளையும் அமிழ்த்தி அமத்திப் பிடித்துக் கொண்டு, அவர்களை கொல்வதற்காகவே உதவி செய்தார்கள்.
இதன் தொடர்ச்சியாகவே எனது பிரச்சனை எழுந்த போது இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு முற்றும் முழுதாகவே கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. அதாவது எனது பிரச்சனை சம்மந்தமாக இங்கே ஒரு கூட்டம் நடந்ததாகவும் ஓரிருவர் மட்டும் பேசியதாகவும் கேள்விப்பட்டேன். அதாவது இங்கு போராடுவதற்கு இதைக் கேட்பதற்கு இன்று இருக்கின்ற துணிவு, அன்று இருக்காமல் போனது என்றால், அன்று கருத்துச் சுதந்திரமும் பத்திரிகைச் சுதந்திரமும் மறுக்கப்பட்டுத்தான் இருந்தது. இதனுடைய தொடர்ச்சியாகத் தான் இன்று ஆசிரியர் சங்கத்துக்கு நான் தப்பிய அடுத்த நாளே ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன்.
அந்தக் கடிதத்தில் ஒரு விடையத்தை குறிப்பிட்டிருந்தேன். அதாவது மாத்தையா அவர்கள் என்னிடம் ஒருமுறை பேசுகின்றபோது என்னை பகிரங்கமாக உரிமை கோரவில்லை என்பதை அறிந்த போது அவர்களுக்கு எதிராக அங்கு வாக்கு வாதப்பட்டேன். இந் நிலையில் அவர் கூறினார்@ உன்னுடைய அம்மாவுக்கும் தம்பிக்கும், அதாவது நான்காவது முறை அம்மாவும் தம்பியும் முகாமுக்கு வந்த போது@ நான் (மாத்தையா) சந்தித்து உம்மை நாங்கள் தான் கடத்தினனாங்கள். ஆனால் உரிமை கோரவில்லை. இதை வெளியில் சொல்லக்கூடாது நாங்கள் தான் கடத்தினாங்கள் என்றும், நாங்கள் விடுவமென்று சொன்னதாக கூறினார். ஆனால் அது பொய் என்பதை நான் வீட்டாருக்கு ஊடாக அறிந்து கொண்டேன். இரண்டாவது பல்கலைக்கழக மாணவர்கள் அதாவது அமைப்புக் குழுவல்ல, அமைப்புக் குழுவிலிருந்த ஒரு சிலரும் வேறு மாணவர்களும் பிரதான முகாமுக்கு வந்ததாகவும், தான் அவர்களிடம் தாங்கள் பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் சொன்னார். அதுவும் பொய். மூன்றாவதாக ஆசிரியர் சங்கத்தைத் தாங்கள் சந்தித்ததாகவும் கூறினார். அப்போது தாங்கள் தான் கடத்தியதாகவும் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த மூவரை விரும்பினால் பார்க்கலாம் என்று கூறியபோதும், ஆசிரியர் சங்கம் கூறியதாம் நீங்கள் சொன்னால் சரி, நாங்கள் பார்க்கத் தேவை இல்லையென்று கூறியதாம். குறிப்பாக (டீன்) தலைவர் பாலகிருஸ்ணனுடைய பெயரைக் கூட குறிப்பிட்டு, அவரிடம் தான் கதைத்ததாகவும் கூறிப்பிட்டார்.
இன்று நான் ஒரு இயக்கத்தில் இருந்தவன் அல்லது இயக்கத்தோடு இருந்தவன் என்று கூறுகின்ற போது மக்கள் மத்தியில் ஆன முரண்பாடுகள் பற்றி பேசுவது அவசியம்;. இதை பற்றி அவர்களுடனும் கதைத்தேன். அதாவது இதை அவர்களே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை இருந்தது. அதாவது ஒரு விதத்தில் நான் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கத்தில் அவர்களோடு அரசியல் கதைக்கக்கூடிய நிலைமையும் அங்கிருந்தது. அப்போது நாம் மக்கள் மத்தியில் ஆன முரண்பாடுகள் பற்றி, நான் அவர்களுடன் கதைத்தேன். கதைக்கின்ற போது ஒரு பிரச்சனையைப் பற்றி ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு விதமாகத் தான் சிந்திக்கின்றார்கள். ஆகவே ஒவ்வொரு விதமாகச் சிந்திக்கின்ற இந்த நிலைமையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பிரதான முரண்பாடாக இந்தச் சமூகத்தில் எழுகின்ற போது, அந்தப் பிரச்சனையைப் பற்றி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாகச் சிந்திப்பது தவிர்க்க முடியாதது. அந்த அடிப்படையில் எழுந்தது தான் இந்த விடுதலை இயக்கங்கள். அப்படித் தோன்றிய பல்வேறு இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில் இன்று, அதாவது இந்நாட்டில் தமிழீழ சுதந்திர நாட்டையும், சிவில் நிர்வாகத்தையும் தாங்கள் கைப்பற்றி விட்டார்கள் என்ற ஒரு நிலையை புலிகள் தாங்களாகவே எண்ணிக் கொண்டார்கள். இந்நாட்டின் ஒரு இராணுவ முகாமைக் கூட, அதாவது இன்று இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட இராணுவ முகாமில் எந்த ஒரு இராணுவ முகாமை தகர்க்காத நிலையில், தகர்க்க முடியாத நிலையில், சிறு தாக்குதல்களை மட்டும் நடத்திய நிலையில், இன்று விடுதலை இயக்கங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்ற நிலையில், ஒரு மனிதன் தன்னுடைய கருத்துக்காக போராடுவது தவிர்க்க முடியாதது.
பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இன்றைய சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் அடக்கு முறைகள்; அதாவது பட்டினி மற்றும் சாதிப் போராட்டங்கள், சீதனப் பிரச்சனை இப்படியான பல்வேறுபட்ட பிரச்சனைக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாகவே போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். நானும் அந்த வகையில் போராடியவன் தான். அதற்காகத் தான் போராடியவன். ஆனால் எனக்கும் உங்களுக்கும் இருந்த ஒரே ஒரு வேறுபாடு நான் ஸ்தாபனப்பட்டிருந்தவன். நீங்கள் தனிநபர்களாக உங்களுக்குள்ளேயே நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள். அந்த வகையில் நான் ஸ்தாபனப்பட்டிருந்த நிலைமையில், மக்கள் மத்தியிலான முரண்பாட்டுக்கு எதிராக இந்தப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியானது நியாயமானது என்ற அடிப்படையில் போராடும் உரிமை எனக்கு உண்டு.
இன்று அவர்கள் இந்த மேடையில் குறிப்பிட்டார்கள் தாம் கடத்தவில்லை கைது செய்தது என்று. ஒருவனை கைது செய்தால், ஸ்ரீலங்கா அரசாங்கத்திலேயே உடனடியாக இராணுவமோ பொலிஸ்சோ இருபத்தி நாலு மணித்தியாலத்தில் அறிவிக்க வேண்டுமென்று சட்டம் இருக்கின்றது. அது எவ்வளவுக்கு நடைமுறைப் படுத்தினார்கள் என்பது வேறு. ஆனால் கைது செய்தால் அது தெரியக் கூடியதாக இருந்தது. ஆனால் என்னுடைய பிரச்சனை வெளியே தெரிய முடியாத அளவுக்கு எண்பது நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னை கைது செய்திருந்தால் அல்லது கடத்தியிருந்தால் தாம் உயிரோடு விடுவதாக சொல்லியிருந்தால், இந்த 80 நாட்களிற்குள்ளும் ஏன் விடாமல் விட்டார்கள் என்பது முதலாவது கேள்வி.
அதாவது நான் கைது? செய்யப்பட்டதும் இயக்கம் சார்ந்ததாக கூறிக்கொண்டும், விஜிதரன் சார்ந்த பிரச்சனைகளை கேட்காமல் விட்டவர்கள் என்று இல்லை. விஜிதரன் சம்மந்தமாக பலவேறுபட்ட பிரச்சனைகளை அவர்கள் கேட்டார்கள். நான் திட்டவட்டமாக கூறியிருந்தேன், அதாவது விஜிதரனை நீங்கள் தான் கடத்தினீர்கள் என்று. இதுவரை பல்கலைக்கழக மாணவர்களுடைய போராட்டத்தில், விஜிதரனை தமிழீழ விடுதலைப் புலிகள் தான் கடத்தியது என்பதினை நேரடியாக எந்தக்கட்டத்திலும் சொல்லவில்லை. ஆனால் திட்டவட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான் கடத்தியது என்று, நான் திட்டவட்டமாகச் சொன்னேன். ஏனென்று கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன். கேசவன் முதலாம் திகதி கடத்தப்பட்ட நிலையில் அவர் தாக்கப்பட்டு வீதியில் போட்ட பின்பு அவருக்காக இந்த பல்கலைக்கழகம் போராடவில்லை. கேசவன் ஏன் தாக்கப்பட்டார் எனக் கேட்டபோது, அதாவது அரசியல் காரணமென்று கூறினர். அவர் ரெசோ உறுப்பினர் (பிளட்டின் மாணவர் அமைப்பு) என்று கூறித் தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் ரெசோவுக்கும் அவருக்கும் எவ்வளவு தூரம் தொடர்பு இருந்தது என்பது கேள்விக்குறியான விடயம். அப்போது பல்கலைக்கழகம் அதற்காக போராடாத நிலையில், அடுத்த கட்டத்தில் விஜிதரன் சார்ந்த பிரச்சனையில் விஜிதரனைக் கடத்துகின்றார்கள். ஏன் விஜிதரனுக்கும் வேறு யாருக்கும் ஏதாவது பிரச்சனை இருந்ததா! அதாவது தனிப்பட்ட ரீதியில் விஜிதரனுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இங்கு இருந்ததில்லை. விஜிதரனின் போராட்டம் அதாவது பல்கலைக்கழக மாணவர்கள் (ராக்கிங்) பகிடிவதை பிரச்சனையாகத் தாக்கப்பட்டபோது, அதை எதிர்த்து ஒரு கிழமையாக பகிஸ்கரிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதற்கான ஒரு தலைமை இல்லாத நிலையில், விஜிதரன் ஒரு போராட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்று முன்னின்றவர்களில் ஒருவர். முன்னின்ற அவர், பல்கலைக்கழக (கன்டினில்) உணவு விடுதியில் ஒரு கூட்டம் வைத்து, அதில்தான் ஒரு போராட்டக் குழுவை அமைக்க வேண்டுமென்ற முடிவு எடுத்ததில் விஜிதரன் முன்னணியில் நின்றார். அப்படிப்பட்ட நிலையில் விஜிதரனின் நடவடிக்கை, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்தது. அந்தப் போராட்டம் புலிகளின் நடவடிக்கைக்கு எதிராக அமைந்திருந்தபடியால், திட்டவட்டமாக தமிழீழ விடுதலை புலிகளே கடத்தினர் என்பதை அவர்களுக்கு தெரிவித்திருந்தேன். அதே நேரத்தில் ஒவ்வொரு பிரச்சனைகளும் வருகின்றபோது, அதாவது விஜிதரன் போராட்டம் நடந்து கொண்டிருந்போது வீதிமறிப்புப் போராட்டம் தாக்கப்பட்டது, பாதயாத்திரை தாக்கப்பட்டது, அனைத்துமே தமிழீழ விடுதலை புலிகள் தாங்களாகவே வந்து முட்டிமோதிக் கொண்டிருந்தார்கள். குற்றம் உள்ளவர்கள் நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும். இதேயிடத்தில் முரளி, (புலிகளின் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உறுப்பினர். அத்துடன் புலிகளின் மாணவ அமைப்பு பொறுப்பாளர்.) பல்கலைக்கழக உண்ணாவிரதம் தொடக்கமன்று இங்கு நடந்த மேடையில் ஒரு கட்டத்தில், விஜிதரன் கடத்தப்பட்டாரா! காணவில்லையா! என்று கூறி, எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தினார். இங்கு பிரச்சனை விஜிதரன் இல்லை என்பதாக தான் இருந்தது. ஆனால் கடத்தப்பட்டாரா காணவில்லையா எனக் கேட்டு கொண்டு, பிரச்சனையில் அதாவது ஒரு பகுதியினர் கடத்தப்பட்டதாகவும் இன்னொரு பகுதியினர் காணவில்லை என்று திசைதிருப்பும் நோக்கில் தான், புலிகள் செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் அவர் குறிப்பிட்டார் நிச்சயமாக விஜிதரன் இங்கு வருவார் என்றார். ஆனால் இதுவரைக்கும் விஜிதரன் வரவேயில்லை. ஆனால் இதே நேரத்தில் ஆசிரியர் சங்கம் போராட்டத்தை நிறுத்தும்படி கோரியிருந்த போது, தாம் தொடர்ந்து தேடுவதவதற்கு உதவி செய்வதாகவும், விஜிதரனை கொண்டு வருவதாகவும் ஆசிரியர் சங்கம் அடிக்கடி கூறிகொண்டுதான் இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் சங்கம் அதைச் செய்யவில்லை. போராட்டம் எழுகின்ற போது போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில், இந்த ஆசிரியர் சங்கம் (இந்த ஆசிரியர் சங்கம் சார்பாக சிவத்தம்பி தலைமை தாங்கி, மாணவர்களின் போராட்டத்தை புலிகளின் பினாமியாக செயல்பட்டு சிதைத்தார்.) முக்கியமாக புலிகளுக்கு பங்களித்திருக்கின்றார்கள்.
அடுத்து சமூக விரோதிகள் பற்றிய அவர்களது கூற்றுக்களையும் பார்க்கத் தான் விரும்புகிறேன். அதாவது சமூக விரோதிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறுகின்றார்கள். கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த 74ம், 75-ம் ஆண்டு காலகட்டங்களில் அவர்கள் எங்கிருந்து ஆயுதங்களைப் பெற்றார்கள். கடந்த காலத்தில் அவர்களும் (ஆயுதங்களை) விலைக்கு வாங்குவதற்காக, இங்கு (தமிழ் மண்ணில்) பல்வேறு இடங்களுக்குத் திரிந்தார்கள். அவர்களும் சமூக விரோதியிடம் ஆயுதங்களை வாங்கியிருந்தார்கள். இந்தப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில், புலிகள் இந்த மாதிரி பல்வேறுபட்ட ஆயுதங்களை வாங்கி இருந்தார்கள். இப்போது வாங்குவது வேறு பிரச்சனை. அது எங்கிருந்து (சர்வதேச சமூக விரோதிகளிடம் வாங்குகிறார்கள்) வாங்குகின்றார்கள் என்பது வேறு பிரச்சனை. ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் கூட பல்வேறு இடங்களில் ஆயுதங்களை வாங்குவதற்குத் திரிந்தார்கள். சமூகவிரோதி என்று குறிப்பிடுகிறீர்கள். நான் சமூகவிரோதியா? இல்லையா என்பதை அவர்கள் குறிப்பிடத் தவறி இருக்கின்றார்கள். அடுத்த கட்டத்தில் எனது கைது தொடர்பாய் முதல் இருந்த ஒரு நபர், எனக்கு முதல் அதாவது ஐந்தாவது நபர் என்று சொல்லப்படுபவர், பிளாட் இயக்கத்தைச் சார்ந்தவர். பிளாட் (PLOT) அமைப்பைச் சேர்ந்தவர் எனகின்ற போது, அவர் பிளட் மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினர். சுண்ணாகத்தை சேர்ந்த வசந்தன் என்பவராவார். எம் மண்ணில் கடந்தகாலத்தில் இயக்கங்களுடைய அராஜகப் போக்குகள் வளர்ந்து கொண்டிருந்த போது, இயக்கங்களின் அராஜகப் போக்குகளுக்கு எதிராக பிளாட் குரல் கொடுத்ததோ இல்லையோ, ரெசோ (TESO) (பிளாட் மாணவர் அமைப்பு) குரல் கொடுத்துக் கொண்டு தான் இருந்தது. அதே நேரம் பிளாட்டுக்குள் நடந்த பிரச்சனைகளைக் கூட, அதாவது உள் நடந்த அராஜகப் போக்குகளுக்கு எதிராகக் கூட ரெசோ குரல் கொடுத்து கொண்டு தான் இருந்தது. அந்த வகையில் அந்த நபர் சமூக விரோதியென்று கருதப் படுவதென்றால், எப்படி? கடந்த காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன. அனைவரும் தமிழீழ விடுதலை புலிகள் தவிர்ந்த மற்றைய எல்லோரும், அவர்களுடைய (புலிகளின்) கண்ணுக்கு சமூக விரோதிகளாகவே படுகின்றார்கள். அதற்காக சமூகவிரோதி என்றால் என்ன என்பதை நாம் அவர்களிடம் சொல்ல வேண்டிய தேவை ஒன்று இருக்கின்றது.
அதாவது கடந்தகாலத்தில் சமூகவிரோதி என்று மின்கம்பங்களில் கட்டப்பட்டவர்கள் பொதுவாக தன்னுடைய சாப்பாட்டுக்காகவோ, பொருளாதாரப் பிரச்சனைக்காகவோ வாழைக் குலை களவெடுத்தவனையும், மரவள்ளிக் கட்டை இழுத்தவனையும் தான் சுட்டுக் கொன்றார்கள். சமூகத்தின் உண்மையான சமூகவிரோதி என்று கருதப்படுகின்றவர்கள் நீலப்படம் எடுப்பவர்கள், விநியோகிப்பவர்கள், ஊழல்கள் மற்றும் லஞ்சம் வாங்கிக் கொண்டு இருப்பவர்கள் தான் சமூகவிரோதிகள். இது வரை காலமும் எந்த இயக்கமும் அப்படியானவர்களுக்கு நடவடிக்கை எடுத்ததில்லை. இன்று பல்கலைக்கழகத்தில் எத்தனையோ ஊழல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பணக் கையாடல் நடந்து கொண்டிருக்கின்றது. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, இவர்கள் தயாராக இல்லை. ஏனெனின் அவர்களுடைய தயவில் தான், இந்த இயக்கங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ந்து கொண்டு இருந்த போதிலும், இயக்க அழிப்பு என்று தொடங்கினார்கள். நான் ஒரு கட்டத்தில் அவர்களுடன் கதைக்கின்ற போது ரெலோ, ஈ-பி-ஆர்-எல்-எவ் போன்ற இயக்கங்களை ஏன் அழித்தொழிக்கின்றீர்கள் என்று கேட்டேன். அத்துடன் நான் திடடவட்டமாகக் கூறி இருந்தேன்; நீங்கள் இந்திய சார்பு இயக்கங்கள் என்பதால் தான் அழித்தீர்கள் என்று. ஆரம்பத்தில் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது ஏன் நீங்கள் ரெலோவுக்கு எதிராக கொள்ளை, களவு எடுத்தது என்று எல்லாம் மக்களுக்கு சொல்லி சுட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அந்த நேரத்தில் அதைச் சொல்ல முடியாது, அதனால் அப்படிச் சொன்னோம் என்றார்கள். அதாவது இயக்கங்கள் அழிக்கப்படுவதற்கு காரணம் வேறு ஏதோ இருக்க, இதைத்தான் சொன்னார்கள். இதே நேரத்தில் மற்றைய இயக்கங்களையும் அழித்துக் கொண்டு இருந்தார்கள். அதாவது போராடுகின்ற சக்திகளை அதாவது போராட்டத்தில் தாம் இப்பிரதேசத்தை குறிப்பாக யாழ் குடா நாட்டை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற தவறான மதிப்பீடு அல்லது தங்களுடைய அதிகாரங்களை எப்படி மக்கள் மீது பயன்படுத்துவது என்பதை அவர்களுக்கு தெரிந்து கொண்டு இருக்கவில்லை.
என்னை கடத்தி அங்கு கொண்டு சென்ற போது எப்படியான முறையில் அவர்கள் கையாண்டார்கள் என்று கேட்க விருபுகிறேன். முதலில் அவர்கள் இந்த அமைப்புக் குழுவுக்கு பல்வேறுபட்ட காரணங்களைக் கூறினார்கள். எப்போதும் விசாரணை என்பது இரண்டு பக்கங்களில் நடைபெறும். தாக்குதல் அடி உதை என்பது ஒரு பக்கம். இரண்டாவது பக்கம் நல்ல முறையில் ரீட் (உபசரிப்பதன் மூலம்) பண்ணுவதற்கு ஊடாக, அதாவது கதைப்பது ரீங்சைக் (குளிர்பானத்தைக்) கொண்டு வந்து தருவதன் ஊடாக இரண்டாவது முறை கையாளப்படுகின்றது. இந்த இரண்டு வழிமுறைகளும் அங்கு (புலிகளின் வதை முகாமில்) கையாளப்பட்டது.
என்னைப் பிடித்து கொண்டு சென்ற போது, கண்களை கட்டிய நிலையில் கடத்தினார்கள். அதாவது நான் சைக்கிளில் வரும் போது திடீரென்று ஒருவர் வந்து என்னுடைய சைக்கிளில் ஏறினார். தானும் தெல்லிப்பளைச் சந்திக்கு வரப்போகிறேன் என்றார். நான் சரியென்று ஏற்றிக் கொன்டு வருகின்ற போது திடீர் என்று ஏ-40 கார் ஒன்று வந்து இடையில் குறுக்கறுத்து நின்றது. திடீர் என்று என்னுடைய வாயைப் பொத்தி காருக்குள் தூக்கிப் போட்டு கொண்டு போனார்கள். இந்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நான் சென்று கொண்டு இருந்தேன். அங்கு (வதை முகாமுக்கு) கொண்டு போன போது எனது உடம்பிலிருந்து அனைத்துப் பொருட்கள் மற்றும் உடுப்புக்கள் உடனடியாக முழுக்கவே உருவப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட நிலையில், பின்புறமாக கைகளை சணலால் (கயிறு) கட்டினர். பின்பும் முதல் கேள்வி கேட்கப்பட்டது. தற்கொலை செய்வதைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய் என்று. அடுத்து ஒருவரின் பெயரைக் கேட்ட பின்பும் கூட்டிக்கொண்டு போய், ஒரு அறையில் என்னுடைய கைகளை பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தோள்கள் இரண்டிலும் கயிறு போட்டு ஜன்னல் கம்பியில் இழுத்து கட்டிவிட்டிருந்தார்கள். கட்டிய பின்பும் என் கண் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. தொடர்ந்தும் என் கண் கட்டப்பட்ட நிலைiயிலேயே ஒரு றபர் போன்ற ஒரு பொருளினால் தாக்கப்பட்டுக் கொண்டுடிருந்தேன். பல்வேறு விடயங்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலை தொடர்ச்சியாக மூன்று நான்கு நாட்கள் நீடித்தன. அந்த நாட்களில் சாப்பாடு தண்ணீர் தருவதில்லை. ஆனால் ஒரே ஒரு விடயம் செய்தார்கள். ஒரு மனிதன் 36 மணித்தியாலம் தண்ணீர் குடிக்கவில்லை என்றால், அதாவது சிறுநீரகம் செயல் இழந்துவிடும் என்ற அடிப்படையில் ஒரு வாய் தண்ணீர் 36 மணித்தியாலத்துக்கு ஒரு தரம் கொண்டு வந்து தருவார்கள். இது கூட எனக்குத் தெரியாது. மாத்தையா அவர்கள் தான் பின்பு கூறினார்.
(கரவொலி எழுகின்றது.)
அது கூறவேண்டிய சந்தர்ப்பம் ஏன் வந்தது? விஜிதரனின் போராட்டம், ஊர்வலம் சம்மந்தமான ஒரு பிரச்சனை வந்தது. அப்போது ஏன் போட்டி ஊர்வலத்தை நீங்கள் ஒழுங்கு செய்தீர்கள் என்று கேட்டேன். நாங்கள் கடிதங்கள் தந்த போதெல்லாம் என்று கேட்டேன். 36 மணித்தியாலம் (பிரபாகரன்) தண்ணீர் குடிக்காவிட்டால் (இந்திய அரசுக்கு எதிராக பிரபாகரனின் உண்ணாவிரதத்தை ஒட்டிய சம்பவம்) சிறுநீர் செயல் இழந்துபோகும். அதனால் மக்கள் மத்தியிலான ஒர் எழுச்சியைக் காட்டி இந்திய அரசாங்கத்தை நிர்பந்திக்கத் தான், அவசரமாக அப்போது ஊர்வலத்தை ஒழுங்கு பண்ணியதாக கூறினார். ஆனால் அதற்கு முன்னமே பிரபாகரன் உண்ணாவிரதத்தை கைவிடப்பட்டது, அனைவருக்கும் தெரிந்த விடையமே.
இதன் பின் கண் கட்டப்படாத நிலையில் நான் இருந்த பொழுது, இரண்டாம் நாள் என் கண் கட்டப்பட்ட நிலையில் மாத்தையா அவர்கள் வந்தார். என்னிடம் கேட்டார்@ எனக்கு யார் என்று தெரியாத நிலையில்@ அவர் நீங்கள் எங்களைப் பற்றி நினைத்திருப்பீர்கள் கொள்ளைக்காறர் கொலைக்காரர் என்று. ஆனால் எங்களுடைய ஒரு பக்கத்தில் மனிதாபிமானமும் ஈரநெஞ்சும் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே நீர் உம்முடைய விசயம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர் என்றால் பிரச்சனையில்லை என்று சொல்லிப் போட்டு, எனது முதுகை தடவிவிட்டு சொன்னார் உமது அழகான உடம்பை அநியாயம் ஆக்காதீர் என்று கூறிவிட்டு சென்றார். இதன் பின்பு நான்காம் நாள் நான் கட்டப்பட்ட நிலையில் இருந்த பொழுது, என்னை மீண்டும் ஒருமுறை சந்தித்து உண்;மையைக் கூறும்படி கேட்டார். நான் ஒன்றும் கூறாத நிலையில் சொன்னார், அடுத்த முகாம் மாத்தப்போறோம் எனறார். இது நடந்த அந்த பிரதேசம் என்பது அதிகமாக யாழப்பாணத்து முஸ்லிம் பகுதியாக இருக்க வேண்டும். முஸ்லிம் பாட்டு (பிரித்தொதுவது) அடிக்கடி கேட்கும்.
பின் ஒரு நாள் இன்று போய் சாமான் (ஆயுதம்) எடுப்போம் என்று. நான் பிரச்சனையில்லை போய் எடுக்கலாம் என்று சொன்னேன். அப்போ அவர்கள் சொன்னார்கள் அங்கு வந்து புலிகள் தான் கடத்தியது என்று கத்தினியோ, அங்கிருக்கும் நாலு பெண் பிள்ளைகளுக்கும் வெடி நடக்கும்; என்றார். "நில் நாம் வாறம் வெளிக்கிட்டுக் கொண்டு" என்று சென்று விட்டார்கள். திரும்பி வந்த போது நான் திட்டவட்டமாக, நான் சொன்னேன் சாமான் (துப்பாக்கியை) காட்ட முடியாது என்று. நான் மண்ணுக்குள் போகப் போறேன் உங்களுக்கு ஏன் சாமான் காட்ட வேண்டும் என்று சொன்ன நிலையில், தலையில் கிட்டத்தட்ட இருநூறுக்கு மேற்பட்ட அடிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தன. சுவருடன் தலையை மோதிய நிலையில் கொட்டான் தடிகளினால் முதுகெல்லாம் அடி நடந்து கொண்டு இருந்தது. ஆனால் இதில் ஒரு விசயம் என்னவென்றால் முன்னமே அதாவது நான் (ஆயுதம் பற்றி) சொன்ன அன்று, மாத்தையா அவர்கள் என்னிடம் எங்கு சாமான் (துப்பாக்கி) இருக்கு என்று படத்தை கீறி எடுத்து இருந்தவர்கள். இந்நிலையில் அப்போதே நான் சரி என்று சொல்லி நான் (ஆயுதத்தை) காட்டுவதற்;காக வந்தேன். வருகின்ற அன்று@ உங்களுக்கு தெரியுமோ தெரியாது ஒவ்வொரு சந்தியிலும் அவர்களது சென்றி நிற்பது வழக்கம். ஒன்பது அல்லது பத்து மணிக்கு பிற்பாடு அவர்கள் சென்றி நிற்பது வழக்கம். அன்று நாம் வந்து கொண்டு இருந்தபோது ஒவ்வொரு சென்றியிலும் தாம் புலிகள் என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். வந்த போது மல்லாகத்துக்கு அங்காலை எந்தச் சென்றியும் பண்டத்தரிப்பு வரை இருக்கவில்லை. அதாவது காங்கேசன்துறை றோட்டால் (வீதியால்) கொண்டு செல்லப்பட்டேன். கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்கு இரண்டு சாறம் கட்டப்பட்ட நிலையில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்கின்ற பொழுது, மல்லாகச் சந்திக்கு அங்காலை எந்த ஒரு இடத்திலும் சென்றி என்பது நிறுத்தப்படவில்லை. அதே போல் திரும்ப பண்டத்தரிப்பு சந்தி வரையும் எந்த சென்றியும் இருக்கவில்லை
ஆனால் இந்த நிலையில் நான் அங்கு கொண்டு சென்று திரும்ப விடப்பட்டேன். இதற்கு பிற்பாடு லிபேறேசன் ஒப்பேறேசன்; தொடங்கியதை அடுத்து, என் மீதான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் நான் 80 நாட்கள் அங்கு இருந்தேன். இந்த 80 நாட்களிலும் அடி உதையை விட மிக மோசமான சித்திரவதை என்ன என்பது, தனிமையான அறையில் பூட்டி வைப்பது. அதாவது முற்று முழுதாக கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், நான்கு சுவர்களையும் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலைமை அங்கு இருந்தது. இடையில் 5, 6 நாட்கள் பேப்பர் தந்தார்கள். அதைவிட எனக்கு எந்தப் பத்திரிகையோ வேறு எதுவும் தரப்படவில்லை. காலமை, மத்தியானம், இரவு சாப்பாடு கொண்டு வந்து தருவார்கள். அந்த நேரம் தண்ணீர் எடுத்தால் சரி, மலசலம் போறதென்றாலும் சரி, தண்ணீர் கேட்டாலும் தரமாட்டார்கள்.
கதவை எப்படித் தான் தட்டினாலும், அவர்கள் கதவை திறந்து தர மாட்டார்கள். எனக்கு எத்தனையோ தரம் வயித்தாலை அடித்துக் கொண்டு இருந்தது. உடல் நிலை பாதிப்பினால் அறைக்குள் வயித்தாலை அடித்த நிலையில் நான் இருந்தேன். கொண்டு வந்து கக்கூஸ் (நெருப்புத் தண்ணீரை) மருந்தை ஊற்றி விட்டுச் செல்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்திருந்த போது தான், மாத்தையா அவர்கள் நீண்ட காலத்துக்கு பின்பு வந்தார். அதாவது ஒப்பேறேசன் லிபேறேசன் முடிந்த பின்பு 14ம் திகதி மாத்தையா அவர்கள் வந்தார். வந்து என்னிடம் என்ன என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்றேன். அடுத்து கேட்டார் சிலபஸ் (கல்விக்கான குறிப்புகள்) எடுத்து தரவா? என்று கேட்டார். அடுத்து கேட்டார் புத்தகம் தரவா என்று கேட்டார். நான் ஒன்றுமே பேசவில்லை அடுத்து நான் கேட்டேன். நான் வீட்டை போகப் போறன் என்று கேட்டேன். அதற்குச் சொன்னார் வெளியில் கொஞ்சப் பேர் நடமாடினம். அவர்களைப் பிடித்த பின் போகலாம் என்றார். நான் உடனடியாக அதிலே அடுத்ததாக கேட்டேன். இந்த சயினைற்றை தந்து விட்டு போங்கள் அல்லது இந்த பிஸ்ரலால் (துப்பாக்கியால்) சுட்டுவிட்டு போங்கள் என்று சொன்னேன். கொஞ்சநேரம் பார்த்து விட்டு சொன்னார் உம்முடைய பிரச்சனையை கெதியா முடித்து விடுகிறேன் என்றார்.
இந்த நேரத்தில் தான் திட்டவட்டமாக உடனடியாக தப்பவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் தப்பியதற்கான முயற்சிகள் என்ன என்பதை இந்த இடத்தில் கூற விரும்பவில்லை. இந்த இடத்தில் அந்தக் காம்பைப் (வதை முகாமைப்) பொறுத்த மட்டில், சில விசயங்களை நான் சுட்டிக் காட்டத் தான் விரும்புகிறேன்
ஒரு நாள் ஒரு வயது போன ஒருவரை இரவு ஒன்பது அல்லது பத்து மணி போல் கொண்டு வந்தார்கள். யார் என்று எனக்குத் தெரியாது. கொண்டு வந்து தாக்கப்பட்டார். நாங்கள் என்னடா ஆமிக்காறரா, நாங்கள் போராளிகள், சொல்லடா என்டு சொல்லித் தாக்கினார்கள். மீண்டும் மீண்டும் நாங்கள் ஆமிக்காறர, நாங்கள் போராளிகள் என்று சொல்லடா என்று சொல்லித் தாக்கினார்கள். ஒன்றை மட்டும் அவர்களுக்கு திட்டவட்டமாக சொல்ல விரும்புகிறேன். போராளிகள் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும். உங்களுடைய நடவடிக்கைகள் தான் போராளிகளா அல்லது இராணுவமா என்று தீர்மானிக்க முடியும்.
பலத்த கரவொலி
அதை விடுத்து அடித்து தாக்குவதன் ஊடாக, நாங்கள் போராளிகள் என்று சொல்ல வைப்பதன் ஊடாக அவர்கள் போராளியாகி விடமாட்டார்கள். அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை வேண்டும் என்றால், தற்காலிகமாக அடக்கலாமே ஒழிய, அவர்களுடைய முற்று முழுதாக நீண்ட காலத்தில் அவர்களுடைய சுதந்திரத்தை அடக்க முடியாது. இதை பார்த்து கொண்டு நின்ற ஒருவன்@ நான் ஒரு நாள் மலசலகூடத்துக்கு போய் வரும் போது குசினிக்குள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு நபரிடம், அங்கிருந்த கீழ்மட்ட புலி ஊழியன்; நாங்கள் என்னடா ஆமிக்காறரா நாங்கள் போராளிகள் சொல்லடா என்று சொல்ல வைக்கப்படுகின்றது.
இதை விட நான் மலசல கூடத்துக்கு போகும் போது குளியல் அறையில் ஒரு சில இரத்தங்கள் தோய்ந்த சறங்களைக் கண்;டேன். அதுகளைய் பார்க்கின்ற போது எம்முடைய தனிமை என்பது, மிக வேகமாகவே அதாவது ஒரு விசர் பிடிக்காத நிலையைத் தான், அங்கு நாம் சந்திக்க முடியும். அதாவது எம்மை தொடர்ச்சியாக இந்த நிலையில் இப்படி வைக்கின்ற போது, மனரீதியான பாதிப்பைத் தான் ஏற்படுத்த முடியும். பொதுவாக மக்கள் கருதிக் கொள்வது சித்திரவதை என்பது தாக்குவதும் அடிப்பதும் தான் என்று. தாக்குவதும் அடிப்பதும் மட்டும் சித்திரவதை அல்ல. அதுவும் ஒரு வழி தான். ஆனால் சித்திரவதை என்பது மிக பெரும் தனிமையும், அவனுடைய மனநிலையை பாதிக்க வைப்பதும் தான்.
இன்றைய நிலையில் இன்று நாட்டிலே அரசியல் சூழ்நிலைகள், பல்வேறுபட்ட பிரச்சனைகள், இந் நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்ச்சியாக தமிழீழம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது பாதையைச் செப்பனிட வேண்டும் என்றால், தங்களது கடந்தகாலத்தைப் பற்றி சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். ஆனால் அவர்கள் இன்றும் இந்த மேடையில் அவர்கள் அணுகிக் கொண்ட முறை உட்பட, அந்த மாதிரியான எந்த அணுகுமுறையும் இருக்கவில்லை. அதாவது தம்முடைய தவறுகளை தவறுகள் என்று சொல்ல, அவர்கள் தயாராகவேயில்லை.
ஒரு கட்டத்தில் மாத்தையா அவர்களை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த நாட்டில் எதிர்ப்புரட்சி பற்றி கதைத்தார். நீங்கள் எல்லாம் எதிர்ப்புரட்சி வாதிகள் என்று குறிப்பிட்டார். எதிர்ப்புரட்சிவாதி அல்லது புரட்சிவாதி என்று யார் தீர்மானிப்பது? மக்கள் தான். ஒரு புரட்சி நடக்கின்ற போது அந்தப் புரட்சியானது மக்களுக்கானதாயிருக்க வேண்டும். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டியதாக இருக்க வேண்டும். மக்களது துன்ப துயரங்களை துடைப்பதற்கான தீர்வைக் கொடுக்க வேண்டியதாயிருக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு நடந்த போராட்டம் என்பது அதைவிட வேறுபட்டதாகத் தான் இருந்தது. நான் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்@ உங்களுக்கு யாழ்ப்பாணத்தில் மிதமிஞ்சிப் போனால் ஒரு இலட்சம் மக்கள் கூட ஆதரவு இல்லை என்று. காரணத்தை விளங்கப்படுத்தினேன். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற எந்த கிராமப்புறமும் உங்களுக்கு ஆதரவில்லை. கிட்டத்தட்ட நாலு அல்லது ஐந்து இலட்சம் மக்கள் கொண்டிருந்த கிராமப்புறம் (தாழ்த்தப்பட்ட மக்களை சுட்டிக் காட்டினேன்.) எதிலேயும் உங்களுக்கு ஆதரவில்லை என்றேன். இரண்டாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று நீங்கள் பங்கு பற்றிக் கொண்டிருக்கும் உங்களுடைய அங்கத்தவரை விட, தமிழீழ விடுதலை போராட்டத்தில் இருந்து ஒதுங்கிய அல்லது பார்வையாளராக பார்த்துக் கொண்டு அல்லது ஒதுங்கிய இயக்கங்களின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை உங்களை விட அதிகம். அது போல அதைச் சார்ந்த மக்கள், உங்களைச் சார்ந்த மக்களை விட அதிகம். உங்களுக்கு ஒன்றரை இலட்சம் மக்களின் ஆதரவு தான் இருக்கும். அந்த மக்களை விட உங்களுக்கு வேறு எந்த ஒரு ஆதரவுமில்லை. இந்த ஆதரவு கூட வெறும் அனுதாப அலைகளோ அல்லது சொந்தக் காரணங்கள் அல்லது என்னுடைய பொடியன் இயக்கத்தில் இருக்கிறான் என்ற அடிப்படையில் ஆதரவாளர்களாக இருக்கிறார்களே ஒழிய, உங்களுக்கு திட்டவட்டமான அரசியலின் அடிப்படையில் இருக்கவில்லை என்பதனை திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தேன்.
அதாவது இந்த இடத்தில் இப்ப நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பு, ஈழமுரசுப் பத்திரிகையில் கூட்டணிப் பிரதித் தலைவர் கையிலைநாதன் அறிக்கை என்ற விடயம் இப் பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அந்த கையிலைநாதன் என்பவர் என்னை கைது செய்து கொண்டு போகும் முன்பே, அதே இராணுவ முகாமினுள் தனியறையினுள் அடைக்கப்பட்டிருந்தவர். நான் வரும் (தப்பிய) போது கூட, கையிலைநாதன் என்பவர் அங்கிருந்தார் என்பது தான் ஒரு முக்கியமான விடயம். நான் கூட்டணியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவன் என்பதல்ல. விடயம் அந்த நபர் அங்கு ஏன் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்? என்பது தான் முக்கிய பிரச்சனையான விடயம்.
மற்றும் விஐpதரனின் போராட்டம் சம்பந்தமான பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். அமைப்புக் குழுவில் யார் இருந்தவர்கள் என்று கேட்டனர். அமைப்புக்குழுவைச் சேர்ந்த யோதி (சி.அ.யோதிலிங்கம்) வீட்டை சோதனையிட்ட போது@ இவ் அமைப்புக் குழுவானது போராட்டம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட படங்களை புலிகள் எடுத்து இருந்தனர். அந்த இராணுவ முகாமினுள் இப்படங்கள் இருந்தன. அந்த படங்களை என்னிடம் கொண்டு வந்து காட்டி, இந்தப் போராட்டத்தில் முக்கியமாக நின்ற நபர்களின் பெயர்களைக் கேட்டு எழுதிக் கொண்டார்கள். நான் கடத்தப்படுவதற்கு முதல் நாள் ஸ்ரெலா இங்கு வந்தது எனக்குத் தெரியாது. ஸ்ரெலா ஏன் இங்கு வந்து நின்றார் என்று கேட்கப்பட்டது.
அடுத்து ராஜன், சுந்தரமூர்த்தி யார்? அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? அவர்களுக்கும் உங்களின் இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கின்றதா என்று கேட்டார்கள். ஒளவைக்கு யாரடா காதலர்கள் என்று என்னிடம் வினாவப்பட்டது. அடுத்து கேட்டார்கள் உங்களுக்கு பாதிச் சுதந்திரம் வந்திட்டுதாடா? மிச்சம் என்ன சொல்லடா என்று விழுந்தது அடி. பி(வ்)ற்றி (50) கலிபரை (ஆயுதம்) பார்த்து விசிலா அடிக்கிறியள் என்றும் ஒரு கட்டத்தில் கேட்கப்பட்டது. இப்படியாக விஐpதரன் சம்பந்தப்பட்ட பல்வேறு கேள்விகளை, அதாவது விஐpதரன் போராட்டத்தை பிழையான வழியில் திசைதிருப்பிய சதிகாரர்கள் யார் என்று கூட கேட்கப்பட்டது. இந்த வகையில் எனது விசாரணை என்பது இயக்கம் சார்ந்தாகத் தான் முதலில் இருந்தாலும் கூட, என்னிடம் இருந்து பல்கலைக்கழக போராட்டம் உட்பட பல்வேறுபட்ட விடயங்களும் என்னிடம் இருந்து சேகரிக்கப்பட்டன.
அதாவது நான் பல்கலைக்கழகம் வந்தது தொடர்பாகவும், நான் நடத்திய அல்லது நான் பங்கு பற்றிய போராட்டம் பற்றியும், அதில் நீ எந்த அடிப்படையில் பங்குபற்றினாய் என்பதனை தொடக்கம் முதல் முழுமையாகவே விசாரிக்கப்பட்டது.
இன்று இந்த மேடையில் பிரதித் தலைவர்கள் வந்து உமது பாதுகாப்புக்கு பிரச்சனையே இல்லை என்று கூறிச் சென்றார்கள். ஏன் நான் தப்பித்த அடுத்த நாளே, அதைச் செய்திருக்கலாமே நேர்மையுடன். அதனைச் செய்திருப்பார்களேயானால் உண்மையாக என்னை விடுதலை செய்வது என்ற அவர்களது கருத்தும் உண்மையாகவே இருந்திருக்கும். நான் தப்பி இன்று கிட்டத்தட்ட 35 நாட்கள் கடந்திருக்கின்றன. நான் 16-07-1987 அன்று தப்பித்தேன். இன்று 35 நாட்களுக்குப் பிற்பாடு தான், நான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். இந்த நிலையில் அவர்கள் வந்து, அவரை நாங்கள் கடத்தினாங்கள் தான், ஆனால் அவரை விடுதலை செய்வோம் என்று நேர்மையாகக் கூறியிருந்தால், நான் இன்று இந்தப் பிரச்சனையை இவ்வளவு தூரத்துக்கு இந்த மேடையில் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்க மாட்டாது. அவர்கள் தங்களுடைய தவறுகளை ஏற்று இருக்கிறார்கள் என்ற அடிப்படையில், நானும் அதனை விட்டிருக்கலாம்.
இரண்டாவது இதே காம்பில் பழைய புதியபாதையைச் சோந்த ஒருவரை கொல்வதற்காக வைத்திருந்தனர். புதிய பாதையைச் சேர்ந்த அதாவது த.வி.புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற போது, (சுந்தரம் தலைமையில்) புதியபாதை என்ற புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பில் பதின்மூன்று பேர் இருந்தார்கள். அந்த பதின்மூன்று பேரில் குமணன் என்ற நபர் இருந்தார். கோண்டாவிலைச் சேர்ந்த குமணன் என்ற நபர். அந்த குமணனை ஒரு நாள் நான் கதைத்துக் கொண்டிருக்கும் போது, நீர் அவரைப் பாரும் என்று சொல்லி அவரின் கண் கட்டப்பட்ட நிலையில் என் முன்னே கொண்டு வரப்பட்டார். கொண்டு வந்தபோது அவரை எங்கள் அமைப்பில் இருக்கும்@ அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில இருந்து பிரிந்து வந்த ஒரு நபர் எங்கள் அமைப்பில் இருக்கிறார். அவருடைய அமைப்புப் பெயரைச் சொல்லி அவர் தான் நிக்கிறார். நீர் கதைக்க விரும்பினால் கதையும் என்று கூடச் சொன்னார்கள். அப்போது அவர் சொன்னார், தான் எதுவும் கதைக்க விரும்பவில்லை என்று. எப்ப கடைசியாகச் சந்தித்தது எனறு கேட்ட போது, 83ம் ஆண்டு இந்தியாவில் சந்தித்தோம் எனறு கூறினார். என்ன கதைத்தனி என்று கேட்க, ஒன்றும் கதைக்கவில்லை எனறு சொன்னார். அவரைக் கொண்டு போகும்படி சொன்ன பின்பு, என்னிடம் கூறினார்கள் அவருக்கு மரணதண்டனை தான் என்று. அப்போது நான் சொன்னேன் பாவம் தானே என்று சொன்ன போது, நாங்கள் அவருக்கு மரணதண்டனை தான். அதில் எந்த விதப் பிரச்சனையுமில்லை என்று கூறினார். இதேபோல குமணனுடைய பிரச்சனையை கேட்டுக் கொண்டிருக்கும் போது, உடனடியாக கேட்டார் கோண்டாவில் விக்கியைத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் சொன்னேன் தெரியும் அவர் தான் பல்கலைக்கழக மாணவன், முன்பு பிளாட்டில இருந்தவர் என்று கூறினேன்.
அதாவது ஒருமுறை தமிழீழ விடுதலைப் புலிகள் பத்திரிகையில் கைதிகளை பற்றிய ஒரு பிரச்சனையில், எட்டு அம்சக் கோரிக்கையை அந்த பத்திரிகை வெளியிட்டிருந்தது. கைதிகளை துன்புறுத்தாதே. அவர்களின் சொத்துகளை சூறையாடாதே. இப்படி பலவேறுபட்ட எட்டு அம்சங்களைக் கொண்ட விடயங்கள் இருந்தது. இது மனிதாபிமானம் சம்பந்தமான பிரச்சனை. யாருக்காக பத்திரிகையில் ஊட்டப்பட்ட விடயத்தை, அங்கு எந்த விதத்திலுமே நடைமுறைப் படுத்தவில்லை. மனிதாபிமானம் என்பதை@ அதாவது எந்த விதத்திலுமே அதாவது ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவைகளைத் தருவதற்கு கூட, அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆகவே வருங்கால போராட்டத்தில், அதாவது வருங்காலத்தில் அவர்கள் இப்போராட்டத்தில் தங்களின் பாத்திரத்தை அல்லது தங்களுடைய தேவையை கருத்தில எடுத்தாவது தங்களது தவறுகளை தவறுகள் என்று ஒப்புக் கொள்ளுங்கள். ஒப்புக் கொண்டு சமூகத்தில் மீண்டும் நீங்கள் வாருங்கள். அதை விடுத்து தவறுகளுக்காக நியாயங்களை கற்பித்துக் கொண்டோ அல்லது தவறுகளை தவறுகள் என்று ஒத்துக் கொள்ளாமல் மீண்டும் உங்களுடைய நிலையை பேணிக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவீர்களேயானால், உங்களுடைய இன்றைய நிலைமை என்பது உங்களை மிக விரைவிலேயே அழித்தொழிக்கும்.
இத்துடன் எனது பேச்சை முடித்துக் கொண்டு விடை பெறுகின்றேன்.
இது நான் பல்கலைக்கழகத்தில் 21.08.1987 அன்று ஆற்றிய உரை (இதன் மூலத்தைக் கேட்க இதை அழுத்தவும்)
தொடரும்
பி.இரயாகரன்
18. என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)
17. புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)
16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)
15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)
14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)
13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)
12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)
11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)
10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)
09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)
08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)
07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)
06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)
05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)
04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)
03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)
02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)
01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)